Published : 02 Dec 2020 09:34 AM
Last Updated : 02 Dec 2020 09:34 AM

சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 14: வியக்கவைக்கும் மருத்துவர்

கல்யாணி நித்யானந்தன்

அவர் குழந்தை நல மருத்துவர். அவருடன் நான் ஒரு திருமணத்துக்காக பெங்களூரு சென்றிருந்தேன். அப்போது அவருக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. ‘‘என் தாயார் உங்களைப் பற்றி நிறைய கூறி இருக்கிறார். என் குழந்தைக்குக் காய்ச்சல். நீங்கள் இங்கே வந்திருப்பதைக் கேள்விப்பட்டேன். உங்களைப் பார்க்க வரலாமா?’’ என்று ஒரு குரல்.

சிறிது நேரம் கழித்து ஒரு இளம் தம்பதி சிறு குழந்தையுடன் வந்தார்கள். வந்தவுடன் மருத்துவரின் காலைத் தொட்டுக் கும்பிட்டு அந்த இளைஞர், ‘‘நான் 3 வயதாய் இருந்தபோது தீவிர நோய்வாய்ப்பட்டேனாம். அப்போது நீங்கள்தான் போராடி என் உயிரைக் காப்பாற்றினீர்களாம். அம்மா அடிக்கடி உங்கள் திறமையையும் ஆழ்ந்த அக்கறையையும் பற்றிச் சொல்வார்கள். உங்களை இன்று சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி’’ என்றார்.

அந்தக் குழந்தைக்கு சாதாரண காய்ச்சல்தான். மருத்துவர், குழந்தையைக் கவனித்த பிறகே அவர்கள் யார் என்கிற விவரத்தைக் கேட்டார். அவருக்கு அந்தப் பழைய சம்பவம் லேசாக நினைவுக்கு வந்தது. அவர்கள் சென்ற பிறகு நான் சிரித்துக்கொண்டே, ‘‘இதென்ன வாழையடி வாழையாக நோயாளிகளா?’’ என்று கேட்டேன்.

‘‘இதுபோல பலமுறை நான் சிகிச்சையளித்த குழந்தைகளின் குழந்தைகள் என் பேஷண்ட்டாய் ஆவார்கள். ஏன்... சில சமயம் பேரன், பேத்திகள்கூட என்னிடம் சிகிச்சைக்கு வந்திருக்கிறார்கள்’’ என்றார்.

இவர் என் நெருங்கிய உறவினர். நல்ல சிநேகிதியும்கூட. ஒரு பெரிய மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவும், மருத்துவமனையில் குழந்தை நலப் பிரிவின் தலைமை மருத்துவராகவும் இருந்து ஓய்வு பெற்றவர். பணியில் முழு மனத்தோடு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். திருமணம் செய்துகொள்ளவில்லை. குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். நோய் நீக்குவது மட்டுமின்றி அவர்களின் வளர்ச்சி, அதுவும் குறை மாதத்தில் பிறக்கும் 'Premature baby'-களைக் காப்பதில் நிபுணர். சிறு உயிர் காக்கும் பெட்டிகளில் (incubator) இருக்கும் குழந்தைகளை இவர் பார்க்கும்போது கண்களில் இவருக்குக் கனிவு பொங்கும். தாய்மை உணர்வுக்குத் தாயாக வேண்டியதில்லை. ஆழ்ந்த கனிவும் அக்கறையும் போதும் என்பதற்கு இவர் ஓர் உதாரணம்.

