Published : 14 Dec 2020 03:14 am

Updated : 14 Dec 2020 06:58 am

 

Published : 14 Dec 2020 03:14 AM
Last Updated : 14 Dec 2020 06:58 AM

பாஜகவின் முதன்மைக் குறி யார்?

bjp-prime-target

இது பலருக்கு ஆச்சரியம் தரலாம். அதாவது, அதிமுக மீது திமுக தலைவர் கருணாநிதி கொண்டிருந்த அபிமானம். கட்சிக்குத் தடை விதிக்கப்படலாம்; அமைப்பே முடக்கப்படலாம் என்கிற சூழலை வரலாற்றில் மூன்று சந்தர்ப்பங்களில் திமுக எதிர்கொண்டிருக்கிறது. நெருக்கடிக் காலகட்டத்தில் இப்படியொரு பேச்சு இருந்தபோது, கட்சியின் முக்கியத் தலைவர்கள் யாவரும் சிறையில் தள்ளப்படலாம் என்ற வதந்தியும் உலவியது. சரி, அப்படி ஏதேனும் நேர்ந்தால் என்ன செய்வது? அமைப்பின் அதே பெயரில் தலைமறைவு அரசியலில் ஈடுபடுவதா அல்லது புதிய பெயரில் ஒரு அமைப்பைக் கட்டுவதா; யாரெல்லாம் அதை நிர்வகிப்பது? இப்படிப் பல எண்ணங்கள்.

அன்றாடம் பொழுது சாய்ந்தால் மெரினா கடற்கரையில், நெருக்கமான கட்சித் தோழர்களுடன் அமர்ந்து விவாதிக்கும் வழக்கம் அப்போது கருணாநிதிக்கு இருந்தது. அன்றைக்கு நெடுநேரம் அமைதியாக இருந்தவர் சொன்னார், “வாழ்வோ சாவோ திமுகவோடுதான். திமுக இல்லாவிட்டால் என்னவாகும் என்ற கேள்விக்கு எனக்கு ஒரே ஒரு ஆறுதல்தான் இருக்கிறது. அதிமுகதான் அது. அண்ணாவால் உருவாக்கப்பட்ட திமுக முடக்கப்பட்டாலும், அண்ணாவின் பெயரில் உருவாக்கப்பட்ட அதிமுக நம்மைக் கொஞ்சமேனும் பிரதிபலிக்கும். நிச்சயமாக தேசியக் கட்சிகளைப் போல அதிமுகவினர் தமிழ்நாட்டுக்கு அந்நியமாகச் செயல்பட மாட்டார்கள்!”


அதிமுகவின் தலைமைப் பதவியை அலங்கரித்த எம்ஜிஆர், ஜெயலலிதா எந்தச் சந்தர்ப்பத்திலும் திமுகவைப் பற்றி இப்படிக் கூறவில்லை என்றாலும், திமுக அல்லது அதிமுக என்ற இருமுனை அரசியலைத் தமிழ்நாட்டில் அரை நூற்றாண்டாக நிலைநாட்டியதில் இரு தரப்புமே உறுதியாக இருந்தார்கள் என்று சொல்ல முடியும். அரசியல் களத்தில் பரம வைரிகளாகச் செயல்பட்டுவந்த திமுகவும் அதிமுகவும் இன்னொரு தரப்பின் மீது கொண்டிருந்த இந்தப் பற்றுறுதியை எப்படிப் பார்ப்பது?

