Published : 09 Dec 2020 03:14 am

Updated : 09 Dec 2020 08:04 am

 

Published : 09 Dec 2020 03:14 AM
Last Updated : 09 Dec 2020 08:04 AM

ஒற்றைக் கலாச்சாரம் எனும் பேராபத்து

the-misfortune-of-a-single-culture

ராஜீவ் பார்கவா

ஒவ்வொரு மனிதரும் ஒரே ஒரு மதச் சமூகத்தை அல்லது மொழிச் சமூகத்தை – அதாவது ஒற்றைக் கலாச்சாரத்தை அல்லது தனித்துவமான நாகரிகத்தை - சேர்ந்தவர் என்ற கருத்து எங்கெங்கும் காணப்படுவதுபோல் தெரிகிறது. நாம் வங்காளியாக இருந்தால் நம்மால் ஒடிஷாகாரராகவோ அசாமியராகவோ இருக்க முடியாது; இந்துவாக இருந்தால் அப்போது முஸ்லிமாகவோ கிறித்தவராக இருக்க முடியாது.

ஒருவர் ஒன்றே ஒன்றுடன் மட்டும் தன்னை இனம்காண்பது என்பது சற்றே சமீபத்திய கருத்தாக்கமாகும். பலவற்றுடன் நாம் நம்மை அடையாளம் காண்பதே பொது வழக்கம், ஏனெனில் பிற கலாச்சாரங்களிடம் போகும்போது அவற்றிலிருந்து நாம் பல விஷயங்களை கிரகித்துக்கொள்கிறோம். நாம் யார் என்ற புரிதலில் உள்ள நெகிழ்வுத்தன்மையானது அழிக்க முடியாதது, நெகிழ்வுத்தன்மையற்ற குறிப்பிட்ட அடையாளத்துக்குள் நம்மை வகைப்படுத்திக்கொள்ளும் நிலையுடன் ஒப்பிடும்போது அது மிக மிக மேலானது.


நாம் ஒரே ஒரு கலாச்சாரம், மதம் அல்லது மொழியை மட்டுமே சேர்ந்தவர்கள் என்ற உணர்வு விரும்பத்தகாததும் நடைமுறை சாத்தியமற்றதுமாகும். இது ஏன் நடைமுறை சாத்தியமற்றது என்றால் நாம் வெளிப்படுத்திக்கொள்வதைவிட அல்லது பிறர் நம்புவதைவிட நமது ஒட்டுமொத்த அடையாளமானது மிகவும் சிக்கலானதும் பல அடுக்குகளைக் கொண்டதும் ஆகும். பல்வேறு தாக்கங்கள் நம்மீது செல்வாக்கு செலுத்த அனுமதிப்போமானால் மேம்பட்ட ஒரு வாழ்க்கையை நாம் வாழ்வோம், வெவ்வேறு சிந்தனை, விழுமியங்கள் ஆகியவற்றால் நாம் செறிவூட்டப்படுவோம்.

ஊடாடும் கலாச்சாரங்கள்

டெல்லியில் வசிக்கும் எங்களுள் யாரை வேண்டுமானால் எடுத்துக்கொள்ளுங்கள். நாங்களெல்லாம் இந்தி/ உருது/ பஞ்சாபி ஆகியவற்றின் ஏராளமான இழைகளின் வாரிசுகள். உள்ளூர் மொழி வழக்குகள் வேறு! இவையெல்லாம் தொல்சம்ஸ்கிருதத்தாலும் தொல்பாரசீகத்தாலும் செதுக்கப்பட்டவை. இந்த இரண்டு மொழிகளும் தொன்மையான மொழிகளின் குடும்பம் ஒன்றில் நெருங்கிய உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் உள்ளவர்கள் பேசும் மொழிகளில் உள்ள பல சொற்கள் அரபியிலிருந்து வந்தவை என்பதை அவர்கள் உணர்வதில்லை (ஆத்மி, மாலிக்). டெல்லியில் எங்களைச் சுற்றியுள்ள நினைவுச் சின்னங்கள், பொது இடங்கள் (ஹுமாயூன் கல்லறை, ராம்லீலா மைதானம், நாடாளுமன்றக் கட்டிடம்) போன்றவையும் எங்கள் சுவையுணர்வையும் நுண்ணுணர்வையும் வடிவமைத்த பல்வேறு வகையிலான உணவு மரபுகளும்கூட ஒன்றுக்கொன்று ஊடாடும் கலாச்சாரங்களின் உருவாக்கம்தான்.

