Published : 31 Dec 2020 03:18 AM
Last Updated : 31 Dec 2020 03:18 AM

சென்னைச் சாலைகள் கார் தரிப்பிடங்களா?

கடந்த மாதம் வீசிய நிவர் புயலைவிட அது கொண்டுவந்த பெருமழையால்தான் சென்னை நகரம் அதிகமான பாதிப்புக்கு உள்ளாகியது. நீர் ததும்பும் சாலைகளின் படங்கள் ஊடகவெளியை நிறைத்தன. கூடவே, சில மேம்பாலங்களின் படங்களும் வெளியாயின. அந்த மேம்பாலங்களின் இருமருங்கும் கார்கள் வரிசை கட்டி நிறுத்தப்பட்டிருந்தன. சாலைகளில் நீர் வடிந்ததும் அந்த கார்கள் கீழே இறங்கிவிட்டன. மழைக்காலத்தில் மேம்பாலங்கள் கார் தரிப்பிடமாகப் பயன்படுவது வேறு நகரங்களில் நிகழ்ந்திருந்தால் அவை செய்தியாகியிருக்கக்கூடும். சென்னைவாசிகளோ அதைப் பொருட் படுத்தியதாகத் தெரியவில்லை. ஏனெனில், மழைக்கு முன்பும் பின்பும் இந்த கார்கள் சாலைகளில்தான் நிறுத்தப்பட்டிருந்தன. நகரவாசிகள் அதற்குப் பழகிவிட்டார்கள். கார்களை ஏன் சாலைகளில் நிறுத்த வேண்டும்? சென்னையின் பல வீடுகளுக்குள் வாகனத் தரிப்பிடங்கள் இல்லை. அல்லது போதுமானதாக இல்லை.

நகரமயம்

சென்னையில் மக்கள்தொகை பெருகியபோது அடுக்ககங்கள் அவசியமாயின. எண்பதுகளில் முகிழ்த்த குடியிருப்புகள் பலவும் இரண்டு - மூன்று மாடிகளைத் தாண்டவில்லை. ஏனெனில், அப்போதைய விதிகளின்படி புதிய கட்டுமானத்தின் பரப்பு, மனையின் பரப்பைப் போல் ஒன்றரை மடங்குதான் இருக்கலாம். இதற்கு தளப் பரப்பளவுக் குறியீடு (FSI) என்று பெயர். எடுத்துக்காட்டாக, ஒரு கிரவுண்ட் என்பது 60 அடி நீளமும் 40 அடி அகலமும் உள்ள ஒரு மனையைக் குறிக்கும். அதாவது 2,400 சதுர அடி. இந்த மனையில் இதைப் போல ஒன்றரை மடங்குப் பரப்பில் வீடு கட்டிக்கொள்ளலாம். அதாவது 3,600 சதுர அடி. இந்தப் பரப்பளவில் நடுத்தரவர்க்க அளவீடுகளின்படி நான்கு (அ) ஐந்து வீடுகள் வரை கட்டலாம். ஆகவே, நகரில் அப்போது கட்டப்பட்ட குடியிருப்புகள் பலவும் இரண்டு (அ)மூன்று தளங்களைத்தான் கொண்டிருந்தன. இவை கட்டப்பட்ட காலத்தில் இதன் உரிமையாளர்கள் பலரும் இரு சக்கர வாகனங்கள் வைத்திருந்தனர். தொண்ணூறுகளின் தாராளமயமாக்கத்தைத் தொடர்ந்து ஆட்டோமொபைல் தொழிலில் அந்நிய முதலீடுகள் வந்தன; உரிமங்களின் மீதான கட்டுப்பாடுகள் தளர்ந்தன; கார் உற்பத்தி பெருகியது.

