Published : 29 Dec 2020 03:14 AM
Last Updated : 29 Dec 2020 03:14 AM

சமரசமே தீர்வு அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும்!

இராக் தலைநகர் பாக்தாதிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்கள் அந்தப் பிராந்தியத்தில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. வலுவான பாதுகாப்பு கொண்ட அந்தப் பகுதியில் கடந்த பத்தாண்டுகளில் நிகழ்த்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் இது என்று அமெரிக்க ராணுவத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளும் குற்றம்சாட்டியுள்ளனர். “ஒரு அமெரிக்கர் கொல்லப்பட்டால்கூட ஈரானைத்தான் அதற்குப் பொறுப்பாக்குவேன்” என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா ஒருதரப்பாக 2018-ல் விலகிக்கொண்ட பிறகு, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு சீர்குலைந்திருக்கும் நிலையில், இந்தத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. தனது தேர்தல் தோல்விக்குப் பிறகு ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு ட்ரம்ப் திட்டமிட்டிருந்த நிலையில், அவரது அமைச்சரவை சகாக்கள் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிகிறது. கூடிய சீக்கிரம் ஜோ பைடன் அடுத்த அதிபராகப் பதவியேற்க உள்ளார். அணுசக்தி ஒப்பந்தத்துக்குப் புத்துயிர் ஊட்டப்போவதாக பைடன் கூறியிருப்பதால், வெளியுறவுரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இதுபோன்ற தாக்குதல்கள் இரண்டு நாடுகளையும் வெளிப்படையான மோதலை நோக்கித் தள்ளிவிடக் கூடும்.

ஈரானியத் தளபதி சுலைமானியை ஜனவரி மாதம் அமெரிக்கா கொன்றது. இதற்குப் பழிவாங்கும் விதமாக இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களின் மீது ஈரான் தாக்குதல் நடத்திப் பல ராணுவ வீரர்களுக்குப் படுகாயத்தை ஏற்படுத்தியது. அப்போதிருந்தே இராக்கைச் சேர்ந்த, ஈரான் ஆதரவு ஷியா ஆயுதக் குழுக்கள் இராக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திவருகின்றன; மேலும் இராக்கிலுள்ள அமெரிக்காவுக்கான பொருள் விநியோகத் தடங்களின் மீதும் தாக்குதல் நடத்திவருகின்றன. முன்னதாக, அமெரிக்கா தனது தூதரகத்தில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்திருந்தது, இராக்கில் உள்ள துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவுசெய்திருந்தது. அமெரிக்க - ஈரான் உறவு தற்போது கொதிநிலையை எட்டியிருக்கிறது என்றால், அதற்கு முதன்மையான பொறுப்பு ட்ரம்ப்பையே சாரும். அவருடைய நடவடிக்கைகள்தான் செயல்பாட்டில் இருந்த ஒரு ஒப்பந்தத்தைத் தடம்புரளச் செய்தன. இதனால் ஈரான் தரப்பும் ஆபத்தான செயல்பாடுகளை நோக்கிச் சென்றது.

அமெரிக்கத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியதுடன் நேரடியாகவோ கூட்டாளிகளைக் கொண்டோ கடந்த இரண்டு ஆண்டுகளாக வளைகுடாப் பகுதியில் எண்ணெய்க் கிணறுகள், டேங்கர்கள் மீது ஈரான் தாக்குதலை நடத்திவருகிறது. கடந்த மாதம்கூட அறிவியலாளர் மொஹ்ஸன் ஃபக்ரிஸாடே ஈரானுக்கு உள்ளேயே கொல்லப்பட்டார். இதற்கு இஸ்ரேல்தான் காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால் பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்கும்படி ஈரான் தூண்டப்படுமானால், அது ஈரானுக்கே ஆபத்தை விளைவிக்கும். எது எப்படி இருந்தாலும் தூதரகத்தின் மீதான தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இராக்கில் உள்ள தனது ஆதரவு ஆயுதக் குழுக்களை ஈரான் கட்டுப்படுத்த வேண்டும். அப்போதுதான் பைடன் நிர்வாகம் பேச்சுவார்த்தைகளை நோக்கி அடியெடுத்து வைப்பதற்குச் சாதகமான சூழல் ஏற்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x