Published : 18 Nov 2020 10:10 AM
Last Updated : 18 Nov 2020 10:10 AM

சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 12: சர்க்கரையுடன் வாழப் பழகுவோம்

கல்யாணி நித்யானந்தன்

என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதைவிட எவ்வளவு, எப்படிச் சாப்பிடுகிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

சாதாரணமாக நாம் வாயிலிட்ட கவளத்தை மென்று முழுவதுமாக விழுங்கும் முன்னே அடுத்த கவளத்தைப் போட்டு விடுகிறோம். ஒரு சின்ன தேக்கரண்டியாலோ, முள்கரண்டியாலோ, உண்ணுங்கள். ஒரு வாய் போனதும் அதைத் தட்டின் அருகில் வைத்து விடுங்கள். வாயில் உள்ளது காலியானவுடன் அடுத்த ‘ஸ்பூன்’ எடுத்துக்கொள்ளுங்கள். நம் மூளையில் ஓர் இடம் 'appetite center' இருக்கிறது. நம் பசியைத் தூண்டுவது, அடக்குவது அதன் வேலை. 20 நிமிடங்கள் சாப்பிட்டால், பசி அடங்கிவிடும். ‘ஸ்பூனால்’ மெல்ல, குறைவாக 20 நிமிடங்கள் சாப்பிட்டுப் பசியடக்க முடியும். புரிகிறதா? உதாரணமாக நீங்கள் அகோரப் பசியுடன் வந்து அள்ளி அள்ளி சாப்பிட்டால் அதன் பிறகுகூடப் பசி அடங்காது. கவனித்திருக்கிறீர்களா?

சாதத்தின் அளவு பொரியலும், பொரியலின் அளவே சாதமும் பரிமாறிக்கொண்டு, குழம்பு, ரசம் கலந்து உண்ணுங்கள். சாப்பிட, சாப்பிட மேலும் மேலும் பொரியலும், குழம்பும் போட்டுக்கொள்ளுங்கள். கடைசியில் பருக்கைகளைத் தேட வேண்டும். பொரியலும், குழம்பும்தான் தட்டில் நிறைந்திருக்கும். இது எப்படி! சிறிய அளவில் தினம் 4 முறை உணவு உண்ண வேண்டும்.

நோய் கட்டுப்பாட்டுக்கு வரும்வரை நாவடக்கம் அவசியம். வைத்தியம் தொடங்கிய 3 மாதம் வரையாவது இனிப்பு, பழ வகைகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. பிறகு 80 சதவீத நேரத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்கும் நம்பிக்கை வந்துவிட்டால் 20 சதவீதம் ஒரு ஜாங்கிரியோ, ஒரு சின்ன ஐஸ்க்ரீமோ உங்கள் வாழ்க்கையை, நாவை இனிக்கச் செய்யட்டும். அதுவும் மூன்று, நான்கு மாதங்களுக்கு ஒருமுறைதான்! கவனம்.

நேரம் தவறாமல் மருந்து எடுத்துக்கொள்வதுபோல் நேரம் தவறாமல் உணவும் உண்ணுங்கள். வீட்டில் விருந்தாளி வந்தால்கூட, உங்கள் உணவு நேரத்தை மாற்றிக்கொள்ள வேண்டாம். முக்கிய விருந்தாளி மோடி மாமாவோ, ‘ட்ரம்ப்’ அத்தானோ ஆனாலும்! நீங்கள் உண்ட பிறகு அவர்களைத் தாராளமாக உபசரியுங்கள். உணவு மட்டுமல்ல... தினசரி நடைப்பயிற்சி, தேகப் பயிற்சியைப் பழக்கமாக்க வேண்டும்.

சிலருக்கு ‘இன்சுலின்’ ஊசி தேவை. சிலருக்கு மாத்திரை. சிலர் மாத்திரையில் தொடங்கிப் பின் சில காலத்துக்குப் பிறகு ‘இன்சுலின்’ ஊசிக்கு மாற வேண்டியிருக்கிறது. ஏன்? கணையம் என்கிற சுரப்பி இன்சுலினைச் சுரக்கிறது. இதுதான் நம் ரத்தத்தின் சர்க்கரையை நம் திசுக்கள் உபயோகிக்க உதவுகிறது. உணவு உண்ட 10 - 20 நிமிடங்களில் இந்த ‘இன்சுலின்’ சுரந்து ரத்தத்தில் சேர்கிறது. இது நம் திசுக்கள் சர்க்கரையை உபயோகிக்க உதவுகிறது. ‘இன்சுலினை’ செயலிழக்கச் செய்யக்கூடிய வேறு ஒரு வேதிப் பொருள் சுரக்கிறது. இவை இரண்டும் சமச்சீராக வேலை செய்து, ரத்தத்தில் சர்க்கரை அளவை மலையும் மடுவுமாக ஏறி இறங்காமல் கடற்கரை போல் சமநிலையில் வைக்கின்றன.

