Published : 25 Dec 2020 03:15 AM
Last Updated : 25 Dec 2020 03:15 AM

ஜனநாயகத் தடுமாற்றமா நேபாளத்தில்?

நேபாள நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம் என்று அந்நாட்டின் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலீ பரிந்துரைத்திருப்பதும், அதற்கு அந்நாட்டின் அதிபர் வித்யா தேவி பண்டாரி அனுமதி அளித்திருப்பதும் இளம் ஜனநாயக நாடான நேபாளத்தை அரசமைப்புரீதியிலான நெருக்கடியிலும் அரசியல் கொந்தளிப்பிலும் தள்ளிவிட்டிருக்கிறது. ஒலீ அரசு சமீபத்தில் கொண்டுவந்த ஒரு அவசரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று அவரது கட்சிக்குள்ளிருந்தே கடும் நெருக்கடியை அவர் சந்தித்த சூழலில் நாடாளுமன்றத்தைக் கலைப்பது என்ற முடிவை எடுத்திருக்கிறார். அந்த நாட்டில் தொங்கு நாடாளுமன்றம் அமைந்தாலோ, எந்தக் கட்சியும் அரசமைக்க முடியாமல் போனாலோதான் ஒரு ஆட்சி ஐந்தாண்டு காலத்தை நிறைவுசெய்வதற்கு முன்னால் அதைக் கலைப்பதற்கு நேபாளத்தின் 2015 அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது. ஒலீயின் பரிந்துரைக்கு அதிபர் அனுமதி கொடுத்துவிட்டதால், இந்தப் பிரச்சினைக்கு அந்த நாட்டின் உச்ச நீதிமன்றத்தில்தான் முடிவு காணப்படும்.

ஒலீயின் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 2017-ல் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தபோது அது ஒரு புதிய தொடக்கமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நேபாளம் பல்வேறு துயரங்களுக்கு இடையே அரசாட்சியிலிருந்து ஜனநாயகத்துக்கு மாறிய தருணம் அது. அடுத்த ஓராண்டுக்குள், அந்நாட்டின் மாபெரும் கம்யூனிஸ சக்தியாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உருவெடுத்தது. துளிர்த்துவரும் ஜனநாயகத்தை அதன் பெரும் நெருக்கடிகளிலிருந்து மீட்பது என்பது நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்கு, குறிப்பாக ஒலீக்கு ஒரு வரலாற்று வாய்ப்பாகும். ஆனால், இந்தக் கட்சிகளின் சங்கமமானது நேபாள கம்யூனிஸ்ட் கட்சிகளின் இரு பிரிவுகளுக்கு இடையிலான அடிப்படை வேறுபாடுகளைத் தீர்க்கவில்லை. ஒலீயின் எதேச்சாதிகாரப் போக்கும், அதிகாரத்தை மாவோயிஸப் பிரிவினருடன் பகிர்ந்துகொள்ள மறுத்ததும் நிலைமையை மேலும் மோசமாக்கின. உள்கட்சி ஆதரவையும் ஒலீ இழந்துவிட்டார்.

பிரச்சினையின் தீவிரத்தன்மையை வைத்துப் பார்க்கும்போது பிளவைத் தவிர்க்க முடியாது என்று தெரிகிறது. எனில், நேபாளம் மறுபடியும் அரசியல் ஸ்திரமின்மை நோக்கித் தள்ளப்பட்டுவிடும். ஏற்கெனவே, கரோனாவால் பல்வேறு சவால்களை அந்த நாடு எதிர்கொண்டிருக்கிறது. ஒரு நல்ல அரசியல் தலைவராக வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டிய ஒலீயின் அதிகார வேட்கையால், தான் இணைந்து உருவாக்கிய கட்சியின் சிதைவுக்கு அவரே காரணமாகும் சூழல் எழுந்திருப்பது கெடுவாய்ப்பு என்றே கூற வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x