Published : 25 Nov 2020 03:14 am

Updated : 25 Nov 2020 06:46 am

 

Published : 25 Nov 2020 03:14 AM
Last Updated : 25 Nov 2020 06:46 AM

மூன்றாவது இடத்திலிருந்து முதல் இடத்துக்கு: தமிழக பாஜகவின் தேர்தல் கணக்கு!

tn-bjp

திமுகவுக்கும் அதிமுகவுக்குமான யுத்தம் என்று வழக்கமாகப் பேசப்படும் தமிழகச் சட்டமன்றத் தேர்தல், அமித் ஷாவின் சமீபத்திய தமிழக வருகையால் ‘திமுக எதிர் பாஜக’ என்று பேசப்படலானது தமிழ்நாட்டு அரசியலில் அதிர்ச்சி கலந்த ஒரு ஆச்சரிய அத்தியாயம். கொஞ்சம் அரசியல் தெரிந்தவர்களுக்கும் திமுக, அதிமுகவின் பலத்தோடு கொஞ்சமும் ஒப்பிட முடியாதது பாஜகவின் பலம் என்பது தெரியும். ஆனால், ‘திமுக எதிர் பாஜக’ என்கிற பேச்சை உருவாக்குவதன் மூலம் தன்னுடைய எதிர்கால இலக்கு என்ன என்பதைத் துல்லியமாக வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கிறது பாஜக. மாநிலத்தில் அதிமுக, திமுகவுக்கு அடுத்த மூன்றாவது இடத்தை இப்போதே அது குறிவைக்கிறது; 2021 தேர்தலுக்குப் பின் இரண்டாமிடம், 2026 தேர்தலில் முதலிடம் என்பது அதன் தொடர் இலக்காக இருக்கும் என்பதே அது.

அமித் ஷாவை விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்ற முதல்வர் பழனிசாமி, திரும்பிச் செல்கையில் அதேபோல விமான நிலையத்துக்கே போய் வழியனுப்பி வைத்த துணை முதல்வர் பன்னீர்செல்வம், பாஜக கூட்டணியில்தான் நாங்கள் இருக்கிறோம் என்று இருவரும் போட்டி போட்டு அறிவித்தமை எல்லாமுமாகச் சேர்ந்து, மேலும் ஒரு விஷயத்தைச் சொல்கின்றன. மாநிலத்தில் கூட்டணியின் தலைமை எனும் இடத்தில் அதிமுக அமர்ந்திருந்தாலும், பாஜகவைத் தன் வசதிக்கு அதிமுக நடத்த முடியாது; மேலும், அதிமுக கூட்டணியில் அதிமுகவுக்கு அடுத்து எந்தக் கட்சிக்கும் குறைவில்லாத எண்ணிக்கையில் பாஜக இம்முறை இடங்களைப் பெறும்!


மூன்றிலிருந்து முதலுக்கு!

தமிழ்நாட்டில், ‘கழகங்கள் இல்லா தமிழ்நாடு’ எனும் முழக்கம் புதிதல்ல என்றாலும், திமுக – அதிமுகவுக்கு மாற்றாக ஒரு பேரெழுச்சியோடு உருவெடுக்கும் எந்தக் கட்சியும் உடைபடும் இடம் தேர்தல் களம்தான். அங்கே இரண்டு கழகங்களில் ஒன்றுடன் கூட்டணி வைக்கும் சங்கடத்தை இந்தப் புதிய குரல் கட்சிகள் எதிர்கொள்ளும். அதோடு அதன் குரல் வலு ஒடுங்கும்.

