Published : 12 Jan 2021 03:13 am

Updated : 12 Jan 2021 07:08 am

 

Published : 12 Jan 2021 03:13 AM
Last Updated : 12 Jan 2021 07:08 AM

அமெரிக்காவுக்கு ட்ரம்ப் ஏற்படுத்திய சேதாரம் எப்படிப்பட்டது?

donald-trump

அமெரிக்க நாடாளுமன்றம் இருப்பது கேபிட்டல் கட்டிடம். அவர்கள் அதை நோக்கித்தான் வந்தார்கள். குதிரைகளில் வந்தார்கள். ஆயுதமேந்தி வந்தார்கள். அவர்கள் பிரிட்டிஷ்காரர்கள், எதிரிகள். அவர்கள் கட்டிடத்துக்குத் தீ வைத்தார்கள். அது நடந்தது 1814-ல்.

இது 2021, நாள் : ஜனவரி 6. இவர்களும் கேபிட்டல் கட்டிடத்தை நோக்கித்தான் வந்தார்கள். ஊர்வலமாக வந்தார்கள். கைகளில் உருட்டுக்கட்டைகளும் கொடிக் கம்புகளும் வைத்திருந்தார்கள். இவர்கள் சொந்த நாட்டினர், அமெரிக்கர்கள். கட்டிடத்துக்கு உள்ளே இருந்தவர்களும் அமெரிக்கர்கள்தான், நாடாளுமன்ற உறுப்பினர்கள்; ஜோ பைடனைப் புதிய அதிபராக அங்கீகரிப்பதற்காகக் கூடியிருந்தார்கள். அது ஒரு சடங்கு. வெளியே குவிந்தவர்கள் அந்தச் சடங்கைத் தடுப்பதற்காக வந்தவர்கள்.


வெள்ளை மாளிகை, கேபிட்டல் கட்டிடத்துக்கு அருகில்தான் இருக்கிறது. 1812-ல் பிரிட்டிஷ் படையெடுப்பின்போது அப்போதைய அதிபர் ஜேம்ஸ் மேடிசன் பாதுகாப்பான இடம் நாடிப் போய்விட்டார். 2021-ல் இப்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் சம்பவம் நடந்தபோது வெள்ளை மாளிகையில்தான் இருந்தார். எல்லாவற்றையும் தொலைக்காட்சியில் நேரலையாகப் பார்த்துக்கொண்டிருந்தார். அவர்தான் இவர்களுக்குத் திலகமிட்டு, ‘நமது வாக்குகளை அவர்கள் திருடிவிட்டார்கள்; கேபிட்டலுக்குச் செல்லுங்கள்; கேள்வி கேளுங்கள்’ என்று சொல்லி அனுப்பி வைத்தவர்.

வந்தவர்கள் கேபிட்டல் கட்டிடத்தையும் ஜனநாயக விழுமியங்களையும் ஒருசேரத் தாக்கினார்கள். கலகக்காரர்களின் சட்டைகளில் ட்ரம்ப்பின் படம் இருந்தது. ‘உள்நாட்டு யுத்தம் ஜனவரி 6’ என்ற வாசகம் எழுதியிருந்தது. சிலரது கைகளில் கூட்டமைப்பு (Confederate) கொடிகள் இருந்தன. அதை அவர்கள் உயர்த்திப் பிடித்தார்கள். அந்தக் கொடி வெள்ளையின மேலாதிக்கத்தின் குறியீடு. கடந்த நான்காண்டுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வெளிப்பட்ட இந்த ஆதிக்க மனோபாவம், இப்போது துலக்கமாகத் தெரிந்தது. இதற்கான பூர்வாங்க வேலைகளைத்தான் அதிபராவதற்கு முன்பே தொடங்கிவிட்டார் ட்ரம்ப்.

