Published : 18 Jan 2021 03:13 AM
Last Updated : 18 Jan 2021 03:13 AM

அமெரிக்காவில் மூன்றாவது பெரிய கட்சி உருவாகும்!- ஜெஃப்ரி ஏ.எங்கல் பேட்டி

அமெரிக்காவின் ‘சதர்ன் மெதடிஸ்ட் பல்கலைக்கழக’த்தில் அதிபர்கள் வரலாறு பற்றிய மையத்தின் துறைத் தலைவராக இருக்கும் ஜெஃப்ரி ஏ.எங்கல் சமீபத்தில் கேப்பிட்டல் கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றியும் அதன் பின்விளைவுகள் பற்றியும் அலசுகிறார். பேட்டியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் இங்கே…

கேப்பிட்டல் மீது நடத்தப்பட்ட தாக்குதலானது அமெரிக்கா சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய தருணமா?

அப்படித்தான் நினைக்கிறேன். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு ஏதும் மாறியிருப்பதாக நான் நினைக்கவில்லை. தாண்டப்படாத ஒரு கோடு அத்துமீறப்பட்டுவிட்டது என்று மட்டும் மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதிபர் டொனால்டு ட்ரம்ப் நாட்டுக்கு எதிராக வாரக் கணக்கில் பேசிவந்திருக்கிறார். அதனால் எந்த விளைவும் ஏற்படவில்லை. அவர் சொன்னது எதுவும் நடக்கவில்லை. டொனால்டு ட்ரம்ப் வெகு அரிதாகத்தான் உண்மையைப் பேசுவார். ட்ரம்ப் பேசியதன் விளைவுகளைத்தான் ஜனவரி 6 அன்று மக்கள் தங்கள் கண்களால் காண நேரிட்டது. எது ஏற்கத்தக்க அரசியல் பண்பு, எது ஏற்கத்தக்கதல்ல என்பதற்கு நமக்கு எல்லைகள் வேண்டும் என்பதை அமெரிக்க மக்கள் உணரப்போகிறார்கள்.

ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்ச்சியில் தான் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அதிபர் ட்ரம்ப் கூறியிருக்கிறாரே. 1869-ல் யுலிஸஸ் எஸ்.கிரான்ட்டின் பதவியேற்பை ஆண்ட்ரூ ஜான்ஸன் புறக்கணித்தபோது கடைசியாக இப்படி நடந்தது இல்லையா?

அதிகாரத்தை அமைதியான முறையில் நாங்கள் கைமாற்றுகிறோம் என்று அமெரிக்கர்கள் பெருமிதப்பட்டுக்கொள்கிறோம், அல்லது பெருமிதப்பட்டுக் கொண்டோம். இதுபோன்ற தருணத்தில்தான் அதிகாரத்தை ஒரு நபர் இன்னொரு நபருக்குக் கைமாற்றிவிடும் படங்களை உலகுக்கும் அமெரிக்க மக்களுக்கும் நாங்கள் காட்டுவோம். 1869-க்குப் பிறகு ஒவ்வொரு அதிபரும் தமக்கு அடுத்து வருபவரின் பதவியேற்பில் கலந்துகொண்டிருக்கிறார்கள், அவர்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ… இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு 1933, அப்போது பொருளாதாரப் பெருமந்தநிலையின் இடைப்பகுதி. ஹெர்பர்ட் ஹூவரிடமிருந்து அதிகாரம் ஃப்ராங்ளின் ரூஸ்வெல்ட்டுக்கு மாறுகிறது. இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள மாட்டார்கள். ஒருவருக்கொருவர் கடும் வெறுப்பு கொண்டவர்கள். எனினும் இருவரும் கேப்பிட்டலுக்கு ஒரே காரில் பயணித்தனர்.

கேப்பிட்டல் மீது தாக்குதல் நடந்த பிறகு துணை அதிபர் மைக் பென்ஸின் விமர்சகர்கள் அவர் மீது பார்க்கும் பார்வையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதுபோல் தெரிகிறது. வரலாறு அவரை இப்போது கனிவுடன் பார்க்கக் கூடும். இதை ஒப்புக்கொள்கிறீர்களா?

வரலாறு அவரைக் கனிவுடனே அணுகும்; ஆனால், சுவாரசியமற்ற வேறொரு காரணத்துக்காக என்று நினைக்கிறேன். கேப்பிட்டல் மீது தாக்குதல் நடந்த பிறகு குறைந்தபட்சம் செய்ய வேண்டியதைச் செய்ததற்காக, அதாவது அரசமைப்புச் சட்டம் எதைச் செய்யச் சொல்கிறதோ அதைச் செய்ததற்காகத் துணை அதிபருக்கு எந்த அளவுக்குப் பாராட்டுகள் குவிகின்றன என்பதைக் கண்டு வியந்துபோகிறேன்.

