Last Updated : 10 Jan, 2021 03:28 AM

 

Published : 10 Jan 2021 03:28 AM
Last Updated : 10 Jan 2021 03:28 AM

வாட்ஸ் அப் புதிய நிபந்தனைகள்: சர்ச்சைக்கு காரணம் என்ன?

முன்னணி மெசேஜிங் சேவையான வாட்ஸ் அப் விதிகள் மற்றும்நிபந்தனைகள் புதுப்பிக்கப்பட்டிருப்பது இணைய உலகில் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. வாட்ஸ் அப் புதியநிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்த சேவையை தொடர்ந்துபயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பயனாளிகளின் தரவுகளை வாட்ஸ் அப் கையாளும் விதம் தொடர்பான தகவல்கள் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளன.

இதனிடையே, தரவுகளை தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர நிர்பந்திப்பதால், வாட்ஸ் அப்பை விட்டு வெளியேற வேண்டும் என்ற கருத்தும் சமூக ஊடகங்களில் முன்வைக்கப்பட்டு, டெலிகிராம், சிக்னல் உள்ளிட்ட மேசேஜிங் சேவைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.

இணைய உலகில் தொழில்நுட்ப நிறுவனங்கள், விதிகள் மற்றும் நிபந்தனைகள் அடங்கிய தனியுரிமையை கொள்கையை அவ்வப்போது மாற்றி அமைப்பது வழக்கமானதுதான். அந்த வகையிலேயே வாட்ஸ் அப் தற்போது தனது தனியுரிமை கொள்கையை புதுப்பித்திருக்கிறது.

வாட்ஸ் அப் அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்த முக்கிய காரணம், அது அதிகளவில் பயன்படுத்தப்படும் மேசேஜிங் சேவையாக இருப்பது மட்டும் அல்ல: அதன் தாய் நிறுவனமான பேஸ்புக்கும்தான்.

வாட்ஸ் அப்பின் மாற்றி அமைக்கப்பட்ட நிபந்தனைகளில், பேஸ்புக்குடன் தரவுகள் பகிர்ந்து கொள்ளப்படுவது தொடர்பான அம்சமே அதிகம் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.

வாட்ஸ் அப்பின் புதிய தனியுரிமை கொள்கை, வாட்ஸ் அப் சேவை மற்றும் தரவுகளை கையாளும் விதம், வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்தும் வர்த்தகங்கள் பேஸ்புக் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்துவது மற்றும் பயனாளிகளின் உரையாடல்களை கையாள்வது மற்றும் பேஸ்புக் சார்ந்த சேவைகளுடம் இணைந்து செயல்படும் விதம் ஆகிய 3 முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

இந்த நிபந்தனைகள் அடுத்த மாதம் 8-ம் தேதி அமலுக்கு வருவதாகவும், வாட்ஸ் அப் சேவையை தொடர்ந்து பயன்படுத்த இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் சேவையை தொடர்ந்து பயன்படுத்த பேஸ்புக்குடன் தரவுகளை பகிர்ந்து கொள்ள சம்மதம் தெரிவிக்க வேண்டும் என நிர்பந்திக்கும் வகையில் நிபந்தனைகள் அமைந்திருப்பதாக கூறப்படுவது பயனாளிகளை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

இதனால் உண்டான சர்ச்சையை அடுத்து, புதிய நிபந்தனை மாற்றம் வாட்ஸ் அப் வர்த்தக சேவை தொடர்பானது என்றும், பயனாளிகள் சேவையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும்வாட்ஸ் அப் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் வாட்ஸ்அப் வர்த்தக சேவை தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையிலேயே, புதிய தனியுரிமை கொள்கைஅமைந்திருக்கிறது என்றும், வாட்ஸ்அப் வர்த்தக சேவையுடன் தொடர்பு கொள்ளும் பயனாளிகளின் உரையாடல்கள் கையாளப்படும் விதம் குறித்தே தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் வாட்ஸ் அப் விளக்கம் அளித்துள்ளது.

வாட்ஸ் அப் வர்த்தகம் சார்ந்த தகவல்கள் சேகரிக்கப்படுவதை விருப்பவில்லை எனில், வாட்ஸ் அப் வர்த்தகத்துடன் தொடர்பு கொள்வதை பயனாளிகள் நிறுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்பின் இந்த விளக்கத்தை மீறி, புதிய நிபந்தனைகள் கவலை அளிப்பதாகவே தனியுரிமை ஆர்வலர்கள் கருதுகின்றனர். வாட்ஸ் அப் சேவைஇன்னமும் என்கிரிப்ஷன் வசதி கொண்டதாகவே தொடர்கிறது. இதன் பொருள், வாட்ஸ் சேவை உரையாடலில் பயனாளிகள் பகிரும் தகவல்களை மூன்றாம் தரப்பினர் பார்க்க முடியாது என்பதாகும். ஆக, வாட்ஸ் அப் பயனாளிகள் உரையாடல் தொடர்பான தகவல்களை தாய்நிறுவனமான பேஸ்புக்குடன் பகிரவில்லை.

பேஸ்புக்குடன் தரவுகள் பகிரும் செயல்முறையில் புதிய நிபந்தனைகள் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை மற்றும் பயனாளிகள் தங்கள் நண்பர்கள், குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளும் விதத்தையும் மாற்றிவிடவில்லை என வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.

