Last Updated : 08 Jan, 2021 06:53 AM

 

Published : 08 Jan 2021 06:53 AM
Last Updated : 08 Jan 2021 06:53 AM

கரோனா காலத்தில் மாற்றுக் கல்வி ஏன் அவசியமாகிறது?

மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட ஓர் உழைக்கும் மக்கள் குடியிருப்பு அது. மதியம் 12 மணிக்கு ஒரு வீட்டின் வாசல் குழந்தைகளால் நிரம்பி வழிகிறது. தனிநபர் இடைவெளி, முகக் கவசம் என எந்தவித கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளும் இன்றிக் குழந்தைகள் ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தன. என்ன நடக்கிறது என்று விசாரித்தால் டியூஷன் என்கிறார்கள் குழந்தைகள். பள்ளிகள் நீண்ட நாட்களாக மூடப்பட்டிருக்கின்றன. முழு முடக்கம் பகுதி முடக்கமாகிக் கொஞ்சம் கொஞ்சமாகக் கணவன் - மனைவி இருவரும் வேலைக்குப் போக வேண்டிய நிர்ப்பந்தம். வேலைத் தளத்திலிருந்து வீடு திரும்பும் வரை பதின்பருவக் குழந்தைகளை வீட்டில் விட்டுச்செல்ல முடியாது என்ற நெருக்கடி ஒருபக்கம். ஊரில் இருக்கும் ஒரு படித்த பையனையோ அல்லது பெண்ணையோ, அவர்களே ‘ஆசிரியர்' என இவர்களே நாமகரணம் சூட்டி, ‘உங்கள் வீடே பள்ளிக்கூடம்' என்று திடீர் தனிப் பயிற்சி மையங்களை உருவாகிவிட்டனர்.

பள்ளிகளைத் திறக்காவிட்டால் என்ன? இணையதள வசதி இருக்கிறது. கல்வித் தொலைக்காட்சி இருக்கிறது. இதோ ஆசிரியர் தினந்தோறும் வாட்ஸ்அப் வழியே பாடங்களை அனுப்பி வைக்கிறார். முடிந்தவரை படித்துக்கொள்ளுங்கள் என்கிறது அரசு. முடிந்தவரை அல்ல, முற்றிலும் படிக்க முடியவில்லை என்ற எதார்த்தத்தைத் தெரிந்துகொள்ளக் கள ஆய்வுகள் ஏதும் தேவை இல்லை. அதேசமயம், தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளும் திரிசங்கு நிலையில்தான் உள்ளனர். தனி மடிக்கணினி, தனியறை என்று படிக்க வைக்க வாய்ப்புக் கிடைத்த வர்க்கப் பிரிவைச் சார்ந்தவர்கள் இன்னும் கொஞ்சம் கூடுதலாகக் கற்றல் அடைவுகளை அடைந்துள்ளதாகக் கருத முடிகிறது.

கற்பித்தலில் இடைவெளி

அரசுப் பள்ளி மாணவர்களைப் பொறுத்தமட்டில் கற்றல் என்பது இன்னும் முழு முடக்கக் காலம் போலவே இருக்கிறது. இது, இணையவழிக் கல்வியில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வு அல்ல. இணையவழிக் கல்வி இடைவெளி அல்ல. கற்றல் கற்பித்தல் என்பதிலிருந்து முற்றாகத் துண்டித்துத் தூக்கி தூர வீசியெறிந்துவிட்டது என்றே கூற வேண்டும். அரசுப் பள்ளிக் குழந்தைகளில் எழுத்துகளை மறந்தவர்கள் எத்தனை ஆயிரம் பேரோ? வேலைக்குச் சென்றவர்கள் எத்தனை ஆயிரம் பேர் நிரந்தரமாகப் பள்ளி இடைவிலகப் போகிறார்களோ? உண்மையில், கரோனா பெருந்துயரங்களில் இது நீடித்த, நிலைத்த பெருந்துயரமாக இருக்கப்போகிறது.

‘‘பள்ளிகள் திறப்பு, வரையறுக்கப்பட்ட பாடத்திட்டம், கற்றல் கற்பித்தல் அல்லது இணையவழிக் கல்வி'' என்ற இரண்டு வழிமுறைகளைத் தவிர, வேறு மார்க்கம் இல்லை என்று நம் சிந்தைக்கு எல்லையை வரையறுத்தது யார்? நாடு முழுவதும் 11,02,783 அரசுப் பள்ளிகள் உள்ளன. தமிழ்நாட்டில் மாத்திரம் 37,211 அரசுப் பள்ளிகளில் சுமார் 54,71,544 மாணவர்கள் படிக்கிறார்கள். கற்றல் கற்பித்தலில் எத்தனை புதுமைகள் வந்துள்ளன? எத்தனை விதமான படைப்பூக்கக் கல்வி முறைகள் கையாளப்படுகின்றன? அரசும், மாற்றுக் கல்விச் சிந்தனையாளர்களும் செயல்பாட்டாளர்களும், ஆசிரியர் சங்கங்களும் இவை எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு இணையவழிக் கல்வியை மட்டுமே நம்பி அமைதியாக இருப்பது ஏன்? அது சாத்தியமா என்ற முயற்சிகள்கூட நடைபெறவில்லையே, எதனால்?

ஒரு முன்மாதிரி முயற்சி

டாடா இரும்பு எஃகு நிறுவனம் நடத்தும் தொண்டு நிறுவனம் ஒன்று மட்டும் 700 ஆசிரியர்களைக் கொண்டு 31,000 குழந்தைகளுக்கு மாற்றுக் கல்வி வழியை வழங்கும் மாபெரும் சாதனையைப் படைத்துள்ளது. அந்தச் செயல்பாட்டைப் படிக்கப் படிக்கப் பிரமிப்பூட்டுகிறது. அந்த ஆசிரியர்கள் அப்படி என்னதான் செய்தார்கள்?

