Last Updated : 13 Dec, 2020 03:15 AM

 

Published : 13 Dec 2020 03:15 AM
Last Updated : 13 Dec 2020 03:15 AM

புலிக்குத்திக் கல்லும் சதிக் கல்லும்

கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான ஜவ்வாது மலைத்தொடர் தமிழகத்தின் வடக்குப் பகுதியில் உள்ளது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஜவ்வாது மலையின் ஒரு பாகமாக ஏலகிரி மலைப் பகுதி அமைந்துள்ளது. இந்த ஏலகிரி மலையின் அடிவாரத்திலுள்ள மலையம்மன் கோயிலின் அருகேதான் இரண்டு நடுகற்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து நான்கு கிமீ தொலைவில் அமைந்துள்ள மலையம்மன் கோயிலை ஒட்டிய பகுதியில் வசிக்கும் மக்கள் கொடுத்த தகவலின் பேரில், களஆய்வு மேற்கொண்டேன்.

சோலையூர் பேட்டையா? ஜோலார்பேட்டையா?

மலை அடிவாரத்திலுள்ள காட்டுப் பகுதிகளுக்குச் சோலைக்காடுகள் என்று பெயர். இந்தக் காடுகளில் சோலைமந்திகள் நிறைந்திருக்கும். இயற்கையுடன் தமிழர்களுக்குள்ள தொடர்பு அறுந்துவிட்டதால் சோலைக்காடுகள் அழிந்துவிட நேர்ந்தன. இன்று ஜோலார்பேட்டை என்று அழைக்கப்படும் பகுதி ஒருகாலத்தில் சோலைக்காடாக இருந்த பகுதியாகும். இங்கு வசிப்பிடங்கள் உருவானவுடன் அந்தப் பகுதி சோலையூர் என்று வழங்கலாயிற்று.

வாழிடங்கள் பெருகப் பெருகச் சந்தையும் பேட்டையும் ஏற்பட்டன. இப்படித்தான் அது சோலையூர் பேட்டை என்றானது. இவ்வூரில் அச்சடிக்கப்படும் விழா அழைப்புகளில் இன்னும் சோலையூர், சோலையூர் பேட்டை என்று குறிப்பிடும் வழக்கம் இருக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் ரயில் நிலையம் உருவான பின்பு ஆங்கிலத்தில் ஜோலார்பேட்டை என எழுதப்பட்டு, தமிழர்களும் அப்படியே விளிக்கும் வழக்கம் உருவானது.

ஒருகாலத்தில் புலிகள் வாழும் காடுகளாக இந்தப் பகுதி இருந்தது என்பதற்கு இங்கேயுள்ள நடுகற்களே சான்று. மலையம்மன் கோயில் அருகே அமைந்துள்ள ஒரு தோட்டத்தின் நடுவே நெடுங்காலம் இந்த இரு நடுகற்களும் இருந்துவந்தன. அண்மையில், அந்தத் தோட்டம் பூச்செடிப் பண்ணை அமைப்பதற்காக உரிமையாளரால் விற்கப்பட்டுவிட்டது. புதிய தோட்ட உரிமையாளர் அந்த நடுகற்களைப் பிடுங்கி அருகிலுள்ள மற்றொரு தோட்டத்தில் நட்டுவிட்டார். இவற்றில் ஒன்று, புலிக்குத்திக் கல்; மற்றொன்று, சதிக் கல்.

புலிக்குத்திக் கல்

தலையில் கொண்டையுடன், இடையில் கச்சை கட்டியபடி புலியுடன் பொருதும் வீரனின் புடைப்புச் சிற்பம் இந்தக் கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. வீரனின் வலது தொடையைக் கடிக்கும் புலியைத் தனது வலக்கையில் உள்ள குத்துவாளால் அதன் முதுகில் குத்துகிறான். இடக்கையில் உள்ள குத்துவாளானது புலியின் உடலில் இறங்கி நிற்கிறது. குத்துவாளின் பிடியும், வீரனின் முன்கைப் பகுதியும் தேய்ந்துள்ளன. ஆனால், புலியின் முதுகில் குத்துவாள் இறங்கி அது வெளியே தெரியுமாறு காட்டப்பட்டுள்ளது சிற்பியின் கற்பனைத் திறனுக்குச் சான்றாகும். இது இந்த நடுகல்லின் சிறப்பு. இந்த நடுகல்லின் மேற்புறம் கல்லெழுத்துகள் இருந்துள்ளன. ஆனால், அவை தேய்ந்துவிட்டதால் படிக்க இயலவில்லை. ஆதலால், இந்த நடுகல்லின் காலத்தை அறிய முடியவில்லை. ‘உ’ வடிவிலான எழுத்துருவை மட்டுமே இன்று அறிய முடிகிறது.

