Published : 12 Oct 2015 08:15 am

Updated : 12 Oct 2015 08:15 am

 

Published : 12 Oct 2015 08:15 AM
Last Updated : 12 Oct 2015 08:15 AM

இருண்ட காலத்தை நோக்கிச் செல்கிறதா இந்தியா?

பாஜக ஆட்சியில் நிலைபெறும் அச்சுறுத்தல்கள் நீண்டகால விளைவுகளைக் கொண்டவை

இந்து மதத்தின் உருவ வழிபாடு குறித்து வெளிப்படையாக விமர்சித்துவந்த 77 வயதான எம்.எம். கல்புர்கி, கடந்த அகஸ்ட் மாதம் தனது வீட்டு வாசலிலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். பிப்ரவரி மாதம், மும்பை அருகே கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கோவிந்த பன்ஸாரே கொல்லப்பட்டார். 2013-ல், மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்த சமூக ஆர்வலர் நரேந்திர தபோல்கர் கொலைசெய்யப்பட்டார். இந்தப் படுகொலைகள், மிகப் பெரிய அபாயத்தின் அறிகுறிகள்தான். மதச்சார்பற்ற குரல்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன; பிற அபாயங்கள் தொடரப்போகின்றன.


பேச்சுரிமைக்கு எதிரான தாக்குதல்கள் இந்தியாவில் அவ்வப்போது நடப்பவைதான் என்றாலும், இந்த முறை விஷயம் வேறு மாதிரியானது. இச்சம்பவங்கள் தொடர்பான செய்திகள் முதல் பக்கத்தில் இடம்பெறுகின்றன. ஆனால், அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறது அரசு. இவ்விஷயங்கள் தொடர்பான பிரதமர் மோடியின் மவுனம், அவற்றை மறைமுகமாக ஆதரிப்பதைக் காட்டுகிறது என்றே பலர் கருதுகிறார்கள். ஏனெனில், 2014-ல் அவர் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுபோன்ற தாக்குதல்கள் வலுப்பெற்றிருக்கின்றன.

இந்து பாகிஸ்தான்?

அண்டை நாடுகளை ஒப்பிடும்போது சுதந்திரமான ஜனநாயக நாடாகவும், உயர்ந்த எண்ணங்களை ஆதரிக்கும் நாடாகவும் பெருமிதம் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு இது மிக முக்கியமான தருணம். 2011-ல் பாகிஸ்தான் தாராளவாத அரசியல் தலைவர் சல்மான் தஸீர் படுகொலை செய்யப்பட்டபோது, இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் எம்.ஜே. அக்பர் (தற்போது பாஜக செய்தித் தொடர்பாளராக இருக்கிறார்) இவ்வாறு சொன்னார்: “சல்மான் தஸீர் மட்டும் இந்திய முஸ்லிமாக இருந்திருந்தால், இந்நேரம் அவர் உயிருடன் இருந்திருப்பார்.” வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலின்போது, அந்நாட்டின் ஜனநாயக அமைப்பின் எதிர்காலம் குறித்து இந்தியா கவலை தெரிவித்திருந்தது.

மாறாக, நாம் இந்தியாவில் நடக்கும் விஷயங்களைப் பற்றித்தான் கவலைப்பட வேண்டும். இந்தியா விமர்சிக்கும் அதன் அண்டை நாடுகளின் பாதையில் இந்தியாவும் சென்றுவிடலாம் என்பதையும் நாம் உணர வேண்டும். மும்பையைச் சேர்ந்தவரும் புகழ்பெற்ற பத்திரிகையாளருமான நிகில் வேகில் என்னிடம் சொன்னார், “மதச்சார்பின்மை இல்லையெனில், இந்தியா ஒரு ‘இந்து பாகிஸ்தா’னாக இருக்கும்.”