அரசியல் துணிவு என்பதற்குக் கொஞ்சம் புத்தாக்கச் சிந்தனை வேண்டும், கொஞ்சம் அகநோக்கு வேண்டும், புதிய அரசியல் பாதையை வகுப்பதற்கு மரபுகளை இல்லாவிடினும் நடைமுறைகளை மீறும் துணிச்சல் வேண்டும். அதைத் துணை அதிபர் செய்யவில்லை. அவருடைய பங்கானது சடங்குரீதியிலானது. நீங்கள் என்னென்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வது தீரமாகாது. எனினும் குறைந்தபட்சக் கடமையை ஆற்றியதற்காகத் துணை அதிபரைப் பாராட்ட வேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம், அதற்காவது வரலாறு அவரைக் கனிவுடன் அணுகும் என்று நினைக்கிறேன்.

அதிபர் ட்ரம்ப்பைப் பதவிநீக்கம் செய்வதற்குக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர்களிடையே எதிர்ப்பு இருக்கும் அதே நேரத்தில் அவரை எதிர்காலக் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக ஆக்குவதைத் தடுப்பதற்கும் அவர்களுக்கு வாய்ப்பு இருக்கிறதல்லவா?

தீர்மானகரமாகச் சொல்ல வேண்டுமென்றால் ட்ரம்ப்பால் இன்னொரு முறை அதிபராக ஆக முடியாது. அவரால் இன்னொரு நான்கு ஆண்டுகள் தாக்குப்பிடிக்க முடியாது. எனினும் அமெரிக்க அரசியலில் அவருடைய குரல் செல்வாக்குடன் ஒலிக்கும் என்று நினைக்கிறேன். ட்ரம்ப் மறுமுறை அதிபராகாத வகையில் செனட்டர்கள் அவரைப் பதவிநீக்கம் செய்வதைப் பற்றி பரிசீலிக்கிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் அதிபரைப் பதவிநீக்கம் செய்ய விரும்புகிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

டொனால்டு ட்ரம்ப்புக்குப் பக்கத்தில் வைக்கக்கூடியவராகக் கருதும் இன்னொரு அமெரிக்க அதிபராக நீங்கள் யாரைக் கூறுவீர்கள்?

ஆண்ட்ரூ ஜான்ஸன்தான். ஆபிரஹாம் லிங்கன் சுட்டுக்கொல்லப்பட்டபோது ஆண்ட்ரூ ஜான்ஸன்தான் துணை அதிபராக இருந்தார். அவர்தான் அமெரிக்காவின் மிகவும் இனவெறி பிடித்த அதிபராக இருப்பார். அவர்தான் மிகப் பெரிய முட்டாளும்கூட. இந்த விஷயத்தில் அவரோடு கடுமையாகப் போட்டியிடக்கூடிய அதிபர்களும் இருக்கிறார்கள். அதிபர் ஜான்ஸன் தன்னுடைய பதவிக் காலத்தின் இறுதியில் பதவிநீக்கம் செய்யப்பட்டார். அவருடைய சினமூட்டும் பேச்சுகள், நாடாளுமன்றத்தைத் தாக்கியது போன்றவை இதற்குக் காரணங்கள்.

அமெரிக்காவில் மூன்றாவது பெரிய அரசியல் கட்சி கூடிய விரைவில் உருவாவதற்கு வாய்ப்பிருக்கிறதா?

வரலாறு அதைத்தான் உணர்த்துகிறது… டொனால்டு ட்ரம்ப் ஜனநாயகக் கட்சியை மட்டும் எதிர்த்துப் போட்டியிடவில்லை, குடியரசுக் கட்சியின் ஜார்ஜ் டபிள்யு. புஷ்-மிட் ரோம்னி பிரிவையும் எதிர்த்துதான் அதிபர் வேட்பாளரானார். டொனால்டு ட்ரம்ப் கட்சியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அதிபராகவும் ஆனார். ஆனால், அவருக்கு எதிரானவர்கள் கட்சிக்குள்தான் இருக்கிறார்கள். அதனால், குடியரசுக் கட்சியில் உள்ள ஒவ்வொருவரும் அதன் குடையில் கீழ் தொடர்ந்து இருப்பார்கள் என்று அர்த்தமில்லை. அந்தக் கட்சிக்குள்ளேயே ட்ரம்ப்பை எதிர்ப்பவர்கள் பெரும்பாலும் அதன் மைய நிலைப்பாட்டுப் பகுதியில் இருக்கிறார்கள். ஜனநாயகக் கட்சியில் ஒரு மைய நிலைப்பாட்டுப் பகுதி இருக்கிறது. இந்த இரண்டு பகுதிகளும் ஒன்று சேர்ந்து ஒரு புதிய அரசியல் கட்சி உருவாவதற்குக் காலம் கனிந்திருக்கிறது.

தற்போது அது குறித்து ஜனநாயகக் கட்சியினர் பரவச உணர்வு அடைவதற்கு முன்பு நான் ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதற்கு முன்பெல்லாம் அமெரிக்க வரலாற்றில் ஒரு கட்சி சிதைவடையும்போதெல்லாம் அது மற்ற கட்சிக்கும் தொடர்ந்து வந்த தேர்தல்களில் பாதிப்பு ஏற்படுத்தியிருந்தது. ஏனெனில், குறிப்பிட்ட நலன்கள் அடிப்படையிலான குழுக்கள், கூட்டணிகள் தங்களுக்குள்ளே ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக்கொள்வதுண்டு.

‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x