Last Updated : 25 Dec, 2020 03:15 AM

 

Published : 25 Dec 2020 03:15 AM
Last Updated : 25 Dec 2020 03:15 AM

கீழ்வெண்மணி தீர்ப்பை மாற்றுமா நீதிமன்றம்?

கீழ்வெண்மணிப் படுகொலைகள் தொடர்பில் சமூகவியலாளர்கள் கட்டுரைகள் பல எழுதிவிட்டனர். கணிசமான படைப்புகளும் வெளிவந்திருக்கின்றன. குற்றவாளிகள் உயர் நீதிமன்றத்தாலும், உச்ச நீதிமன்றத்தாலும் தண்டிக்காமல் விடுவிக்கப்பட்டதைப் பலரும் விமர்சித்திருக்கிறார்கள். ஆயினும் உயர் நீதிமன்ற விசாரணை மற்றும் உச்ச நீதிமன்ற மேல்முறையீடு முழுமையாக அணுகப்படவில்லை. அது விவாதிக்கப்படல் முக்கியம். அப்போதுதான் இனி ஒரு துயரம் இப்படி நடக்காமல் தவிர்க்கப்படும்.

கீழ்வெண்மணிச் சம்பவம் நடந்த நாளே அது திட்டமிட்ட சதி என்பதைச் சொல்லிவிடக் கூடியது. போராடும் விவசாயத் தொழிலாளர்களைத் தாக்குவதற்கு 1968, டிசம்பர் 25 தீர்மானிக்கப்பட்டதற்குக் காரணம் உண்டு. டிசம்பர் 23-29 தேதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு கேரளத்தின் கொச்சியில் நடைபெற்றுவந்தது. கீழத் தஞ்சையின் இரு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் பெரும்பாலானோர் இதற்காகச் சென்றிருந்தனர். டிச. 25 கிறிஸ்துமஸ் நாளின் இரவு 10 மணிக்கு ஊர் அடங்கியிருந்தபோது கீழ்வெண்மணியிலுள்ள 30 குடிசைகளுக்கு வன்முறைக் கும்பல் தீ வைத்தது. அப்போது வன்முறைக்கு அஞ்சி ராமய்யாவின் குடிசையில் ஒளிந்த 44 பேர் குடிசைக்குள் கருகி உயிரிழந்தனர்; எதிர்ப்பட்டவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டனர்; சிலர் அரிவாளால் வெட்டப்பட்டனர்; சிலர் சுளுக்கியால் குத்தப்பட்டனர்; பலத்த காயங்களுக்கு ஆளாயினர்.

குற்றச்சாட்டும் முதல் தீர்ப்பும்

குண்டடி பட்ட முனியன் (முதல் சாட்சி), தனது புகாரில் தாக்கவந்த கூட்டத்தில் நெல் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ண நாயுடுவும் இருந்ததைக் குறிப்பிட்டார். இந்தக் கலவரத்தில் வெளியூரிலிருந்து அறுவடைக்காகக் கூட்டிவரப்பட்ட கூலித் தொழிலாளர் பக்கிரிசாமியும் கொல்லப்பட்டார். முதல் குற்றவாளியாக கோபாலகிருஷ்ண நாயுடு மற்றும் 22 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அவ்வழக்கில் கோபாலகிருஷ்ண நாயுடு மீதும், அவரது நெருங்கிய உறவினர்கள் மீதும் கொலைக் குற்றத்துக்கான இ.த.ச. 302-ன் கீழும், ஆயுதச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதியப்பட்டது. அதே சமயத்தில், கலவரத்தில் இறந்துபோன பக்கிரிசாமி மரணத்தைக் கொலை வழக்காக கீவளுர் காவல் நிலையம் முதல் தகவல் அறிக்கை 328/1968 ஆகப் பதிவுசெய்தது.