வாகன எழுச்சி

சென்னை நகரில் 1985-ல் வாகனங்களின் எண்ணிக்கை 2 லட்சமாக இருந்தது. 1992-ல் இது 6 லட்சமாகவும், 2012-ல் 36 லட்சமாகவும் உயர்ந்தது. இப்போது 60 லட்சம். இந்தியாவில் அதிகமான வாகனங்களைச் சுமப்பதில் இரண்டாவது இடம் சென்னைக்குத்தான். முதலிடம் டெல்லிக்கு; 1.12 கோடி வாகனங்கள். ஆனால், டெல்லி சாலைகளின் நீளம் சுமார் 18,000 கிமீ. சென்னையில் சாலைகளின் நீளம் இதில் மூன்றில் ஒரு பங்குதான். மேலும், டெல்லி சாலைகள் அகலமானவை. அதாவது, சென்னையில் வாகனங்களின் அடர்த்தி டெல்லியைவிட அதிகம். இந்தியாவிலேயே மிக அதிகம்.

தமிழகத்தில் ஓடும் வாகனங்களில் நான்கில் ஒரு பங்கு சென்னையில்தான் ஓடுகின்றன. இந்த வாகனங்களில் 15% கார்கள்தான். இப்படியாகச் சென்னையில் கார்கள் பெருகின. நடுத்தர வர்க்கத்தினரால் தவணை முறையில் கார் வாங்க முடிந்தது. வாங்கினார்கள். ஆனால், அவர்களது இரண்டு மாடி, மூன்று மாடி அடுக்ககங்களில் கார் தரிப்பிடம் இல்லை. அதனாலென்ன? ‘தெய்வம் தந்த வீடு, வீதி இருக்கு’, அந்த வீதியில் நிறுத்திக்கொண்டார்கள். சென்னை நகரின் பல கட்டிடங்களின் வாயிற்கதவில் ஓர் அறிவிப்புப் பலகை தொங்கும்: ‘கேட்டின் முன்னால் வாகனங்களை நிறுத்தாதீர்கள்’. இதன் பொருள் வாயிற்கதவைத் தாண்டி நிறுத்திக்கொள்ளுங்கள், யாரும் கேட்க மாட்டார்கள், என்பதுதான்.

இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள அரசு கட்டிட விதிகளில் படிப்படியாக மாற்றங்களைக் கொண்டுவந்தது. தளப் பரப்பளவுக் குறியீட்டை உயர்த்தியது. தரைத் தளத்தை கார் தரிப்பிடமாகப் பயன்படுத்தினால் அந்தப் பரப்பளவைக் கட்டுமானப் பரப்பாகக் கணக்கில் கொள்ள வேண்டியதில்லை என்றொரு சலுகை வழங்கியது. இதற்குப் பலன் இருந்தது. புதிய கட்டிடங்கள் உயரமாகின. அவற்றில் கார் தரிப்பிடங்களும் இருந்தன. ஆனால், பழைய கட்டிடங்களின் முன்னால் சாலைகளில் கார்களை நிறுத்துவது தொடர்கிறது. விருந்தினர்களும் வாடிக்கையாளர்களும் தங்கள் கார்களையும் இரு சக்கர வாகனங்களையும் வீதிகளில்தான் நிறுத்துகிறார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட கார் வைத்திருப்பவர்களும் வீதிக்கு வந்துவிடுகிறார்கள்.

ஒரு சம்பவம் நினைவுக்குவருகிறது. ஐந்தாண்டுகள் இருக்கும். நகரின் நடுநாயகமான இடத்தில் அமைந்திருக்கிறது அந்த அரங்கு. மார்கழி மாதம். ஒரு பெரிய பாடகரின் கச்சேரி. நண்பர் அழைத்துப் போயிருந்தார். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபோது ரசிகர்களில் பலரும் முன்னரங்கில் நின்றுகொண்டிருந்தனர். நண்பர் விளக்கினார். அரங்கில் கார் தரிப்பிடங்கள் குறைவு. ஆகவே, அரங்கைச் சுற்றியுள்ள தெருக்களில் கார்களை நிறுத்தி வைத்திருப்பார்கள். ஓட்டுநர்கள் இப்போது சாலைகளில் நீந்தி வந்துகொண்டிருப்பார்கள். பொதுமக்களுக்கு எத்தனை அசௌகரியம்?