அண்ணா தலைமையில் திமுக ஆட்சியில் அமர்ந்தது முதலான இந்த அரை நூற்றாண்டில், காங்கிரஸ், பாமக, மதிமுக, தமாகா, தேமுதிக என்று பல கட்சிகள் தமிழ்நாட்டில் மூன்றாவது இடத்திலிருந்து முதல் இடம் நோக்கிச் செல்வதற்குப் பிரயத்தனப்பட்டிருக்கின்றன. ஆனால், வெற்றிகரமாக ஒரு கூட்டணியைத் தங்கள் தலைமையில் உருவாக்கவோ, இரு கழகங்களைத் தவிர்த்து சில தேர்தலைத் தொடர்ந்து சந்திப்பதையோ இந்தக் கட்சிகளால் செய்ய முடிந்ததே இல்லை. பாஜக இதை மாற்றியமைக்க விரும்புவது தெரிகிறது. அதிமுகவுடன் கூட்டணிக்குச் சென்றாலும், தொடர்ந்து அதிமுகவுக்குக் கீழேயே பயணிக்க அது விரும்பவில்லை; மாறாக, அதிமுக இன்றுள்ள இடத்தில் தன்னைப் பொருத்திக்கொள்ள அது விரும்புகிறது என்பதைத் தொடர்ந்து நடக்கும் பல நிகழ்வுகளும் காட்டுகின்றன. ‘கூட்டணிக் கணக்குகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், கீழே களத்தில் கட்சியைக் கட்டியெழுப்புவதில் நீங்கள் கவனம் செலுத்துங்கள்’ என்று அமித் ஷா தமிழக பாஜகவினரிடம் சொல்லிச் சென்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

பெண்களை ஈர்க்கும் பாஜக

2019 மக்களவைத் தேர்தலின்போது, 39 தொகுதிகளிலும் 60 ஆயிரம் வாக்குச்சாவடி நிர்வாகிகளை நியமித்திருப்பதாகச் சொன்னது பாஜக. ஆனால், வாக்குப்பதிவு நாளன்று பல வாக்குச்சாவடிகளில் பாஜகவுக்கு முகவர்களே இல்லை. இம்முறை அந்நிலையை மாற்றியமைக்கும் வேலையில் அந்தக் கட்சி நிர்வாகிகள் இறங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 500 பேருக்குப் புதிது புதிதாகப் பொறுப்பு கொடுத்திருக்கிறது அந்தக் கட்சி. ஆயினும், இவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியலுக்குப் புதியவர்கள் என்பதால், ஏற்கெனவே களப்பணியில் அனுபவம் உள்ள மாற்றுக் கட்சியினரைத் தம் பக்கம் ஈர்ப்பதில் அது கவனம் செலுத்திவருகிறது.

அதிமுக, திமுக போன்ற கட்சிகளில் பொறுப்பில் இருந்தவர்களில் சிலர், இப்போது ஏதோ காரணத்தால் பதவி இழந்திருப்பார்கள் அல்லவா? அவர்களைத்தான் குறிவைத்துத் தூக்குகிறது பாஜக. சாதாரண கிளை நிர்வாகி தொடங்கி ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் வரையில் இப்படி பாஜகவில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒன்றியத்தில் மேப்பல் சக்தி என்றால், தஞ்சை மாவட்டம், பூதலூர் ஒன்றியத்தில் கென்னடி என்று திமுகவிலிருந்தே பலரைத் தம் பக்கம் இழுத்து வந்திருக்கிறார்கள். அதேபோல, அமமுகவிலிருந்து கணிசமான எண்ணிக்கையில் நிர்வாகிகள் பாஜகவில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

இப்போது கூட்டணி வளையத்துக்குள் இருக்கும் அதிமுக தொடங்கி பாமக வரை பல தோழமைக் கட்சிகளிலும் பாஜகவில் இணைய பலர் ஆர்வமாக இருந்தாலும், தேர்தல் வரை அதை அமர்த்தி வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள் பாஜக நிர்வாகிகள். சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் ஒருவேளை அதிமுக ஆட்சியை இழக்குமானால், பெரிய அளவில் அங்குள்ள நிர்வாகிகள் இங்கு வருவார்கள்; திமுக தோற்றாலும் அதே கதைதான் என்று சொல்கிறார்கள்.

