Published : 08 Jan 2021 06:47 AM
Last Updated : 08 Jan 2021 06:47 AM

கூட்டணி அரசுக்கு தமிழகத்தில் சாத்தியமே இல்லை

வைகைச்செல்வன்

மக்களாட்சியில் ஏதேனும் ஓர் அரசியல் கட்சியின் மேலாதிக்கம் இல்லாமல், பல அரசியல் கட்சிகள் ஒன்றுசேர்ந்து அமைப்பது கூட்டணி அரசு. எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை அமையாத தருணங்களில் அமைவதும்கூட கூட்டணி அரசுதான்.

தேசிய இடர்ப்பாடுகளை ஒரு நாடு சந்திக்கிறபோது, மீள முடியாத பொருளாதாரத்தை மீட்டெடுப்பது கூட்டணி அரசு. இவை நாடாளுமன்ற மக்களாட்சிக்குப் பொருந்துமே தவிர, மாநில அரசுகளுக்குப் பொருந்தாது.

இந்திய ஒன்றியம் கூட்டாட்சியின் அடிப்படையில் இயங்குகின்ற ஒன்று. பலதரப்பட்ட கட்சிகளை ஒன்றிணைப்பது என்பது வேற்றுமையில் ஒற்றுமை காணும் முயற்சி. அவ்வாறான நிலைமை மாநில அரசுகளுக்குப் பொருந்திப் போவதில்லை. தமிழகத்தில் சுதந்திரத்துக்குப் பின்பு கூட்டணி அரசு அமைந்ததே இல்லை. அப்படி அமைவதையும் தமிழக மக்கள் விரும்புவதும் இல்லை. ஆகவே, தமிழகத்தைப் பொறுத்த மாத்திரத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தனித்த ஆட்சியே வேண்டுமென்பதில் உறுதியோடு தனது கொள்கையை நகர்த்திச் செல்கிறது.

2014-ல் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த நிலையில், 2014-ல் 7 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருந்த பாஜக 2018-ல் 21 மாநிலங்களில் ஆட்சிசெய்யும் அளவுக்குத் தனது அதிகாரத்தை விரித்துள்ளது. ராஜஸ்தானிலும், சத்தீஸ்கரிலும் வெற்றிவாய்ப்பைத் தவறவிட்ட நிலையில், 2019-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றிக்கான இலக்கின் கோட்டைத் தொட்டுவிட்டது. கர்நாடகத்தில் காங்கிரஸ் - ஜனதா தளக் கூட்டணி ஆட்சியை உடைத்து எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைத்துவிட்டது. ஆனால், இதுபோன்ற ஒரு சூழலை மஹாராஷ்டிரத்தில் ஏற்படுத்த முடியவில்லை. வடமாநிலங்கள் பலவற்றில் அரசியல் ஆதிக்கம் செலுத்திவரும் பாஜக அதன் பார்வையை தென்மாநிலங்கள் பக்கம் திருப்பியிருக்கிறது. சமீபத்தில் மேயர் தேர்தலை எதிர்கொண்ட ஹைதராபாத் நகரிலும் அது கடும் முயற்சிகளை மேற்கொண்டது.

தமிழகத்தில் பாஜக

தமிழகத்தில் தனது விரிவான கனவைப் பதிப்பிப்பதற்கான ஒரு முயற்சியைப் பாஜக தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. அதிமுகவுடன் தனது நட்பை ஒவ்வொரு நாளும் பகிர்ந்துகொண்ட போதிலும், ஆட்சியில் கூட்டணி என்கிற அதன் கனவு போகாத ஊருக்கு வழியாகவே அமையும். பாஜகவுக்குத் தமிழகத்தில் இப்போது ஒரு சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ இல்லாத நிலையில், ஆட்சியைப் பிடிப்போம் என்று சொல்வது அவர்களது நம்பிக்கையாக இருக்கலாம். ஆனால், அது நடந்தேறுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதை வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்.

