Published : 01 Dec 2020 03:15 AM
Last Updated : 01 Dec 2020 03:15 AM

அரசமைப்பு தரும் உரிமைகளைப் பறித்திடலாகாது புதிய சட்டங்கள்

ஒரு சமூகத்தில் புதிதாக நிறைவேற்றப்படும் சட்டங்கள் அந்நாட்டின் அரசமைப்பு ஏற்கெனவே உறுதியளிக்கும் சமத்துவத்தையும் தனிநபர் சுதந்திரத்தையும் குடியரசுணர்வையும் மேம்படுத்த வேண்டுமே தவிர குறைக்கும் வகையில் இருக்கக் கூடாது. உத்தர பிரதேச அமைச்சரவை முன்மொழிந்திருக்கும் ‘சட்ட விரோத மதமாற்றங்களைத் தடைசெய்வதற்கான அவசரச் சட்ட’மானது வெவ்வேறு மதங்களுக்கு இடையிலான திருமணங்களைத் தடுத்து சமூகப் பின்னடைவுக்கு இட்டுச்செல்வதாக இருப்பதோடு, குடிமக்களின் தனிநபர் வாழ்க்கையையும் அவர்களது சமய நம்பிக்கைகளையும் கண்காணிப்பதற்கான அதிகாரத்தைக் காவல் துறையிடம் வழங்க முயல்கிறது.

ஏனைய மாநிலங்களில் இயற்றப்பட்டுள்ள மதமாற்றத் தடைச் சட்டங்களின் தலைப்பில் இடம்பெற்றுள்ள ‘சமய நம்பிக்கைக்கான சுதந்திரம்’ என்ற சொற்றொடரும் இதில் கவனமாகத் தவிர்க்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாகக் கொள்ளத்தக்க மதமாற்றங்கள் என்று அறிவிப்பதற்கு ‘கட்டாயப்படுத்துதல், அச்சுறுத்தல், செல்வாக்கு செலுத்துதல், ஏமாற்றுதல்’ ஆகியவற்றைப் பயன்படுத்துதல் தவிர, கூடுதல் காரணமாக ‘திருமணத்துக்காக ஆளை மயக்குதல்’ என்பதையும் இந்தச் சட்டம் உள்ளடக்கியுள்ளது. பொதுவாக, ஓராண்டிலிருந்து ஐந்தாண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, பட்டியலின மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் மதம் மாற்றப்பட்டால் மூன்றாண்டிலிருந்து ஐந்தாண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, ‘பெரும் அளவிலான மதமாற்றம்’ என்றால் மூன்றாண்டிலிருந்து பத்தாண்டுகள் வரையிலான தண்டனை என்று தண்டனைக் காலங்களையும் உத்தர பிரதேச அமைச்சரவை முன்மொழிந்துள்ளது. உளபூர்வமாக மதம் மாறுபவர்கள் முன்கூட்டியே அறிவிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்றும் ஒரு சட்டப்பிரிவு இடம்பெற்றுள்ளது.

மத்திய பிரதேசம், ஒடிஷா மாநிலங்களின் மதச் சுதந்திரச் சட்டங்களின் செல்லும் தன்மையை 1977-ல் ஸ்டைனிஸ்லாஸ் வழக்கில் உறுதிசெய்த உச்ச நீதிமன்றம், ஒரு மதத்தினர் ‘சமயப் பிரச்சாரம் செய்வதற்கான உரிமை’ என்பது ‘மதமாற்றத்துக்கான உரிமை’யை உள்ளடக்காது என்று தீர்ப்பளித்தது. எனினும், முந்தைய சட்டங்கள் திருமணத்துக்காக மதம் மாறுவதைத் தடைசெய்யவில்லை. ஆனால், இவ்விஷயத்தில் இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட் சட்டங்களும், தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் உத்தர பிரதேச அவசரச் சட்டமும் மிகவும் கடுமையாக நடந்துகொள்கின்றன. தனிநபர் அந்தரங்க உரிமையும் அடிப்படை உரிமையே என்று 2017-ல் தீர்ப்பளித்த நீதிமன்றம், 2018-ல் ஷாபின் ஜஹான்- ஹாதியா வழக்கில் தனிநபர் அந்தரங்கத்துக்குள் தலையிட முடியாது என்று மறுத்தேதோடு அவர்களின் திருமணத்தை ஏற்றும்கொண்டது இங்கே குறிப்பிடப்பட வேண்டியதாகும். உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்புகளுக்குப் பிறகு, மதமாற்றத்தைத் தடுப்பதற்கான காரணங்களில் ஒன்றாக இனிமேலும் ‘திருமணம்’ இருக்க முடியாது. அது, அந்தரங்க உரிமையோடும் விருப்பத் தேர்வோடும் திருமணத்துக்கான சுதந்திரத்தோடும் தொடர்புடையது. அதைத் தடுப்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. எனவே, திருமணங்கள் சட்டவிரோத மதமாற்றத்துக்குக் காரணமாக இருக்கின்றன என்று கூறுவது நீதித் துறையின் கருத்தை மறுதலிப்பதாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x