Published : 17 Jan 2021 03:14 AM
Last Updated : 17 Jan 2021 03:14 AM

நுண்கலை மாணவர்களின் அடிப்படைத் தேவைகளில் அக்கறை செலுத்துமா அரசு?

சந்ரு

ஐரோப்பியக் கலை இயல் மற்றும் கைவினைத் தொழில்களில் பயிற்சி பெற்ற பணியாளர்களுக்கான தேவையின் காரணமாகத்தான் ஆங்கிலேய வர்த்தகமும் அரசும் காலனிய இந்தியக் கலை, கைவினைப் பொருள் பயிற்சிப் பள்ளிகளை இந்தியாவில் தொடங்கின. 1850-களில் மருத்துவர் அலெக்சாண்டர் கண்டர் தலைமையில் சென்னை - அரசு நுண்கலைக் கல்லூரியும் அப்படித்தான் தொடங்கப்பட்டது. இந்தியப் புரவலர்கள், கல்வியாளர்கள், தேச பக்தர்கள் மத்தியில் ஆங்கிலேயரின் நடை, உடை பாவனைகள் மற்றும் கலை இலக்கியங்கள் கௌரவ அடையாளமாக அப்போது விளங்கியிருக்கின்றன. இந்தப் பின்புலத்தில், ஐரோப்பியக் கலை மரபு தொடர்பான அடிப்படைப் பயிற்சியாகவும், நவீனக் கலை மேல்நிலைப் பயிற்சியாகவும் இந்தியக் கலைப் பள்ளிகளின் பாடத்திட்டங்கள் அமைந்தன. ஐரோப்பிய நவீனக் கலை இயக்கமானது சமூகக் கட்டமைப்பு மீதான விமர்சனம், தனிநபர் உளவியல், கலைப் படைப்பின் உள்ளடக்கம், வடிவப் பரிசோதனை எனப் பல கலை இயல்புகள் கண்டன. சுதந்திர இந்தியாவில் பரவலாக ஐரோப்பிய நவீனக் கலை இயல்புகளைச் சாடைசெய்வது, அந்தக் கலைக் கூறுகளை நமது மரபுக் கலைச் சின்னங்களில் சாடைகாண்பது என நுண்கலைக் கல்லூரிகளும் கலைத் துறைகளும் இயங்கிவருகின்றன.

வங்கக் கலைப் பள்ளி மாணவர் ராய்சௌத்ரி தலைமையில் சென்னை - தொழில் பயிற்சிப் பள்ளியானது 1930-களில் கலை, கைவினைப் பள்ளியாக மாற்றமடைந்தது. அவரின் கலை ஆளுமையானது மாணவர்கள் மனதில், நேரில் கண்ட காட்சித் தோற்றங்களை அச்சு அசலாகப் படைக்கும் ஆற்றலை ஊக்கப்படுத்தியது. 1957-ல் சென்னைக் கலைப் பள்ளி மாணவர் கே.சி.எஸ்.பணிக்கர் தலைமையில் நுண்கலைக் கல்லூரியாகக் கலைப் பள்ளி மாற்றம் கொண்டது. அவர் ஐரோப்பிய நவீனக் கலையை மாணவர் மத்தியில் ஊக்கப்படுத்தினார். மேலும், பரிசோதனை முயற்சி என நவீனப் படைப்புகளுக்குக் கிடைத்த தேசிய அளவிலான அங்கீகாரங்கள் அச்சு அசலாகப் படைக்கும் கலைப் பயிற்சியைக் கேள்விக்குள்ளாக்கின.

1979-ல் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் குழந்தைசாமி தலைமையில் மாணவர்களின் வாழ்வாதாரம் பரவலாகும் வகையில் பட்டயப் படிப்பாக இருந்த விளம்பரக் கலைப் பிரிவு, சுடுமண் கலை மற்றும் துகில் இயல் கலைப் பிரிவுகள் பட்டப் படிப்பாக மாற்றம் கொண்டன. அதைத் தொடர்ந்து வண்ணக் கலை, சிற்பக் கலை, அச்சுக் கலைப் பிரிவுகளும் பட்டப் படிப்பாக விளங்கின.

