Published : 03 Dec 2020 07:55 AM
Last Updated : 03 Dec 2020 07:55 AM

ஆயுர்வேத மருத்துவர்களை எப்படிப் பயன்படுத்தப்போகிறோம்?

சஞ்சய் நக்ரால்

நவம்பர் 20 அன்று இந்திய அரசின் அரசிதழில் ‘இந்திய மருத்துவத்துக்கான மத்தியக் குழு’ அமைப்பு ஒரு அறிவிக்கையை வெளியிட்டது. ‘இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், சித்த மருத்துவம், சோவா-ரிக்பா, யுனானி மருத்துவம் போன்றவற்றை முறைப்படுத்தும்’ இந்திய மருத்துவ மத்தியக் குழுச் சட்டத்தின் கீழ் அமைந்த அந்தக் குழு வெளியிட்ட அறிவிக்கை என்னவென்றால் அறுவைச் சிகிச்சையில் முதுகலைப் பட்டம் பெற்ற ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்யலாம் என்பதுதான். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

பெரும்பாலான எதிர்வினைகள் எதிர்பார்த்தபடியே இருக்கின்றன. ‘இந்திய மருத்துவக் கழகம்’ தன்னைத் தானே சாட்டையடி விமர்சனம் செய்துகொள்வது போன்ற விநோதமான கடிதத்தைப் பிரதமருக்கு அனுப்பியிருக்கிறது. ஆங்கில மருத்துவ அறுவைச் சிகிச்சை நிபுணர்களெல்லாம் கொதித்துப்போயிருக்கிறார்கள். சமூக ஊடகங்கள், வாட்ஸ்அப் குழுக்கள் போன்றவை எச்சரிக்கை நிரம்பிய எதிர்வினைகளால் பரபரத்துக் காணப்படுகின்றன. அரை வேக்காடு ‘ஆயுர்வேத மருத்துவர்கள்’ எதிர்காலத்தில் ‘நம் குழந்தைகளுக்கு அறுவைச் சிகிச்சை செய்வார்கள்’ என்றெல்லாம் பயமுறுத்திக்கொண்டிருக்கின்றனர்.

1947-க்குப் பிறகு அரசு செய்தது என்ன?

வரலாற்றைக் கொஞ்சம் பின்னோக்கிப் பார்ப்பது இந்தக் கடும் குழப்பத்தைப் புரிந்துகொள்ள உதவும். ஆங்கிலேயர் கொண்டுவந்ததும் ஆதிக்கம் செலுத்துவதுமான நவீன மருத்துவத்தையும் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளையும், குறிப்பாக ஆயுர்வேதத்தையும், எப்படி அரவணைப்பது என்ற கடினமான சவாலை சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய அரசு எதிர்கொண்டது. எல்லா மருத்துவ முறைகளிலிருந்தும் சிறப்பான அம்சங்களை எடுத்துக்கொண்டு அவற்றை ஒன்றுசேர்த்து ஒருங்கிணைந்த அறிவியல் முறையாக மாற்றும் தெரிவு இருந்தது. இது சாத்தியமானதாக இருந்த அதே நேரத்தில், இந்த மருத்துவ முறைகளுக்குள் பொருந்திப்போகாத சில அணுகுமுறைகள் இருப்பதால் ஒருங்கிணைப்பது அவ்வளவு எளிதாக இல்லை.
நெருக்கடியான இந்தச் சவாலை எதிர்கொண்ட அரசு எல்லா வழிகளிலும் முயன்று பார்த்தது. நவீன மருத்துவத்திலும் அதைப் போலவே பாரம்பரிய மருத்துவத்திலும் முறையான கல்விக்கு அரசு உதவியதுடன் ஊக்கமும் கொடுத்தது. குறுகிய காலத்துக்கு ‘ஒருங்கிணைந்த’ கல்வியும் வழங்கப்பட்டது. அதில் ஆயுர்வேதமும் நவீன மருத்துவமும் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டது. ஆனால், ஆயுர்வேதத்தில் இருந்த தூய்மைவாதிகள் தங்கள் மருத்துவ முறை நீர்த்துப்போகச் செய்யப்படுகிறது என்று எழுப்பிய எதிர்ப்புக் குரல்களால் இந்த முன்னெடுப்புகளெல்லாம் நின்றுபோயின.