இவரது தகப்பனாரும் மருத்துவர். அவர் வயநாட்டில் காபித் தோட்டத்து மருத்துவராக இருந்தார். மகள், அதாவது நம் மருத்துவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் அந்தக் காபித் தோட்ட நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு அந்தத் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளின் நலம், சத்துணவு, சுகாதாரம் பற்றித் தாய்மார்களுக்குச் சொல்லிக்கொடுக்க விரும்புவதாகத் தெரிவித்தார். தங்குமிடமும் உணவும் மட்டும் போதும்; ஊதியம் தேவை இல்லை என்றார். நிர்வாகமும் மகிழ்ச்சியுடன் அதற்கு ஏற்பாடு செய்தது. இவர் பணியாளர்களின் குடியிருப்புகளுக்கே சென்று இந்த வேலையைச் செய்தார். மேலும், அந்தத் தோட்ட மருத்துவமனையிலும் குழந்தைகளுக்கான 10 படுக்கை வசதிகளையும் இவரே செய்து கொடுத்தார்.

1994-ல்தான் இவரது மிகப் பெரிய தன்னார்வத் தொண்டு தொடங்கியது. நீலகிரி மலைச் சாரலில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்றும் சேரும் இடத்தில் அமைந்திருப்பது கூடலூர். அங்கே, காடுகளிலும் சில கிராமங்களிலும் பழங்குடியினர் பலர் வசிக்கின்றனர். அங்கே சில தன்னார்வலர்களால் ஒரு சிறிய மருத்துவமனை தொடங்கப்பட்டு இருந்தது. இதில் நம் மருத்துவர் சேர்ந்து சேவையைத் தொடங்கினார். 10 - 12 கி.மீ. தொலைவு வரைக்கும் காட்டுக்குள் நடந்தே பழங்குடியினர் குடியிருப்புகளுக்குச் சென்று அவர்களது பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றைத் தீர்ப்பதற்குரிய வழிகளைச் சிந்தித்துச் செயல்படுத்தினார்.

மருத்துவர், மருத்துவமனை என்று கேட்டாலே ஓடி ஒளியும் பெண்கள். முதலில் அந்தப் பழங்குடி இளையவர்களைப் பிரச்சாரகர்களாகத் (Health Animators) தயார்படுத்தினார். வெளி ஆட்களுடைய அறிவுரைகளைவிட அவர்களில் ஒருவரே சொன்னால் கேட்டுக்கொள்வார்கள் அல்லவா? அதுவும் எப்படித் தெரியுமா? வீடு வீடாக வெறும் பொன்மொழிகளை உதிர்ப்பதைவிட, அந்தக் குடும்பத்துப் பெண்ணிடம் குசலம் விசாரித்துவிட்டு, பிறகு அந்தப் பெண்மணி என்ன செய்துகொண்டு இருக்கிறாரோ, அந்தப் பணியில் பங்கேற்பார். பாத்திரம் தேய்ப்பதோ, கீரை ஆய்வதோ எதுவாக இருந்தாலும் அதைச் செய்துகொண்டே மெல்லப் பேச்சு கொடுத்து, ‘‘இப்படிச் செய்வது நல்லதல்லவா?’’ என்று உடல்நலக் குறிப்புகளைப் பக்குவமாகச் சொல்வார். அவர்களின் தயக்கத்தையும் பயத்தையும் போக்குவார். இப்படிப் படிப்படியாக எல்லோருக்கும் தெளிவையும் நம்பிக்கையையும் பரப்பினார்.

குழந்தை இழப்பு 30 சதவீதமே குறைந்தது. மருத்துவமனைக்குப் பிரசவிக்க வராவிடினும், பராம்பரிய மருத்துவச்சிகள் பரிசுத்தமான ‘டெலிவரி கிட்’களை உபயோகிக்கத் தொடங்கினார்கள். சுத்தமான பிரசவம். தொப்புள் கொடியைச் சுத்தமான கத்தரியால் வெட்டிக் கட்டினார்கள். ‘பிரசவ ஜன்னி’ என்கிற தொற்று (puerperal sepsis) அநேகமாக இல்லாமல் ஆகிவிட்டது.