இந்து மதத்தின் பல்வேறு தொல் மரபுகள், புத்தர்-மகாவீரர் ஆகியோரின் நெறிமுறைகள், பகுதியளவு இந்தியாவில் வளர்ந்த இஸ்லாமிய, கிறித்தவ மரபுகள், குருநானக்-கபீர் ஆகியோரின் போதனைகள் போன்றவற்றால் செதுக்கப்படாத ஒரு இந்தியர் இருப்பாரா என்பது எனக்கு சந்தேகமே. வாஸ்கோ ட காமா இந்தியக் கரையோரம் கால்வைத்ததிலிருந்து உலகமயமான தற்போதைய காலகட்டம்வரை மேற்கத்திய விழுமியங்கள் நம் மீது பெரும் தாக்கம் ஏற்படுத்திவந்திருக்கும் தாக்கத்தையும் மறந்துவிடலாகாது. இவற்றில் ஏதோ ஒன்றுக்கு மட்டும் விசுவாசமாக இருப்பதென்பது உண்மைக்கு முரணானது, அறியாமையை அடிப்படையாகக் கொண்டது. எல்லாவற்றையும் தழுவிக்கொள்வதற்குப் பதிலாக ஒன்றே ஒன்றை மட்டும் நம்முடையதாகக் கருதி அதற்கு மட்டும் விசுவாசமாக ஏன் இருக்க வேண்டும்?

சுத்திகரணம் அல்லது ஜிஹாத்

ஒருவருடைய அடையாளம் என்பது அவர்மீது தாக்கம் ஏற்படுத்திய எல்லாவற்றாலும் வரையறுக்கப்படுதில்லை என்றும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் மதிப்பிட்டுவரும் அம்சங்களால் மட்டும்தான் வரையறுக்கப்படுகிறது என்று இந்தக் கட்டத்தில் மறுக்கலாம். இந்த வாதத்தின்படி ஒரு நபரின் அடையாளம் என்பது, ஒப்பிட முடியாத அளவுக்கு உயர்ந்த ஒன்றுடன் அவர் கொண்டிருக்கும் உறவால் வரையறுக்கப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு நபராக இருப்பதற்கான, தனக்கு ஒரு திசையை ஏற்படுத்திக்கொள்வதற்கான தேடலை அது கோடிட்டுக்காட்டுகிறது. இதற்கு அடிக்கடி ‘அந்நிய அல்லது மோசமான அம்சங்க’ளை நீக்க வேண்டிய அவசியம் உள்ளது இல்லையா? உயர்வான ஏதோ ஒன்றை நோக்கிய இந்த நகர்வானது அடிக்கடி ஒருவருக்கு உள்ளே உள்ள நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போராக இருப்பதில்லையா? இதை ஏன் ஒரு வித சுத்திகரிப்பாகக் கருதக் கூடாது? இந்துக்களைப் பொறுத்தவரை ‘சுத்திகரணம்’ என்றால் அதுவே முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஜிஹாத். இப்படியெல்லாம் கேட்பவர்களிடம் அவருடைய சுயத்தில் முஸ்லிமின் அம்சமும் இருக்கிறது என்று சொல்வது பொருத்தமற்றது ஏனெனில் அவருடைய ஒட்டுமொத்த வாழ்க்கையுமே நல்ல இந்துவாக இருப்பதும் நேரடித் தொடர்பற்ற, இந்து மதமல்லாத அல்லது இந்து மதத்துக்கு எதிரான அம்சங்களை நீக்குவதும்தான். இது ஒரு வலுக்கட்டாயமான மறுதலிப்பாகத் தோன்றலாம். ஆனால், இந்தப் பார்வை இரண்டு தீவிரமான சவால்களைக் காணத் தவறுகிறது.

முதலாவதாக, இரண்டு வேறுபட்ட அற மரபுகளுக்கிடையிலான சந்திப்பினால் இந்த மரபுகளில் உண்மையிலேயே மதிப்பு வாய்ந்தவை எவையோ அவை பரஸ்பரம் மாற்றமடைகின்றன. வேத கால மக்களின் அறங்கள் ஆதியில் மூன்று நோக்கங்களைக் கொண்டவை: காமம், அர்த்தம், தர்மம். நான்காவது விழுமியமான மோட்சத்தை சேர்த்துக்கொள்வதற்கு புத்தரின் போதனைகள் வர வேண்டியிருந்தது. அதேபோல, வேத காலத்தின் நெருப்புச் சடங்களின் மோசமான மாற்றீடாக விக்கிரக வழிபாட்டைக் கருதி ஆரிய சமாஜம் கேள்வி கேட்டது. உருவமற்ற கடவுள் என்ற இஸ்லாமிய கருத்தாக்கத்தால் அது தாக்கம் பெறவில்லை என்று மறுக்க முடியுமா? அறுதி நன்மை என்பதைக் குறித்துத் தாங்கள் கொண்டிருக்கும் கருத்தாக்கத்தை மதங்கள் ஒன்றுக்கொன்று செலுத்தும் செல்வாக்கினால் அடிக்கடி செதுக்கிக்கொள்கின்றன.

