Published : 06 Jan 2021 03:13 AM
Last Updated : 06 Jan 2021 03:13 AM

பெருந்தொற்றுகளைத் தடுக்க என்ன வழி?

ஐக்கிய நாடு அவையின் சூழலியல் அமைப்புக்கான சமீபத்திய கருத்தரங்கில் தொற்றுநோய்ப் பரவலில் சூழலியல் சீர்கேடுகளின் பங்கு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. முடிவில், “இத்தனை வருடம் தொடர்ச்சியாக நடந்த சீர்கேடுகளின் மோசமான விளைவுகளை இனிதான் நாம் சந்திக்கவிருக்கிறோம். கரோனா என்பது அதன் ஆரம்ப நிலை மட்டுமே; இனிவரும் காலங்களில் ஒவ்வொரு வருடமும் நான்கைந்து புதிய தொற்றுநோய்கள் உருவாகலாம். அதில் ஒன்று கரோனா போன்று சர்வதேசத் தொற்றுநோயாக மாறலாம்” என அறிக்கை விட்டிருக்கிறது.

“சுற்றுச்சூழல் மீது சமீப காலங்களில் மனிதர்கள் நிகழ்த்திவரும் மிக மூர்க்கமான தாக்குதல்களின் விளைவு இப்படித்தான் இருக்கும்” என்கிறார் அந்த அமைப்பின் இயக்குநர் பீட்டர் டெஸ்சாக். உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ராஸ், “கரோனா என்பது நாம் சந்திக்கும் கடைசிப் பெருந்தொற்று அல்ல; வனவிலங்குகள் நலனையும், பருவநிலை மாற்றத்தையும் சரிசெய்யாமல் மனித ஆரோக்கியத்தை மட்டும் மேம்படுத்த நினைத்தால், அதனால் எந்தப் பயனையும் அடைய முடியாது” என எச்சரித்திருக்கிறார்.

மனிதனின் பிடியில் இயற்கை

நவீனக் காலங்களில், மனிதன் முன்னெப் போதையும் விட உலகத்தை முழுக்க முழுக்கத் தன்வசப்படுத்த நினைக்கிறான். தனக்கு ஏதுவானதாக, தனது தேவைகளை மட்டும் நிறைவேற்றிக்கொள்வதற்கானதாகவே இந்த உலகத்தை அணுகுகிறான். உயிர்ப்பன்மை (Biodiversity) என்பது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டிருக்கிறது. உயிர்ப்பன்மை குறையக் குறையத் தொற்றுநோய்கள் அதிகரிக்கும் என்கின்றன ஆராய்ச்சிகள். இயற்கை மீதான மனிதனின் ஆக்கிரமிப்பில் ஏராளமான உயிரினங்கள் மறைந்துவிட்டன. ‘தக்கன பிழைத்தல்’ என்பதைப் பெருமிதமாகத் தலையில் சுமந்துகொண்டு இயற்கை வளங்களை மனிதன் ஆக்கிரமிக்கிறான். கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பையும், பெருமளவு நீர்நிலைகளையும் ஏற்கெனவே தனக்கானதாக மனிதன் மாற்றிவிட்டான். இயற்கையின் சமநிலை மீறப்படும்போது, அதற்கான விலையைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்பதை மிகச் சிறிய வைரஸ் நமக்கு உணர்த்தியிருக்கிறது.

காடுகள் என்பது பல்லாயிரக்கணக்கான உயிரினங்களைக் கொண்டிருக்கின்றன. கரோனா போன்று எட்டு லட்சத்துக்கும் அதிகமான கிருமிகள் வனவிலங்குகளிடம் உண்டு. காட்டை அழித்து அங்கு தொழிற்சாலைகளை நிறுவும்போதோ அல்லது காட்டில் விவசாய நிலத்தை விரிவுபடுத்தும்போதோ மனிதனின் வாழிடங்களுக்கும் காட்டுக்குமான இடைவெளி குறைந்து, மனிதன் வனவிலங்குகளுடன் நேரடித் தொடர்புகொள்கிறான். அப்போது, விலங்குகளிடம் உள்ள கிருமிகள் மனிதனுக்கும் பரவத் தொடங்குகின்றன. இப்படித்தான் பல தொற்றுநோய்கள் உலகமெங்கும் பரவியிருக்கின்றன.

1999-ல் பரவிய நிபா வைரஸை எடுத்துக்கொள்வோம். முதலில் அது மலேசியாவிலிருந்துதான் தொடங்கியது. மலேசியாவில் காடுகளுக்கு அருகே இருந்த மிகப் பெரிய பன்றிப் பண்ணையில் நூற்றுக்கணக்கான பன்றிகள் மர்ம நோயால் இறந்துபோயின. சில நாட்களிலேயே அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களும் அந்த நோயால் பாதிக்கப்பட்டனர். காரணத்தை ஆராய்ந்தபோது, இரவில் அந்தப் பண்ணையில் உள்ள பன்றிகள், அதைச் சுற்றிப் பறக்கும் ஆந்தைகள் கொறித்த பழங்களை உண்டதால், நோய்ப் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. அந்த நோய், பன்றிகளிலிருந்து பண்ணையில் வேலை பார்த்த மனிதர்களுக்குப் பரவியது. அவர்கள் வழியாகவே நிபா வைரஸ் பெருந்தொற்றாக உலகம் முழுக்கப் பரவியது. அண்மைக் காலங்களில் நாம் எதிர்கொண்ட அனைத்து வைரஸ்களும் இந்த முறையிலேயே மனிதர்களுக்குப் பரவியிருக்கின்றன; கரோனாவும்கூட.

