Published : 22 Jan 2021 03:17 am

Updated : 22 Jan 2021 06:58 am

 

Published : 22 Jan 2021 03:17 AM
Last Updated : 22 Jan 2021 06:58 AM

தேர்தல் முடிவுகள் எப்படித் தீர்மானிக்கப்படுகின்றன?

election-results

சித்தார்த் பை

எல்லாத் தேர்தல்களின் இயங்குமுறையும் குறைகள் கொண்டவை. தேர்தல்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாடும் வெவ்வேறு விதிமுறைகளைக் கொண்டிருக்கிறது, விதிமுறைகளின் ஒவ்வொரு தொகுப்பும் ஒரு சமரசமாகவே இருக்கிறது. சில நாடுகள் ‘முதலாவதாக வருபவர்களே வென்றவர்கள்’ என்ற முறைகளையும் வேறுசில நாடுகள் தேர்வர் குழுக்கள் முறையைப் பின்பற்றுகின்றனர். வேறு சிலர் இரண்டு தெரிவுகளை எதிரெதிராக முன்னிறுத்தும் பொது வாக்கெடுப்பு முறையை, பிரெக்ஸிட்டுக்கு நடந்ததுபோன்ற வாக்கெடுப்பு முறையைக் கொண்டிருக்கின்றன.

சிறுபான்மை எண்ணிக்கையினரின் செல்வாக்கு


தேர்தல்களில் காணப்படும் குறைகளைக் கணிதவியலர் கென்னெத் ஆரோ வெட்டவெளிச்சமாக்கினார். மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட தெரிவுகள் ஒரு தேர்தல் முறையில் இருந்தால், விசித்திரமான ஒரு முரணின் தலையீடு அங்கே நிகழ்கிறது: சிறுபான்மை எண்ணிக்கையினரின் குரலால் விரிவான தளத்தில் செல்வாக்கு செலுத்த முடியும் என்று 1950-களில் முடிக்கப்பட்ட ஆரோவின் முனைவர் பட்ட ஆய்வேடு இனம்கண்டது. அவருடைய கண்டறிதல் தற்போது ‘ஆரோவின் முரண்’ என்று அழைக்கப்படுகிறது.

இதை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கலாம். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் ஒரு தேர்தலில் வாக்களிக்கவிருக்கிறார்கள் என்ற நிலையில் ‘ஏ’ என்ற வேட்பாளர் ‘நாம் போரில் ஈடுபடுவோம்’ என்றும் ‘பி’ என்ற வேட்பாளர் ‘நாம் போரில் ஈடுபடக் கூடாது’ என்றும் சொல்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இரண்டு தெரிவுகள் மட்டுமே (போர் அல்லது சமாதானம்) இருக்கும் வேளையில், வாக்களிக்கும் மக்கள் மூன்று பிரிவாகப் பிரிந்திருக்கிறார்கள்: முதலாவது வகையில் சிறுபான்மை எண்ணிக்கையிலான போர் விரும்பிகள் இருக்கிறார்கள்; ஏனைய பிரிவினர், அதாவது பெரும்பான்மையான வாக்காளர்கள் போர் வேண்டாமென்று நினைப்பவர்கள். இந்த வகையினரில் இரு பிரிவுகள் உண்டு, போர் வேண்டாமென்று கருதுபவர்களும் அவசியம் ஏற்பட்டாலொழிய போர் வேண்டாமென்று கருதும் நடைமுறைவாதிகளும் இந்தப் பிரிவுகளில் அடங்குவார்கள்.

இரண்டு தெரிவுகளில் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் என்கிற விதத்தில் நடைபெறும் தேர்தலில், போர் விரும்பிகளான சிறுபான்மை எண்ணிக்கையிலானோர், அவசியம் ஏற்பட்டாலொழிய போர் தேவையில்லை என்று கருதும் நடைமுறைவாதிகளை இந்தத் தருணத்தில் போர் அவசியம் என்று நம்பவைக்க முடியும்.

மக்கள்தொகையின் பெரும்பான்மையினரிடையே சிறுபான்மை எண்ணிக்கையினர் செல்வாக்கு செலுத்துவதற்கு இணையம் உதவுகிறது, குறிப்பாக சமூக ஊடகங்கள் உதவுகின்றன. ‘ஆரோவின் முர’ணை முன்பு ஒருபோதும் கேள்விப்பட்டிராத அளவுக்கு எடுத்துச்செல்லும் வகையில் சமீப காலத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் இது. அமெரிக்க அதிபர் தேர்தலும் அதற்குப் பிந்தைய நிகழ்வுகளும் இதற்கு எடுத்துக்காட்டுகள்.

