Published : 24 Jan 2021 03:16 AM
Last Updated : 24 Jan 2021 03:16 AM

இந்திய அணியின் வெற்றி ஏன் கொண்டாடப்படுகிறது?

தினேஷ் அகிரா

விராட் கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பலரும் அணியில் இல்லாத நிலையிலும் ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தி பார்டர்-கவாஸ்கர் கோப்பையைத் தக்கவைத்துள்ளது இந்தியா. கிரிக்கெட்டை பூர்ஷ்வா ஆட்டம் எனப் புறமொதுக்கியவர்கள்கூட இன்று வல்லாதிக்கத்தின் அடிக்கட்டுமானத்தைத் தவிடுபொடியாக்கிய இளம் படை என்கிற அளவுக்குச் சமூக ஊடகங்களில் பதிவிடுகிறார்கள். இந்த வெற்றி தேசாபிமானத்தையும் கடந்து உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் மெச்சப்பட்டுவருகிறது. இந்தியா 4-0 என்ற கணக்கில் மண்ணைக் கவ்வுமென ஆரூடம் சொன்ன மைக்கேல் வாஹ்ன் தன் கணிப்பு பொய்யானது பற்றியெல்லாம்கூடச் சங்கடப்படாமல் இந்திய அணியின் வெற்றியைக் கொண்டாடுகிறார். ஏன் ஆஸ்திரேலிய அணியினரும்கூட வெற்றி-தோல்வியையெல்லாம் மறந்துவிட்டு இந்தத் தொடரில் பங்கு பெற்றதையே ஒரு பெரும் பேறாகக் கருதுகின்றனர். உங்களுக்குச் சந்தேகமிருந்தால் ஊடகங்கள் முன் பேசிய ஆஸ்திரேலியப் பயிற்சியாளர் லாங்கரின் உடல்மொழியையும் ஒளியேறிய கண்களையும் கொஞ்சம் உற்றுப்பாருங்கள். மற்றொரு புறம் முன்னணி கிரிக்கெட் பத்தி எழுத்தாளர்கள் இந்த வெற்றியின் முக்கியத்துவம் மீது வெளிச்சம் பாய்ச்சுவதற்காகத் தங்களுடைய கடந்த கால அனுபவங்களைக் கடைபரப்பிக்கொண்டிருக்கின்றனர். எழுத்தாளர் முகுல் கேசவன் ஒருபடி முன்னே சென்று, கிரிக்கெட்டைக் கடுமையாக வெறுத்த மகாத்மா காந்திகூட புஜாராவின் சத்தியாகிரகத்தைப் பார்த்திருந்தால் மனம் நெகிழ்ந்திருப்பார் என எழுதுகிறார்!

இப்படிச் சமூகத்தின் சகல தரப்பினருக்கும் அவசியமான ஒன்றாக இந்திய அணியின் வெற்றி மாறியது எப்படி? பெருந்தொற்றுக்குப் பின்னான காலகட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள புறவயமான தளர்வுகள் முன்பின் தெரியாத சிறையில் கட்டப்பட்டுள்ள மனிதனின் ஆழ்மனத்தை விடுவிக்கப் போதுமானதாக இல்லை. மனிதன் என்பவன் சட்டதிட்டங்களாலோ, அரசு அறிவிக்கும் தளர்வுகளாலோ கட்டப்பட்டவன் அல்ல; அவன் ஒரு தனித்த சுயம். தனக்கான சுதந்திரத்தைத் தானே உணர்ந்தாலொழிய வேறெதையும் அவன் நம்பத் தயாரில்லை. பெருந்தொற்றின் சுவடுகளை மறக்க அதைவிட ஒரு பெரிய நிகழ்வொன்றுக்காக அரைப் பிரக்ஞையில் ஏங்கித் தவித்த மனித மனம் இந்திய அணியின் வெற்றியைத் தங்கள் வெளிப்பாட்டுக்கான வடிகாலாகப் பார்க்கிறது.

