Last Updated : 06 Dec, 2020 03:16 AM

 

Published : 06 Dec 2020 03:16 AM
Last Updated : 06 Dec 2020 03:16 AM

கற்பி என்று அம்பேத்கர் முழங்கியது கேட்கவில்லையா?

கல்லூரி மாணவர்களுக்கு இதழியல் குறித்த விரிவுரை வழங்க அண்மையில் நேர்ந்தது. கார்ல் மார்க்ஸ், காந்தி, அம்பேத்கர், பெரியார், அயோத்திதாசர் போன்றோர் உலகைப் புரட்டிப்போட்ட சிந்தனையாளர்கள் மட்டுமல்ல; மகத்தான இதழியலாளர்களும்கூட. இதழியலின் அரிச்சுவடியைக் கற்றுக்கொள்ள இவர்களின் பங்களிப்பையும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். ‘குரலற்றவர்களின் தலைவன்’ என்ற பொருளில் அம்பேத்கர் தொடங்கிய ‘மூக்நாயக்’ நாளிதழின் நூற்றாண்டு இது என்பதால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் இது குறித்துப் பேசிக்கொண்டி ருக்கிறோம் என்று உரையைத் தொடங்கினேன்.

இடைமறித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான பேராசிரியர், “இதழியல் பணிக்குத் தேவையானதை மட்டும் பேசுங்களேன். அரசியலர்களைப் பற்றி மாணவர்களைப் படிக்கச் சொல்வதிலும், எழுதச் சொல்வதிலும் கல்லூரிச் சூழலில் ஒரு தயக்கம் இருக்கிறது” என்றார். இதழியலைப் பொறுத்தவரை திறனும் அறமும் வெவ்வேறல்ல என்பதால், இவர்கள் குறித்துப் பேசாமல் இருக்கலாகாது என்பதாகச் சொல்லி, ஒருவழியாகப் பேச்சைத் தொடர்ந்தேன். ஆனால், இந்தச் சம்பவம் கல்விப் புலத்தின் நிலை குறித்துக் கவலைகொள்ளச் செய்தது. மாணவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. சமூக அரசியல் பண்பாட்டுக் களத்தில் மட்டுமல்லாது, கல்வி எல்லோருக்கும் சாத்தியமாவதற்காக அம்பேத்கர், பெரியார் உள்ளிட்டோர் ஆற்றிய பெரும் பணியானது கல்வி நிலையங்களில் பரவலாகப் பேசப்படாமலே இருப்பதைத்தான் இது உறுதிசெய்கிறது.

கல்விச் சூழல் இன்று

தலைசிறந்த அரசியலர்களை வார்த்தெடுக்க ‘டிரெய்னிங் ஸ்கூல் ஃபார் எண்ட்ரென்ஸ் டு பாலிட்டிக்ஸ்’ (Training School for Entrance to Politics) பள்ளியை 1956-ல் நாக்பூரில் நிறுவினார் அம்பேத்கர். இங்கு மேடைப்பேச்சுக் கலை, பௌத்த தத்துவப் பார்வை, சமூக அறிவியல் பாடங்கள், நாடாளுமன்ற நடைமுறைகள் மற்றும் செயல்பாடுகள் ஆகியவை கற்பிக்கப்பட்டன. முதல் பேட்சில் 15 மாணவர்கள் படித்தார்கள். இந்தப் பள்ளி மாணவர்களுக்கு மேடைப்பேச்சுக் கலை குறித்த சிறப்பு வகுப்பை அம்பேத்கர் 1956 டிசம்பர் 10 அன்று நடத்தவிருந்தார். ஆனால், அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக அவரின் உயிர் பிரிந்தது. அவருடைய மறைவுக்குப் பிறகு, இந்தப் பள்ளி செயல்படாமல் போனது. இந்நிலையில், டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இரண்டு ஆராய்ச்சி மாணவர்கள் அம்பேத்கரின் அரசியல் பள்ளிக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் முனைப்புடன் 2016-ம் ஆண்டில் செயல்பட்டனர். தமிழகத்தில் இலக்கியம், வரலாறு, தத்துவம் உள்ளிட்ட மனிதவியல் பட்டப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு இத்தகைய முனைப்பு துளிர்க்கும் கல்விச் சூழல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறதா?

மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் அம்பேத்கர் அறக்கட்டளையும், பல்கலைக்கழக மானியக் குழுவும் இணைந்து அம்பேத்கரின் நூற்றாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் அம்பேத்கர் கல்வி இருக்கைகளைத் தொடங்கின. ஆராய்ச்சிகள், கருத்தரங்குகள் மூலம் அம்பேத்கரின் சிந்தனைகளை மாணவச் சமூகத்துக்குக் கொண்டுசேர்ப்பதே இந்த இருக்கைகளின் நோக்கம். ஆனால், 30 ஆண்டுகள் கடந்தும் அம்பேத்கரின் சிந்தனைகள் குறித்துப் படிக்கவே மாணவர்கள் அஞ்சுவதாக ஆசிரியர்கள் சொல்வது இந்த இலக்கை நோக்கிய பயணத்தில் நாம் எவ்வளவு பின்தங்கிக் கிடக்கிறோம் என்பதைத்தானே காட்டுகிறது!