இந்தியாவில் நடந்திருக்கும் இந்தப் படுகொலைகளுக்கும் இந்த ஆண்டு வங்கதேசத்தில் வலைப்பூ எழுத்தாளர்கள் 4 பேர் கொல்லப்பட்டதற்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. ஆனால், வங்கதேசத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக உலகளாவிய விமர்சனங்கள் எழுகிறபோது, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு எனும் அங்கீகாரப் பூச்சுக்குப் பின்னே மறைந்துகொள்கிறது இந்தியா.

நீடிக்கும் அச்சுறுத்தல்கள்

கொலைகள் மற்றும் அச்சுறுத்தல்களின் விளைவாக, சுய தணிக்கையும், பயமும் கொண்ட சூழல் உருவாகி யிருக்கிறது.

கொலையாளிகளில் சிலர் இன்னமும் பிடிபடவில்லை. ஒரு கையில் துப்பாக்கியைச் சுமந்துசெல்லும் கொலையாளிகள் மறு கையில் பெயர்ப் பட்டியலை வைத்திருக்கிறார்கள். செப்டம்பர் 20-ல் சில தொலைபேசி அழைப்புகளை இடைமறித்துக் கேட்டவர்கள் மூலம் ஒரு முக்கியமான தகவலை, பத்திரிகையாளர் வாக்லே தெரிந்துகொண்டார். மற்றொரு வலதுசாரி அமைப்பான ‘சனாதன் சன்ஸ்தா’அடுத்து தன்னைக் குறிவைத்திருப்பதாக அவருக்குத் தெரியவந்தது. கல்புர்கியின் மரணத்தைக் கொண்டாடிய வலதுசாரித் தீவிரவாதிகள் பகிரங்கமாகவே பேசினர். இந்து மதத்தின் சாதி அமைப்பை விமர்சித்துவருபவரும், ஓய்வுபெற்ற பேராசிரியருமான கே.எஸ். பகவான்தான் அடுத்த குறி என்று ட்விட்டரில் மிரட்டல் விடுத்தனர்.

மதச்சார்பற்ற நாடான இந்தியாவை, ‘இந்து தேச’மாக மாற்றும் நோக்கம்தான் இக்கொலைகளுக்குக் காரணமாக இருக்கும் என்று தெரிகிறது. அரசியல் தலைவர்களின் மவுனம் மட்டுமல்லாமல், ஆளும் கட்சியான பாஜகவின் இந்து தேசியக் கொள்கைகளும் இந்நோக்கத்துக்குத் துணைபுரிகின்றன.

இந்துத்வா எனும் தகுதி

கடந்த சில மாதங்களாக, நேஷனல் புக் ட்ரஸ்ட் மற்றும் நாளந்தா பல்கலைக்கழகம் போன்ற முக்கிய நிறுவனங்களில் ஒலித்துக்கொண்டிருந்த மதச்சார்பற்ற குரல்களை ஒழித்துக்கட்டியிருக்கிறது இந்திய அரசு. ஏதோ சராசரியான ஆட்களைத் தூக்கியடிக்கவில்லை அரசு. நாளந்தா பல்கலைக்கழக வேந்தராகப் பதவி வகித்தவர் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென். புகழ்பெற்ற ஆளுமைகளின் பதவியிடங்கள், இந்துத்வா கொள்கை மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை மட்டுமே தகுதியாகக் கொண்டவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டன.

இந்தியா எனும் மதச்சார்பற்ற நாட்டுக்கு அடித்தள மிட்டவரும் இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவாகர் லால் நேருவின் பாரம்பரியத்தைக் குறிவைப்பதுதான், இந்த அரசின் இலக்குகளில் மிக முக்கியமானது. கடந்த மாதம், புது டெல்லியில் உள்ள ‘நேரு அருங்காட்சியகம் மற்றும் நூலக’த்தின் இயக்குநரை வெளியேற்றிய அரசு, தற்போது அருங்காட்சியகத்தின் பெயரை மாற்றத் திட்டமிட்டிருப்பதாக அறிவித்ததுடன், பிரதமர் மோடியின் சாதனைகளை விளக்கும் பணிகளைச் செய்யவும் திட்ட மிட்டிருக்கிறது. வாஷிங்டன் நினைவிடத்தை, ஒபாமா அருங்காட்சியகமாக மாற்றுவதற்கு ஒப்பானது இது!