சர்க்கரை நோயில் இந்த ‘இன்சுலின்’ சுரத்தல் குறைகிறது. இது மிகக் குறைவாக இருந்தால், ‘இன்சுலினை’ ஊசி மூலம் செலுத்திக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பலவிதமான ஊசி மருந்துகள் வந்துவிட்டன. உடனே வேலை செய்யத் தொடங்கும் வகை, மெல்ல மெல்ல வேலை செய்வது என்கிற வகை. உங்கள் நோயின் நிலைக்கு ஏற்ப இவை தனியாகவும், கலந்தும் சரியான அளவை உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார். இப்போது தோலுக்கடியில் வைக்கப்பட்டு மெல்ல சிறிய அளவில், விடாமல் ரத்தத்தில் செலுத்தும்படி ‘பம்ப்’ கூட வந்துவிட்டது.

மாத்திரை ஏன்? அதிகப்படி ‘இன்சுலினை’ செயலிழக்கும்படி செய்யும் ஒரு வேதிப் பொருளைப் பற்றிச் சொன்னேன் அல்லவா? (Enzyme insulinase). இந்த மாத்திரைகள் அந்த வேதிப் பொருளைச் செயலிழக்கச் செய்வதன் மூலம், இருக்கிற குறைந்த அளவு ‘இன்சுலின்’ நமக்குக் கிடைக்கிறது. ஆனால், ஓரளவு ‘இன்சுலின்’ இருந்தால்தான் இந்த மாத்திரையினால் பயன் உண்டு. இப்போது புரிகிறதா, ஏன் நாளடைவில் சிலருக்கு மாத்திரையுடன் ஊசியும் தேவைப்படுகிறது என்று?

ஊசியானாலும், மாத்திரையானாலும் உணவுடன் மருத்துவர் சொன்னபடிதான் எடுத்துக்கொள்ள வேண்டும். வீட்டிலே சரி... வெளியில் போனால்? அதுவும் சில நாட்கள் சுற்றுலா சென்றால்? என்ன உணவு, எப்போது, எவ்வளவு இருக்கும் என்பது நிச்சயமற்றது. அதனால் கண்டிப்பாக உணவு படைக்கப்பட்ட பிறகு, அது என்ன, எவ்வளவு, சாப்பிடக் கூடியதா என்று கண்ணால் கண்ட பிறகே ஊசியோ, மாத்திரையோ ஏற்க வேண்டும். இந்தச் சூழ்நிலையிலே ‘உணவுக்கு 10 நிமிடம் முன்பு ஊசி, உணவுண்டு 10 நிமிடம் கழித்து மாத்திரை’ என்கிற விதிமுறைகள் ஒத்துவராது. ஏன் தெரியுமா?

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால் அது உடனேயே விளைவுகளை உண்டாக்காது. 300 - 400 ஆனால்கூட. ‘‘அலுப்பு வருது. காலை 11 மணிக்கே படுத்துக்கொள்ள வேண்டும் போலிருக்கு..’’ என்றுதான் சொல்வார்கள். அல்லது உடல் எடை மடமடவென்று குறையலாம். மாவுச் சத்து, சக்திக்கு உபயோகிப்பதற்குப் பதில் உடல் கொழுப்பைக் கரைக்கும். ஆனால், சர்க்கரையின் அளவு குறைந்தால் உடனே விளைவுகள் நிகழும். சற்று குறைந்தால் (90-க்குக் கீழ்) அதீத பசி, படபடப்பு ஏற்படலாம். அதிகமாக, வேகமாகக் குறைந்தால் தீவிர விளைவுகள், அதாவது தலைசுற்றல், மயக்கம், வாய் குழறுதல், வியர்வை, ஏன் வலிப்புகூட வரலாம். இதனால்தான் ஒருவேளை மருந்து எடுக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் உணவு சரியின்றியோ, குறைந்தாலோ, மருந்தைத் தவிர்ப்பதுதான் நல்லது.