ட்ரம்ப்பின் சூழ்ச்சி

ட்ரம்ப்புக்கு முன்பு அதிபராக இருந்தவர் ஒபாமா. அவரது சமீபத்திய நூல் ‘எ ப்ராமிஸ்டு லேண்டு’. அதில் ஒபாமா தனது பதவிக்கால அனுபவங்களைச் சொல்கிறார். 2011-ல் ஒரு தொலைக்காட்சி நட்சத்திரமாக விளங்கிய ட்ரம்ப், அதிபர் பதவிக்குப் போட்டியிட விரும்பினார். அப்போது அவர் ஒரு திரியைக் கொளுத்திப் போட்டார். அது: ‘ஒபாமா அமெரிக்காவில் பிறக்கவில்லை’. ஒபாமா பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ் என ஒவ்வொன்றாகப் பொதுவெளியில் வைத்தார். உண்மைகள் யாருக்கு வேண்டும்? கதைக்கு அப்போது கால் முளைத்துவிட்டது. ஒபாமா கென்யாவில் பிறந்தவர், முஸ்லிம், ரகசிய உளவாளி, தேச விரோதி என்று கதை நீண்டது. ஜே கார்னி ஒபாமாவின் ஊடகச் செயலர். ஒரு கட்டத்தில், செய்தியாளர் சந்திப்புகளில், கார்னியின் சரிபாதி நேரம் இந்தப் பிறப்புச் சான்று விவகாரம் குறித்த கேள்விகளுக்குப் பதில் சொல்வதிலேயே கழிந்தது என்று எழுதுகிறார் ஒபாமா.

ட்ரம்ப்பின் மதவியமும் இனவியமும்

2015 தேர்தல் பரப்புரையின்போதே முஸ்லிம்களை அமெரிக்காவுக்குள் அனுமதிக்க மாட்டேன் என்று பேசினார் ட்ரம்ப். அப்போதைய தேர்தல் விவாதமொன்றில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி: ‘இந்த உலகத்தில் 160 கோடி முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அவர்கள் அனைவருமா அமெரிக்காவை வெறுக்கிறார்கள்?’ ட்ரம்ப்பின் பதில், ‘அவர்களில் மிகப் பெரும்பான்மையோர்’ என்பதாக இருந்தது.

ட்ரம்ப்பின் பதவிக்காலத்தில் இனவேற்றுமைக்கு ஆட்சியாளர்களின் ஆசிர்வாதம் இருந்தது. 2017-ல் வெர்ஜினா மாநிலத்தின் சார்லொடிஸ்விலி நகரத்தில் ராபர்ட் லீ என்பவரின் சிலை இருந்தது. அவர் அமெரிக்காவில் நிலவிய அடிமைக் கலாச்சாரத்தின் பிரதிநிதியாக விளங்கியவர். அந்தச் சிலையை அகற்ற வேண்டுமென்கிற கோரிக்கை நெடுநாளாக இருந்தது. மாநில அரசு இசைந்தது. அப்போது வெள்ளையின மேலாதிக்கத்தை ஆதரிக்கும் அமைப்பினர் நகருக்குள் வந்தனர். சிலையை அகற்றக் கூடாது என்றனர். அவர்களுக்கு எதிராகவும் ஓர் அணி திரண்டது. காவலர்கள் அனைவரையும் கலைந்து செல்லப் பணித்தனர். அப்போது, வீடு திரும்பிக்கொண்டிருந்த ஓர் இளம் பெண்ணை வெள்ளையின ஆதிக்கர் ஒருவர் காரை ஏற்றிக் கொன்றார். அடுத்த நாள் ட்ரம்ப், ‘இரண்டு பக்கமும் தவறு இருக்கிறது ’ என்றார். வெள்ளையின ஆதிக்கத்தை ஆதரிப்பவர்களையும் எதிர்ப்பவர்களையும் ட்ரம்ப்பால் ஒரே தளத்தில் நிறுத்திவிட முடிந்தது.

2020-ல் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பினத்தவரின் குரல்வளையை ஒரு வெள்ளைக் காவலர் தன் முழங்காலால் நெரித்தே அவரைக் கொன்றார். உலகம் ஸ்தம்பித்தது. நாடெங்கும் கண்டன ஊர்வலங்கள் நடந்தன. இந்த எதிர்ப்பாளர்கள் வெறுப்பை வளர்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார் ட்ரம்ப்.