கலைப் பயிற்சியும் பயிற்றுனர்களும்

வண்ணக் கலை, காட்சித் தொடர்புக் கலை, சிற்பக் கலை, சுடுமண் கலை, துகில் இயல் கலை, அச்சுப் பதிவுக் கலை போன்ற பாடப் பிரிவுகளைக் கொண்டது சென்னை நுண்கலைக் கல்லூரி. அது செயல்முறைப் பயிற்சி, கோட்பாடு இயல், கலை வரலாறு பாடப் பிரிவுகள் கொண்டது. அச்சு அசலாக வரையும் பயிற்சியும் கலை வரலாறும் அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும் பொதுவாக இருந்தன. செயல்முறைப் பயிற்சிகளும் கோட்பாட்டு இயல்களும் பாடப் பிரிவுகளுக்கு ஏற்றவாறு இருந்தன.

நேரில் கண்ட காட்சித் தோற்றங்களை அச்சு அசலாகப் படைக்கும் ஆற்றல் பயிற்றுனருக்கு வாய்த்திருந்தால் மாணவர்களுக்குக் கலைப் பிரிவுப் பாடங்களைக் கற்பிக்கும் வாய்ப்பு இருக்கும். தன்னுடைய சுயஅனுபவத்தைக் கற்பிப்பதும், தமது கலைப் படைப்புகளை ஆய்வு முறையாக அணுகுவதும், சுயவிமர்சனம் செய்துகொள்வதும் அந்தப் போதனை முறையில் அடங்கும். பிற கலைப் படைப்பு, படைப்பாளிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளுதல், இயல், இசை, நாடகம் மற்றும் பிற தொழில் துறைகளில் படைப்புரீதியாகப் பங்களித்தல், தேசிய அளவில் நுண்கலைக் கலை முகாம், கருத்தரங்கம், பயிற்சி முகாம், கண்காட்சிகளில் பங்களித்தல் ஆகியவையும் பயிற்றுனரின் பணிகளாக இருக்கும்.

முதல்வர், அதிகாரிகளின் பணி

கல்லூரி முதல்வரைப் பொறுத்தவரை தலைமைப் பணியைத் தொண்டாகவும், கலைப் படைப்புகளை ஆய்வுக் களமாகவும் கருதுதல் வேண்டும். கல்லூரி மேம்பாட்டுத் திட்டங்கள், பாடப் பயிற்சிக்கான வகுப்பறைத் தேவைகளை அரசு நிர்வாக அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும். கல்லூரி வளாகத்திலும் வெளியிலும் மாணவர்கள், ஆசிரியர்கள், பல துறை வல்லுனர்களிடையே கலந்துரையாடல் நிகழ்த்துதல், தேசிய அளவில் நுண்கலை மாணவர்கள், கலைஞர்கள் இணைந்த கலை முகாம்களை நிகழ்த்துதல் ஆகியவையும் கல்லூரி முதல்வரின் பணியாகும். பிற நாட்டுத் தூதரகக் கலை நிகழ்வுகளுடன் இணைந்து செயல்படுவதோடு கல்லூரிக்கு உள்ளும் வெளியிலும் மாணவர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கான முயற்சிகளைச் செய்வதும் கல்லூரி முதல்வரின் பணிகள்தான்.

நுண்கலை மாணவர்கள், பயிற்றுனர்களின் கலை ஆற்றலைத் தொல்லியல் துறை, கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, அருங்காட்சியகத் துறை, அறநிலையத் துறை எனப் பல துறைத் தேவைகளோடு ஒருங்கிணைப்பது கலைத் துறை சார்ந்த நிர்வாகத்தில் இருக்கும் அதிகாரிகளின் பணியாகும்.