நீதிபதி சி.எம்.குப்பண்ணன் முன் இரு வழக்குகளும் வருகின்றன. முதல் வழக்கு பக்கிரிசாமி கொலை தொடர்பில் கோபால் மற்றும் 22 பேர் மீது தொடரப்பட்டதாகும். இதில், கோபால் மீது கொலைக் குற்றம் சுமத்தப்படுகிறது. இவ்வழக்கில் கோபாலுக்கு ஆயுள் தண்டனையும், இரண்டாவது குற்றவாளி ராமய்யனுக்கு 5 வருடம், மற்ற 4 பேருக்கு 2 வருடம் கடும் சிறைத் தண்டனையும் வழங்கப்படுகிறது. 8 பேர் விடுவிக்கப்படுகிறார்கள்.

இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட 30.11.1970 அன்றைய தினமே கீழ்வெண்மணியில் 44 பேர் குடிசையில் வைத்து எரிக்கப்பட்ட வழக்குக்கும் தீர்ப்பளிக்கப்படுகிறது. அவ்வழக்கிலும் 23 குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுகிறார்கள். இதில் கோபாலகிருஷ்ண நாயுடு மற்றும் 8 பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. சட்ட விரோதமாகக் கூடி, சட்டத்துக்குப் புறம்பான காரியங்களைச் செய்ததாகவும், தீயிட்டு அழித்ததற்காகவும் அளிக்கப்பட்ட தண்டனை இது. அதாவது, கொலை முயற்சியில் ஈடுபட்டதற்காக 5 பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டதே ஒழிய கொலைக் குற்றத்திலிருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இவ்விரு வழக்குகளிலும் ஒரே மாவட்ட நீதிபதி முன் விசாரணை நடைபெற்றாலும், இரண்டும் தனித்தனி வழக்குகளாக விசாரிக்கப்பட்டன. முதல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிலர் இரண்டாவது வழக்கில் சாட்சிகளாகவும், இரண்டாம் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிலர் முதல் வழக்கில் சாட்சிகளாகவும் இருந்தனர். உதாரணமாக, கீழ்வெண்மணி வழக்கில் முதல் குற்றவாளியான கோபாலகிருஷ்ண நாயுடு, பக்கிரிசாமி கொலை வழக்கில் முதல் சாட்சியாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

முறையீடுகளும் அதிர்ச்சிகளும்

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கோபாலும், 5 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட ராமய்யனும் மேல்முறையீடு செய்தனர். கீழ்வெண்மணி கொலை வழக்கில் குற்றவாளிகள் செய்த மேல்முறையீடு கோபால் வழக்குக்கு முன்னாலேயே தாக்கல்செய்யப்பட்டது. மேலும், அவ்வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டவர்களுக்கு எதிராகத் தண்டனை தரும்படி அரசுத் தரப்பிலான மேல்முறையீடும் கோபால் வழக்குக்கு முந்தையதே. ஆனால், என்ன காரணமோ முன்னர் தாக்கல் செய்த மேல்முறையீடுகள் பட்டியலிடப்படவில்லை. மாறாக, கோபாலின் மேல்முறையீடு பட்டியலிடப்படுகிறது. நீதிபதிகள் செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பை உறுதிசெய்து கோபாலுக்கு ஆயுள் தண்டனையையும், ராமய்யனுக்கு 5 வருடக் கடுங்காவல் தண்டனையையும் உறுதிசெய்கிறார்கள் (4.8.1972).

அடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுகிறது. இந்த முறையீடு 13 ஆண்டுகளுக்குப் பின் எடுத்துக்கொள்ளப்பட்டு, 30.1.1986-ல் தள்ளுபடி செய்யப்படுகிறது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இவ்வழக்கையும் இதர கிரிமினல் குற்றச்சாட்டுகள்போல் விசாரித்து விசாரணையிலுள்ள ஓட்டைகளையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், உயர் நீதிமன்றத்தின் முடிவில் தலையிட விருப்பமில்லை என்று தெரிவிக்கிறார்கள்.