குறை மாதத்தில் மிகக் குறைவான எடையுடன் பிறக்கும் குழந்தைகளை (Premature babies) கவனித்துக் காப்பாற்றுவதில் மிக்க ஆர்வமும் அனுபவமும் உள்ளவர். நவீன உபகரணங்கள் இல்லாத ‘அஸ்வினி’ மருத்துவமனையில் அவர் பல சுலபமான அதிகம் செலவில்லாத உத்திகளை ஏற்படுத்தினார். இப்படிப் பிறக்கும் சிசுக்களின் உடல் சூடு குறைந்துவிடும். இதைத் தவிர்க்க இந்தக் குழந்தைகளை ஒரு தெர்மகோல் பெட்டியில் மிருதுவான துணியில் கிடத்தி 60 வாட் மின்சார பல்பைத் தகுந்த தொலைவில் வைத்து, சூடு குறையாமல் பார்த்துக்கொண்டார். தாய்ப்பாலை எப்படி, எந்த விகிதத்தில் சுத்தமான நீர் கலந்து (1:5) 5 மி.லி.யை சொட்டு சொட்டாக 2 மணி நேரத்துக்கு ஒரு முறை கொடுக்க வேண்டுமென்று செவிலியர்களுக்கு விளக்கமாகக் கற்பித்தார்.

பழங்குடியினரின் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் மெலிந்து ‘சூணா’ வயிறுடன் தலைமுடி வறண்டு, எதிலும் ஈடுபாடின்றி இருப்பதைக் கண்டார். இதைச் சரிசெய்ய சுலபமான வழியில் பொட்டுக்கடலைப் பொடியுடன் நாட்டுச் சர்க்கரையையும், சில துளிகள் தேங்காய் எண்ணெய்யும் கலந்து கொடுப்பதைத் தாய்மார்களுக்குப் படிப்பித்தார். இதைத் தவறாமல் கொடுப்பதால் குழந்தைகள் எப்படிக் குணமடைகிறார்கள் என்பதை நிரூபிக்க என்ன செய்தார் தெரியுமா?

இந்தக் குழந்தைகளை ‘அஸ்வினி’யில் சேர்த்து இந்தக் ‘கடலை மிட்டாய்’களை உணவில் சேர்ப்பதினால் 5 - 10 நாட்களிலேயே குழந்தைகள் சுற்றுமுற்றும் பார்ப்பதில் ஆர்வம் காட்டி, சிறிதாக புன்னகைப்பதையும், கண்கூடாகக் காண முடிந்தது. அத்துடன் நிற்காமல் அந்தக் குழந்தைகளின் பெற்றோரைச் சந்தித்து, எப்படி குறைந்த செலவிலேயே குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் அடைய முடியும் என்று கூறுவார்.

பல தந்தைமார்கள் தங்கள் ஊதியத்தில் பெரும்பகுதியை குடியில் செலவழிப்பார்கள். அவர்களிடத்தில் குடியை நிறுத்து என்று உபதேசிக்கவா முடியும்? மேலும், அப்படிச் செய்தால் அதன் பலனைக் குடியில் இருக்கும் கணவன் கொடுக்கும் அடியை மனைவிதான் அனுபவிப்பார். அதனால் இப்படிச் செய்வார்...

‘‘நீங்கள் ஒரு வாரத்தில் எவ்வளவு உங்களுக்காக செலவு செய்கிறீர்கள்?’’ என்று கேட்பார். ‘‘100 ரூபாய்’’ என்று பதில் வந்தால், ‘‘அதில் ஒரு 20 ரூபாய் குறைத்துக்கொண்டால் இந்தக் கடலை மிட்டாயைக் கொடுக்க முடியுமே?’’ என்று மிருதுவாகச் சொல்லுவார். இது அந்த மனிதரின் ‘தந்தை’ உணர்வைச் சற்றுத் தூண்டிவிட்டுச் செயல்பட வைக்கும் 'Clever' அல்லவா?

சந்திப்போம்... சிந்திப்போம்..!

கட்டுரையாளர்: கல்யாணி நித்யானந்தன்,
இதயநோய் நிபுணர் (பணி நிறைவு),

டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.

தொடர்புக்கு: joenitya@yahoo.com

ஓவியம்: வெங்கி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x