ஆகவே, ஆயுர்வேத மருத்துவத்தில் பெறும் பட்டம் என்பது பெரிதும் ஆயுர்வேதத்தைப் பயின்று பெறுவது என்றாகியது. எனினும், சில நெருக்கடிகள் காரணமாக இந்தப் பட்டதாரிகளுக்கு நவீன மருத்துவத்தின் அடிப்படைகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. அவர்கள் அந்தக் கட்டத்தில் இந்தியாவில் செல்வாக்குச் செலுத்தும் மருத்துவத் துறையாகிவிட்ட மருத்துவச் சந்தையில் தாக்குப்பிடித்து நிற்க வேண்டிய கட்டாயம் எழுந்தது. பெரும்பாலான ஆயுர்வேதப் பட்டதாரிகள் பொது மருத்துவத்தில் ஈடுபட ஆரம்பித்தார்கள். மிக முக்கியமாக, அவர்களில் பலரும் கிராமப்புறங்களுக்கும், முறையான மருத்துவப் பராமரிப்பு இல்லாத இடங்களுக்கும் சென்றார்கள். சிலர் மருத்துவ இல்லங்களை நிறுவினார்கள். மருத்துவத்தைப் பொறுத்தவரை தரம், சிறப்புத் துறை போன்ற படாடோபமான விஷயங்களைவிட உடனடியாக மருத்துவச் சிகிச்சை கிடைப்பதுதான் மிகவும் முக்கியம்.

அடையாளச் சிக்கல்

நவீன மருத்துவம் பெரும் பாய்ச்சல்களை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது ஆயுர்வேதப் பட்டதாரிகள் ஒரு அடையாளச் சிக்கலை உணர்ந்தார்கள். அவர்களில் பெரும்பான்மையானோர் ஆயுர்வேதத்தின் மீதுள்ள காதலால் அந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்கவில்லை. மதிப்புக்குரிய ‘டாக்டர்’ என்ற பட்டத்தைப் பெயருக்கு முன்னால் சூட்டும் ஒரு டிகிரி. பெரும்பாலானவர்கள் மேற்கொள்ளும் அல்லோபதியைத் தாங்களும் மேற்கொள்வதைவிட அவர்களுக்கு வேறு வழியே இல்லை. நவீன மருத்துவச் சக்கரத்தில் முக்கியமான பல்லாக அவர்கள் ஆனார்கள். இப்படியாக, அவர்கள் உறைவிட மருத்துவர்களாகவும், தீவிரச் சிகிச்சைப் பிரிவுப் பணியில் இருக்கும் மருத்துவர்களாகவும், அறுவைச் சிகிச்சை அறையின் உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர்களாகவும் ஆனார்கள்.

ஒரு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களைவிட அங்கு பணிபுரிந்த ஆயுர்வேத அறுவைச் சிகிச்சை உதவியாளர் அறுவைச் சிகிச்சையின்போது திறக்கப்பட்ட வயிற்றைத் திறம்பட மூடுவார். மஹாராஷ்டிரத்தில் ‘108’ அவசர ஊர்திகளில் எம்பிபிஎஸ் அல்லாத மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள். அதுமட்டுமா, அவர்கள் சற்று குறைவான ஊதியத்துக்குப் பணிபுரிவதால் மருத்துவமனைகளால் செலவைக் கட்டுப்படுத்தி லாபம் ஈட்டவும்கூட முடிகிறது.