வீட்டை நோக்கி அரசியல்

ஜெயலலிதாவின் பெரும் வாக்குவங்கிகளில் ஒரு தரப்பாக இருந்த பெண்களை அவர்களுடைய அடையாளத்துடன் ஒன்றுதிரட்டும் வகையில், பூஜை, சடங்கு, பாரம்பரியத்தின் பெயரால் தன் வசம் ஈர்த்துவருகிறது பாஜக. கந்த சஷ்டி கவசம் பாடும் நிகழ்ச்சி மீது நடுத்தர வர்க்கப் பெண்களில் ஒரு பகுதியினரைக் கணிசமாக ஈர்த்திருக்கிறது. திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் மாநில அளவில் மகளிரணிக் கூட்டம் நடப்பதே அரிதாக உள்ள நிலையில், பாஜகவோ மாவட்ட, ஒன்றிய அளவில்கூட அடிக்கடி மகளிரணிக் கூட்டங்களை இப்போது நடத்துகிறது.

திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிதாக உருவாகியுள்ள ‘தெய்வீகத் தமிழ்ச் சங்கம்’ எனும் அமைப்பு ‘தேசியம் காக்க... தமிழகம் காக்க... 10 நிமிடம் தாருங்கள்’ என்ற 14 பக்கச் சிறு வெளியீட்டுடன் வீடு வீடாக ஏறி இறங்குகிறது. ‘ஒரு பத்து நிமிடம் ஒதுக்கலாமா?’ என்று கேட்டு, வீட்டுக்காரர்கள் தலையாட்டிய கணமே உள்ளே போய் அமர்ந்தபடி, ‘உங்கள் வீட்டில் லட்சுமி கடாச்சம் ஏற்பட வேண்டும் என்றால், மாலையில் விளக்கேற்றுங்கள். வீடுதோறும் பூஜை அறையை உருவாக்குங்கள். பக்கத்தில் இருக்கும் கோயிலுக்குத் தினமும் செல்லுங்கள்’ என்று ஆரம்பித்து, ‘திராவிடக் கட்சிகளால் நாசமாக்கப்பட்ட நம் கலாச்சாரத்தை மீட்டெடுப்போம்!’ என்று முடிக்கிறது. இப்படி, ‘பாஜகவுக்கு ஓட்டுப்போடுங்கள்’ என்று நேரடியாகக் கேட்காமல் அது நோக்கி மக்களைத் திருப்பும் ஏராளமான குழுக்கள் இன்று களம் இறங்கியிருக்கின்றன.

சமூகவலைதளங்களில் மோடிக்கு ஆதரவாகத் தன்னியல்பில் எழுதுகிறவர்களைத் தொடர்புகொண்டு, ‘உங்களுக்குப் பாஜகவில் பொறுப்பு தருகிறோம். இதே வேலையை இன்னும் உற்சாகமாகச் செய்யுங்கள்’ என்று ஊக்கப்படுத்தி உள்ளுக்கு இழுப்பதும் நடக்கிறது. தெருவுக்குத் தெரு, கிராமத்துக்குக் கிராமம் வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி, இதுவரை நேரடி அரசியலுடன் தொடர்பில்லாதவர்களை எல்லாம் உள்ளே இழுத்துப்போடுகிறார்கள் உள்ளூர் நிர்வாகிகள். கிராமங்களில் உள்ள சின்னச் சின்னக் கோயில்கள் தொடங்கி, பெருங்கோயில்கள் வரையில் உழவாரப் பணி, திருவிளக்குப் பூஜை, இலவச டியூசன் என்று ஏதோ ஒரு வகையில் மக்களைக் கவர்ந்துகொண்டே இருக்கின்றன பாஜகவின் பரிவாரங்கள்.