உலகம் முழுக்கவுமே தேர்தல் அரசியல் ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டத்திலும் இரு கட்சிகளின் ஆட்சிமுறையை ஒத்தே செயல்படுவதாக இருப்பதை சமீபத்தில் தமிழ்நாட்டோடு ஒப்பிட்டுப் பேசிக்கொண்டிருந்தார் பேராசிரியர் இராம.சீனுவாசன். பிரெஞ்சு சமூகவியலாளர் மொரீஸ் ட்யூவர்ஜியின் ‘இருமுனைப் போட்டிக் கருத்தாக்கம்’ தமிழ்நாட்டின் திராவிடக் கட்சிகளோடு ரொம்பவே இணைந்து போகிறது என்று அவர் சொன்னார். திமுகஅதிமுக தலைவர்கள் களத்திலிருந்து ட்யூவர்ஜியின் தத்துவத்தை இயல்பாகப் பெற்றிருந்தார்கள் என்று சொல்லலாம். ‘பிரதானப் போட்டி தங்களுக்கு இடையேதான்; மூன்றாவது சக்தியை இடையே அனுமதிப்பது இல்லை’ என்கிற வியூகத்தினூடாக தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் கையாண்டுவந்த இன்னொரு உத்தியே அரசியல் களத்தில் புதிதாகக் கிளம்பும் கதையாடலைத் தன்வயப்படுத்துவதும், ஒரே திராவிடக் கதையாடலின் இரு தரப்புப் போட்டியாளர்களாக உச்சஸ்தாயில் தங்கள் குரல்களை முழங்குவதின் வழி சமூகத்தின் பேசுபொருளைத் தம் வசமே தக்கவைத்திருப்பதும் ஆகும்.

தமிழ்நாட்டில் இதனால்தான் ‘கழகங்கள் இல்லாத தமிழகம்’ என்று ஒருசேர இரு கட்சிகளையும் இல்லாமலாக்கும் கனவைப் பல கட்சிகளுக்கும் கொண்டிருக்கின்றன. திராவிடக் கட்சிகளின் அரை நூற்றாண்டு ஆட்சிக்குப் பின் வந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் இது பகிரங்கமாகவே வெளிப்பட்டது. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் முன்னிற்க தேமுதிக, விசிக, மதிமுகவை உள்ளடக்கி அமைக்கப்பட்ட ‘மக்கள் நலக் கூட்டணி’யும், யாருடனும் கூட்டணி சேராமல் மாநிலம் எங்கும் தனித்துக் களம் இறங்கிய பாமகவும் திமுக - அதிமுக இரண்டுக்கும் எதிராகக் கடும் பிரச்சாரத்தை முன்னெடுத்தன. வழக்கம்போல மூன்றாவது, நான்காவது அணிகளைப் பொருட்படுத்தாமல் போட்டியைத் தங்களுக்குள் தீர்மானித்துக்கொண்ட திமுகவும் அதிமுகவும் இந்தத் தேர்தலிலும் வெற்றியைத் தங்களுக்குள் மட்டும் பகிர்ந்துகொண்டன. ஆனால், இதுவரையிலான ஏனைய யுத்தங்களிலிருந்து இன்று பாஜக முன்னெடுக்கும் யுத்தமானது மாறுபடுகிறது. ஏனைய கட்சிகளைப் போல தேர்தல் களத்தை அல்லாமல் கலாச்சாரக் களத்தைப் பிரதான இலக்காகக் கொண்டு அது முன்னோக்கி நகர்கிறது. ஏனையோரைப் போல, திமுக-அதிமுக இரண்டுக் கட்சிகளையும் சம தொலைவில் தூர வீசிவிட்டு, யதார்த்த சாத்தியமற்ற ‘முதலிடம்’ நோக்கிப் பயணிக்காமல், யதார்த்த சாத்தியமுள்ள ‘இரண்டாமிடம்’ நோக்கி பாஜக பயணிக்கிறது. இது திமுக-அதிமுக இரு கட்சிகளுக்குமே ஆபத்து; அதிலும் முதன்மையாக அதிமுகவுக்கே ஆபத்து.

