Published : 17 Nov 2020 03:13 am

Updated : 17 Nov 2020 07:38 am

 

Published : 17 Nov 2020 03:13 AM
Last Updated : 17 Nov 2020 07:38 AM

ட்ரம்ப்பியம் ஏன் நீடிக்கிறது?

why-trumpism-lasts

தாமஸ் எல்.ஃப்ரீட்மேன்

இந்தத் தேர்தலில் தோல்வியடைந்தது வேறு யாருமல்ல அமெரிக்காதான். அமெரிக்க வரலாற்றின் மிகவும் பிளவுபடுத்தும், நேர்மையற்ற அதிபராட்சியின் நான்காண்டுகளை அமெரிக்கா அனுபவித்திருக்கிறது. இந்த ஆட்சி அமெரிக்காவின் இரட்டைத் தூண்களான ‘உண்மை’ மீதும், ‘நம்பிக்கை’ மீதும் தாக்குதல் நிகழ்த்தியிருக்கிறது. டொனால்டு ட்ரம்ப் ஒரு நாள்கூட எல்லோருக்குமான அதிபராக இருக்க முயன்றது இல்லை; வேறெந்த அதிபரும் துணிந்திராத அளவில் அவர் விதிமுறைகளை உடைத்துப்போட்டிருக்கிறார், அத்துமீறியிருக்கிறார். தற்போது தேர்தலை மோசடி என்று கூறியிருக்கிறார், உச்ச நீதிமன்றத்தின் உதவியையும் நாடியிருக்கிறார்.

விஸ்கான்ஸின், மிஷிகன், பென்ஸில்வேனியா, ஜார்ஜியா, அரிசோனா, நிவாடா போன்ற மாநிலங்களில் பல லட்சக்கணக்கான வாக்குகள் எண்ணப்படவிருந்த வேளையில், “சொல்லப்போனால், நாம் இந்தத் தேர்தலில் வெற்றியடைந்திருக்கிறோம்” என்று ட்ரம்ப் அறிவித்தார். “நாம் உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லப்போகிறோம்” என்றார் ட்ரம்ப், எந்த அடிப்படையில் என்று விளக்காமல். “வாக்குப்பதிவை நிறுத்த விரும்புகிறோம்” என்றார்.


தேர்தல் பாடங்கள்

“இறுதியாக, எந்த எண்ணிக்கை வந்தாலும் ‘எல்லாம் போதும்’ (அதாவது, ட்ரம்ப்பால் அனுபவித்த துயரங்கள் போதும்) என்று அமெரிக்கர்கள் கூறியதன் தீவிரம் போதவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது” என்கிறார் தலைமைத்துவத்தைப் பற்றி எழுதுபவரான டோவ் செய்ட்மன். கூடவே, “உடலுழைப்புத் தொழிலாளர்களின் அரசியல் அலை ஏற்படவே இல்லை. ஆனால் மிக முக்கியமாக, தார்மீக அலை என்பதே ஏற்படவில்லை. நம்மையெல்லாம் பிளவுபடுத்தும் தலைமையைப் பரவலாக யாரும், குறிப்பாக இந்தப் பெருந்தொற்றின் காலத்தில் நிராகரிக்கவில்லை” என்கிறார்.

இந்தத் தேர்தல், பிளவுகளை மேலும் துலக்கமாக்கிக் காட்டியிருக்கிறது. பிரச்சாரத்தின்போது அதிபர் பல்வேறு சமிக்ஞைகள் மூலம் தன்னை அமெரிக்காவின் சுருங்கிக்கொண்டே வரும் வெள்ளைப் பெரும்பான்மையினரின் தலைவராக முன்னிறுத்திக்கொண்டார். அவரது ஆட்சிக் காலத்தில் மிகவும் தீங்கு ஏற்படுத்தும் விதத்தில் அவர் நடந்துகொண்டாலும் அவருக்கு இன்னும் தொடர்ந்து இருக்கும் ஆதரவைக் கீழ்க்கண்ட இரண்டு எண்கள் இல்லாமல் புரிந்துகொள்ளவே முடியாது:

அமெரிக்க மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையமானது இந்த ஆண்டின் நடுப் பகுதிக்குள் நாட்டின் 7.4 கோடிக் குழந்தைகளில் வெள்ளையர் அல்லாதோர்தான் பெரும்பான்மையாக இருப்பார்கள் என்று உத்தேசித்தது. 2040-கள் வாக்கில் வெள்ளையர்கள் அமெரிக்க மக்கள்தொகையில் 49% இருப்பார்கள் என்றும் லத்தீனோஸ், கறுப்பினத்தவர்கள், ஆசியர்கள், பிற இனங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 51% இருக்கும் என்றும் உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.