எல்லோரும் கொண்டாடக் காரணம்

இந்திய அணியின் வெற்றியை ஏன் இங்கு தங்களுடைய வெற்றியாக மக்கள் கொண்டாடுகிறார்கள்? மேலோட்டமான விளையாட்டுத் தளத்தில் இதை வைத்துப் பார்த்தால் கிடைக்கும் விடை எளிமையானது. தனது முதல் போட்டியிலேயே அவமானகரமாகத் தோற்ற, தலைவன் இல்லாமல் தத்தளிக்குமென எதிர்பார்க்கப்பட்ட, முக்கியத் துருப்புகளை ஒவ்வொன்றாக இழந்த இந்திய அணியானது ஸ்மித், வார்னர் உள்ளடங்கிய ஓர் அணியை அதன் மண்ணிலேயே வைத்து வீழ்த்தியிருப்பது லேசுப்பட்ட காரியமல்ல. சுருங்கச் சொன்னால், எல்லா ‘சென்டர்’களிலும் வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கும் வழக்கமான டேவிட் - கோலியாத் கதை. இதன் மற்றொரு பக்கம்தான் சிந்தித்துப் பார்க்க வேண்டியது.

இன்று வரை வெற்றிகொள்ளவே முடியாத கண்ணுக்குத் தெரியாத எதிரியாக வர்ணிக்கப்படும் கரோனாவை ஒருகாலத்தில் ‘தோற்கடிக்க முடியாத அணி’ என்கிற கோதாவில் வலம்வந்த ஆஸ்திரேலியாவுடன் மனித மனம் உருவகப்படுத்திக்கொள்கிறது. கிருமிக்கு எதிராக அற்ப மானிடப் பதர்களான தங்களால் நிஜத்தில் நினைத்துப் பார்க்க முடியாத வெற்றியை ஒரு விளையாட்டுக் களத்தில் அனுபவமற்ற, மிரட்டிப் பணியவைக்கப் பார்க்கப்பட்ட ஓர் அணி சாதித்ததைத் தங்களுடைய வெற்றியாகக் கொண்டாடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் கிரிக்கெட் வரலாற்றின் மறக்க முடியாத ஒன்றாக மாறியதற்கு இதன் நிச்சயமற்ற தன்மையும் ஒரு காரணம். முதல்தர கிரிக்கெட்டில் போதிய அனுபவமற்ற வாஷிங்டன் சுந்தர் உலகின் முதல்நிலை வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸை ஹூக் செய்து சிக்ஸர் அடிப்பார் என யார் எதிர்பார்த்தோம்?

பெருந்தொற்றுக் காலத்தில் நாளை என்ற ஒன்று இருக்குமா என்ற நிச்சயமின்மையைக் கடந்துவந்த மக்கள் தங்களை ஏதோவொரு விதத்தில் இந்தத் தொடர் பிரதிபலிப்பதாக நம்புகிறார்கள். உச்சகட்டமாக அந்நிய தேசத்தில் தலைவனைத் தவறவிட்டுவிட்டு அநாதரவான நிலையில் நான்கு சுவர்களுக்குள் அடைபட்டிருந்த இந்திய அணி பெற்ற வெற்றி என்ன நடந்தாலும் இறுதியில் தர்மமே வெல்லும் எனும் தொன்மத்தை மக்களுக்கு நினைவுபடுத்தியிருக்கிறது.

நொறுங்கிய புனிதங்கள்

இந்த டெஸ்ட் தொடரின் மூலமாக இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் காலங்காலமாக நம்பப்பட்டுவரும் இரு பெரும் புனிதங்கள் உடைத்துப் போடப்பட்டுள்ளன. ஒன்று, அனுபவம். போதிய முதல்தர கிரிக்கெட் அனுபவம் இல்லாமல் அத்தனை எளிதாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துவிட முடியாது. கிரிக்கெட்டைத் தொழில்முறையாக அணுகும் ஆஸ்திரேலியாகூட இந்த விஷயத்தில் அவ்வளவு கறாராக இருப்பதில்லை. தற்கால உதாரணம், டேவிட் வார்னர். காயம் காரணமாக முன்னணி வீரர்கள் விலகியதால் அணியில் இடம்பிடித்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அனுபவம் கடந்த தங்களது ஆற்றலை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு இட்டுச்சென்றுள்ளனர்.

