Published : 31 Oct 2015 08:25 AM
Last Updated : 31 Oct 2015 08:25 AM

சோட்டா ராஜன்கள் வளர்வதைத் தடுக்க என்ன வழி?

இந்தோனேசியாவில் பிடிபட்டிருக்கிறார் சோட்டா ராஜன். மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் என்ற பெரிய திமிங்கலத்திடம் பயிற்சி பெற்ற சிறிய மீன்தான் ராஜன். பின்னாளில் இந்தச் சின்ன மீனும் ஒரு குட்டி திமிங்கலமாகிவிட்டது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாகத் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் சோட்டா ராஜன். ஆஸ்திரேலிய போலீஸார் அளித்த துப்பின் தொடர்ச்சியாக இப்போது இந்தோனேசிய போலீஸார் அவரைக் கைதுசெய்திருக்கின்றனர். சோட்டா ராஜனை இந்தியாவுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

சோட்டா ராஜன் பிடிபட்டிருப்பதை நம்முடைய காவல் துறையின் வெற்றியாகக் கூற முடியாது. கடந்த 6 மாதங்களாக அவர் இந்தியக் காவல் துறை உயர் அதிகாரிகளுடன் தனது உதவியாளர்கள் மூலம் பேசிக்கொண்டிருந்தார் என்பது தெரியவந்திருக்கிறது. தாவூத் இப்ராஹிமின் மற்றொரு விசுவாசியான சோட்டா ஷகீல் என்பவர் மூலம் தன்னுடைய உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என்று ராஜன் அஞ்சியதாகவும் தெரியவருகிறது. வேற்று நாட்டில் கொல்லப்படுவதைவிட, சொந்த நாட்டில் சிறையில் பாதுகாப்பாக இருப்பதே மேல் என்ற முடிவுக்குக்கூட அவர் வந்திருக்கலாம்.

இந்தியா போன்ற ஒரு நாட்டின் காவல் துறையால் தேடப்படும் ஒருவர், போலி பாஸ்போர்ட்டுடன் வெளிநாட்டில் எவ்வளவு காலம் மிகவும் வசதியாகத் தங்க முடிகிறது என்பதிலிருந்தே நம்முடைய தவறுகளை நாம் உணர்ந்துகொள்ளலாம். தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானின் கராச்சியில் இருக்கிறார் என்று இப்போதும் பல தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இப்ராஹிமும் ராஜனும் இந்தியாவில் மட்டுமல்லாது பிற நாடுகளிலும் கிளை பரப்பி சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவந்தாலும் அந்தந்த நாடுகளின் செல்வாக்கு மிக்கவர்களின் அரவணைப்பால், இந்திய போலீஸாரால் அவர்களை ஏதும் செய்ய முடியவில்லை. மும்பையில் 1993-ல் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான பழி மொத்தமும் தாவூத் இப்ராஹிம் மேல் விழுந்தது. இதனால் ராஜனை, தாவூத் இப்ராஹிமுக்கு மாற்று சக்தியாகக்கூட காவல் துறையிலேயே சிலர் கருதினர். பயங்கரவாதத் தடைச் சட்டப்படி வழக்குகளுக்கு உள்ளான இந்திய முஸ்லிம்களுக்காக வாதாடி வந்த ஷாஹித் ஆஸ்மி என்ற வழக்கறிஞர் மும்பையில் 2010 பிப்ரவரியில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். அது மும்பை போலீஸாரின் முறையற்ற சில செயல்கள் வெளியில் தெரியாமல் மறைக்க செய்யப்பட்ட வேலை, சோட்டா ராஜனின் கும்பல் அதைச் செய்தது என்ற முணுமுணுப்பு அப்போது கிளம்பியது இங்கு நினைவுகூரத்தக்கது. சோட்டா ராஜன்களின் வாழ்க்கைக்குப் பின் இத்தகைய பின்னணிகளும் மறைந்திருக்கின்றன.

இந்தியாவுக்கு எதிரான நாச வேலைகளில் தாவூத் இப்ராஹிம் ஈடுபட்டார் என்பது இந்திய நீதிமன்றங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது, வெளிநாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பும் அதை ஏற்றுக்கொண்டுள்ளன. தாவூத் இப்ராஹிம் கும்பலின் நடவடிக்கைகள், பண பலம், வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து சில தகவல்களைப் பெற சோட்டா ராஜன் இந்தியக் காவல் துறைக்கு ஓரளவுக்கு உதவக் கூடும்.

ராஜனை இந்தியாவுக்கு அழைத்து வந்து அவருடைய குற்றங்களை விசாரித்து உரிய தண்டனையை வழங்கும்போது இந்தியக் காவல் அமைப்புகள் இன்னொரு கேள்வியையும் தனக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும். இன்னொரு சோட்டா ராஜன் வளராமல் இருக்க தாம் என்ன செய்ய வேண்டும் / செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே அது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x