Published : 06 Jan 2021 03:13 AM
Last Updated : 06 Jan 2021 03:13 AM

தொலைத்தொடர்பு சேவையில் தெளிவான இணைப்பு மிகவும் அவசியம்

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்கள் மற்ற நிறுவனங்களின் வாடிக்கையாளருக்குப் பேசும் தொலைபேசி அழைப்புகளுக்குக் கட்டணம் செலுத்திவந்த முறையானது ஜனவரி 1-ம் தேதியுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த மாற்றமானது, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது இணைப்புகளையும் சேவைகளையும் மேலும் தரம் உயர்த்திக்கொள்வதில் கவனம் செலுத்துவதற்கான சூழலை உருவாக்கட்டும். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இந்த நடவடிக்கையானது, அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அதை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு இயலாத நிலையில் ஓராண்டு காலம் தாமதமாகிவிட்டது. நிறுவனங்கள் மிகவும் திறனுள்ள 4ஜி சேவைக்கு மாறுவதில் தாமதமானது. வாடிக்கையாளர்கள் பயன்படுத்திய அலைபேசிகள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிகவும் மெதுவாகவே இயங்கின. இத்தகைய காரணங்களால் நிறுவனங்களுக்கிடையிலான பயன்பாட்டுக் கட்டணத்தைத் தவிர்ப்பதற்குக் காலதாமதமாகிவிட்டது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள அலைக்கற்றை ஏலத்தையும் கண்காணிக்க வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது. மேலும், தரமான தகவல் தொடர்பு சேவையையும் குறைவான கட்டணத்தையும் தேர்ந்தெடுத்துக்கொள்வதற்கான வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெறுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும். நிறுவனங்களுக்கிடையிலான பயன்பாட்டுக் கட்டணத்தின் காரணமாக அதிகக் கட்டணத்தைச் செலுத்திய நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் தவிர, மற்றவர்களுக்கு இந்த மாற்றத்தால் எந்தப் பயனும் இல்லை. என்றபோதும், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முன்பைக் காட்டிலும் தற்போது தங்களது வாடிக்கையாளர்களுக்கு உச்சவரம்பில்லாத அழைப்புச் சலுகைத் திட்டங்களை அளிக்க முடியும். ஜியோ நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதிலிருந்து மற்ற நிறுவனங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்வதில் அதிக பங்கு வகித்தது. அதன் காரணமாக, கணிசமான அளவில் நிறுவனங்களுக்கிடையிலான பயன்பாட்டுக் கட்டணத்தைச் செலுத்தவும் வேண்டியிருந்தது. 2017 தொடங்கி நிமிடம் ஒன்றுக்கு ஆறு பைசாக்களை அந்நிறுவனம் செலுத்திவந்தது. இந்தச் சமநிலையின்மை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களுக்கிடையிலான பயன்பாட்டுக் கட்டணத்துக்கு மாற்றாகக் கட்டணமில்லாமல் கணக்கு வைத்துக்கொள்ளும் முறையைத் தகவல்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இச்சந்தையின் கடுமையான போட்டியானது தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளது. பொதுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகியவையும் கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளன. அவற்றின் தொழில்நுட்பக் கட்டமைப்புகளும் சேவை அளவும் மேம்படுத்தப்படாவிட்டால் அவற்றின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடக்கூடும். அதே நேரத்தில், செப்டம்பர் 2017-ல் 19.69 கோடியாக இருந்த 4ஜி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 2019 ஜூனில் 51.75 கோடியாக அதிகரித்துள்ளது. கம்பியில்லாத தொலைபேசி சேவையைப் பெறும் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 116.55 கோடி.

அலைக்கற்றை ஒதுக்கீடுகளுக்குத் தவறான முறையில் விலை நிர்ணயிப்பது ஏல நடைமுறைகளைத் தோல்வியுறச் செய்வதுடன் இத்துறையில் நியாயமான போட்டி நிலவுவதற்கும் தடையாக அமைந்துவிடக்கூடும். வாடிக்கையாளர்களுக்கு 4ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய அலைபேசிகள் அடக்கமான விலையில் கிடைக்கச்செய்வதும் தொலைபேசி நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்பக் கட்டமைப்புகளைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளவும் உதவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x