கீழ்வெண்மணி வழக்கை உயர் நீதிமன்றம் அணுகிய விதத்தைப் பார்த்தால் பல உண்மைகள் புரியும். வழக்கு சென்னை மத்தியக் குற்றவியல் காவல் துறையால் விசாரிக்கப்பட்டபோதும், நீதிபதிகள் காவல் துறையின் துப்புத்துலக்கைக் குறைகூறியதுடன், மாவட்ட செஷன்ஸ் நீதிபதியின் தீர்ப்பையும் குறைகூறினர். கீழ்வெண்மணி மேல்முறையீடுகள் வேறு இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்குப் பின்னர் எடுத்துக்கொள்ளப்பட்டதைப் பார்த்த அரசுத் தரப்பு ப்ராசிக்யூட்டர் நீதிபதிகளிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். பக்கிரிசாமி கொலை வழக்கும், கீழ்வெண்மணியில் 44 பேர் கொல்லப்பட்ட வழக்கும் ஒரே செஷன்ஸ் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டுத் தண்டனை வழங்கப்பட்டது. சாட்சிகளும் குற்றவாளிகள் பலரும் இவ்விரு வழக்குகளிலும் சம்பந்தப்பட்டவர்கள். எனவே, கீழ்வெண்மணி கொலை மேல்முறையீட்டு வழக்கை, பக்கிரிசாமி வழக்கை விசாரித்த அதே நீதிபதிகள் அமர்வு விசாரிப்பது உசிதமாக இருக்கும் என்பதே அந்த வேண்டுகோள். உயர் நீதிமன்ற நீதிபதிகள் இதற்குச் செவிசாய்க்கவில்லை.

கோபாலகிருஷ்ண நாயுடு மீதும், அவர் சார்ந்தவர்கள் மீதும் விவசாயச் சங்கத்துக்குப் பகை இருந்தது என்று கூறிய நீதிபதிகள், அவர்கள் கலவரத்தில் நேரில் ஈடுபட்டு, குடிசைகளுக்குத் தீ வைத்து, துப்பாக்கியால் சுட்டதை நேரில் பார்த்த சாட்சிகள் இருந்தபோதும், அவர்கள் குறிப்பிட்டது அதிர்ச்சியூட்டக்கூடியது: “இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ள அனைத்து 23 குற்றவாளிகளும் மிராசுதாரர்களாக இருப்பதும் திகைக்க வைக்கும் விஷயமாக உள்ளது. இவர்களில் பெரும்பாலோர் பெருமளவு நிலத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ள பணக்காரர்கள். முதலாவது குற்றவாளி கார் ஒன்றைச் சொந்தமாக வைத்திருக்கிறார் என்பது தெளிவு. இத்தகைய மிராசுதாரர்களா இடது கம்யூனிஸ்ட் விவசாயிகளைப் பழிவாங்கும் அளவுக்கு பலவீனமான எண்ணம் கொண்டிருப்பார்கள்? இவர்கள் தாங்களே சம்பவ இடத்துக்கு நடந்துவந்து பணியாளர்கள் உதவி ஏதும் இல்லாமல் வீடுகளுக்குத் தீ வைத்திருப்பார்கள் என்பதை நம்புவதற்கு சிரமமாக உள்ளது!”

ஆக, கோபாலகிருஷ்ண நாயுடு குடிசைகளுக்குத் தீ வைக்கவும் இல்லை, துப்பாக்கியால் சுடவுமில்லை என்ற முடிவுக்கு நீதிபதிகள் வந்ததுடன், அவர் சம்பவம் நடந்த இடத்திலேயே இல்லை என்பதற்கான அலிபியையும் ஏற்றுக்கொண்டனர். மேலும், விவசாயச் சங்கத்தினரின் சாட்சிகள் இடது கம்யூனிஸ்ட் தலைவர்களின் தூண்டுதலின்பேரில் தயாரிக்கப்பட்டதாகவும் தீர்ப்பளித்தனர்.

