Published : 01 Oct 2015 10:04 AM
Last Updated : 01 Oct 2015 10:04 AM

இருவேறு உலகங்களும் எல்லைச் சுவரும்

அகதிகள் விவகாரத்தில் அமெரிக்காவை விட ஐரோப்பாவின் நிலை மோசம்

அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லையில் உயரமான எல்லைச் சுவரை எழுப்பலாம் என்று அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பும் டொனால்ட் ட்ரம்ப் யோசனை தெரிவித்திருந்தார். ‘நீ ஒரு சுவரைக் கட்டினால் நான் ஒரு சுவர்’ என்ற ரீதியில், “5,525 மைல் கொண்ட அமெரிக்கா - கனடா எல்லையில் எல்லைச் சுவரைக் கட்டுவது தொடர்பாகப் பரிசீலிப்பதும் சரியாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார் விஸ்கான்ஸ் மாகாண ஆளுநர் ஸ்காட் வாக்கர்.

சரி, நீங்கள் இருவரும் உங்கள் சுவர்களை எழுப்புங்கள் - நான் ஒரு கூரையைக் கட்டுகிறேன்.

அதுதான் சரி. இரண்டு எல்லைகளிலும் உயர்ந்த சுவர்களை எழுப்புவது மட்டுமல்லாமல், நாடு முழுமைக்குமே பொதுவாக, ஒரு கூரையையும் எழுப்பலாம். குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், தனது சக கட்சிப் போட்டியாளர்களை விமர்சித்திருப்பவருமான லிண்ட்ஸே கிரஹாம் நகைச்சுவையாக விமர்சித்ததுபோல், அப்படியே, நமது துறைமுகங்களில் நாமே கண்ணி வெடி வைத்துக்கொள்ளலாம்!

இரு வேறு உலகங்கள்

வாக்கரின் யோசனை வேடிக்கையானது என்பது எனக்குத் தெரியும். ஆனால், எல்லைப் பாதுகாப்புச் சுவரை மையமாக வைத்து அவரும் ட்ரம்பும் வெளிப்படுத்தியிருக்கும் அச்சங்கள் வேடிக்கையானவை அல்ல. காலுக்குக் கீழே பிரம்மாண்டமான கண்டத் திட்டுக்கள் நகர்வதை மக்களால் உணர முடிகிறது. ‘ஒழுங்கான’ மற்றும் ‘ஒழுங்கற்ற’ என்று இரண்டு பிரதேசங்களாகப் பிரிந்துகிடக்கிறது உலகம். ‘ஒழுங்கற்ற’ உலகத்திலிருந்து ‘ஒழுங்கான’ உலகத்துக்கு மக்கள், கூட்டம் கூட்டமாகச் செல்லும் இந்த விவகாரத்துக்கு, நம்மிடம் எந்தப் பதிலும் இல்லை.

ஆனால், இரண்டு பெருங்கடல்களாலும், மெக்ஸிகோ மற்றும் கனடா என்று நட்பார்ந்த குடியரசுகளாலும் சூழப்பட்ட அமெரிக்கா, இந்தப் புதிய யுகத்தில், அதிகம் பாதிக்கப்படவில்லை. (மெக்ஸிகோவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயரும் மக்களின் மொத்த எண்ணிக்கை தற்சமயம் பூஜ்ஜியம்தான்!). உண்மையில், மூன்று நாடுகளையும் மேலும் ஸ்திரத்தன்மையுடனும், வளத்துடனும் வைத்திருக்க, அண்டை நாடுகளுடனான நமது பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

அதனால்தான், எல்லை என்று வரும்போது, நான் பெரிய வாயிற்கதவுடன் கூடிய உயரமான சுவர்களைத் தான் ஆதரிக்கிறேன். ஆம், எல்லைகளைக் கண்காணிக்கக் கூடிய, அதேசமயம் மூன்று நாடுகளிலும் முதலீடுகள், வணிகம், சுற்றுலா மற்றும் பொருளாதார வாய்ப்புகள் ஆகியவற்றை மேம்படுத்தும் திறன் கொண்ட வாயிற் கதவுகளை! இவற்றைத் தவிர நம்மைப் பாதுகாக்கக்கூடியது எதுவும் இல்லை. நமது அண்டை நாடுகள் தொடர்பாக அமெரிக்கர்களை அச்சத்திலும் அறியாமையிலும் ஆழ்த்தும் வகையில், முற்றிலும் அரசியல் லாபத்துக்காகப் பேசுகிறார்கள் ட்ரம்பும் வாக்கரும்.