உரிமைக் குரல்

பொருளியல் பாடப்பிரிவில் கொலம்பியா மற்றும் லண்டன் பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பெற்றவர், இந்திய அரசியலர்களில் மெத்தப் படித்தவர் என்பதெல்லாம் அம்பேத்கர் குறித்துப் பரவலாக அறிந்ததே. மறுபுறம் சட்ட மேதையாக, சமூக அரசியல் புரட்சியாளராக மட்டுமல்லாது கல்விப் புலத்துக்கு அம்பேத்கர் ஆற்றிய பெரும் பங்கு இன்றும் பேசாப் பொருளாகவே நீடிக்கிறது. ‘கற்பி, ஒன்றுசேர், கிளர்ச்சிசெய்’ என்று முழக்கமிட்ட அம்பேத்கர், கல்வியையே முதன்மைப்படுத்தினார். சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் நீதியையும் அறநெறிகளையும் உருவாக்கக் கூடியதையே அவர் கல்வி என்றழைத்தார். பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று மனிதர்களை வகைமைப்படுத்தும் சமூகத்தையெல்லாம் விழுமியங்களை மதிக்கும் சமூகமாக உயர்த்த கல்வியே கைகொடுக்கும் என்று உறுதிபூண்டார். குலத்தொழில் வழக்கத்தை மாற்றும் செயல்வடிவமாகவும் கல்வியை உருவகித்தார். ஆகவேதான், “ஒரு மனிதரை அச்சமற்றவராக மாற்றி ஒற்றுமையின் படிப்பினையைக் கற்பித்துத் தன்னுடைய உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தித் தன்னுடைய உரிமைக்காகப் போராடும் உணர்வை ஊட்டுவதே கல்வி” என்றார்.

இந்தியர்களின் கல்வி நிலை குறித்து பம்பாய் சட்டமன்ற கவுன்சிலில் 1927 மார்ச் 12-ம் தேதி பேசுகையில், “தனிநபருக்கு 14 அணா மட்டுமே பம்பாய் மாகாணம் செலவழித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், கலால் வரியாக 35 அணா வசூலிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் கலால் வரி அளவுக்கேனும் கல்விக்கு அரசு நிதி ஒதுக்க வேண்டும்” என்று வாதிட்டார். அதே கூட்டத்தில், “எழுத்தறிவு பெற்று ஆரம்பப் பள்ளியை விட்டுச் செல்வதும், வாழ்நாள் முழுவதும் எழுத்தறிவோடு திகழ்வதுமே தொடக்கக் கல்வியின் நோக்கமாகும். ஆனால், புள்ளிவிவரங்களின்படி ஆரம்பப் பள்ளிக்குள் அடியெடுத்து வைக்கும் 100 குழந்தைகளில் 18 குழந்தைகள் மட்டுமே நான்காம் வகுப்பை எட்டுகின்றனர். மீதமுள்ள 82 பேர் எழுத்தறிவின்றித் தவிக்கின்றனர்” என்றார்.

அதேபோன்று, இடைநிற்றலைத் தடுப்பது குறித்துக் கூடுதல் அக்கறை கொண்டிருந்தார் அம்பேத்கர். கல்வி வணிகமயமாதலையும் அவர் கடுமையாகச் சாடினார். குறிப்பாக, ஏழை மக்களுக்கு உயர்கல்வியானது குறைந்த செலவில் கிடைக்கும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். எல்லாவற்றுக்கும் மேலாக, படிநிலைப்படுத்தப்பட்ட சமூக அமைப்பைக் குறிக்கும் விதமாக, “கல்வியைப் பொறுத்தமட்டில் ஒட்டுமொத்த மக்கள்தொகையை நான்காகப் பிரிக்கலாம். முதல் வகுப்பைச் சேர்ந்தவர்கள் முன்னேறிய இந்துக்கள். இரண்டாவது வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிராமணர் அல்லாதவர்கள் எனப்படும் இடைநிலை இந்துக்கள். மூன்றாவது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள், மலைவாழ் பழங்குடியினர் மற்றும் குற்றப்பரம்பரைப் பழங்குடியினர். நான்காவது முகமதியர்கள். இந்த நால்வரும் சமூக அந்தஸ்திலும் வளர்ச்சியிலும் சமமற்ற நிலையில் இருக்கிறார்கள். இவர்களில் மூன்றாவது வகுப்பைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத்தான் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