சாதியுணர்வை மதவுணர்வாக்குதல்

அடிமட்டத்தில் கட்சியைக் கொண்டுசெல்கையில் பாமக, விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், கொங்கு முன்னேற்றக் கழகம், ஃபார்வர்டு பிளாக் போன்ற சாதிசார் கட்சிகளின் செல்வாக்குள்ள இடங்களைத் தேர்ந்தெடுத்து அங்கே கட்சி கட்ட முன்னுரிமை அளிப்பதும் நடக்கிறது. சமூகத்தில் சாதி அடையாளம் சார்ந்து குழுக்களாகத் தங்களை உணர்வோர் மத்தியில், மத அடையாளம் சார்ந்து கட்சியை முன்னெடுத்துச் செல்வது நல்ல பலன் அளிப்பதாகச் சொல்கிறார்கள்.

தேனி மாவட்டத்தில் பட்டியலின மக்கள் மிக அதிகமாக வசிக்கும் கெங்குவார்பட்டி, எண்டபுலிப்பட்டி போன்ற ஊர்களில் நூற்றுக்கணக்கானோர் பாஜக உறுப்பினராக ஆக்கப்பட்டிருப்பதை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். சாதி சார்ந்த கட்சிகளில் பதவிகளிலேயே இருந்தாலும்கூட உள்ளூர் நிர்வாகிகளுக்கு அதன் பொருட்டு பெரிய பலன்கள் கிடைப்பதில்லை. ஆனால், பாஜக போன்ற மத்தியில் ஆட்சியைக் கையில் வைத்திருக்கும் கட்சியில் இருப்பது பல காரியங்களுக்கும் உதவியாக இருக்கிறது; ஒரு புது அதிகாரத்தைத் தருகிறது என்று இப்படிப் புதிதாகக் கட்சி மாறுவோரிடம் பேசுகையில் தெரிவிக்கிறார்கள்.

அதிமுகவின் தவிப்பு

திமுக இந்த விஷயங்களையெல்லாம் உணராததாகத் தெரியவில்லை. இதனாலேயே கட்சி அமைப்பில் கீழே நிறைய மாற்றங்களை அது முன்னெடுத்துவருவதோடு, மேலே பாஜக மீதான விமர்சனங்களை நாளுக்கு நாள் கடுமையாக்கிக்கொண்டே இருக்கிறது. அதிமுகவுக்கும் இந்த விஷயங்கள் அத்தனையும் தெரிகிறது, அதற்கேற்ப அதுவும் கீழே கட்சி அமைப்பில் மாற்றங்களை மேற்கொண்டுவருகிறது. ஆனால், மேலே கூட்டணியாகவும் இருந்தபடி தன்னுடைய வாக்குவங்கியையும் குறிவைக்கும் பாஜகவை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் கையை அது பிசைகிறது.

நேரடியாகப் பிரதானக் கட்சிகளை பாஜக குறிவைத்து இயங்கும் நிலையில், அடுத்தடுத்த நிலையில் உள்ள பாமக, விசிக, தேமுதிக, மதிமுக போன்ற கட்சிகள் நிறையவே கவலையில் ஆழ்ந்திருக்கின்றன. பொதுவெளியில் மறுத்தாலும், தமிழகக் கட்சிகளின் உள் உரையாடல்களில் இந்தக் கவலை சூழ்ந்திருப்பதைக் கட்சியினருடன் பேசுகையில் நன்றாகவே உணர முடிகிறது. அந்த வகையில், இலக்கை அடைகிறதோ இல்லையோ மூன்றாமிடம் நோக்கி பாஜக மெல்ல நகரத் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது!

- கே.கே.மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@hindutamil.co.in


TN BJPபாஜகவின் தேர்தல் கணக்குபாஜகதமிழக பாஜகதிமுகஅதிமுகதமிழகச் சட்டமன்றத் தேர்தல்திமுக எதிர் பாஜக

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x