பெரும்பாலான ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகள் மருத்துவமனைகளையும் நடத்துகின்றன. சில பகுதிகளில் அவர்களுடையதுதான் ஏழை எளியவர்கள் அணுகும் விதத்திலும், போதுமான கட்டமைப்புகளைக் கொண்டும் இருக்கும் ஒரே மருத்துவமனையாகவும் இருக்கும். மும்பை நகராட்சிக் கழகம் அதன் பல்வேறு மருத்துவமனைகளிலும் ஆயுர்வேத அறுவைச் சிகிச்சையாளர்களை நியமித்திருக்கிறது. எனினும், அவர்கள் அறுவைச் சிகிச்சை செய்து நான் பார்த்ததில்லை. நவம்பர் 20-ல் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய அறிவிக்கையானது ‘ஷல்ய தந்திரம்’ அல்லது ‘பொது அறுவைச் சிகிச்சை’யில் எம்எஸ் (ஆயுர்வேதம்) முடித்தவர்கள் தங்கள் படிப்பை முடித்ததும் 58 அறுவைச் சிகிச்சை நடைமுறைகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கிறது. இந்தப் பட்டியலில் உள்ள சில அறுவைச் சிகிச்சைகளெல்லாம் சற்றே சிக்கலானவை. அவற்றை அனுமதிப்பது என்பது ரொம்பவே அதீதம். அது கூடாது.

ஒரு வெளிச்சக் கீற்று

இந்த நகர்வை சமூக ஊடகங்கள் வெளிப்படுத்தும் ஆவேசம், எச்சரிக்கையுணர்வைத் தாண்டிப் பார்க்க வேண்டும். அறுவைச் சிகிச்சையாளர்கள் உள்ளிட்ட ஆயுர்வேதப் பட்டதாரிகளெல்லாம் தங்கள் அடையாளத்தைத் தேடும் பெரும் உழைப்பு சக்திகளாவர். இந்தியாவுக்கு அவர்கள் தேவை. அவர்களுக்கு முறையாகப் பயிற்சியளித்தால் நமது மருத்துவப் பராமரிப்பு அமைப்புக்கு அவர்களால் முக்கியப் பங்காற்ற முடியும். விபத்து போன்றவற்றில் காயமடைந்தவர்களுக்கு சம்பவ இடத்திலும், அவசர ஊர்தி வழியாகவும் தரும் மருத்துவப் பராமரிப்பு இந்தியாவில் கந்தரகோளமாக இருக்கிறது. இந்த விஷயம் பல நாடுகளிலும் மருத்துவ உதவியாளர்களால் வெற்றிகரமாகச் செய்யப்பட்டுவருகிறது. சரியான பயிற்சியும் ஊதியமும் அங்கீகாரமும் இருந்தால் ஆயுர்வேத அறுவைச் சிகிச்சையாளர்களுக்கு இந்தச் சேவையைச் செய்வதற்குப் பயிற்சியளித்து நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றலாம்.

ஆயுஷ் (அதாவது ஆயுர்வேதம், யோகா, நேச்சுரோபதி, யுனானி, சித்த மருத்துவம், ஹோமியோபதி) தற்போதைய அரசின் முன்னுரிமையான விஷயமாகும். ‘இந்திய மருத்துவக் கழகம்’ இது போன்ற நகர்வுகளுக்குக் காட்டும் எதிர்ப்பில் துல்லியமாகவும் ஆக்கபூர்வமாகவும் இருக்க வேண்டும். தற்போது அதன் எதிர்வினையானது தங்கள் துறை குறித்து அச்சம் கொண்ட தொழில்முறை நிபுணர்களின் குழுவின் போலியான மார்தட்டல் போன்று தெரிகிறது.

எழும் இரைச்சலானது ஒரு பக்கம் அதீதமாக ஆசைப்படும் ஆயுர்வேத அமைப்புக்கும் இன்னொரு பக்கம் தனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகக் கருதும் நவீன மருத்துவத்துக்கும் இடையிலான எல்லைத் தகராறு என்றால் அது சீக்கிரம் அடங்கிவிடும். ஆனால், இது நமது ஏழை எளிய மக்களுக்கு மருத்துவப் பராமரிப்பு கிடைக்கும் வகையில் எம்பிபிஎஸ் அல்லாத இந்தியாவின் மிகப் பெரிய மருத்துவப் பணியாளர் திரளைப் பயன்படுத்துவது தொடர்பானது என்றால், இதைப் பற்றி நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

- சஞ்சய் நக்ரால், அறுவைச் சிகிச்சை மருத்துவர், மும்பையைச் சேர்ந்த எழுத்தாளர்.

© தி இந்து, சுருக்கமாகத் தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x