சுதந்திரச் சிந்தனை கொண்ட தலைவர்களின் பங்களிப்புகளை இருட்டடிப்புச் செய்யும் பணிகளில் ஈடுபட்டிருப்பதுடன், மூர்க்கமான இந்து தேசியத் தலைவர்களை முன்னிறுத்துவதிலும் முனைப்புடன் இருக்கிறார்கள் பாஜக தலைவர்கள். மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த நாதுராம் கோட்ஸே வைத் ‘தேசபக்தர்’ என்று விளித்தார் பாஜக எம்.பி. சாக்‌ஷி மகராஜ். பின்னர், தனது கருத்தை அவர் திரும்பப் பெற்றுக்கொண்டாலும், அவரது கருத்தை பாஜக தலைவர்கள் பலர் ஆதரித்தார்கள். காந்தியைப் படுகொலை செய்த கோட்ஸே, ஆயுதம் தாங்கிய இந்து அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.ஸின் முன்னாள் உறுப்பினர். அந்த அமைப்புடன் தனது 8-வது வயதிலிருந்தே தொடர்பில் இருப்பவர் மோடி. இந்து தேசியவாத அரசின் நிழலில் தாங்கள் பலம் பெற்றிருப்பதாக இந்து அடிப்படைவாதிகள் கருதுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

நசுக்கப்படும் பேச்சுரிமை

2010-ல் வெளியான தனது நாவலால் ஆத்திரமடைந்த இந்து அமைப்புகளிடமிருந்து தனக்கு மிரட்டல்கள் வந்ததாக, புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகன், கடந்த டிசம்பர் மாதம் போலீஸுக்குத் தகவல் தெரிவித்தார். அவர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் வலியுறுத்தின. எங்காவது கண்காணாமல் போய்விடுவது நல்லது என்று போலீஸார் அவருக்கு அறிவுறுத்தினர். தனித்துவிடப்பட்டவராக உணர்ந்த பெருமாள் முருகன், தனது ஒட்டுமொத்த இலக்கிய வாழ்க்கையைவிட்டே விலகுவதாக ஜனவரி மாதம் அறிவித்தார். தனது குடும்பத்தின் பாதுகாப்பைக் கருதி, எழுதுவதையே கைவிடுவதாக ஃபேஸ்புக்கில் அறிவித்தார்.

இந்த அச்சுறுத்தல்கள் பாஜக ஆட்சியில் இருக்கும் வரைதான் தொடரும் என்றுகூட நினைக்கலாம். ஆனால், இந்தியாவின் கட்டுமானத்திலேயே நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த மாற்றம், நீண்டகால விளைவு களை ஏற்படுத்திவிடும் என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். இந்தியாவில் நடக்கும் இந்தத் தாக்குதல்களை, ஏதோ மதச்சார்பற்ற எழுத்தாளர்கள் அல்லது சுதந்திரச் சிந்தனையாளர்களுக்கு மட்டும் நடக்கும் பிரச்சினையாகப் பார்க்க முடியாது. ஜனநாயகத்தைக் கட்டமைக்கும் அமைப்பின் - இதயத்தின் - மீதான தாக்குதல் இது. இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக இந்தியர்கள் போராட வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டுமென்று வலியுறுத்த வேண்டும். நமது சொந்தக் குரலை இழப்பதற்கு முன்னர், அனைவரின் குரல்களைக் காக்க முன்வர வேண்டும்!

- சோனியா ஃபெலீரோ,

‘பியூட்டிஃபுல் திங்: இன்சைடு தி சீக்ரெட் வேர்ல்டு ஆஃப் பாம்பே’ஸ் டான்ஸ் பார்ஸ்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தமிழில் சுருக்கமாக: வெ. சந்திரமோகன்

© ‘தி நியூயார்க் டைம்ஸ்’


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x