Published : 18 Nov 2020 03:13 AM
Last Updated : 18 Nov 2020 03:13 AM

வானளாவிய அதிகாரம் பெற்றவர்களா ஆளுநர்கள்?

மாமுண்டி சரவணன்

ஒரு வழியாகச் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுநர்களின் செயல்பாடுகள் மீது நீதிமன்றங்கள் அதிருப்தி தெரிவிக்கத் தொடங்கியுள்ளன. ஆளுநர் என்கிற பதவி மீதான புனிதத் தன்மை சீர்கெட்டு வெகுகாலமாகியும், தற்போதுதான் நீதிமன்றங்கள் அதிருப்தி தெரிவிக்கவாவது முன்வந்திருக்கின்றன என்பது ஜனநாயகம் சிறிது மூச்சுவிடுவதற்கான நம்பிக்கையைத் தருகிறது.

அரசமைப்புச் சட்டப் பதவி என்கிற பொருளில் பயன்படுத்தப்பட்டு ஆளுநர் பதவிக்குப் புனிதம் ஏற்றப்படுகிறது. அரசியல் சாசனம் எழுதப்பட்ட காலத்தில், அதன் பிதாமகர்கள் பெருந்தன்மை கொண்டவர்களாகவும், ஆளுநர் என்கிற பதவிக்கு வருகிறவர்கள் மாபெரும் ஆளுமைகளாக இருப்பார்கள் என்றும் கருதிக்கொண்டார்கள். சுதந்திரத்துக்குப் பிந்தைய காலங்களில் ஒருசில ஆளுநர்கள் அப்படிப் பெருந்தக்க வாழ்வு வாழ்ந்திருக்கிறார்கள். பின்னாட்களில் வந்தவர்கள், தாங்களும் சாதாரண மனிதர்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். ஆனால், சாதாரண அரசு ஊழியர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட நடத்தை விதிகளைப் போல் இல்லாமல், ஆளுநர்களுக்கு எந்தவித நடத்தை விதிகளும் வகுக்கப்படவில்லை. அதனாலேயே, சில ஆளுநர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டு, ஊடகங்களில் பெயர் அடிபட்டபோதும், அவர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இறங்கும்படி ‘கேட்டுக்கொள்ளப்பட்டார்களே’ தவிர, அந்த நடத்தைக்காக அவர்கள் மேல் எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆளுநர் பதவியேற்கும் முன் ஈடுபட்ட முறைகேடுகளுக்காக, பதவியில் இருக்கும்போதும், பதவியிறங்கிய பின்னும் நீதிமன்றங்களின் முன் ஆஜராவதிலிருந்து அவருக்கு விலக்கு இருக்கிறது. இப்படி வானளாவிய ஆதிக்கம் கொண்ட ஆளுநருக்கு இருக்கும் மிகச் சில சட்டபூர்வமான வேலைகளுள் ஒன்று, அரசிடமிருந்து வரும் கோப்புகளுக்கு ஒப்பம் இடுவது. ஆளுநர் மேல் நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்க முடியாது என்பதற்கான ஒரு அடிப்படைக் காரணம், அவரது நடவடிக்கைகள் மாநில அமைச்சரவையின் பரிந்துரைகளின் மேல் நடப்பது என்பதுதான். இந்தப் பாதுகாப்பு அவர் தனிப்பட்ட முறையில், குறிப்பாக பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் எடுக்கும் முடிவுகளுக்குக் கிடையாது. வேந்தரின் முடிவுகள் நீதிமன்ற வரம்புக்கு உட்பட்டவையே.

அரசிடமிருந்து அனுப்பப்படும் கோப்புகளை ஒரு முறை திருப்பி அனுப்பவும், மறுமுறை அனுப்பப்பட்டால் ஒப்புதல் அளிப்பதும் தவிர வேறு வழி இல்லை என்பதுதான் சட்டப்படியான உண்மை நிலவரம். எந்த ஒரு கோப்பின் கருத்துருவையும் முற்றிலுமாக மறுதலிக்கும் அதிகாரம் ஆளுநருக்குக் கிடையாது. எனவேதான், தாங்கள் விரும்பாத கோப்புகளை மறுதலிக்காமலும், திருப்பி அனுப்பாமலும் மாதக் கணக்கில் கிடப்பில் போட்டுவிடுகிறார்கள். கிடப்பில் போடுவது என்பது அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரம் இல்லை, அது அவர்கள் கையாளும் தந்திரமே.