கமலா ஹாரிஸ் துணை அதிபராகப் போட்டியிடுவார் என்று பைடன் அறிவித்ததும், ஒபாமா மீது சுமத்திய பழியை கமலா மீதும் சுமத்தினார் ட்ரம்ப். அதாவது, ‘கமலா அமெரிக்கர் இல்லை; அவரது பெற்றோர் அமெரிக்கர்கள் இல்லை’. நடந்து முடிந்த தேர்தலுக்கு முன்பான விவாதமொன்றில், ‘வெள்ளையின மேலாதிக்கர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டார் ஒருங்கிணைப்பாளர். ட்ரம்ப் சொன்னார்: ‘பின்னால் நில்லுங்கள். தயாராக இருங்கள்’. இப்படியாக ட்ரம்ப்பின் தலைமை இனவேற்றுமைக்கும் வெள்ளையின மேலாதிக்கத்துக்கும் துணை நின்றது. நவம்பர் 3-ல் நடந்த தேர்தலின் முடிவு ட்ரம்ப்புக்கு எதிராக அமைந்தது. ஆனால் தொடர்ச்சியாக இந்தத் தேர்தல் மோசடியானது என்று பேசிவந்தார் ட்ரம்ப். அதைக் கணிசமானோர் நம்பவும் செய்தனர். மாவட்ட நீதிமன்றத்திலிருந்து உச்ச நிதிமன்றம் வரை அவர் சார்பாகத் தொடுக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் எதுவும் நிற்கவில்லை.

அமெரிக்காவின் பன்மைத்துவம்

அமெரிக்கா பல இனங்களின் கூட்டமைப்பு. ஒரு காலத்தில் கறுப்பினத்தவர் அடிமைகளாகவும் வெள்ளை இனத்தவர் ஆண்டைகளாகவும் இருந்தனர். அடிமைச் சங்கிலி தகர்ந்தபோதும் கறுப்பினத்தவர் இரண்டாந்தரக் குடிமக்களாக இருந்தனர். அவர்களது குடியிருப்புகள் தனி, பள்ளிகள் தனி, ரயில்கள் தனி. 1965-ல்தான் எல்லாக் கறுப்பினத்தவர்க்கும் வாக்குரிமை கிடைத்தது. அதற்கு 44 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கறுப்பினத்தவரால் அதிபராகவும் முடிந்தது. அதே அமெரிக்காவை இன்று பின்னோக்கி இழுக்கிறார் ட்ரம்ப். இந்தத் தேர்தலில் 47% பேர் அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள். அவரது ஆதரவாளர்களில் பலருக்கும் வெள்ளையர்கள் மேலானவர்கள் என்கிற மனோபாவம் இருக்கிறது. தங்கள் வெள்ளையினப் பெருமையை உரத்துச் சொல்லிவந்த தலைவர் ஆட்சிக் கட்டிலிலிருந்து இறங்க நேர்வது அவர்களுக்குச் சம்மதமாக இல்லை. அதனால்தான் அவரது அழைப்பை ஏற்று ஆயிரக் கணக்கானோர் ஜனவரி 6-ல் வாஷிங்டன் வந்தனர். கேபிட்டலைத் தாக்கினர்.

இதில் தாக்குண்டது அந்தக் கட்டிடம் மட்டுமில்லை. அமெரிக்காவின் ஜனநாயகமும் பன்மைத்துவமும்தான். வன்முறையாளர்கள் வெளியேறியதும் அன்று இரவே நாடாளுமன்றம் மீண்டும் கூடியது; பைடனை அதிபராக அங்கீகரித்தது. ஜனவரி 20 அன்று பைடன் அதிபராவார். இதன் மூலம் அமெரிக்க ஜனநாயகம் தூக்கி நிறுத்தப்பட்டிருக்கிறது. எனில், பன்மைத்துவத்தின் மீதான காயங்கள் ஆழமானவை. இனங்களுக்கு இடையில் இணக்கத்தைப் பேணுவதன் மூலமே அந்தக் காயங்களுக்கு மருந்திட முடியும். பைடனின் முன்பும் கமலாவின் முன்பும் அந்தப் பெரும் பொறுப்பு இருக்கிறது.

- மு. இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.comDonald trumpட்ரம்ப்ட்ரம்ப் ஏற்படுத்திய சேதாரம்அமெரிக்கா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

chief-minister

யார் முதல்வர்?

கருத்துப் பேழை
arakkonam-murders

அரசே, தன்னிலை உணர்!

கருத்துப் பேழை

More From this Author

x