Published : 27 Dec 2020 07:31 AM
Last Updated : 27 Dec 2020 07:31 AM

தொ.ப. பேசுகிறார்

வட்டார வேறுபாடுகளை உள்ளடக்கிய ஒரு மொழிக் கல்வி அவசியம். ஏனென்றால், அந்த வட்டாரம் இல்லாமல் அந்த மனிதன் இல்லை. வட்டார வேறுபாடுகளை முற்றாக நிராகரிக்கும் பொதுமொழியைக் கற்கும் நிலைமை பள்ளிக் குழந்தைகளுக்கு வரக் கூடாது.

நாட்டில் மிகப் பெரிய சமூக நிறுவனம் என்பது கோயில்தான். மற்ற சமூக நிறுவனங்களெல்லாம் அழிந்துபோய்விட்டன. காலனி ஆட்சியில் அழிந்ததுபோக எஞ்சியது கோயிலும் சாதியும்தான்.

மக்கள் ஒருகட்டத்தில் தங்களது கலாச்சாரத்தின் பிரதிநிதியாகக் கடவுளை ஆக்குவார்கள். அப்படி ஆக்கப்பட்ட கடவுள்களும் கோயில்களும் மட்டுமே உயிர் வாழும். மற்றவை பாழடைந்துபோகும்.

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு சாதியினருக்கும் ஒரு கோயில் உண்டல்லவா? அங்கே யாரேனும் ஒருவர் இறந்துபோனால் அந்தக் குறிப்பிட்ட தெய்வம் கதவைச் சாத்திக்கொண்டு குளிக்காமல் உண்ணாமல் துக்கம் காக்கிறது. ஒரு உறவினரைப் போல தெய்வமும் துக்கம் காக்கிறது. அப்போதுதான் தெய்வம் எனக்கு அணுக்கமாகிறது. அது எனக்கு அம்மா. ஆகமவழிப்பட்ட பெரிய வடிவங்களைத்தான் நான் கடவுள் என்கிறேன்.

பண்பாடு என்பது நிலம் சார்ந்தது. நிலம் என்றால் வெறும் மண் அன்று. நிலப்பகுதியில் வாழும் மக்கள், அவர்கள் பேசும் மொழி, அவர்களுடைய உற்பத்திப் பொருட்கள், அவர்களின் பல்வேறு வகையான கருவிகள், புழங்குப் பொருட்கள், இசை – கலை – இலக்கிய வெளிப்பாடுகள், வாய்மொழி மரபுகள் எல்லாம் சேர்ந்ததற்குப் பெயர்தான் பண்பாடு. அது நிலம் சார்ந்துதான் பிறக்க இயலும். வேறெங்கும் வேண்டாம், தமிழ்நாட்டு அரிவாளைப் போல கனடாவிலோ உஸ்பெக்கிஸ்தானிலோ ஓர் அரிவாள் இருக்க முடியுமா?

எனக்கு தெய்வங்கள் மீது நம்பிக்கை இல்லை. அதை வணங்கும் மக்கள் மீது கவர்ச்சி இருக்கிறது; நம்பிக்கை இருக்கிறது.

நான் என்ன சாப்பிடுகிறேனோ, அதை என் தெய்வம் சாப்பிடுகிறது. நான் கறி சாப்பிட்டால் என் தெய்வமும் கறி சாப்பிடும், நான் மது குடித்தால் அதுவும் மது குடிக்கும். இதுவும்கூட ஒரு உயர்தர சமத்துவம்தானே? அப்படிப்பட்ட மக்களின் தெய்வத்தை எப்படி நீங்கள் அழிக்க முடியும்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x