சதிக் கல்

புலிக்குத்திக் கல்லின் அருகே இந்த சதிக் கல் உள்ளது. பழைய தோட்டத்திலும் இந்தக் கற்கள் இரண்டும் அருகருகேதான் இருந்துள்ளதாகச் சொல்கிறார்கள். தீயில் இறங்கி உயிர்நீத்த பெண்ணின் உருவமானது சதிக் கல்லின் மேற்புறம் அமர்ந்த நிலையில் வெட்டப்பட்டுள்ளது. அவளின் இருபுறமும் சாமரமும் சங்கும் பொறிக்கப்பட்டுள்ளன. கீழ்ப் பகுதியில் கெண்டி, கும்பம், வாத்தியங்கள், கையுடன் கூடிய தோள்பட்டை, தெய்வமாக்கப்பட்டவளைத் தொழும் மானுடர் ஆகிய உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

சாமரம், சங்கு, கெண்டி, கும்பம் ஆகியவை மங்கலப் பொருட்களாகும். கன்னடப் பகுதிகளில் சதிக் கல்லில் கையுடன் கூடிய தோள்பட்டை சிறப்பான அடையாளமாகச் செதுக்கப்படும் வழக்கம் உண்டு. ஆனால், இந்தக் கல்லில் கையுடன் கூடிய தோள்பட்டையானது படுக்கை வசத்தில் கீழ்ப் புறம் சிறியதாக மட்டுமே செதுக்கப்பட்டுள்ளது. ஆனால், சதிக் கல்லின் இடது மேற்புறத்தில் ஒரு மனித உடலை, இரண்டு விலங்குகள் தின்பதாகச் செதுக்கப்பட்டுள்ளது. அவ்வுடல் எலும்புக்கூடாகக் காட்டப்பட்டுள்ளது. எலும்புக்கூட்டின் வரிகள் கால் வரை செதுக்கப்பட்டு, அந்த மானுடர் தெய்வமானதற்கு அடையாளமாகப் பீடமும் செதுக்கப்பட்டுள்ளது. அந்தப் பீடம் மூன்று வரைகோடுகளாக நடுகல்லில் உள்ளது (கைதொழும் மானுடருக்கு நேரெதிரில்). இது மற்ற சதிக் கற்களில் இல்லாத சிறப்பாகும்.

இந்தக் குறிப்புகள் மூலம் இந்த சதிக் கல், பக்கத்து நடுகல்லில் புலியுடன் பொருது உயிர்நீத்தவனின் மனைவியாக இருந்து, அவன் இறந்த செய்தி கேட்டு, தீயில் பாய்ந்து உயிர்நீத்த பெண்ணுக்கு வைக்கப்பட்ட சதிக் கல்லா? இல்லை என்றால், புலியால் அடித்துக் கொல்லப்பட்ட பெண்ணுக்கு வைக்கப்பட்ட நடுகல்லா? தெரியவில்லை. இந்தக் கல்லின் அடிப்பகுதியானது நிலத்தினுள் புதைந்திருப்பதால் கல்வெட்டுகள் உள்ளனவா என்பதையும் அறிய முடியவில்லை. ஜோலார்பேட்டையைச் சுற்றியுள்ள பகுதிகள் தொடர்ந்து விரிவடைந்துவருவதால் இந்த இரு நடுகற்களையும் தொல்லியல் ஆய்வுத் துறையினர் பாதுகாக்க வேண்டும். இது இவ்வூர் மக்களின் விருப்பமும்கூட.

- இரா.சித்தானை,

தொடர்புக்கு: writerchiththaanai@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x