மற்றொரு புனிதத்தைச் சுக்குநூறாக உடைத்து எறிந்தவர் ரவிச்சந்திரன் அஸ்வின். அயல்நாட்டு மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் ஒரு விரல் சுழலர் ஐந்தாவது ஸ்டம்ப் லைனில் (Outside Off Stump) – ஆஃப் ஸ்டம்பிலிருந்து வலப்பக்கமாகக் கிட்டத்தட்ட 2.5 இன்ச் தள்ளி – வீசினால்தான் விக்கெட் கிடைக்கும் என்கிற ஓர் ஐதீகம் உண்டு. துணைக் கண்டத்தில் வீசுவதுபோலவே அயல் மண்ணிலும் ஸ்டம்புகளைக் குறிவைத்து வீசக் கூடாது என எரப்பள்ளி பிரசன்னா போன்ற சுழல் ஜாம்பவான்கள் அஸ்வினைக் கடந்த காலங்களில் கடுமையாக விமர்சித்ததுண்டு.

இதனால், தன்னுடைய போட்டியாளர் நாதன் லயனைப் பின்பற்றி ஐந்தாவது லைனில் அஸ்வின் பந்து வீசுவார் என்றதொரு எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அஸ்வின் வழக்கத்தைக் காட்டிலும் இன்னும் மூர்க்கமாகத் தன்னுடைய பாணியான ‘மிடில் அண்ட் லெக் ஸ்டம்ப்’ லைனில் வீசி நாதன் லயனைப் பின்னுக்குத் தள்ளியதோடு காலங்காலமாகத் தொடர்ந்துவரும் ‘அவுட்சைட் ஆஃப் ஸ்டம்ப்’ மரபையும் நிராகரித்துள்ளார்.

ரஹானேவின் தலைமைத்துவம்

இந்த வரலாற்றுத் தொடரில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஓர் அம்சம் அஜிங்கியா ரஹானேவின் தலைமைத்துவம். ரஹானேவின் மென்மையான பேச்சையும் மாறாத சிரிப்பையும் கொண்டு அவர் ஒரு ஜனநாயகர் எனத் தப்பர்த்தம் கற்பித்துக்கொள்ள நிறைய வாய்ப்பிருக்கிறது. ஜனநாயகர் என்ற பதம் அரசியலில் அதுகொள்ளும் பொருளிலிருந்து விளையாட்டுக் களத்தில் முற்றிலும் நேரெதிரானது.

விராட் கோலி எல்லாரும் எல்லாவற்றையும் செய்ய வேண்டுமென கடுமை காட்டக்கூடிய ஒரு ஜனநாயகர். நாளையே யோயோ டெஸ்ட்டில் தான் தேறவில்லை என்றால், அவர் தன்னையே நீக்கிக்கொள்வார். ரஹானே பாணி அப்படியானதல்ல. எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்க வேண்டுமென எதிர்பார்ப்பது அநாவசியம் எனத் தர்க்கபூர்வமாகச் சிந்திப்பவர். உதாரணமாக, புஜாரா தனக்கு விதிக்கப்பட்ட பணியை சிரமேற்கொண்டு செய்துமுடித்தால் போதுமானது; அதை விடுத்து ஷுப்மான் கில் வேலையில் மூக்கை நுழைப்பது பெரும் தவறு. சரிதான், ஒவ்வொரு வெற்றியும் பல புதிய வியாக்கியானங்களை உருவாக்கிவிடுகிறது.

- தினேஷ் அகிரா, ஊடகர். தொடர்புக்கு: dhinesh.writer@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x