இன்றைய டிஜிட்டல் உலகில் மனிதர்கள் மீது எல்லா வகையிலான செய்திகளும் தகவல்களும் கொட்டப்படுகின்றன. நமது கவனத்தின் கால அளவு குறைந்திருக்கிறது. முன்பைவிட குறைந்த கால அளவில் நாம் நமது முடிவுகளை எடுத்துவிடுகிறோம் – பெரும்பாலும் இணையம் சார்ந்த தகவல் அல்லது காணொளியைப் பார்க்கும் ஒருசில நொடிகளிலேயே. பெரும்பாலான வாசகர்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும்.

இந்த நிகழ்வு குறித்து ஏராளமான ஆய்வுகள் செய்யப்பட்டுவருகின்றன, ஏராளமான புத்தகங்களும் எழுதப்பட்டிருக்கின்றன. ‘தி ரைஸ் ஆஃப் அடிக்டிவ் டெக்னாலஜி அண்டு தி பிஸினஸ் ஆஃப் கீப்பிங் அஸ் ஹூக்டு’ என்ற நூலின் ஆசிரியர் ஆடம் அட்லர் அமெரிக்க ‘நேஷனல் பப்ளிக் ரேடியோ’வுக்கு அளித்த பேட்டியில் இப்படிக் கூறினார்: “பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஐபேடும் ஐஃபோனும் பரவலாகாதபோது, சராசரியாக ஒருவரது கவன நேரம் என்பது 12 நொடிகளாக இருந்தது. சமீபத்திய ஆய்வுகளின்படி அந்த நேரம் தற்போது 12-லிருந்து 8 நொடிகளாகக் குறைந்துவிட்டது – 9 நொடிகளைக் கவன நேர சராசரியாகக் கொண்டிருக்கும் தங்கமீன்களைவிட இது குறைவு.”

புதிய இணையவாசிகளுக்குத் தாங்கள் இணையத்தில் பார்க்கும் விஷயங்களை சீர்தூக்கிப் பார்க்கும் திறன் இல்லை என்பதை அமெரிக்கத் தேர்தலையொட்டி நடந்த நிகழ்வுகள் நமக்கு நிரூபித்தன. “ஷ்ரவனம், மனனம், நிதித்யாசனம்” (காதால் கேள், கேட்டதைப் பற்றித் தொடர்ந்து யோசி, உண்மையைக் கண்டறிவதற்கு முன்பு நீ என்ன கேள்வியுற்றாயோ அதைப் பற்றி ஆழமாக யோசி). ஆனால், குறைந்துபோன கவன நேரம், தொடர்ச்சியாக வந்து குவியும் செய்திகள், ஆரோவின் நிரூபணங்களின் மறுக்க முடியாத கணக்கு ஆகியவற்றின் கூட்டு மிகவும் பிரச்சினைக்குரிய ஒரு கலவையை உண்டாக்குகிறது. தொழில்நுட்பரீதியில் வளர்ச்சி பெற்ற அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில்கூட இதுதான் உண்மை.

பிரேரணை 22 மீதான வாக்களிப்பு

எடுத்துக்காட்டாக, அமெரிக்க அதிபர் தேர்தலின்போது பிற வாக்கெடுப்புத் தெரிவுகளும் ஒவ்வொரு மாநிலத்தின் வாக்குச் சீட்டுகளிலும் இருக்கும். கடந்த ஆண்டின் களேபரத்தால் இவற்றில் பெரும்பாலான பிரச்சினைகள், அவற்றுள் சில மிகவும் முக்கியமானவை, பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. அப்படிப்பட்ட ஒரு பிரச்சினைதான் பிரேரணை 22-ஐப் பற்றி கலிஃபோர்னியா நடத்திய பொது வாக்கெடுப்பு. இது ஊபர், லிஃப்ட் போன்ற நிறுவனங்களுக்கு மிகவும் முக்கியமானது. ‘தற்காலிக’ தொழிலாளர்களைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் இந்த நிறுவனங்களெல்லாம் இந்த வாக்கெடுப்பு நடைபெறவில்லையென்றால் அந்த மாநிலத்தை விட்டுச் செல்லப்போவதாகப் பயமுறுத்தின. இந்த நிறுவனங்களெல்லாம் தங்கள் ஓட்டுநர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாக வைத்திருக்க விரும்பினவே தவிர, நிரந்தர ஊழியர்களாக அல்ல.