உண்மையில், கொச்சி மாநாட்டுக்கு அனைத்து உள்ளுர் தலைவர்களும் பிரதிநிதிகளாகச் சென்றிருந்தது அனைவரும் அறிந்ததே. ஆகையால்தான், விசாரணை நடத்தி 46 சாட்சியங்களின் வாக்குமூலங்களையும், குறுக்கு விசாரணையையும் பதிவுசெய்த மாவட்ட நீதிபதி, கோபாலகிருஷ்ணனின் அலிபியை நிராகரித்ததுடன், அவர் ஒவ்வொரு சம்பவத்திலும் சாட்சியங்களுடன் இருந்ததைக் கூறியதுடன், அவருக்கும் இதர பண்ணையார்களுக்கும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்ததுக்கு இவ்வாறு காரணம் கூறியிருக்கிறார்: “இந்தக் குற்றவாளிகள் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். வீடுகளுக்குத் திட்டமிட்டே தீ வைத்திருக்கிறார்கள்; தீயிடல் மூலம் மூன்று தெருக்களை முற்றிலுமாக அழித்திருக்கிறார்கள். துப்பாக்கியால் சுட்டு இடது கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த விவசாயிகளைக் கொல்ல முயன்றிருக்கிறார்கள்; மேலும், கொடுங்காயமும் ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமே இருக்க முடியாது. இந்தக் குற்றவாளிகள் தீ வைத்தது தொடர்பான சம்பவத்தில் 42 அப்பாவி மக்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் அச்சம் தரும் தண்டனை தேவை என்பது என் கருத்தாக உள்ளது.”

ஆனால், மேல் நீதிமன்றமோ முக்கியமான சாட்சிகளை விவசாயச் சங்கத் தலைவர்கள் தூண்டி பொய் வாக்குமூலம் கொடுத்திருப்பார்கள் என்றும், கோபாலகிருஷ்ண நாயுடுவை வேண்டும் என்றே வழக்கில் மாட்ட வைப்பதற்காகக் காவல் துறை வழக்கில் வாக்குமூலங்கள் பதிவுசெய்து கால தாமதமாகச் செயல்பட்டதாகவும் கருதி தீர்ப்பளித்தது.

கீழ்வெண்மணி கொலை வழக்கு மேல்முறையீட்டை 1973-ல் விசாரித்த நீதிபதிகள் (வெங்கட்ராமன் மற்றும் மகராஜன்) கோபாலகிருஷ்ண நாயுடுவும் மற்ற குற்றவாளிகளும் போட்ட மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டு அவர்களது தண்டனையை ரத்துசெய்தனர் (6.4.1973). அதே சமயத்தில், அரசுத் தரப்பில் விடுதலையான குற்றவாளிகளுக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடிசெய்யப்பட்டது.

அடுத்த அதிர்ச்சிகள்

நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் அன்றைய திமுக அரசு கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்தே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதிலும் கோபாலகிருஷ்ண நாயுடு, அவரது கூட்டாளிகள் தொடுத்த வழக்கில் மட்டுமே மேல்முறையீடு செய்யப்பட்டது. அம்மேல்முறையீடு நிலுவையில் இருக்கும்போது 14.12.1980 அன்று கோபாலகிருஷ்ண நாயுடு கொல்லப்பட்டார். இப்படியாக, மேல்முறையீடு செய்து 14 வருடங்கள் கழித்து 31.10.1990 அன்று இறுதி விசாரணைக்கு வழக்குப் பட்டியலிடப்பட்டது.

தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட சிறப்பு வழக்கறிஞர் லலித் அன்று ஆஜராகவில்லை. பதிலாக, தமிழக அரசின் வழக்கறிஞர் அன்று மாலை 45 நிமிடம் வாதிட்டதாக உச்ச நீதிமன்றப் பதிவேடு கூறுகிறது. மறுநாள் மீண்டும் அவ்வழக்கு பிற்பகல் 12 மணிக்கு வந்தபோது மூத்த வழக்கறிஞர் 15 நிமிடம் பேசியதாகவும், குற்றவாளிகளின் வழக்கறிஞர் முற்பகலில் 45 நிமிடமும், மதிய உணவு இடைவேளைக்குப் பின் 15 நிமிடமும் வாதிட்டதாகப் பதிவேடுகள் காட்டுகின்றன. ஆக, தமிழகத்தையே உலுக்கிய ஒரு வழக்கை உச்ச நீதிமன்றம் மொத்தத்தில் இரண்டு மணி நேரம் இரு தரப்பையும் கேட்டு மூன்று பக்கத் தீர்ப்பைக் கூறி மனுவைத் தள்ளுபடிசெய்தது.

தீர்ப்பில் அரசு வழக்கறிஞரின் வாதம் 10 வரிகளில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல், குற்றவாளிகள் தரப்பில் எதிர்வாதம் 14 வரிகளில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது. விசாரணை நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் ஒருமித்த கருத்து கூறியிருப்பதால், உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு மேல்முறையீட்டு அதிகாரத்தின் கீழ் இவ்வழக்கில் தலையிட விரும்பவில்லை என்று நீதிபதிகள் கூறினர். துயரம் என்னவென்றால், விசாரணை நீதிமன்றத்தின் முடிவுகளை உயர் நீதிமன்றம் ரத்துசெய்து புதிய காரணங்களைக் கூறி குற்றவாளிகளை விடுவித்தது என்பது ஆகும். அப்படியிருக்க,எப்படி இரு நீதிமன்றங்களின் கருத்தும் ஒன்றாகும்? இப்படியாக, 1968கடைசியில் தமிழகத்தில் நடந்த மிகப் பெரும் படுகொலைகள் 22 ஆண்டுகள் கழித்து 1990 கடைசியில், குற்றவாளிகளைத் தண்டனையின்றித் தப்பவிட்ட சோகமான நிகழ்வு நடந்தேறியது.

வருத்தம் வேண்டும்

வரலாற்றில் பிழைகள், தவறுகள் நிறைய நடந்தது உண்டு. அவற்றில் சிலவற்றுக்காவது தவறிழைத்த நாடுகள்/அரசுகள் மன்னிப்பு கேட்டுள்ளன. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பிரிட்டிஷ் அரசு பல வருடங்கள் கழித்து வருத்தம் தெரிவித்ததை நினைவுகூரலாம். நீதிமன்றங்கள் மனித உரிமைகளைப் பறிக்கும்படியான தங்களது தீர்ப்புகளுக்கு வருத்தம் தெரிவித்ததில்லை என்றாலும், ‘நெருக்கடிநிலையின்போது மனித உரிமைகள் மீறப்பட்டாலும் நீதிமன்றங்களை அணுக முடியாது; அடிப்படை உரிமைகள் தாற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டுள்ளன’ என்று ஏ.டி.எம்.ஜபல்பூர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புக்காக உச்ச நீதிமன்ற நீதிபதி கங்குலி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். பிற்பாடு, ‘ஏ.டி.எம்.ஜபல்பூர் தீர்ப்பு தவறு’ என்று அறிவித்தது உச்ச நீதிமன்றம் (புட்டசாமி, 2018). நெருக்கடிநிலையைப் பிரகடனம் செய்ததே தவறென்று அறிவிக்கச் சொல்லி தொடரப்பட்ட ஒரு வழக்கைச் சமீபத்தில் விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம். அவ்வகையில், அடித்தள மக்களை அதிர்ச்சியில் தள்ளிய கீழ்வெண்மணி வழக்கையும் நீதித் துறை கையில் எடுக்க வேண்டும்;அவ்வழக்கின் தீர்ப்பு தவறு என்பதை உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் அறிவிக்க வேண்டும். இதுவே அம்மக்களுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி. செய்வார்களா?

- கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x