சில உதாரணங்கள்

காடுகளையும், மனிதர்களின் வாழிடங்களையும் இணைக்கும் பகுதிகள் ‘உயிர்ப்பன்மைப் பாதுகாப்புப் பிரதேசங்கள்’ (Biodiversity Hotspot) என வரையறுக்கப்பட்டிருக்கின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தப் பிரதேசங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த இடங்களை ஆக்கிரமிக்கும்போதுதான், வனவிலங்குகளிலிருந்து மனிதர்களுக்குத் தொற்றுநோய்கள் பரவுகின்றன. இதனால், சர்வதேச அளவில் இந்தப் பகுதிகள் அரசின் தொடர் கண்காணிப்பில் இருக்க வலியுறுத்தப்பட்டுவருகிறது. இந்தப் பகுதிகளில் சந்தேகத்துக்கு இடமான வகையில் மனிதர்களோ விலங்குகளோ இறந்தால் அல்லது புதிய நோய் அறிகுறிகள் ஏற்பட்டால் அதை உடனடியாக அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும்; மேலும், புதிய நோய்களும் அறிகுறிகளும் தென்பட்டால் உடனடியாக உலக சுகாதார நிறுவனத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற விதிகள் இருக்கின்றன. இந்தப் பகுதிகளில் புதிதாகத் தொழிற்சாலைகள் கட்டுவதோ, புதிய மனிதர்களைக் குடியமர்த்துவதோ கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது. ஆனால், பெரும்பாலான நாடுகள் இதைப் பின்பற்றுவதில்லை என்பதுதான் துயரமானது.

அண்மையில், ஒன்றிய அரசு தாக்கல்செய்த ‘சூழலியல் தாக்க மதிப்பீடு - 2020’ சட்ட வரைவும், சர்வதேச அளவில் அதி முக்கியமான 36 பாதுகாப்புப் பிரதேசங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள திபாங் பள்ளத்தாக்கில் இரண்டு அணைகளைக் கட்டும் திட்டத்துக்கு அனுமதியளித்ததும் இந்தக் கரோனா காலத்தில் மிகுந்த சர்ச்சைகளை உண்டாக்கின. ஒரு பெருந்தொற்றுக் காலத்தில்கூட, அது உண்டாகக் காரணமாக இருந்த அதே சூழலியல் பாதுகாப்பின்மையை நாம் எப்படி எந்தக் கவலையும் இன்றி உருவாக்கிக்கொண்டிருக்கிறோம் என்பதற்கு இவை உதாரணங்கள்.

வேறு என்னென்ன பிரச்சினைகள்?

இவை ஒருபுறம் இருந்தாலும், அதிகரித்துவரும் காற்று மாசாலும், சுற்றுப்புறச் சீர்கேடுகளாலும் இந்தத் தொற்றுநோய்கள் பரவும் வேகம் அதிகரிக்கின்றன. கரோனா பரவலும் அதன் வீரியத்தன்மையும் பெரு நகரங்களில்தான் அதிகமாக இருக்கின்றன. அதிக அளவு மக்கள்தொகையும், நெருக்கடியான இடங்களில் மக்கள் வாழ்வதும் காரணமாகக் கூறப்பட்டாலும் இன்னொரு முக்கியமான காரணம் காற்று மாசு. காற்று மாசு அதிகம் இருக்கும் நகரங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் சொல்கின்றன. காற்று மாசு நோய்க் கிருமிகள் பரவுவதற்கு ஏதுவாக இருக்கிறது. காற்று மாசால் ஏற்கெனவே நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகியிருப்பதும் நோயின் தீவிரத்தை அதிகரிக்கக் காரணமாகிறது. உலகின் மிக அசுத்தமான 20 நகரங்களின் பட்டியலில் 13 நகரங்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன என்பதுடன் இந்தத் தகவல்களை இணைத்துப் பார்க்கும்போது நாம் இதற்காக அச்சப்படாமல் இருக்க முடியாது.

டெட்ராஸ் சொன்னதுபோல கரோனா நாம் சந்திக்கும் கடைசித் தொற்றுநோய் அல்ல. தொற்றுநோய்கள் உருவாவதைத் தடுப்பதிலும், அதன் பரவலையும் தீவிரத்தன்மையைக் குறைப்பதிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை, ‘மரம் நடுவோம், நதிகளை இணைப்போம்’ போன்ற பிரச்சாரங்களால் மட்டும் அடைய முடியாது. இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமானதல்ல என்ற சிந்தனையில்தான் இயற்கையின் ஆன்மா இருக்கிறது. இந்த உலகத்தை மனிதர்களுக்கானதாக மட்டும் மாற்ற முற்பட்டால், அது மனித இனத்துக்கே ஆபத்தாக முடியும். இதை ஏற்றுக்கொள்வதன் வழியாகவே சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கி நாம் அடியெடுத்து வைக்க முடியும்.

- சிவபாலன் இளங்கோவன், எழுத்தாளர், மனநல மருத்துவர். தொடர்புக்கு: sivabalanela@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x