பொதுவாக, பெரும்பாலான ஆளுநர்கள் மாநில அரசுடன் ஒத்துப்போய்விடுவார்கள். அதனால், அரசின் அன்பையும் அனுசரணையையும் பெற்று மகிழ்வானதொரு காலத்தை மாநிலத்தில் கடத்துவார்கள். ரொம்பவும் அபூர்வமாக, ஒன்றிய அரசின் விருப்பத்துக்கு எதிராக மாநில அரசைக் கலைக்க மறுத்துத் தன் பதவியை ராஜினாமா செய்த சுர்ஜித் சிங் பர்னாலா போன்ற ஆளுநர்களும் உண்டு. மாநில அரசுடன், முதல்வருடன், மிகவும் முரண்பட்டு அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாகச் செயல்பட்டவர் அந்நாளைய ஆளுநர் சென்னா ரெட்டி. வலிமை பொருந்திய முதல்வராக இருந்த ஜெயலலிதா ஆளுநரை ராஜ்பவனுக்குள்ளேயே முடக்கிப் போட்டார். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக்களுக்குக் கூட அரங்கங்கள் மறுக்கப்பட்டு அவை காந்தி மண்டபத்தில் நடத்தப்பட்டன. அப்போதிருந்த தலைமைச் செயலக அலுவல் நடைமுறை நூலில் உள்ள விதிகளில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்படும் கோப்புகளின் எண்ணிக்கை பெருமளவு குறைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, பல்கலைக்கழகங்களுக்கான பொதுச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் ஒரு தனிச்சட்டம் இன்னமும் இருக்கிறது. அவற்றை ஒருங்கிணைத்து ஒரு பொதுச் சட்டம் கொண்டுவருகிற நோக்கில் அந்தச் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், ஆளுநரிடம் இருந்த பிணக்கில், பல்கலைக்கழகங்களின் வேந்தராக ‘முதலமைச்சரை’ நியமிக்க அந்தச் சட்டம் வகைசெய்தது. தனது அதிகாரத்தை விட்டுக்கொடுக்க விரும்பாத சென்னா ரெட்டி, அந்தக் கோப்புக்கு நீண்ட காலத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் வைத்திருந்தார். ஆளுநருக்கு ஆதரவாக அப்போது பல்கலைக்கழக மானியக் குழு முதலமைச்சரை வேந்தர் ஆக்க ஒப்புக்கொள்ளவில்லை. அந்த மாநில அரசின் ஆட்சி முடியும் காலகட்டத்தில் அக்கோப்பு திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது.

அடுத்து ஆளுநராக வந்த நீதியரசர் ஃபாத்திமா பீவி, தான் உண்டு தன் சுற்றுப் பயணங்கள் உண்டு என்று அமைதியாக இருந்தாலும், அடுத்த தேர்தலில் அதிமுக வென்றபோது, ஜெயலலிதாவை அவசரப்பட்டு முதலமைச்சராக நியமனம் செய்துவைத்தார். தேர்தலில் போட்டியிடவே தகுதியிழந்த ஜெயலலிதாவை முதலமைச்சராக நியமனம் செய்தது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, ஆளுநர் பாத்திமா பீவி ராஜினாமா செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். பின்னாட்களில் ஜெயலலிதாவும் ஃபாத்திமா பீவியும் நல்ல நட்புடன் இருந்தார்கள்.

அடுத்து ஆளுநராக வந்த ஆந்திரத்தின் முன்னாள் டி.ஜி.பி. ராம்மோகன் ராவ் ஜெயலலிதாவின் அரசுக்கு நல்ல நண்பராகவே இருந்தார். எந்தக் கோப்பினையும் தாமதம் செய்யாமல் ஒப்புதல் அளித்து அனுப்பிவைத்தார். டெஸ்மா சட்டத்துக்குக் கூட உடனடி ஒப்புதல் அளித்து அரசு ஊழியர்களின் அதிருப்தியைப் பெற்றுக்கொண்டார்.