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். ‘இனிமை’யானவர். கல்யாண விருந்தில் கொஞ்சமாக சாதம், சேம்பு ரோஸ்ட் எடுத்துக்கொண்டு 2 வகை பாயசம் (அதுவும் சூடாக வாழை இலையில்), ஒரு ரசமலாய் (அ) ஜாங்கிரி... கொடுமை என்னவென்றால் ‘வீட்டுக்குப் போனதும் ஒரு மாத்திரை அதிகம் போட்டால் போச்சு’ என்பார். மனத்தாலே தலையில் அடித்துக்கொள்வேன். ‘செந்தமிழ்தான் நாப்பழக்கம்’. இதுவும் அதேபோலவா?

நான் என் மாணவர்களிடம் வேடிக்கையாகக் கூறுவேன். நான் இறந்து சொர்க்கத்துக்கு போனவுடன் (ரொம்ப ஆசைதான்!) கடவுளிடம் ஒரு ‘அப்பாயின்ட்மென்ட்’ வாங்கி, ‘‘ஆண்டவனே, ஒரு வேண்டுகோள். இனி சர்க்கரை அளவு 200 கடந்த உடனே முகத்தில் (மூக்கானால் மிக நன்று) ஒரு பெரிய கரும்புள்ளி தோன்ற வேண்டும். அப்போதுதான் மனிதன் உடனே வைத்தியரை நாடுவான். இனி உங்கள் படைப்பில் இது சேர்க்கப்படணும்’’ என்று இறைஞ்சுவேன் என்று கூறுவதுண்டு.

‘டயாபடீஸ்’ வெறும் சர்க்கரை அளவைப் பற்றி மட்டும் அல்ல. அது கொஞ்சம் கொஞ்சமாக உடலில் உள்ள சிறிய ரத்த நாளங்களைப் பாதிக்கும். நம் உடலில் மூளை, இதயம், சிறுநீரகம், கண்கள், பாதம், விரல்கள் ஆகியவற்றில் உள்ள ரத்த நாளங்கள் மிக முக்கியமானவை. அதனால்தான் கட்டுப்படுத்தப்படாத, நாள்பட்ட சர்க்கரை வியாதி இந்த உறுப்புகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. பக்கவாதம், மாரடைப்பு, பார்வை இழத்தல், சிறுநீரக செயலிழப்பு, விரல்கள் மரத்தோ, அழுகியோ போவது என எதுவேண்டுமானாலும் ஏற்படலாம்.

‘டயாபடீஸ்’ ஒரு முரட்டுக் குதிரை. நோயாளி அதில் ஆயுள் முழுவதும் சவாரி செய்ய வேண்டும். எனவே, கடிவாளம் எப்போதும் கையில் கவனமாகப் பிடிக்கப்பட்டு இருக்க வேண்டும். குதிரை ஒரு சந்தைக்குள்ளோ, ஒரு ஊர்வலத்துக்குள்ளோ போனால், மிரண்டு, உங்களைக் கீழே தள்ளிவிடக் கூடும். கடிவாளம் கட்டில் இருந்தால் அபாயம் தவிர்க்கப்படும். இந்த ‘சந்தை’ ‘ஊர்வலம்’ எல்லாம் நம் உடலில் ஏற்படும் நோய்த் தொற்றுகள். ஒரு சொத்தைப் பல்லோ, சொறிந்து புண் சீழ் பிடித்ததாகவோகூட இருக்கலாம். கட்டுக்கடங்காமல் போனால் தொற்று காட்டுத்தீ போல் பரவக்கூடும்.

இது உடன் பிறந்தே நம்மை உருக்கும் வியாதி. தெரிந்த எதிரி. கரோனா போலத் தெரியாத எதிரி அல்ல. அதனுடன் அகலாது அணுகாது தீக்காய்வார் போல் வாழக் கற்றுக்கொள்ளுங்கள். எத்தனை விதமான சுற்றங்களுடன் சமாளிக்கிறோம். அதுபோல் இதுவும் ஒரு சவால்தான். ஆனால், எதிரியை சீக்கிரம் குணம் கண்டு கொள்ளுங்கள்.

நம் நலம்தான் குடும்ப நலம். ‘இனிமையுடன்’ வாழ்க.

சந்திப்போம்... சிந்திப்போம்..!

கட்டுரையாளர்: கல்யாணி நித்யானந்தன்,
இதயநோய் நிபுணர் (பணி நிறைவு),

டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.

தொடர்புக்கு: joenitya@yahoo.com

ஓவியம்: வெங்கி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x