புகலிடம் தேடி…

ஆனால், இவர்களில் ஒருவரேனும் இன்றைக்கு ஐரோப்பிய நாடுகளின் அதிபர் பதவிக்குப் போட்டியிடுகிறார் என்றால், எல்லைப் பாதுகாப்புச் சுவர் பற்றி அவர் பேசும் விஷயங்கள் பெரிய அளவில் எதிரொலிக்கும். ஏனெனில், ‘ஒழுங்கற்ற’ உலகங்களான ஆப்பிரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளிலிருந்து நடந்தும், நீந்தியும், படகில் பயணித்தும், பேருந்து மற்றும் ரயில்கள் மூலமாகவும், ‘ஒழுங்கான’ உலகமான ஐரோப்பாவை நோக்கிப் பெரும் கூட்டமாகச் சென்றுகொண்டிருக்கிறார்கள் அகதிகள்.

இது ஒரு தொடக்கம்தான். ஏனெனில், உலகின் மிகப் பெரிய மூன்று சக்திகளான இயற்கை அன்னை (பருவநிலை மாற்றம், அழிந்துவரும் பல்லுயிர்ப் பெருக்கம், வளர்ந்துவரும் நாடுகளில் மக்கள்தொகைப் பெருக்கம்), மூரின் விதி (மைக்ரோசிப்புகள், விரிவாகச் சொன்னால் தொழில்நுட்பத்தின் சக்தி தொடர்ந்து இரட்டிப்படைதல்), மற்றும் சந்தை (உலகத்தை ஒன்றாக, நெருக்கமாகக் கட்டிப்போட்டிருக்கும் உலகமயமாக்கல்) ஆகியவை ஒரே சமயத்தில், அதிவேகமாக வளர்ச்சியடைந்துவருகின்றன. இந்தக் கலவை, பலமான நாடுகளுக்குப் பெரும் அழுத்தம் கொடுப்பதுடன், பலவீனமான நாடுகளை அழித்துவிடுகிறது.

இரண்டாம் உலகப் போரிலிருந்து, பல நாடுகளை ஜனநாயக அடிப்படையிலான மற்றும் சுதந்திரச் சந்தை உலகச் சமூகத்துக்குள் ஒருங்கிணைப்பதில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை கவனம் செலுத்துகிறது.

ஆனால், வெளிவரவிருக்கும் ‘மிஷன் ஃபெயிலியர்: அமெரிக்கா அண்ட் தி வேர்ல்டு இன் தி போஸ்ட் கோல்டு வார் எரா’ புத்தகத்தின் ஆசிரியர் மைக்கேல் மண்டேல்பாம் இவ்வாறு வாதிடுகிறார். “உலகமயமாக்கப்பட்ட உலகில், ஒரே சமயத்தில் பல்வேறு நாடுகள் வீழ்ச்சியடைந்துகொண்டிருக்கும் சமகாலப் பிரச்சினைக்கு நம்மைத் தயார்படுத்தும் வகையில் எந்த ஒரு முன் அனுபவமும் நம்மிடம் கிடையாது” என்கிறார் அவர்.

