Last Updated : 28 May, 2014 08:00 AM

 

Published : 28 May 2014 08:00 AM
Last Updated : 28 May 2014 08:00 AM

இரு வேறு பாகிஸ்தான்கள்!

பாகிஸ்தான் அரசையும் அங்குள்ள மதத் தலைவர்களையும்போல் அல்ல பாகிஸ்தான் மக்கள்!

இஸ்லாமாபாதில் உள்ள பெரிய மசூதியின் வேலி அருகில் அம்ஜத் என்ற சிறுவன் பிளாஸ்டிக் பைகளை விற்கிறான். என்னுடைய கேமராவைப் பார்த்துவிட்டு, ‘சுற்றுலாப் பயணியாக இருக்கும், டாலரில் ஏதாவது தேற்றிவிடலாம்’ என்று நினைக்கிறான். நான் இந்தியாவிலிருந்து வந்தவள் என்று சொன்னதும், பை வாங்க மாட்டேன் என்று தெரிந்துகொள்கிறான். இருந்தாலும் 'இந்தியா' என்ற சொல்லைக் கேட்டதும் முகத்தில் பரவசம் ஏற்படுகிறது. அருகிலிருந்த பெண் காவலர்கள் உடனே என்னிடம் வந்து இந்தியா குறித்து அடுக்கடுக்காகப் பல கேள்விகளைக் கேட்கின்றனர்.

அங்கு வந்திருந்த பெண்கள் பலரும், “எங்களுக்கு மிகவும் பிடித்த நாடான இந்தியாவிலிருந்து நீங்கள் வந்தது எங்களுக்கு மகிழ்ச்சி, பெருமை” என்றார்கள். இன்னும் ஒரு வாரத்தில் பாகிஸ்தானிலிருந்து நீங்கள் வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு அரசு கூறிய பிறகு, பாகிஸ்தானியர்கள் என்னிடம் அன்பு பாராட்டியது மனதுக்கு மிகவும் ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும்கூட இருந்தது.

பாகிஸ்தானுக்குப் போனபோதும்…

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதுக்கு 2013 ஆகஸ்ட் மாதத்தில் நள்ளிரவு நேரம் போய் இறங்கினோம். குடிநீர் வாங்கக் கடைக்குச் சென்றபோது, நாங்கள் இந்தியர் என்று தெரிந்ததும் எங்களுக்குக் கிடைத்த வரவேற்பால் நெகிழ்ந்தோம். அதன் பிறகு, அங்கு நாங்கள் சந்தித்தவர்கள் அனைவருமே அன்பையும் நட்பையுமே வெளிப்படுத்தினார்கள். விதிவிலக்காக வெறுப்புக் காட்டிய சிலர், அதற்குப் பின்னால்தான் தென்பட்டனர். நிருபர் வேலைக்காக எனக்குத் தரப்பட்ட ‘விசா' இஸ்லாமாபாதுக்குள் மட்டுமே நான் சுற்றிவர நிபந்தனை விதித்தது. அதையும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். உடலாலும் மனதாலும் சோர்வடைய வேண்டும் என்பதற்காகவே பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் பிரச்சாரப் பிரிவுக்கு வரவழைத்து ஏகப்பட்ட தாள்களைக் கொடுத்து எல்லாவற்றையும் எழுதி நிரப்புமாறு கேட்பார்கள். ஆனால், அங்கும் சிலர் எங்களிடம் ஆறுதலாகப் பேசி, ‘விசா' கிடைத்துவிடும் என்று நம்பிக்கையூட்டுவார்கள்.