வெள்ளையர்களிடையே, குறிப்பாகப் பட்டதாரியல்லாத உழைக்கும் வர்க்க ஆண்களால் தங்களுடைய நாடு கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளைச் சிறுபான்மையினர் நாடாக மாறிவருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை; அதை எதிர்க்கவும் செய்கின்றனர். அந்த மாற்றத்தின் சமூக, கலாச்சார, பொருளாதார விளைவுகளுக்கு எதிரான தடுப்புச் சுவராக அவர்கள் ட்ரம்ப்பைப் பார்க்கிறார்கள். அமெரிக்கா மேலும் பன்மைக் கலாச்சாரத்தை நோக்கி நகர்ந்து செல்வதை, தன்னிடமுள்ள நிறவெறியைக் கருத்தில் கொள்வதை நல்லதொரு போக்காக ஜனநாயகக் கட்சியினர் கருதினாலும் வெள்ளையினத்தவர் பலரும் இதைக் கலாச்சார அச்சுறுத்தலாகவே கருதுகின்றனர்.

அபாயகரமான போக்கு

இது மற்றொரு அபாயகரமான போக்குக்குத் தூபம் போட்டிருக்கிறது. அதைத்தான் இந்தத் தேர்தல் துலக்கமாகக் காட்டியிருக்கிறது. “தெற்கு கரோலினாவில் லிண்ட்ஸே கிரஹாம், டெக்ஸாஸில் ஜான் கார்னின் போன்ற குடியரசுக் கட்சியின் செனட்டர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ட்ரம்ப்பை இறுகத் தழுவிக்கொண்டதன் மூலம் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்கிறார் ‘இண்டிஸ்பென்ஸபிள்: வென் லீடர்ஸ் ரியலி மேட்டர்’ என்ற நூலின் ஆசிரியர் கௌதம் முகுந்தா. “ட்ரம்ப்பியம்தான் ‘பழம்பெரும் கட்சி’யின் (குடியரசுக் கட்சியின்) எதிர்காலம் என்பதை இது உணர்த்துகிறது” என்கிறார் அவர்.

“ட்ரம்ப்பியத்தின் உத்திரீதியான தனித்துவம் என்னவென்றால், பெரும்பான்மையான அமெரிக்கர்களின் ஆதரவைப் பெற அது முயலாது. ஆக, பெரும்பாலான அமெரிக்கர்கள் தங்களுக்கு எதிராக வாக்களித்திருந்தாலும் அந்தப் பழம்பெரும் கட்சி சட்டபூர்வமான, ஆனால் ஜனநாயகபூர்வமாகத் தீங்கான, ஒவ்வொரு வழியையும் முயன்று அதிகாரத்தைத் தக்கவைக்க முயலும்” என்கிறார் கௌதம். அமெரிக்கரீதியிலான அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் தொடரும் என்பதையே இது உணர்த்துகிறது என்கிறார் கௌதம். ஏனெனில், ஏட்டளவில் குடியரசுக் கட்சியினரால் வெள்ளை மாளிகை, செனட் ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்த முடியும். “இதுபோன்ற அழுத்தத்தை எந்த அமைப்பும் தாங்காது. ஒரு கட்டத்தில் முறிந்துவிடும்” என்கிறார் அவர்.