அடிக்கடி நான் நண்பர்களிடம் சொல்வதுண்டு, ‘அதிமுக என்பது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமல்ல; அது அனைத்திந்திய அதிருப்தி திமுகவும்கூட. (ADMK is not only All India Anna DMK. It’s also All India Anti DMK). அதிமுகவின் பெரிய பலம் இதுதான். யாரெல்லாம் திமுகவையும் திராவிட இயக்கத்தையும் வெறுக்கிறார்களோ அவர்களெல்லாம் அதிமுகவுக்குப் பக்க பலமாக நிற்பார்கள். அவர்களுடைய நோக்கம் அதிமுக வெல்வது என்பதைக் காட்டிலும், திமுக தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே ஆகும். ஆகையால், திமுகவைத் தோற்கடிக்கும் முதன்மை இடத்தில் அதிமுக இருக்கும் வரைதான் அதற்கு செல்வாக்கு.

தமிழகத்தின் கள அரசியல் வரலாற்றை அறிந்தவர்களுக்கு ஒன்று தெரியும், எம்ஜிஆர் பிரிந்தபோது ஏற்பட்ட விரிசலால் திமுகவுக்கு ஏற்பட்ட சேதத்தைக் காட்டிலும், காங்கிரஸுக்குக் கரைசலால் ஏற்பட்ட சேதம் அதிகம். திமுக ஆட்சியைக் கைபற்றிய 1967 தேர்தலில்கூட தனித்து நின்றே திமுக கூட்டணியைக் காட்டிலும் சுமார் 10% ஓட்டுகளை மட்டுமே குறைத்து வாங்கியிருந்த காங்கிரஸானது, அதிமுக உருவான பிறகு நடந்த 1977 தேர்தலில் கூட்டணி அமைத்தும் தன்னுடைய முந்தைய தேர்தல் ஓட்டு வங்கியில் சரிபாதியை இழந்திருந்தது. அதாவது, கட்சிக்கு அப்பாற்பட்டு திமுகவுக்கு எதிராக காங்கிரஸுக்கு வாக்களித்துவந்தவர்களில் பெரும்பான்மையினர் அதிமுக நோக்கி நகர்ந்துவிட்டார்கள். பாஜக இப்போது அந்த இடத்தையே குறிவைக்கிறது. அமித் ஷாவின் சமீபத்திய வருகையின்போது, ‘தமிழ்நாட்டில் திமுக–பாஜக இடையேதான் இனி யுத்தம்’ என்று பாஜக பேசலானது வெளிப்படையான ஒரு பிரகடனம்.

ஏனைய கட்சிகளைப் போல மேலோட்டமாக திமுகவையும் அதிமுகவையும் சம தொலைவில் வைத்துப் பேசாமல், சித்தாந்தரீதியாக இன்றுள்ள தமிழ்நாட்டின் இயல்பான கட்சியாக திமுகவை பாஜக அங்கீகரிக்கிறது. திமுகவே தன்னுடைய முதன்மை எதிரி என்று வரையறுப்பதன் மூலம் அதற்கு எதிரான கதையாடலை உருவாக்குகிறது. ஆனால், திமுகவுக்கு எதிரான இடத்தில் இன்று அமர்திருந்திருக்கும் அதிமுக, நேற்று அமர்ந்திருந்த காங்கிரஸ் கட்சியோடு, நாளை அங்கு அமரத் துடிக்கும் பாஜகவை ஒப்புமைப்படுத்த முடியாது.