அடுத்த மைய அரசில் பங்குபெற்ற திமுக, தனக்காகப் பதவியைத் துறந்த சுர்ஜித் சிங் பர்னாலாவை மீண்டும் ஆளுநராகக் கொண்டுவர முயற்சித்தது. அதை அறிந்த அதிமுக நீதிமன்றத்தை நாடியது. ஐந்து ஆண்டுகளுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டவர் பதவி நீக்கம் செய்யப்படக்கூடாது என்பது அவர்களது வாதம். நீண்ட விவாதங்களுக்குப் பிறகு, ஆளுநர்களை பதவி நீக்கம் செய்ய முடியாது என்றும் ஆனால், இடமாற்றம் செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இடமாற்றத்தை விரும்பாத ராம்மோகன் ராவ் ராஜினாமா செய்தார். சுர்ஜித் சிங் பர்னாலா வேண்டாத விருந்தாளியாக சென்னை வந்தார். ஆனால், சமீபத்திய ஆளுநர்களில் ஏழு வருடங்களுக்கும் மேலாக பதவியில் இருந்தவர் அவர் மட்டுமே.

கோப்புகளைத் தாமதம் செய்வதில் ஆளுநர்களுக்கு விருப்பு வெறுப்புகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. ஜெயலலிதாவின் சில பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் தராமல் சில கோப்புகளை கிடப்பில் போட்டார் சுர்ஜித் சிங் பர்னாலா. தாமதம் செய்த ஒரு கோப்பின் காரணமாக ஒரு முக்கிய அரசியல் புள்ளி கைதாவது தவிர்க்கப்பட்டது. மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு எதிர்க்கட்சிகளின் போராட்டத்தாலும், நீதிமன்ற அறிவுரைகளாலும் (நீதிபதியின் கண்ணீராலும்) நடந்தேறியது என்பதை உலகறியும். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற பாணியில் கடைசி நேர ஒப்புதலை அரசும் ஆளுநரும் வழங்கிவிட்டு, தங்களுக்குத் தாங்களே நன்றி சொல்லிக்கொள்கிறார்கள்.

ஆளுநரின் அதிகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது எனவும், வானளாவிய அதிகாரம் கொண்டவர் ஆளுநர் என்றும் வழக்கறிஞர்களும், முக்கியமாக அரசு உயர் அதிகாரிகளும் ஒரு பிம்பத்தைத் தோற்றுவிக்கிறார்கள். ஒரு கோப்பினை மறுதலிக்க அதிகாரம் இருந்தால், காலதாமதம் செய்ய மாட்டார்கள் என்பது வெளிப்படை. காலதாமதம் செய்வதற்கு அரசமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவும் ஆளுநர்களுக்குச் சலுகை வழங்கவில்லை. காலதாமதம் என்பது ஒரு தந்திரமே. ஆளுநர்கள் செயல்பட எந்தக் காலக்கெடுவும் எழுதப்படவில்லை என்பதாலேயே நீதிமன்றங்கள் தலையிட வழிவகை இல்லாமல் போகிறது. விதிகளற்ற வெற்றிடம் என்பது தனக்கான விதிகளைத் தானே வகுத்துக்கொள்வது என்று பொருள்படாது. 7.5% ஒதுக்கீட்டில் அரசு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசாணை வெளியிட்டவுடன் ஆளுநரின் ஒப்புதல் தேவையற்ற ஒன்றாகிவிட்டது. 7 பேர் விடுதலை விவகாரத்திலும் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருப்பது ஆசுவாசம் தருகிறது. பல ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் ஒரு தனிமனிதனின் வாழ்க்கையில், தினந்தோறும் எதிர்பார்ப்புகளுடன், மேலும் இரண்டு ஆண்டுகள் எத்தனை கொடுமையானதாக இருக்கும் என்பதை மனிதாபிமான அடிப்படையில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அரசியல் சாசனப் பிரிவு 162-ஐ பயன்படுத்தி மாநில அரசு ஆளுநரின் அதிகாரத்தைக் கடந்து ஒரு அரசாணை வெளியிட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றம் பிரிவு 142-ஐ பயன்படுத்தி முழுமையான நீதியை நிலைநாட்டுவதற்காக உத்தரவு பிறப்பித்தால் அது ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கலாம். ஆனால், அந்த வாய்ப்பை ஆளுநர் விட்டுக்கொடுத்துவிட மாட்டார் என்று நம்புவோம்.

- மாமுண்டி சரவணன்,

தொடர்புக்கு: mozhivalan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x