பெண் கல்வி

மதக் கோட்பாடுகளுக்குப் பாடத்திட்டத்தில் இடம் இல்லை என்று அம்பேத்கர் உறுதிபூண்டார். பிராந்திய மொழிகளில் கல்வி கற்பிக்கப்படுவதை ஆதரித்தார். அதே வேளையில், ஆங்கில மொழி சர்வதேச ஒருமைப்பாட்டுக்கும் தொடர்பாற்றலுக்கும் கைகொடுக்கும் என்றார். நாடு முழுவதற்குமான பொதுப் பாடத்திட்டம் பின்பற்றப்பட வலியுறுத்தினார். அது அறிவியல்பூர்வமான முற்போக்கான பாடத்திட்டமாக வகுக்கப்பட வேண்டும் என்றார்.

தன்னுடைய பெயருக்குச் சொந்தக்காரரான ஆசிரியர் அம்பேத்கர் மீதும், தனக்கு உலக ஞானம் ஊட்டிய பேராசிரியர் ஜான் டூயி மீதும் மிகுந்த நேசம் கொண்டவர் அவர். ஆகவே, “மாணவர்களின் சிந்தனைத் திறனை உணர்ந்து அவர்களை வளர்த்தெடுப்பதே ஆசிரியரின் கடமை. தோழராகவும் தத்துவ அறிஞராகவும் வழிகாட்டியாகவும் செயல்படுபவரே நல்லாசிரியர்” என்றார். இந்து திருமணச் சட்டத்தில் பெண்களுக்குச் சொத்துரிமையையும் வாரிசுரிமையையும் கொண்டுவந்தவர், பள்ளிக் கல்வியானது பெண்களுக்குக் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்றார்.

உதவித்தொகைத் திட்டங்கள்

ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்குக் கலை மற்றும் சட்டக் கல்வி பெரிதும் கைகொடுக்காது; அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியே அவர்களை உயர்த்தும் என்றார் அம்பேத்கர். இதன் பொருட்டு இன்றைய ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தன்பாத் நகரில் செயல்பட்டுவந்த சுரங்கம், பொறியியல் மற்றும் நிலவியல் கல்வி நிறுவனத்தில் அதிக எண்ணிக்கையில் தலித் மாணவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். தான் பெற்ற உயர்கல்விப் பட்டங்களுக்குப் பின்னால் இருந்த இடர்ப்பாடுகளை, பொருளாதார நெருக்கடிகளை அடுத்த தலைமுறையினர் எதிர்கொள்ளக் கூடாது என்ற மகா கருணை கொண்டிருந்தார். ஆகவேதான், பல கல்வி உதவித்தொகைத் திட்டங்களையும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையையும் சட்டமாக்கினார். பள்ளிக் கல்விக்குப் பிறகு உயர்கல்வியிலும் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் தடம்பதிக்க ‘10-ம் வகுப்புக்குப் பிந்தைய கல்வி உதவித்தொகைத் திட்டத்தை’ உருவாக்கினார். இன்று 60 லட்சம் தலித் மாணவர்களுக்கு இந்தத் திட்டம் மறுக்கப்படும் சூழல் உருவாகியிருப்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளை மேற்கொள்ளும் தலித் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்குவதற்கு அம்பேத்கர் பரிந்துரைத்தார். அதிலும் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட அயல்நாடுகளுக்குப் படிக்கச் செல்லும் பட்டியலின மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கக் கோரினார்.

1924-ல் இத்காரினி சபையை நிறுவிப் பல கல்லூரிகள், விடுதிகள், நூலகங்கள், ஹாக்கி கிளப்கள், வாசிப்பு மையங்களை உருவாக்கினார் அம்பேத்கர். இந்தச் சபையின் மூலம் ‘சரஸ்வதி பேலாஸ்’ என்ற மாத இதழையும் தொடங்கினார். 1928-ல் ஒடுக்கப்பட்டோர் வகுப்பு கல்விச் சங்கத்தை நிறுவினார். ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் உயர்கல்வி பெற 1945-ல் லோக் சைக்சிக் சமாஜத்தைத் தொடங்கினார். இந்த அமைப்பின் மூலமாக இடைநிலைப் பள்ளிகளும் கல்லூரிகளும் ஆரம்பிக்கப்பட்டன. “கல்வி என்பது புலிப் பாலைப் போன்றது. அதைக் குடித்த எவராலும் புலியைப் போல உறுமுவதைத் தவிர, அடங்கி நடந்துவிட முடியாது” என்று கர்ஜித்தவரைக் கற்றறிய அஞ்சுவதால் இழப்பு அம்பேத்கருக்கல்ல!

- ம.சுசித்ரா, தொடர்புக்கு: susithra.m@hindutamil.co.in

டிசம்பர் 6: அம்பேத்கர் நினைவு நாள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x