ஜனநாயக அரசியலுக்குள் தமிழ்நாடு காலடி எடுத்துவைத்த இந்த நூறாண்டுகளில், திராவிட இயக்கத்துக்கு எதிரான முழுமையான கதையாடலோடு பாஜக மட்டுமே வருகிறது. ராஜாஜி தொடங்கி பக்தவத்சலம் வரை எவர் ஒருவரின் அரசியலையும் பாஜக இன்று முன்னெடுக்கும் அரசியலோடு ஒப்பிட முடியாது. அதிமுக தோற்றத்துக்குப் பின் இந்த விளையாட்டு மேலும் திராவிட இயக்கத்துக்கு அனுகூலம் ஆனது. பொதுவெளியில் திமுகவின் எதிர்க் குரல்களுக்குக் காது கொடுக்கும் அதிமுக, எப்போது பொதுவெளியில் திமுகவின் குரல் செல்வாக்கு பெறுகிறதோ அப்போது அதனைத் தானும் பிரதிபலித்து தன்னுடையதாக்கிக்கொள்ளும். நாட்டிலேயே முதல்முறையாக மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் 7.5% ஒதுக்கீடு சமீபத்திய உதாரணம்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், எவ்வளவோ குற்றச்சாட்டுகளை திமுக–அதிமுக மீது முன்வைக்கலாம் என்றாலும், இரு கட்சிகளும் இன்று பேசும் அரசியல் பெருமளவில் மக்களின் அன்றாட வாழ்க்கையோடு பிணைந்தது என்பதாகும். சமீபத்திய புயலின்போது தமிழ்நாட்டில் போட்டி போட்டுக்கொண்டு முதல்வர் பழனிசாமியும், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் நிவாரணப் பணிகளுக்குச் சென்றதையும், தெலங்கானாவில் வெள்ளப் பாதிப்புகளைத் தாண்டி, ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் போன்ற ஒரு உள்ளாட்சித் தேர்தலில்கூட ‘இந்து–முஸ்லிம் பாகுபாடு அரசியல்’ செல்வாக்கு செலுத்தியதையும் ஒப்பிட்டால் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையிலான வேறுபாட்டை விளங்கிக்கொள்ளலாம்.

ஜெயலலிதாவுக்குப் பிறகு, அதிமுகவை இன்னமும் பிணைத்திருப்பது ஆட்சியதிகாரம் என்பதை நன்றாகவே பாஜக உணர்ந்திருக்கிறது. முந்தைய 2016 தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளில் கிட்டத்தட்ட சரிபாதியைக் கூட்டணிக் கட்சிகளுக்கு வரவிருக்கும் 2021 தேர்தலில் அதிமுக தந்துவிடும் சூழல் உருவாகியிருக்கும் நிலையில், தேர்தலுக்குப் பின் அதிமுக நிச்சயம் இன்றைய பலத்தோடு நிற்க முடியாது; அப்போது அதிமுகவின் இடம் தனதாகும் என்று பாஜக இயங்குகிறது. அதிமுகவின் அமைப்பு பலம், அதன் இயங்குமுறை, அரசியல் கணக்குகள் இவற்றை எல்லாம் கணக்கிட்டால் பாஜகவின் வியூகம் அவ்வளவு எளிதான சமாச்சாரம் கிடையாது என்பது எவருக்கும் புரியும். ஆனால், அரசியல் கதையாடலில் திமுகவின் எதிர் இடத்தில் பாஜக தன்னைப் பொருத்திக்கொள்ள முடியும்.

அரசியலில் கதையாடலும், பிரதான பேசுபொருளை யார் தீர்மானிக்கிறோம் என்பதும் முக்கியம். பிரதான எதிரியைத் தீர்மானிப்பது ஒரு வகையில், தன்னைத் தீர்மானிப்பதும் ஆகும். அதனால்தான் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் முழுமையாக திமுக–அதிமுக யுத்தமாகவே தமிழ்நாட்டின் அரசியல் நீடிக்க அவ்வளவு உரக்கப் பேசி மேடையை முழுமையாக தங்களுடையதாக்கி இருந்தார்கள். இன்று பழனிசாமி தன் ஆட்சிக்காகக் கொடுக்கிற பெரிய விலை, அதிமுகவின் குரல். வரவிருக்கும் தேர்தலில் ஆகப் பெரும் இலக்கு பழனிசாமியின் அதிமுகதான். வெற்றி-தோல்விகள் சுழல்பவை. கதையாடல் அப்படி அல்ல. மேடையை அதிமுக தொடர்ந்து தக்க வைக்குமா என்பதே அதன் முன்னிற்கும் பெரும் சவால்!

- சமஸ், தொடர்புக்கு: samas@hindutamil.co.in


Bjp prime targetபாஜகவின் முதன்மைக் குறிதிமுகஅதிமுக

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x