Last Updated : 20 Nov, 2020 03:14 AM

 

Published : 20 Nov 2020 03:14 AM
Last Updated : 20 Nov 2020 03:14 AM

அரிதான எடிட்டர்

அது 1986. அப்போது எனக்கு 20 வயது. திருச்சியில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். சிகரெட் வாங்குவதற்காகப் பெட்டிக்கடை சென்றபோது அங்கு தொங்கிக்கொண்டிருந்த புத்தகம் என் கவனத்தை ஈர்த்தது. ராமகிருஷ்ணனின் ‘க்ரியா பதிப்பகம்’ வெளிக்கொண்டுவந்திருந்த ழான்-போல் சார்த்ரின் ‘மீள முடியுமா?’ நாடக மொழிபெயர்ப்பு அது.

தமிழில் அந்தத் தரத்தில் அப்படி ஒரு புத்தகத்தை அதுநாள் வரை என் வாழ்வில் பார்த்ததே இல்லை. ‘நாமும் எதாவது எழுதி ஒருநாள் அது புத்தகமாக வரும் என்றால், அது ‘க்ரியா’வின் வெளியீடாகத்தான் வர வேண்டும்’ என்ற எண்ணத்தை அந்தப் புத்தகம் உருவாக்கியது. பிற்பாடு 1991-ல் ‘கோவேறு கழுதைகள்’ கையெழுத்துப் பிரதியோடு ராமகிருஷ்ணனைச் சந்தித்தேன். இந்த முப்பது ஆண்டுகளில் விவரிக்க முடியாத பிணைப்பைக் கொண்ட உறவாக அது மாறியது. என்னுடைய ஆறு நாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்ட ராமகிருஷ்ணனுக்கும் எனக்கும் இடையிலான உறவை வெறும் பதிப்பாளர் – எழுத்தாளர் என்று குறுக்கிட முடியாது என்பது மட்டும் உறுதி.

மிக அபூர்வமான ஒரு மொழியாளுமை ராமகிருஷ்ணன். மொழி என்பது என்ன, மொழிப் பயன்பாடு எந்த இடத்தில் இலக்கியமாக மாறுகிறது என்பதைத் துல்லியமாக உணர்ந்தவர் அவர். ஒரு எழுத்தாளனுக்கும் சமூகத்துக்கும் உள்ள உறவு என்ன, மொழிக்கும் சமூகத்துக்குமான உறவு என்ன, மொழிக்கும் பண்பாட்டுக் கூறுகளுக்குமான உறவு என்ன, மொழியின் வழியாக சமூக, பண்பாட்டுக் கூறுகள், நிலவியல் அடையாளங்கள், வாழ்க்கை நெறிமுறைகள் எவ்விதம் இலக்கியம் வழி ஆவணமாகின்றன என்றெல்லாம் சொல்லி எனக்குள் மொழிப் பொறுப்புணர்வை ஊட்டியவர் ராமகிருஷ்ணன்.

ஒரு படைப்பில் போகிறபோக்கில் நழுவிவிடக் கூடிய மிகச் சிறந்த பகுதியையோ, வீணாக ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் பலவீனமான பகுதியையோ நாடி பிடிக்கக்கூடிய அரிதான ஆற்றல் ராமகிருஷ்ணனுக்கு இருந்தது. எழுத்தாளர்களுக்கு எடிட்டர் தேவை என்பது தமிழ்ச் சூழலில் தொடர்ந்து மறுதலிக்கப்பட்டுவரும் நிலையில், அவருடைய ‘க்ரியா’ வெளிக்கொண்டுவரும் மொழிபெயர்ப்புகளும், நேரடி ஆக்கங்களும் தொடர்ந்து எடிட்டிங்கின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றிவந்தன. என்னுடைய நூல்களுக்கு ராமகிருஷ்ணனின் எடிட்டிங் பெரும் உதவியாக இருந்திருக்கிறது. ஆனால், இத்தனை படைப்புகளில், தானாக ஒரு சொல்லை ராமகிருஷ்ணன் சேர்த்ததும் இல்லை, நீக்கியதும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், எழுத்தாளர்கள் – மொழிபெயர்ப்பாளர்களுடன் அவர் நடத்தும் உரையாடல்தான் இந்த எடிட்டிங்கின் முக்கியமான அங்கமாக இருந்திருக்கிறது. அவர் எழுப்புகிற கேள்விகள், சந்தேகங்கள் படைப்பின் மீது பெருவெளிச்சத்தைப் பாய்ச்சுபவையாக இருந்திருக்கின்றன.

சல்மான் ருஷ்டி தன்னுடைய ‘மிட்நைட்’ஸ் சில்ட்ரன்’ நாவலின் முன்னுரையில், “இந்த நாவல் இவ்வளவு சிறப்பாக வருவதற்கு என்னுடைய எடிட்டரே காரணம்” என்று எழுதியது நினைவுக்குவருகிறது. நானும் அப்படி ஒரு கடிதத்தை என்னுடைய முதல் நாவல் வெளிவந்தபோது ராமகிருஷ்ணனுக்கு அனுப்பினேன் – அதுதான் நான் அவருக்கு அனுப்பிய ஒரே கடிதமும்கூட. அதற்கு ராமகிருஷ்ணன் பதில் எழுதியிருந்தார், “நீங்கள் வைரத்தைக் கொண்டுவந்தீர்கள். அதனால், என்னால் பட்டை தீட்ட முடிந்தது. நீங்கள் ஒரு கரிக்கட்டையைக் கொண்டுவந்திருந்தால் என்னால் எதுவும் செய்திருக்க முடியாது!”

- இமையம், ‘கோவேறு கழுதைகள்’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x