அதிமுகவுடன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்த பாஜக அதன் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லாமல் தொடர்கிறது என்பதையும், கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன என்பதையும் ஒரு இணக்கமான போக்கையே கையாள்வதாகவும் முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் பலமுறை தெரிவித்துவிட்ட நிலையில், ஆட்சியில் பங்கு என்பதைத் தமிழக மக்கள் விரும்ப மாட்டார்கள் என்கிற கருத்தைத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழுத்தமாகப் பதிவுசெய்துவிட்டார்.

ஒவ்வொரு கட்சிக்கும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற கனவு இருக்கத்தான் செய்யும். கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக வடமாநிலங்களில் பலமாக உள்ள பாஜகவுக்கு, தமிழகத்தின் மீது ஒரு கண் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனாலும், கூட்டணியில் பங்கு என்கிற உறுதிப்பாட்டையும், ஆட்சியில் பங்கு இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியும் தேர்தல் பரப்புரையைத் தொடங்கிவிட்டார் முதல்வர் பழனிசாமி. தனித்த பெரும்பான்மையே இலக்கு திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்து 50 ஆண்டுகளில் தனித்த பெரும்பான்மை அந்தஸ்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளன. 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்குத் தனித்த பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், காங்கிரஸுடன் இணைந்து 5 ஆண்டுகள் கூட்டணி அரசை அமைத்த திமுக அமைச்சரவையில் காங்கிரஸைச் சேர்த்துக்கொள்ளவில்லை. திமுக தலைவர் மு.கருணாநிதி அதற்குச் சிறிதும் வாய்ப்பு கொடுக்கவில்லை.

அதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா என யாருமே ஆட்சியைப் பிடித்த எந்தத் தேர்தலிலும் கூட்டணி அரசை அமைக்கவில்லை. தனித்து வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிப்பதுதான் வழக்கமாக தமிழகக் கட்சிகள் கையாண்டுவருகிற ஒரு நடைமுறை. மேலும், தமிழக அரசியல் களம் கூட்டணி ஆட்சிக்குப் பழக்கப்படாத ஒரு மாநிலம். தேசியக் கட்சிகளின் நிலைப்பாடும், தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் நிலைப்பாடும் வெவ்வேறாக இருந்துவரும் நிலையில், கூட்டணி அரசுக்கான வாய்ப்பு இயல்பாகவே எழுவதில்லை. மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்தாலோ, மாநில நலன்களில் அக்கறையின்மையை வெளிப்படுத்தினாலோ, மொழிப் பிரச்சினையில் சரியாகக் கையாளத் தவறினாலோ, தமிழக மக்கள் வெகுண்டெழுந்துவிடுவார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த வரலாறு.

தமிழகத்தின் அனுபவம்

1951-ல் நடைபெற்ற தேர்தலில் அன்றைய சென்னை மாகாணத்தில் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அரசியல் கட்சிகள் சாரா பல்வேறு உறுப்பினர்களுடன் இணைந்து அமைக்கப்பட்ட கூட்டணியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜாஜி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1953-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டுத் தனி மாநிலமாகத் தமிழ்நாடு அமைக்கப்பட்டதற்குப் பிறகு, காமராஜர் 1954 மார்ச் 31-ல் சென்னை மாகாணத்தின் முதல்வர் ஆனார். ஆக, கூட்டணி அரசு என்பது பெரிய கட்சிகள் தங்களது அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள வழிவகுப்பது என்பதே தமிழக அனுபவம்.

பிஹாரில் பாஜக கூட்டணிக்குக் கிடைத்திருக்கும் சட்டமன்றத் தேர்தல் வெற்றி வரவிருக்கும் 2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரி, கேரளம், வங்கம், அஸாம் ஆகிய மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகள் பல்லாயிரம் ஆண்டு பழமையும் உயிரோட்டமும் கொண்டவை. தங்களுக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருந்த நிலையிலும்கூட அவர்கள் அரசியல் களத்தில் எப்போதுமே ஒருமித்த முடிவுகளைத்தான் எடுக்கிறார்கள். அரசியல் கட்சிகளும் மக்களின் எண்ணப்படியே கொள்கைகளை வகுப்பதால்தான் அவர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

- வைகைச்செல்வன், தமிழக முன்னாள் அமைச்சர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x