வரலாற்றுரீதியாகப் பார்த்தால், ஆட்டமான் போன்ற பேரரசுகள், பிரிட்டன், பிரான்ஸ் போன்ற காலனி ஆதிக்க சக்திகள், மன்னர்கள், தளபதிகள் போன்ற சர்வாதிகாரத் தலைவர்கள் தங்கள் ஆளுகையில் தொலைதூரப் பிரதேசங்களை வைத்திருந்தார்கள். ஆனால் நாம் தற்போது ஏகாதிபத்தியத்துக்குப் பிந்தையதான, காலனியாதிக்கத்துக்குப் பிந்தையதான, விரைவில் சர்வாதிகாரத்துக்குப் பிந்தையதாக மாறும் வாய்ப்புள்ள உலகில் இருக்கிறோம்.

இந்தக் காலகட்டத்தில் ஒழுங்கு குலைந்த பகுதிகளை யாராலும் இரும்புக் கரம் கொண்டு கட்டுப்படுத்த முடியாது. ஏனெனில், தனது வேலைகளில் தொடர்ந்து கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் ஒழுங்கான உலகு தனது எல்லையில் ஏற்படும் மோசமான குலைவுகளைப் பற்றி அவ்வப்போதுதான் நினைவில் கொள்கிறது.

கையாள்வது எப்படி?

ஐரோப்பாவுக்குக் கூட்டம் கூட்டமாகச் செல்லும் சிரியா அகதிகளை நினைத்து இதயம் சற்று வலிக்கிறது. அதிக எண்ணிக்கையில் அகதிகளை அனுமதிக்க முடிவுசெய்திருக்கும் ஜெர்மனியின் பெருந்தன்மை ஆச்சரியம் தருகிறது. லிபியா மற்றும் இராக் அகதிகள் மீது அதிகப் பொறுப்பு நமக்கு உண்டு. ஆனால், பல நாடுகள் வீழ்ச்சியடைந்துகொண்டிருப்பதும் மேலும் மேலும் அகதிகளை அனுமதித்துக்கொண்டிருப்பதும் அத்தனை எளிதாகக் கையாள முடியாத விஷயங்கள்.

நாம் நேர்மையானவர்கள் என்றால், வெள்ளம் போன்ற அகதிகள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த நம்மிடம் இரண்டே வழிகள்தான் இருக்கின்றன. நாம் அவற்றில் எதையும் செய்ய விரும்பவில்லை. முதலாவது வழி: எல்லைச் சுவரை எழுப்பி, ஒழுங்கற்ற பிரதேசங்களைத் தனிமைப்படுத்துவது. இரண்டாவது வழி: ராணுவத்தைப் பயன்படுத்தி கெட்டவர்களை அழித்து அப்பகுதிகளின் குடிமக்களை ஒழுங்குபடுத்துவது. பெரிய அளவிலான இத்திட்டம் நிறைவேற இரண்டு தலைமுறைகளாகும்.

ஆனால், நம்மால் கையாளக் கூடிய மூன்றாவது வழி இருக்கிறது என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். தொடர்ந்து அகதிகளை அனுமதிப்பது அல்லது ஆங்காங்கே ‘விமானத் தடை பகுதிகளை’ ஏற்படுத்துவது என்பதுதான் அந்த வழி.

ஒரு பிரச்சினையின் தீர்வு, அது தொடர்பாக நடந்த விஷயங்களை நியாயப்படுத்துகிறது. ஆனால் தற்போது, அதன் காரணிகளைப் பற்றி யாரும் அக்கறை செலுத்துவதில்லை. எனவே, ஒழுங்கற்ற உலகம், ஒழுங்கான உலகத்தை நோக்கி நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது. எச்சரிக்கை: சந்தை, இயற்கை அன்னை மற்றும் மூரின் விதி ஆகிய மூன்றும் தங்கள் இயந்திரங்களை இப்போதுதான் முடுக்கிவிட்டிருக்கின்றன. இது போன்ற விளையாட்டை நாம் இதற்கு முன்னர் பார்த்ததில்லை. எனவே, சில கடினமான புதிய சிந்தனைகளையும், கடினமான தெரிவுகளையும் நாம் எதிர்நோக்கியிருக்கிறோம்.

தமிழில் சுருக்கமாக: வெ. சந்திரமோகன்
© ‘தி நியூயார்க் டைம்ஸ்’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x