Published : 22 Dec 2020 03:15 AM
Last Updated : 22 Dec 2020 03:15 AM

தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு முன்வைக்கும் உண்மைகள்

கரோனா பெருந்தொற்றால் உடல்நலப் பாதிப்புகள், மரணங்கள் போன்றவற்றோடு பொருளாதாரச் சரிவும் ஏற்பட்டு உலகமும் இந்தியாவும் தள்ளாடிக்கொண்டிருக்கின்றன. ஏழை எளிய மக்கள் உணவு நுகர்வும் முறையும் அவர்களின் உணவுப் பாதுகாப்பும் பெருந்தொற்றாலும் பொதுமுடக்கத்தாலும் பெரும் பாதிப்பு அடைந்திருக்கின்றன. இந்நிலையில் தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு-5 2019-20-ன் தரவுகள் வெளியாகியிருக்கின்றன. இந்தக் கணக்கெடுப்பு பெருந்தொற்றுக்கு முன்பே எடுக்கப்பட்டது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். 22 மாநிலங்கள்/ ஒன்றிய பிரதேசங்களின் தரவுகள் மட்டுமே வெளியிடப்பட்டிருக்கின்றன. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், தமிழ்நாடு, ராஜஸ்தான், பஞ்சாப், ஜார்க்கண்ட், ஒடிஷா ஆகிய மாநிலங்களின் தரவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்தத் தரவுகளை வைத்துப் பார்க்கும்போது பெருந்தொற்றுக்கு முன்பே குழந்தைகள் ஊட்டச்சத்து, இளைஞர்களின் உடல் வளர்ச்சி போன்றவை ஒரு மோசமான சித்திரத்தையே முன்வைக்கின்றன. கணக்கெடுப்பு மேற்கொண்ட பல மாநிலங்களில் 2015-2016 அளவைவிட 2019-20-ல் நிலைமை கவலையளிக்கும் விதத்திலேயே இருக்கிறது. குஜராத், மஹாராஷ்டிரம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ரத்தசோகை, வளர்ச்சிக் குறைபாடு போன்ற விஷயங்களில் முந்தைய கணக்கெடுப்பைவிட தற்போது முன்னேற்றம் காணப்படுகிறது. சிறுவர்கள் வளர்ச்சிக் குறைபாட்டைப் பொறுத்தவரை 13 மாநிலங்கள்/ ஒன்றியப் பிரதேசங்களில் முன்னேற்றம் காணப்படுகிறது. பிஹாரிலும் அசாமிலும் சிறிதளவு முன்னேற்றம் இருந்தாலும் அரசு நிர்ணயித்த இலக்குக்கும் அதற்கும் இடையே பெரும் இடைவெளி இருக்கிறது. எனினும், பெரிய மாநிலங்களில் அதிக அளவு வளர்ச்சிக் குறைபாட்டை (42.9%) கொண்ட மாநிலமாக பிஹார்தான் இன்னமும் இருக்கிறது.

இன்னொரு புறம் ஊட்டச்சத்துக் குறைபாடு, மோசமான உடல்நல பாதிப்பு போன்ற விஷயங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்களைக் கவனப்படுத்துகிறது. முக்கியமாக, சுத்தமான தண்ணீர், கழிவுநீர் அமைப்பு, அதிகம் மாசு ஏற்படுத்தாத சமையல் எரிபொருள் போன்ற விஷயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. பெண்கள் நலனைப் பொறுத்தவரை 17 மாநிலங்கள்/ ஒன்றியப் பிரதேசங்களில் குடும்ப வன்முறை சற்றே குறைந்திருக்கிறது. 18-ல் குழந்தைத் திருமணங்கள் குறைந்திருக்கின்றன. ஆனாலும், பட்டினி, ஊட்டச்சத்து தொடர்பான பிரச்சினைகள் மோசமான அளவில் நீடிப்பது ஏற்கெனவே உள்ள போஷான் அபியான் உள்ளிட்ட திட்டங்களுக்கு முனைப்பும் வேகமும் தேவை என்பதை உணர்த்துகிறது.

மிக முக்கியமாக, பெருந்தொற்றால் எழும் பிரச்சினைகளுக்கு மத்தியில் மக்களின் உடல்நலனை மேம்படுத்தும் வழக்கமான நலத்திட்டங்களை எப்படிக் கிடைக்கச் செய்வது என்பது குறித்து ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் சேர்ந்து திட்டமிட வேண்டும். ஒருங்கிணைந்த நடவடிக்கைகள்தான் பட்டினியையும் கடும் வறுமையையும் ஒழிக்கும். இதுவே ஐநாவின் வளம்குன்றா வளர்ச்சி இலக்கின் நோக்கம். இதுவே, கடந்த சில தசாப்தங்களாகப் பொருளாதார வளர்ச்சியையும் மக்களின் நல்வாழ்வையும் ஒன்றுசேர்த்த ஒரு நாடாக இந்தியா தன் மக்களுக்கு உறுதிப்படுத்த வேண்டிய விஷயமுமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x