Last Updated : 12 Nov, 2015 08:59 AM

 

Published : 12 Nov 2015 08:59 AM
Last Updated : 12 Nov 2015 08:59 AM

அதிகம் பேசப்படாமல் போன அமித் ஷாவின் கதை!

தேர்தல்கள் என்றாலே இப்படித்தாம். வெற்றி பெற்றவர்கள் கதைகள்தான் சரித்திரம். இதுவும் அப்படிப்பட்ட ஒரு கதைதான். பிஹாரில் பாஜக வென்றிருந்தால், எல்லோரும் இந்தக் கதையைப் பேசியிருப்பார்கள். சோகம் என்னவென்றால், பாஜக தோற்றுவிட்டது. இந்தக் கதை யாராலும் பேசப்படாததாக ஆகிவிட்டது. 2014 பொதுத் தேர்தலில் எப்படிச் சுழன்று சுழன்று அமித் ஷா தலைமையில் பாஜக வேலை பார்த்ததோ, அப்படி பிஹார் தேர்தலிலும் பல்வேறு வியூகங்களில் வேலை பார்த்தது. அவசியம் குறிப்பிட வேண்டியவை கட்சியினரை முடுக்கிவிட பாஜக பார்த்த 4 வேலைகள்!

1. கட்சியினர் கருத்துக் கேட்பது எப்படி? ‘ஆடியோ கான்ஃபிரன்ஸிங்’ மூலம் பிஹாரில் உள்ள கட்சியினருடன் தொடர்ந்து உரையாடியது ஒரு டெல்லி குழு. கட்சியினர் சொல்லும் கருத்துகள் அறிக்கையாகத் தொகுக்கப்பட்டு, பாஜக தலைவர் அமித் ஷாவுக்குச் செல்லும். அவர் சம்பந்தப்பட்டவர்கள் மூலம் நடவடிக்கை எடுப்பார். தேவையானவற்றை பிரதமர் மோடியிடம் தெரிவிப்பார்.

2. தேர்தல் என்றாலே, கட்சிக்காரர்கள் அதிருப்தி அதிகரிப்பது அதிகம். அவர்களை எப்படிச் சமாளித்தது பாஜக தலைமை? அதிருப்தியில் இருப்பவர்களை நேரடியாகச் சந்தித்துக் குறைதீர்க்க ஒரு குழுவை அமைத்தது. இந்தக் குழுவுக்குப் பெயர் ‘பிரவேசி’.

3. புலம்பெயர் பிஹாரிகள் ஒரு வலுவான சக்தி. அவர்களை எப்படித் தேர்தலில் தமக்கேற்பக் கையாண்டது பாஜக? வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான குழு ஒன்று இதற்கான பணிகளில் இறங்கியது. வெளிநாடுகளில் வசிக்கும் பிஹாரிகளைத் தொடர்புகொண்டு இக்குழு பேசும். அவர்கள் மூலம் ஊரில் இருக்கும் அவர்கள் நண்பர்கள், உறவினர்களிடம் பேசும். இப்படி ஊரில் இருப்பவர்கள் பெரும்பாலும் வசதியாக இருக்கக் கூடியவர்கள் என்பதால், அவர்கள் சார்ந்தவர்களிடமும் கட்சிச் செல்வாக்கை வளர்க்க இது உதவும். இதேபோல, வெளிமாநிலங்களில் வாழும் பிஹாரிகள் மத்தியிலும் அந்தந்த மாநிலங்களில் ஒரு குழுவை உருவாக்கி தொடர்ந்து பாஜக சார்பு செய்திகளைப் பரப்பியிருக்கிறது ஒரு குழு. பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே பிஹார் முன்னேறும்; பிஹார் மக்களும் வளர்ச்சி அடைய முடியும் என்பதே பிரச்சாரத்தின் அடிப்படை நாதம். ‘இந்தியா ஃபார் டெவலப்மென்ட் பிஹார்’ என்னும் வாட்ஸ் அப் குழுவும் இதில் அடக்கம் என்கிறார்கள்.

4. கட்சி பின்தங்கியிருக்கும் மாவட்டங்களில் கட்சியைப் பலப்படுத்துவது எப்படி? இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று, கட்சி உறுப்பினர்களைச் சந்தித்து அவர்களை ஊக்கப்படுத்துவதுதான் அவருடைய வேலை. எப்படியாவது 5% வாக்குகளையாவது ஒவ்வொரு தொகுதியிலும் அதிகரிக்க வேண்டும். ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பாஜக வென்றால்கூட அங்கு வேலை பார்த்தவர்களுக்குச் சன்மானம் உண்டு. ரூ. 50 ஆயிரம் அல்லது பசுக்கள்! முதல்வர் நிதிஷ் குமாரின் கோட்டையான நாளந்தா போன்ற பாஜக பலவீனமாக உள்ள தொகுதிகளில் எல்லாம் இப்படி ஒரு திட்டத்தைச் செயல்படுத்தியிருக்கிறார்கள்.

பாஜக இந்தத் தேர்தலை வெல்ல முடியாமல் போயிருக்கலாம் என்றாலும், ஏனைய கட்சிகளுக்கு இந்த அணுகுமுறைகள் எல்லாம் ஒரு பாடம்தானே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x