படைப்பாளியின் வாழ்வாதாரம்

படைப்பாளிகளை ‘சுதந்திரமான கலைஞர்’ மற்றும் ‘தொழில்முறை சார்ந்தவர்’ என வகைப்படுத்தலாம். சுதந்திர வகைப் படைப்புகளின் வர்த்தகமானது ஏலக்கடை, விற்பனைக் கூடம், கண்காட்சி, புரவலர், கட்டிடக் கலை, உள்-வெளி அலங்காரம் சார்ந்தவை. தொழில்முறைப் படைப்பாளிகளோ சுய தொழில், அரசுத் துறைகள், தனியார் துறைகளைச் சார்ந்திருப்பவர்கள். இன்றைய சூழலில் அரசு வேலைவாய்ப்புகள் குறைந்துவருகின்றன.

நிலப்பகுதி, இனம், மொழி, மதம் என இன்றைய வேறுபட்ட அடையாளங்களுக்கிடையே, உலகமயமாதல் என்னும் போக்கு மேலும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இத்தகைய சூழலில் தாங்கள் பிறந்து வளர்ந்த நிலப்பகுதியே தங்களுக்கான உணவு, மருந்து, உடை என்ற புரிதல் அவசியம். உலக மானிட நல்லிணக்கம் கருதி கலைஞர்கள் தாங்கள் சார்ந்த மதம், மொழி, இனம், அரசின் மீதான விமர்சனப் பார்வையுடன் உலகமயமாதலை ஆற்றுப்படுத்த வேண்டியதும் அவசியம். நவீனம், பின்நவீனத்துவம், விளம்பரம், விருது, விலை என்பவற்றிலிருந்து விலகிச் சிந்திப்பவரின் கைகளில்தான் நுண்கலைகள் சித்திக்கும்.

இந்தியக் கலை மரபு

கீழைத்தேயம், மேலைத்தேயம் என்ற வகைப்பாடுகள் தாண்டி கலைப் படைப்புகள் என்பவை நிலம், மதம், மொழி, இனக்கூறுகளை உள்ளடக்கியவை. அவற்றை நமது முன்னோர்களின் கதைகளாக, புராணங்களாக, தெய்வ நம்பிக்கையின் அடையாளங்களாகப் புரிந்துகொள்வதற்கு மதச்சார்பு தேவையில்லை. நமது மரபில் உள்ளவற்றின் மீதுதான் மேற்கத்தியக் கலை ஆதிக்கம் செலுத்தி சிதைவு, கியூபிச இயல்கள் என நவீனக் கலை இயக்கமாக்கியது.

கலையைச் சுதந்திர உணர்வுடன் அணுகும் வகையில் நமது மரபுக் கலைச் சின்னங்களைக் கலைநயம், சித்தாந்தம், வேதாந்தம், புராணம், இலக்கியம், அரசியல், வர்த்தகரீதியாகப் புரிந்துகொள்ளும்போது நமது கலைமரபின் உலகு தழுவிய பார்வை வெளிப்படும். அதற்கேற்ப இன்றை நவீனத் தொழில்நுட்பத்தோடும் ஊடகங்களோடும் ஊடாடும் வகையில் நுண்கலை மாணவர்களுக்கான போதனை முறையையும் உள்கட்டமைப்பையும் நாம் செழுமைப்படுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம்.

இன்று நுண்கலை மாணவர்களின் தேவையானது பாடத்திட்டங்களுக்குத் தகுதியான பயிற்றுனர்கள், பாடப் பயிற்சிக்கான கருவிகள், மூலப்பொருட்கள், அரசு வேலைவாய்ப்பு, மாணவர் விடுதி ஆகியவைதான். கல்லூரிப் படிப்பை முடித்து சமூகவெளிக்குள் செல்லும் மாணவர்களின் வாழ்வாதாரங்களையும் உள்ளடக்கிய கோரிக்கைகள் இவை. அரசும் கலைக் கல்லூரி நிர்வாகத்தினரும் இதை உடனடியாகக் கவனித்தல் வேண்டும்.

- சந்ரு, ஓவியர், சென்னை நுண்கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x