இரண்டாவதும், முக்கியத்துவம் வாய்ந்ததுமான விஷயம் எதுவென்றால் நம்மில் பலரும் பலவித தார்மீக ஆதாரங்களால் செலுத்தப்படுகிறோம். நமக்குள் பல்வேறுபட்ட போக்குகளின் தாக்கம், ஒன்றுக்கொன்று பொருந்திப்போகாதவற்றின் தாக்கம்கூட இருப்பதாக நாம் ஒப்புக்கொள்கிறோம். பிரெஞ்சு தத்துவவாதி போல் ரிக்கோ மதம், பகுத்தறிவு என்ற இரண்டு சூழலிலும் தான் வளர்க்கப்பட்டதாகக் கூறுகிறார். “நான் எப்போதும் இந்த இரண்டு துருவங்களுக்கும் இடையில் முன்னும் பின்னும் சென்றுவந்தேன்: விவிலியத் துருவம், பகுத்தறிவுபூர்வமான, விமர்சனபூர்வமான துருவம். இந்த இருமைநிலை என் வாழ்நாள் முழுவதும் நீடித்துவந்திருக்கிறது. இந்த இரட்டை உறவுக்கு நான் விசுவாசமாகவே இருந்திருக்கிறேன்” என்றார் அவர். பெரும்பாலான அறிவியலாளர்கள் தங்களின் இந்து மதப் பார்வையைத் தீவிரமாக சுவீகரித்துக்கொள்கிறார்கள்; பெரும்பாலான தத்துவவாதிகள் தங்கள் யூத மத, இஸ்லாமிய, கத்தோலிக்கப் பின்னணிகளுடன் இணக்கமாகவே இருக்கிறார்கள்.

பிஸ்மில்லா கான்

ராமாயணம், குர்ஆன் இரண்டாலும் தாக்கம் பெற்ற முஸ்லிம் பலர் இருப்பார்கள் என்றால் அது எனக்கு ஆச்சரியத்தைத் தராது. ஹரியாணாவின் மேவ் இஸ்லாமிய சமுகத்தின் பெரும் பகுதியினரிடையே 20-ம் நூற்றாண்டின் மத்திய பகுதிவரை இது சகஜமான ஒன்றாக இருந்தது. நமது மாபெரும் பாடகர்கள், இசையமைப்பாளர்கள், கவிஞர்களில் சிலர் இந்து-முஸ்லிம் மறைஞானத்தால் தாக்கம் பெற்றிருப்பதையும் நம்மால் காண முடியும். ஷெனாய் இசைக்கலைஞர் பிஸ்மில்லா கானைப் பற்றிய படம் ஒன்றை சமீபத்தில் பார்த்தேன். வாராணசியில் வாழ்வதற்குத் தான் கொடுத்துவைத்திருக்க வேண்டும் என்று அவர் பார்வையாளர்களை நோக்கிச் சொல்வார். “படித்துறைகளில் நான் இறங்கிச் சென்று கங்கையில் குளிப்பேன். தொழுகை செய்வதற்கு மசூதிக்குச் செல்வேன், அப்புறம் இசைப் பயிற்சி செய்வதற்கு பாலாஜி கோயிலுக்குச் செல்வேன்” என்று பிஸ்மில்லா கான் சொல்வார். கடந்த காலத்தில் ஏராளமான மக்கள் இரண்டு மரபுகளை மட்டுமல்ல பல்வேறு மரபுகளையும் தழுவிக்கொண்டிருந்தனர், எதிர்காலத்தில் இது மறைந்துபோவதற்கு வாய்ப்பிருப்பதுபோல் தெரியவில்லை.

- ராஜீவ் பார்கவா, மதிப்புறு பேராசிரியர், வளர்ந்துவரும் சமூகங்களுக்கான ஆய்வு மையம், டெல்லி.

© ‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: ஆசைஒற்றைக் கலாச்சாரம்ஒற்றைக் கலாச்சாரம் எனும் பேராபத்துSingle culture

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x