Published : 14 Jan 2021 03:19 am

Updated : 14 Jan 2021 07:45 am

 

Published : 14 Jan 2021 03:19 AM
Last Updated : 14 Jan 2021 07:45 AM

கண்ணீரில் தத்தளிக்கும் காவிரிப் படுகை விவசாயிகள்

cauvery-delta-farmers

காவிரிப் படுகை மாவட்டங்களில் பொங்கலுக்கு முதல் வாரம் கடைத் தெருவுக்கு வந்த கரும்புக் கட்டுக்கு முதலில் ரூ.300 விலை வைத்தார்கள். அடுத்த நாளே ரூ.200 என்று விலை குறைக்கப்பட்டது. அப்படியும் பொங்கல் கரும்புகள் விற்பனையின் தேக்கம் சரியாகவில்லை. போகிப் பண்டிகையன்று எப்போதுமே பரபரப்பாக இருக்கும் பூ, காய்கறி, மீன் சந்தைகளும் அமைதியாகக் கிடந்தன. கஜா புயலின் காரணமாக 2019 பொங்கல் பண்டிகை களையிழந்து கிடந்தது. இந்த ஆண்டும் அதே நிலை.

கடந்த ஒரு வார காலமாக காவிரிப் படுகை மாவட்டங்களில் இடைவிடாமல் கொட்டித் தீர்க்கும் கனமழையால் நெல்வயல்கள் மழைநீரில் மூழ்கிக்கிடக்கின்றன. அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் தலைசாய்ந்து படுத்துவிட்டன. வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், அறுவடை இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு தற்போதைக்கு எந்தச் சாத்தியமும் இல்லை. அறுக்கத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைக்கத் தொடங்கிவிட்டன. சற்றே தாமதமாக நட்ட பயிர்களும்கூட தண்ணீரில் மூழ்கி முற்றிலுமாக அழுகிவிட்டன. தினமும் காலையில் வயலுக்குச் சென்று வீடு திரும்புவதை வழக்கமாக வைத்திருக்கும் விவசாயிகளின் முகங்கள் கவலைகளால் நிரம்பியிருக்கின்றன. நெல்மணம் வீசிய வயல்கள் தண்ணீரில் அழுகி வீச்சம் எடுப்பதாய்ச் சொல்லிக் கலங்கி நிற்கிறார்கள்.


குறுவை விளைந்தும் பயனில்லை

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2020-ல்தான் மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. உரிய நேரத்தில் கிடைத்த நீரால் வழக்கத்தைக் காட்டிலும் குறுவை சாகுபடி 35% அதிகரித்தது. ஹெக்டேருக்கு 6 டன் என்ற வழக்கமான அளவைக் காட்டிலும் 6.2 டன் என்று கூடுதல் விளைச்சல் கண்டதாக வேளாண்மைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், அரசு கொள்முதல் நிலையங்களின் சுணக்கத்தால் விவசாயிகள் கொள்முதல் மையங்களில் வாரக்கணக்கில் காத்துக்கிடக்க வேண்டியிருந்தது. விளைந்த நெல்லை மழையிலிருந்து பாதுகாக்கப் போராட வேண்டியிருந்தது.

இப்போது தாளடி, சம்பா பருவங்களில் விளைந்து களத்துக்கு வரும் முன்பே இயற்கை முற்றுமுழுதாகச் சூறையாடிவிட்டது. கடந்த நவம்பர் மாதக் கடைசியில் நிவர் புயலாலும் டிசம்பர் மாதத் தொடக்கத்தில் புரெவி புயலாலும் அடுத்தடுத்துத் தொடர் மழையாலும் காவிரிப் படுகையின் பள்ளமான பகுதிகள் ஏற்கெனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டன. டிசம்பர் முதல் வாரத்தில் புரெவி புயலையொட்டி தொடர்ந்து பெய்த மழையில் தஞ்சை மாவட்டத்தில் 25,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல்வயல்கள் நீரில் மூழ்கின. நாகை மாவட்டத்தில் 1,25,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல்வயல்கள், திருவாரூர் மாவட்டத்தில் 1,50,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல்வயல்கள் மூழ்கின. இன்னபிற பயிர்களின் நிலையும் இதேதான்.

கணிக்க முடியாத காலநிலை

வழக்கமாக வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் மார்கழி பிறந்த பிறகு மழை குறையும் என்ற நம்பிக்கையோடுதான் சம்பா சாகுபடி திட்டமிடப்படுகிறது. டிசம்பர் கடைசி வாரங்களில் மழை பெய்தாலும் ஒரு நாளோ இரண்டு நாட்களோ பெய்த பின் அடங்கிவிடும். இந்த முறை ஜனவரி இரண்டாம் வாரம் வரைக்கும் மழை நீடித்திருக்கிறது. அதுவும் கனமழை. வாரக்கணக்கில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டியே திட்டமிட்டு எதிர்கொள்ளும் அரசு, எதிர்பாராத மழை குறித்தும் அதே கவனத்தை எடுத்துக்கொள்ளவில்லை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாகப் பெய்துவரும் கனமழையால் விவசாயத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, புயல் தாக்கத்தைவிடவும் கொடுமையானதாக மாறியிருக்கிறது.