கலிஃபோர்னியா இடது சார்பு மாநிலம், பெருவாரியாக ஜோ பைடனுக்கே வாக்களித்திருக்கும் மாநிலம். அமெரிக்கத் தொழில்நுட்பத் தலைநகரம் என்ற பெருமையையும் கொண்டது. இருந்தும் பிரேரணை 22 நிறைவேறியது. இதில் வெற்றிபெறுவதற்காக அந்த நிறுவனங்களெல்லாம் இந்திய மதிப்பில் ரூ. 1,460 கோடிக்கும் மேல் செலவு செய்தன.

இதை எதிர்த்தவர்களால் இதில் பத்தில் ஒரு பங்கே திரட்ட முடிந்தது. அதிக பணமே வெற்றி பெற்றது. கலிஃபோர்னியா வாக்காளர்களில் 58% பேர் அந்தத் தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே நீடிக்கட்டும் என்று வாக்களித்திருக்கிறார்கள், வெறுமனே கேள்வியுற்றதை வைத்து (ஷ்ரவனம்), அதற்குப் பிறகு உண்மையைக் கண்டறியாமல், இந்த முடிவை அவர்கள் எடுத்திருக்கிறார்கள்.

ஒப்பந்த ஊழியர்களாக இருப்பவர்களுக்கு உடல்நலம் சரியில்லாத நாட்களிலும் ஊதியம் வழங்குதல், கூடுதல் வேலை நேரத்துக்குக் கூடுதல் ஊதியம், வேலையில்லாமல் போனால் காப்பீடு, பணிசார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகள், மருத்துவச் சட்டங்கள் ஏதும் கிடையாது. இதையெல்லாம் சரிசெய்யும் வகையில் ‘சட்டமன்ற மசோதா 5’ என்ற மசோதாவைக் கொண்டுவர கலிஃபோர்னியா முயன்றது. அது நிறைவேறியிருந்தால் இந்த ஊழியர்களுக்கு மேற்கண்ட உரிமைகளெல்லாம் கிடைத்திருக்கும்.

தேர்தலுக்கு முன்பு அவர்களைத் தவறான வகையில் தூண்டக் கூடிய பிரச்சாரத்தின் வலையில் கலிஃபோர்னியா வாக்காளர்கள் வீழ்ந்ததுபோல் தெரிகிறது. அவர்களுக்கு, மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், காணொளிகள் போன்றவற்றை அனுப்பித் தள்ளினார்கள். அந்த நிறுவனங்கள் அனுப்பிய தகவல்களின் முதல் சில நொடிகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியத்தைவிட அதிகமாக வழங்கப்படும் என்ற செய்தியைப் பதியவைத்தனர். இது அந்த வாக்காளர்களைக் கவர்ந்திழுத்திருக்கிறது, எது உண்மை என்பதைக் காணவிடாமல் தடுத்திருக்கிறது. ‘நிரந்தரமாக அடிமட்டத் தொழிலாளர்கள் வர்க்கம்’ ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனங்கள் கலிஃபோர்னியாவில் பெற்ற வெற்றியை அமெரிக்க முழுவதும், அமெரிக்காவைத் தாண்டியும் பெறுவதற்கு முயலும்.

தீவிரமாகக் குறுஞ்செய்திகள், வாட்ஸப் தகவல்கள் போன்றவற்றை அனுப்புவதன் மூலம் எதிர்காலத் தேர்தல்கள் தீர்மானிக்கப்படும் என்பது உறுதி. நமது கவனச் சிதறல் என்ற பலவீனத்தை முதலீடாகக் கொண்டு தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கப்படும் என்பது தெளிவு. இது போன்ற பிரச்சினைகளிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அறிவார்ந்த சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

� ‘தி இந்து', சுருக்கமாகத் தமிழில்: ஆசை


Election resultsதேர்தல் முடிவுகள்தேர்தல் முடிவுகள் எப்படித் தீர்மானிக்கப்படுகின்றன

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x