பைடனின் ஆதரவுத்தளம்

“ஜோ பைடன் தனது உழைப்பாளர் வர்க்கப் பின்னணியையும் அனுதாபங்களையும் குறிப்பிட்டுக் காட்டினாலும் ஜனநாயகக் கட்சியானது முன்பு அவர்களின் அடித்தளமாக இருந்த உடலுழைப்புத் தொழிலாளர்களின் ஆதரவைப் பெறுவதைக் காட்டிலும் தொழில்முறை சார்ந்த மேல்தட்டு வர்க்கத்தினர், கல்லூரிப் படிப்பு முடித்த வாக்காளர்கள் ஆகியோரையே தங்களின் பிரதான ஆதரவாளர்களாகக் கொண்டிருக்கிறது” என்கிறார் ‘தி டைரனி ஆஃப் மெரிட்’ நூலின் ஆசிரியர் மைக்கேல் சாண்டல்.

“ஜனநாயகக் கட்சியினர் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இது: யாருடைய கொள்கைகள் தங்களுக்கு எந்த விதத்திலும் உதவுவதில்லையோ அந்த செல்வந்த-வெகுஜனவியரை (ட்ரம்ப்பை) உழைக்கும் வர்க்க மக்களில் பெரும்பாலானோர் ஏன் ஆதரிக்கிறார்கள்? பொருளாதாரம் தங்களைப் புறக்கணித்துவிட்டது என்றும், தகுதிகள் பலவும் வாய்க்கப்பெற்ற மேல்தட்டு வர்க்கம் தங்களை இளக்காரமாகப் பார்க்கிறது என்றும் உழைக்கும் வர்க்கத்தினர் கொள்ளும் அவமான உணர்வை ஜனநாயகக் கட்சியினர் கணக்கில் கொள்ள வேண்டும்” என்கிறார் சாண்டல்.

உழைக்கும் வர்க்கத்தினரிடையே பைடன் சிறிய அளவில் செல்வாக்கு செலுத்தியிருக்கிறார் என்றாலும் பெரிய மாற்றம் ஏதும் ஏற்பட்டிருப்பதாகத் தோன்றவில்லை. உழைக்கும் வர்க்க ட்ரம்ப் வாக்காளர்களில் பெரும்பாலானோர் தாங்கள் இளக்காரமாகப் பார்க்கப்படுவதாக மட்டும் நினைக்கவில்லை, தாராளவாத மேல்தட்டினரிடம் தாங்கள் எதிர்கொள்ளும் கலாச்சாரத் தணிக்கை குறித்தும் அவர்கள் கசப்பு கொண்டிருக்கின்றனர்.

ட்ரம்ப்பை மன்னிக்கலாமா?

“ஊடகங்கள், கல்வித் துறை, அமெரிக்கப் பெருநிறுவனங்கள், ஹாலிவுட், தொழில்முறை விளையாட்டு, பெரும் அறக்கட்டளைகள் போன்ற அனைத்திலும் நிறவெறிக்கு எதிராக உருவான கலாச்சார அலைக்கு அணை போடுபவராக ட்ரம்ப் பார்க்கப்படுகிறார்” என்று ‘நேஷனல் ரிவ்யூ’ பத்திரிகையின் ஆசிரியர் ரிச் லோரி தன் கட்டுரையில் எழுதியிருக்கிறார்.

“முகத்தில் அடித்தாற்போல் சொல்ல வேண்டுமானால் பெரும்பாலானவர்களைப் பொறுத்தவரை அமெரிக்கக் கலாச்சாரத்தின் மீதான கட்டுப்பாட்டைத் தாங்கள்தான் கொண்டிருக்கிறோம் என்று நினைப்பவர்களுக்குக் காட்டக்கூடிய எதிர்ப்பாக ட்ரம்ப் பார்க்கப்படுகிறார். ஒரு அதிபருக்கு வாக்களிப்பதற்கு இது ஒரு நல்ல காரணமாக இல்லாமல் இருக்கலாம், அதே நேரத்தில் அது ட்ரம்ப்பின் மோசமான நடத்தைக்கும் சீரழிந்த நிர்வாகத்துக்கும் மன்னிப்பை வழங்காது” என்கிறார் அவர்.

© தி நியூயார்க் டைம்ஸ், சுருக்கமாகத் தமிழில்: ஆசைடொனால்டு ட்ரம்ப்ட்ரம்ப்பியம் ஏன் நீடிக்கிறதுட்ரம்ப்பியம்Trumpismவிஸ்கான்ஸின்மிஷிகன்பென்ஸில்வேனியாஜார்ஜியாஅரிசோனாநிவாடா

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x