அங்கு போனதிலிருந்தே அடுத்தடுத்துப் பல சம்பவங்கள்… செய்தி தருவதற்கு நிறைய வாய்ப்புகள். தலிபான்களுடன் பேசலாம் என்று அனைத்துக் கட்சி மாநாடு ஒப்புதல் தந்தது, பெஷாவர் நகரில் ஒரு வாரம் முழுக்க அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புகள், ஒரு தேவாலயத்தின்மீது நடந்த தாக்குதலில்

80-க்கும் மேற்பட்டோர் இறந்தது, செய்தி ஊடகங்கள் மீது அவ்வப்போது நடந்த தாக்குதல்கள், இன அடிப்படையில் நடந்த படுகொலைகள், மதத்தை அவமதித்துவிட்டதாக மதச் சிறுபான்மையோர் மீது தொடரப்பட்ட வழக்குகள், மும்பையில் நடந்த பயங் கரவாதிகள் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானில் நடந்த வழக்கு விசாரணை, நாடாளுமன்ற நிகழ்ச்சிகள் என்று நிறைய விஷயங்கள் இருந்துகொண்டேயிருந்தன.

ஆர்வமூட்டிய செய்தி

தேசத் துரோகக் குற்றங்களுக்காக முன்னாள் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப் மீது வழக்கு தொடர அரசு முடிவெடுத்தது. அப்போது நீதிமன்றம் செல்ல அனுமதிச்சீட்டு கோரி மனு செய்தேன். உடனே எனக்கு வழங்கப்பட்டது. நாடாளுமன்றம் செல்லவும் அனுமதி தரப்பட்டிருந்தது. அதைக் கொண்டு பல தொடர்களில் நாடாளுமன்றம் கூடும் முதல் நாளில் அங்கு நிருபர்கள் மாடத்துக்குச் சென்றிருக்கிறேன்.

மும்பை தாக்குதல் தொடர்பாக வழக்கு நடந்தபோது, ஆரம்பத்தில் அரசுத்தரப்பு வழக்கறிஞரும் மற்றவர்

களும் அது தொடர்பான தகவல்களைப் போட்டி போட்டுக்கொண்டு கூறினார்கள். பிறகு, “நீங்கள் அனுப்பிய செய்திகளால் எங்களுக்குப் பிரச்சினையாகி விட்டது. இனி, எங்களிடம் எதுவும் கேட்காதீர்கள்” என்று ஒரு நாள் கூறிவிட்டார்கள்.

டின்டின் காமிக் தொடரில் வரும் இரட்டையர்களைப் போல இருவர் என்னை எப்போதும் பின்தொடர்ந்தனர். நான் யாரிடம் பேசினாலும், உடனே அவர்களிடம் சென்று, “என்ன பேசினீர்கள், ராணுவம் பற்றி என்ன கேட்டார்?” என்றெல்லாம் அவர்கள் விசாரிப்பார்கள். என்னுடைய நண்பர்களிடமும் இதைப் போல கேட்கத் தொடங்கினார்கள். ஃபைசல் மசூதிக்குப் பின்னால் இருக்கும் மார்கல்லா குன்றுகளுக்கு நானும் என் கணவரும் சென்றபோது எங்களைப் பின்தொடர்ந்த அவர்கள், நான் இந்தப் பக்கமாகத்தான் திரும்புவேன் என்று தீர்மானித்து, மொட்டை மரங்கள்கூட இல்லாத பொட்டலில் சுட்டெரிக்கும் வெயிலில் நீண்டநேரம் காத்திருந்தனர். நானும் என் கணவரும் அந்தக் குன்றி லிருந்து இறங்கிச் செல்ல வேறு வழி இருப்பதை அறிந்து, அந்த வழியாகத் திரும்பிவிட்டோம்.

ஜனவரி மாதம் விசாவைப் புதுப்பிக்கச் சென்றபோது, “இனி புதுப்பிக்க மாட்டோம்” என்று எச்சரித்தார்கள். ஏன் என்று கேட்டபோது பதில் சொல்லவில்லை. பாகிஸ் தானில் இருக்கும் தட்சசீலம், லாகூர், பெஷாவர், மொகஞ்சதாரோ நகரங்களுக்குச் செல்ல அனுமதி கோரியிருந்தோம். அதற்கு அரசிடமிருந்து பதிலே இல்லை.

