Published : 29 Oct 2015 08:20 AM
Last Updated : 29 Oct 2015 08:20 AM

தோட்டத் தொழிலாளர் போராட்டம் தரும் படிப்பினை

கேரளத்தில் சுமார் 3 லட்சம் தோட்டத் தொழிலாளர்கள் 17 நாட்களாகத் தொடர்ந்து நடத்திய போராட்டம் ஊதிய உடன்பாடு ஏற்பட்டதால் ஒருவழியாக முடிவுக்குவந்திருக்கிறது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்பட்ட விலைச் சரிவாலும் போட்டிகளாலும் கடுமையான நெருக்கடியைச் சந்தித்துவரும் இத்துறையினருக்கும் மாநில அரசுக்கும் இது ஓரளவுக்கு நிம்மதியை அளித்திருக்கும். தோட்டத் தொழிலாளர்களின் சங்கங்கள், தோட்ட உரிமையாளர்கள் அமைப்பு, கேரள அரசு ஆகிய முத்தரப்பும் சேர்ந்து நடத்திய 6 சுற்றுப் பேச்சுகளுக்குப் பிறகே இம்முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த உடன்பாட்டின்படி காபி, தேயிலை, ரப்பர், ஏலம் ஆகிய தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் தின ஊதியம் உயர்த்தப்படும். கேரளத்தின் மூணாறு என்ற இடத்தில் கண்ணன் தேவன் மலையைச் சேர்ந்த பெண் தோட்டத் தொழிலாளர்கள் மட்டும் வேலை நிறுத்தம் செய்து, நிர்வாகத் தரப்புடன் பேசி ஊதியங்களை உயர்த்திக்கொண்டதை அடுத்து இந்தப் போராட்டம் நடந்தது. அந்தப் பெண்கள், தொழிற்சங்கத் தலைவர்களையும், தங்கள் சார்பில் பேச ஒரு ஆடவரையும் அனுமதிக்காமல், தோட்ட அதிபர்களுடன் நேரடியாகப் பேசி 20% போனஸ் தர ஒப்புக்கொள்ள வைத்தனர். பெண்களுடைய இந்தப் போராட்டம் மற்ற தொழிலாளர்களுக்கும் போராடுவதற்கான துணிச்சலைக் கொடுத்தது.

தோட்டப் பயிர்களின் விலை சர்வதேசச் சந்தையிலும் உள்நாட்டிலும் சரிந்துள்ளது. உற்பத்தித் திறனும் குறைவாகவே இருக்கிறது. இடுபொருள் செலவும் தொழிலாளர் ஊதியமும் தோட்ட அதிபர்களுக்குச் சுமையாக இருக்கின்றன. இருப்பினும், தொழிலாளர் தரப்புக் கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம் என்று கருதியதால், ஊதிய உயர்வுக் கோரிக்கையை நிர்வாகங்கள் ஏற்கத் தூண்டுகோலாக கேரள அரசு செயல்பட்டது.

எல்லா மாநிலங்களிலுமே தோட்டத் தொழிலாளர்களின் நிலை பரிதாபமாகத்தான் இருக்கிறது. ஒரேயொரு அறையைக் கொண்ட ‘லைன்-வீடுகள்’ என்ற வரிசையான குடியிருப்புகளில்தான் அவர்கள் தங்க வைக்கப்படுகின்றனர். அவர்களுக்குக் கொடுக்கும் ஊதியம் குடும்பத்தின் அடிப்படைச் செலவுகளுக்கே பற்றாமல் போய்விடுகிறது. இவற்றையெல்லாம் அறிந்துள்ள கேரள அரசு, தொழிலாளர்களின் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை அதிகரிக்கவும் தரமான கல்வியை அவர்களுடைய குழந்தைகளுக்கு அளிக்கவும் திட்டமிட்டுவருகிறது. இது வரவேற்கத் தக்கது.

வாழ்க்கைச் செலவு உயர்ந்துவிட்டதால் ஊதியத்தை உயர்த்திக் கேட்பது நியாயம் என்றாலும், அவர்களுடைய உற்பத்தித் திறன் குறைவாகவே இருக்கிறது. இதனால் உற்பத்திச் செலவு அதிகரித்து, சர்வதேசச் சந்தை முதல் உள்ளூர்ச் சந்தை வரை பிறருடன் போட்டி போட்டு நல்ல விலைக்கு விற்க முடியாமல் நஷ்டப்படுவதாக தோட்டத் தொழிலதிபர்கள் கூறுகின்றனர். தொழிலாளர்களின் ஊதியத்தை நிர்ணயிக்கும் போது அதை உற்பத்தித் திறனுடன் இணைக்குமாறு தோட்டத் தொழிலதிபர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக ஒரு நபர் குழுவை நியமித்து பிரச்சினைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்திருக்கிறது.

தோட்டத் தொழிலாளர்கள் தொழில் திறனை வளர்தெடுப்பது நல்ல விஷயம். ஆனால், அதைக் காரணமாக்கி அவர்கள் வருமானத்துடன் தோட்ட அதிபர்கள் விளையாடக் கூடாது. மேலும், தரமான சாகுபடி முறைகளையும் கையாள வேண்டும். அரசு இரு தரப்புக்கும் தேவைப்படும் உதவிகளைச் செய்து தர வேண்டும். முத்தரப்பும் இணைந்து செயல்பட்டால் தோட்டத் தொழிலும் சிறப்படைந்து சர்வதேசச் சந்தையில் ஏற்றம் பெறும். அந்நியச் செலாவணியையும் ஈட்டித் தரும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x