பருவநிலை மாற்றத்தின் புதிய சவால்களையும் விவசாயிகள்தான் முதலில் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஏற்கெனவே பெய்த வழக்கத்துக்கும் அதிகமான மழையால் ஏரி, குளங்கள் நிரம்பிவிட்டன. எனவே, கிராமப் பகுதிகளில் இயல்பாகவே இருக்கும் வடிகால் அமைப்புகளும் உடனடி பயனளிக்கவில்லை. காவிரிப் படுகை மாவட்டங்களில் பாசனத்துக்கான கட்டமைப்பைப் போலவே வடிகாலுக்கும் வலுவான ஒரு கட்டமைப்பின் அவசியத்தை இந்த எதிர்பாராத மழை உணர்த்தியிருக்கிறது.

பயனளிக்காத பயிர்க் காப்பீடுகள்

தேர்தல் நெருங்கிவிட்ட நேரத்தில், தற்போது அரசின் திட்டங்களைச் சாதனைகளாகப் பறைசாற்றிக்கொள்ளும் தமிழக அரசு, பெருந்தொற்றுக் காலத்தில் பயிர்க் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்த தகவல்களை விவசாயிகளுக்கு உரிய வகையில் கொண்டுசேர்க்கவில்லை. பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துகொள்வதற்கான கடைசி நாளில் விவசாயிகள் நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருந்ததை மறக்க முடியாது. சொந்த உழைப்பையும் குடும்பத்தினரின் உழைப்பையும் தவிர்த்து ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000 வரையில் செலவிடும் விவசாயிக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.500 பயிர்க் காப்பீடு செய்வது பெரிய செலவு இல்லைதான். ஆனால், அந்த பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பதுதான் விளங்காத புதிராகத் தொடர்கிறது.

பக்கத்து ஊர்களுக்கும்கூட வெவ்வேறாக இழப்பீடு நிர்ணயிக்கப்படுகிறது. காப்பீட்டு நிறுவனங்கள் அளிக்கும் இழப்பீட்டை வேளாண் கூட்டுறவுச் சங்கங்களும் மத்திய கூட்டுறவு வங்கிகளும் விவசாயிகளுக்கு முறையாக அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்கிறது. ஏற்கெனவே வறட்சிகால பயிர்க் காப்பீட்டுக்காக மாதக் கணக்கில் காத்திருந்த அனுபவங்கள், எதிர்பாராத மழைக்காலத்தில் காப்பீடு குறித்த எந்த நம்பிக்கையையும் அளிக்கவில்லை.

புயல் அடித்தாலே இரண்டு வாரங்களுக்குப் பிறகுதான் மத்தியக் குழு பார்வையிட வரும். எதிர்பாராத மழையும் பேரிடராகக் கொள்ளப்படுமா? அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அவர்களின் பார்வைக்காக அழுகி நிற்கும் நெல்வயல்களை அப்படியே பாதுகாக்க வேண்டியிருக்குமா? விவசாயம் மட்டுமின்றி காவிரிப் படுகை மாவட்டங்களின் மொத்த இயல்பு வாழ்க்கையும் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. கிராமப்புற மண் ஒழுங்கைகள் பயன்படுத்த முடியாத நிலையில் சேறும் சகதியாக மாறிவிட்டன. படுகை மாவட்டங்களின் நகரங்களை இணைக்கும் பிரதான சாலைகளிலும்கூட மழைநீர் தேங்கி நின்று வாகனப் போக்குவரத்தைப் பாதித்துள்ளது.

உறங்காத இரவுகள்

விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு வீட்டையொட்டிக் கொட்டகை அமைப்பது வழக்கம். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வீட்டுக்குள்ளேயே கால்நடைகளைக் கட்டிவைத்திருக்கிறார்கள். தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கும் பகுதிகளில், பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் வீடுகளை நோக்கி வரும் அபாயத்தால், விடிய விடிய தூங்காமல் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். கூடவே, மின்தடைச் சிக்கலையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

நிவர், புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட ஐந்து லட்சம் விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக ரூ.600 கோடி அளிக்கப்படும், நெற்பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20,000 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜனவரி மாதத் தொடக்கத்திலேயே உறுதியளித்திருந்தாலும் அந்த நிவாரணம் எல்லாப் பகுதிகளிலும் சமமாக வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு இன்னமும்கூட நிவாரணம் சென்றுசேரவில்லை. காவிரிப் படுகை இந்த ஆண்டு பொங்கலைக் கண்ணீரோடுதான் கடந்துசெல்ல வேண்டியிருக்கிறது.

- செல்வ புவியரசன், puviyarasan.s@hindutamil.co.in


காவிரிப் படுகை விவசாயிகள்Cauvery farmersகாவிரிப் படுகைCauvery delta farmersநெல்வயல்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x