குவெட்டாவிலிருந்து இஸ்லாமாபாதுக்கு, காதர் பலூச் என்ற தலைவர் தனது ஆதரவாளர்களுடன் 2,000 கி.மீ-க்கு மேல் நடந்தே வந்தார். அவரைப் பேட்டி கண்டேன். “பாகிஸ்தானுக்கு எதிரான இந்தப் பேட்டியை ஏன் எடுத்தீர்கள்?” என்று ஒரு அதிகாரி கேள்விகளால் துளைத்தெடுத்தார். “இந்த அரசியல், வழக்கு, பேட்டி எல்லாம் எதற்கு? பாகிஸ்தானின் கலாச்சாரம் பற்றி எழுத வேண்டியதுதானே?” என்று எரிந்து விழுந்தார். கலைஞர்களான ஆபிதா பர்வீன், ஹரூண் பற்றியெல்லாம் எழுதியிருக்கிறேன்.

உறவு நிரந்தரமாக…

தேசப் பிரிவினை தொடர்பாக அப்போது வாழ்ந்த வர்களிடம் வாய்வார்த்தையாக நிகழ்வுகளைக் கேட்டுப் பதிவுசெய்யும் முயற்சியில் காலித் சிமா, அவருடைய மனைவி, நஸ்ரின், நயீம் குரேஷி ஆகியோரைச் சந்தித்தது மறக்க முடியாதது. அபித் ஹாசன் மின்டோ பேட்டியின்போது குறிப்புகளாகத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தபோது அவர், “பேட்டி காண்கிறாயா, ஆய்வுக்கான தரவுகளைத் தயார் செய்கிறாயா?” என்று கேட்டுக் கேலி செய்தார்.

மார்ச் 3-ம் தேதி, நான் அடிக்கடி சென்றுவரும் இடத்தில் பயங்கரவாதிகளின் கடுமையான தாக்குதல் நடந்ததது. பயங்கரவாதத்தின் கோர முகத்தையும் காண முடிந்தது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எனக்கு நண்பர்களான, பத்திரிகையாளர்கள் ராசா ரூமி, ஹமீத் மிர் ஆகியோர் தாக்கப்பட்டது வருத்தத்தைத் தந்தது.

செய்தியாளர்களுக்கு ஆபத்து

கலாச்சாரம் என்றால் பாலிவுட் திரைப்படங்கள்தான். பாகிஸ்தானியர்களுக்கு மிகவும் பிடித்தவை இந்தி திரைப்படங்கள். சுமாரான இந்திப் படம்கூட அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடுகிறது. பாகிஸ்தான் அரசு இந்தியர்களிடம் கெடுபிடி காட்டினாலும் மக்கள் அன்புடனும் பாசத்துடனும் பழகுகின்றனர்.

ஊர் திரும்புவதற்கு முன்னதாகக் கதர் கடையில் துணி வாங்கினேன். தொடர்ந்து அவர் கடையிலேயே வாங்குவதற்காக விசுவாசப் புள்ளிகளைத் தருவதாகக் கூறினார். “இதில் பயனில்லை, நான் நாட்டை விட்டே போகிறேன், இந்தியர்களுடைய விசுவாசத்தின்மீதுதான் அரசுக்குச் சந்தேகம் இருக்கிறதே?” என்றேன்.

பாகிஸ்தானுக்குள் இரண்டு தேசங்கள் இருக்கின்றன. மக்கள் நிரம்பிய தேசம் வரவேற்கிறது, அரசு ஆக்கிரமித்துள்ள தேசம் வெளியேற்றுகிறது. இந்த இரு தேசங் களும் இந்தியாவுடன் நட்பு பாராட்டுவது நடக்குமா?

- ‘தி இந்து’ (ஆங்கிலம்) தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x