ஏற்கெனவே நகரின் நடைபாதைகள் பலவும் குறுகலானவை. பல இடங்களில் அவற்றின் மீதுதான் மரங்களும் மின்மாற்றிகளும் நிற்கின்றன. எஞ்சிய இடங்களில் ஆக்கிரமிப்புகள் வேறு. ஆக, பல நடைபாதைகள் பாதசாரிகள் நடக்கக்கூடியதாக இல்லை. அதனால் அவர்கள் சாலையில் இறங்க நேர்கிறது. சாலையிலோ வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இது பாதசாரியைச் சாலையின் மையத்துக்குத் துரத்துகிறது. ஹாங்காங் போன்ற ஒரு வளர்ந்த நகரம் இந்த கார் தரிப்பிடப் பிரச்சினையை எப்படி எதிர்கொள்கிறது என்று பரிசீலித்தால் அதிலிருந்து நமக்குச் சில பாடங்கள் கிடைக்கக்கூடும். முதலாவதாக, ஹாங்காங்கின் பொதுப்போக்குவரத்து வலுவானது, நவீனமானது, வசதியானது. 90% மக்கள் பேருந்துகளையும் மெட்ரோ ரயில்களையும் பயன்படுத்துகிறார்கள். இதனால் கார் வைத்திருப்பவர்கள் குறைவு. அப்படி வைத்திருப்பவர்களில் பலரும் அவற்றை வேலை நாட்களில் தரிப்பிடத்திலிருந்து வெளியே எடுக்க மாட்டார்கள். நமது பொதுப்போக்குவரத்தை மேம்படுத்துவது கார்களின், ஸ்கூட்டர்களின் பயன்பாட்டைக் குறைக்கும். இரண்டாவதாக, கார்களுக்குச் சாலை வரி கட்டும்போது தரிப்பிடம் இருக்கிறது என்பதற்கான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இதை நாமும் கட்டாயமாக்கலாம்.

மூன்றாவதாக, பொதுத் தரிப்பிடங்களில் நிறுத்துவதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும். அங்காடிகளிலும் கேளிக்கை மையங்களிலும் இந்தக் கட்டணம் மணிக்கு 25 ஹாங்காங் டாலராக (ரூ.237) இருக்கும். பெரிய அங்காடிகளில் கட்டணம் இரட்டிப்பாகும். இவற்றைத் தவிர, தனியார் நிறுவனங்களின் அடுக்குமாடி கார் தரிப்பிடக் கட்டிடங்களும் இருக்கும். அரசின் போக்குவரத்துத் துறையும் ஏராளமான அடுக்ககத் தரிப்பிடங்களைக் கட்டி வைத்திருக்கிறது. இங்கு நாள் வாடகை, மாத வாடகை என்பனவும் உண்டு. இவ்வாறான அடுக்ககத் தரிப்பிடங்களைச் சென்னையின் பல இடங்களில் கட்டலாம். வீதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்களை இந்த அடுக்ககத் தரிப்பிடங்களுக்கு இடம் மாற்றலாம்; அதைக் கட்டாயமாக்கலாம்.

கடைசியாக, சாலைகளில் கார்களை நிறுத்தலாம் என்பதை ஹாங்காங் மக்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. அப்படியான சமூகக் கல்வியையும் பொறுப்புணர்வையும் நாமும் வளர்க்க வேண்டும். அரசுக்குக் குடிமக்கள் எல்லோரும் வரி செலுத்துகிறார்கள். அவர்களில் ஒரு சாரார் சாலையை ஆக்கிரமித்துத் தங்கள் வாகனங்களை நிறுத்திக்கொள்கிறார்கள். இன்னொரு சாரார் உயிரச்சத்துடன் நடுவீதியில் நடக்கிறார்கள். இது நீதியல்ல. இந்த நிலையைச் சீராக்க நமது உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். கார்களைத் தரிப்பிடங்களில்தான் நிறுத்த வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். சாலைகள் எல்லோருக்கும் பொதுவானவை என்கிற புரிதலை வளர்த்தெடுக்க வேண்டும். நாகரிகச் சமூகங்கள் படிப்படியாகத்தான் கட்டமைக்கப்படுகின்றன.

- மு.இராமனாதன்,

ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x