ஒரிசா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள சில கிராமங்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டனர். பெரும்பாலான கிராமங்கள் ஆதிவாசி மக்கள் அல்லது தலித் மக்கள் வாழும் கிராமங்கள். குழந்தைகளுக்கு முதலில் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைக் கற்றுக்கொடுத்தார்கள். பொதுவான விதிமுறைகளைத் தாண்டி ஒருவர் பொருளை மற்றொருவர் தொடக் கூடாது என்பது வரை பல நிபந்தனைகளை இந்தக் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தார்கள். ஒவ்வொரு ஊரிலும் உள்ள, குழந்தைகளைத் தனித்தனியாக, சிறு சிறு குழுக்களாகப் பிரித்தார்கள்.

கரோனா கால மாற்றுக் கல்வியைக் குழந்தைகளின் சுற்றுப்புறத்திலிருந்தே தொடங்கினார்கள். ஊருக்குள் இருக்கும் செடி, கொடி, மரங்கள் என எல்லாவற்றையும் நோட்டம்விடச் சொன்னார்கள். ஒவ்வொன்றின் இலையையும் மற்றொன்றின் இலைகளோடு பொருத்திப் பார்த்து, வேற்றுமைகளை உற்றுநோக்கும்படி கூறினார்கள். அதுபற்றி உரையாடும்படி கேட்டுக்கொண்டார்கள். ஊருக்குள் இருக்கும் எல்லா விதைகளையும் சேகரிக்கச் சொன்னார்கள். விதைகளின் பயன்பாட்டின் அடிப்படையில் பிரித்து வைத்து உரையாடச் சொன்னார்கள். அதுபற்றிய அறிவை விருத்திசெய்ய வழிமுறைகளைக் கூறினார்கள்.

பாரம்பரியக் கல்வி

ஊரைப் பல முறை வலம் வந்து, ஒவ்வொரு பொருளாக உற்றுநோக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். பின்னர், ஊரை ஒரு படமாக வரையச் சொன்னார்கள். அதையே கொஞ்சம் விஸ்தரித்து, அவர்களது கிராமத்துக்கு வந்துசேரும் சாலைகளைக் குறிப்பிடச் சொன்னார்கள். பின்னர், அப்படியே அதனைப் பெரிதாக்கி அவர்களது ஊராட்சி ஒன்றியம் எங்குள்ளது? மாவட்டம் எவ்வளவு பெரியது? மாவட்டத் தலைநகர் எங்கே இருக்கிறது? எத்தனை கிமீ தொலைவில் உள்ளது? இத்தகைய செயல்முறைகள் அவர்களின் கிராமத்தை முற்றிலும் புரிந்துகொள்ளப் பயன்பட்டன. சொந்தக் கிராமத்தைப் பற்றிய புரிதல் அவர்களுக்குப் பெரும் உற்சாகம் தந்தது. இந்தச் செயல்வழிக் கற்றலில், குழந்தைகள் தங்கள் ஊரில் படிக்க வேண்டிய பாரம்பரியக் கல்வியைக் கண்டு பிரமித்துப் போனார்கள்.

குழந்தைகள் ஊருக்கு வெளியிலும் அழைத்துச் செல்லப்பட்டார்கள். வாய்க்கால், ஆறு, குளம், குட்டைகளில் உள்ள உயிரினங்கள், அதைச் சுற்றியுள்ள தாவரங்கள் ஆகியவற்றைக் குறித்து உரையாடினார்கள். ஒவ்வொன்றையும் புகைப்படம் எடுக்கச் சொன்னார்கள். இந்த செயல்வழிக் கற்றல் எவ்வளவு உற்சாகம் ஊட்டியிருக்கும்? எவ்வளவு விஷயங்களை உற்சாகத்துடன் விளையாட்டு வழியே கற்றுக்கொண்டிருப்பார்கள்? கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இந்தச் செயல்பாடுகள் வழியாக, எண், எழுத்து என்பதைத் தாண்டி, புவியியல், வேளாண்மை, வேளாண்மை அறிவியல், இயற்பியல், உயிரியல் எனப் பல பாடங்களை செயல்வழிக் கற்றல் வழியே தொடர்ந்து கற்றுவருகின்றனர். ஆனால், பள்ளிப் பாடத்திட்டத்தின் வடிவில் அல்ல.

நம்மாலும் முடியும்

இத்தகைய செயல்வழிக் கற்றல் முறையை ஏன் நம்மால் செயல்படுத்த இயலவில்லை? தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஆர்வலர்கள் ‘சிட்டுக்கள் மையம்' என்ற பெயரில் ஆங்காங்கே சில முயற்சிகளைச் செய்கிறார்கள். இன்னும் சில தன்னார்வலர்கள் சில முயற்சிகளைச் செய்துகொண்டு இருக்கலாம். ஆனால், அரசே அனைவரையும் திரட்டி ஒரு மாற்றுக் கல்விச் செயல்பாடாக இதைக் கொண்டுசெல்ல முயற்சியெடுக்கலாம். கரோனாவை வெற்றிகொண்டாலும் ஏழைக் குழந்தைகளின் கற்றல் பாதிப்புகளைத் தவிர்க்க மாற்றுக் கல்வி குறித்த பரிசீலனைகளும் அவசியம்.

- நா.மணி, பொருளியல் துறைப் பேராசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் மாநிலத் தலைவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x