ஆனால், பிரச்சனை என்னவெனில் வாட்ஸ் அப் ஏற்கெனவே பேஸ்புக்குடன் தரவுகளை பகிர்ந்து வருகிறது என்பதுதான். பயனாளிகளின் போன் எண், அவர்கள் வைத்திருக்கும் போன் மாதிரி, அதன் இயங்குதளம், பேட்டரி பயன்பாடு, இணையத்தில் இருக்கும் காலம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வாட்ஸ் அப்பால் சேகரிக்கப்படுகின்றன. இந்த தரவுகளை பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்கிறது.

இந்த பகிர்வில் இருந்து பயனாளிகள் விலகி கொள்ளும் வாய்ப்பு இதற்கு முன்னர் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால்,புதிய நிபந்தனைகளில் இந்த வாய்ப்பு இல்லை என்கின்றனர்.

அது மட்டும் அல்ல, பயனாளிகள் பகிர்ந்து கொள்ளும் வீடியோ போன்ற ஊடகங்களை குறிப்பிட்ட காலம் சேமித்து வைப்பதாகவும் கூறப்படுவது கவலை அளிக்கும் அம்சமாக அமைகிறது.

தவிர, வாட்ஸ் அப் வர்த்தகங்களுடன் தொடர்பு கொள்ளும் போது, பயனாளிகளின் செயல்பாடு தொடர்பான தரவுகள்சேகரிக்கப்பட்டு, மூன்றாம் தரப்பு நிறுவனங்களுடன் பகிரப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தரவுகளை கொண்டு, பேஸ்புக் பயனாளிகளை குறி வைத்து இலக்கு விளம்பரங்களை முன்னிறுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் வாட்ஸ் அப் பண பரிவர்த்தனை சேவையை பயன்படுத்தும் போதும் பரிவர்த்தனை தரவுகள் சேகரிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

வாட்ஸ் அப் மாற்றி அமைக்கப்பட்ட நிபந்தனைகள், தகவல்கள் சேகரிக்கப்படும் விதம் தொடர்பாக விரிவாக குறிப்பிட்டிருந்தாலும், பல அம்சங்கள் தொடர்பாக தெளிவாக விளக்கம் அளிக்காமல், தொழில்நுட்ப வார்த்தைகளை போட்டு குழப்பி இருப்பதாகவும் தனியுரிமை ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, தனியுரிமை பாதுகாப்பு என்பது வாட்ஸ் அப்பின் மரபணுவில் இருப்பது என தனியுரிமை தொடர்பாக உறுதி அளிக்கும் வாசகம். இதற்கு முன்னர் வாட்ஸ் அப் நிபந்தனைகளில் இடம்பெற்றிருந்த வாசகம், தற்போதைய தனியுரிமை கொள்கையில் இடம்பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.

வாட்ஸ் அப்பின் இணை நிறுவனர்களில் ஒருவரான பிரயான் ஆக்டன் தனியுரிமை விஷயங்களை பேஸ்புக் அணுகும் விதத்தால் அதிருப்தி அடைந்தன் காரணமாகவே நிறுவனத்தை விட்டு வெளியேறியதாக கூறப்படுவதை இங்கே நினைத்து பார்ப்பது பொருத்தமாக இருக்கும். (வாட்ஸ் அப்பிற்கு மாற்றாக சொல்லப்படும் சிக்னல் திறவுமூல தன்மை கொண்ட மேசேஜிங் சேவையில் முக்கிய பங்காற்றி வருகிறார்.)

மேலும், வாட்ஸ் அப் உரையாடல்களில் விளம்பரம் தோன்றாது என குறிப்பிடப்பட்டிருந்தாலும், இது தொடர்பான நிபந்தனை மாறலாம் என தெரிவிக்கப்பட்டிருப்பது, எதிர்காலத்தில் வாட்ஸ் அப்பில் விளம்பரங்கள் எட்டிப்பார்ப்பதற்கான சாத்தியத்தை மறுப்பதற்கிலை என்பதையே உணர்த்துகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு வாட்ஸ் அப் சேவையை கையகப்படுத்திய போது, பேஸ்புக் இந்த சேவையை வர்த்தக நோக்கில் பயன்படுத்த முற்படும் என்று கூறப்பட்டது. இந்த பின்னணியிலேயே வாட்ஸ் அப் சர்ச்சையை அணுக வேண்டியிருக்கிறது. ஏற்கெனவே பேஸ்புக் தரவுகளை கையாளும் விதம் தொடர்பாக கடும் விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில், அதன் துணை நிறுவனமான வாட்ஸ் அப்பையும் லாப நோக்கில் பயன்படுத்த தீர்மானித்திருப்பதாகவே தோன்றுகிறது.

பொதுவாகவே தொழில்நுட்ப நிறுவனங்களின் விதிகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்பது அல்லது நிராகரிப்பது தவிர பயனாளிகளில் வேறு வழியில்லை என்றே கருதப்படுகிறது. இந்த நிதர்சனத்தை வாட்ஸ் அப் சர்ச்சை மேலும்அழுத்தம் திருத்தமாக புரிய வைத்துள்ளது.

அது மட்டும் அல்ல, தங்கள் தரவுகள் பற்றி பயனாளிகள் இன்னும் கூடுதலாக கவலைப்பட்டாக வேண்டும் என்ற டிஜிட்டல் யுகத்தின் உண்மையையும் உணர்த்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x