Published : 11 Nov 2020 03:17 AM
Last Updated : 11 Nov 2020 03:17 AM

புதிய நாடாளுமன்றக் கட்டிடம்: ஒரு முன்னோட்டம்

ஏ.ஸ்ரீவத்ஸன்

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கான வடிவமைப்பு முடிவடைந்திருக்கிறது; இந்த வடிவமைப்பு விரிவானதாகவும், கட்டுமானப் பணிகளைத் தொடங்கி விடலாம் என்ற அளவில் தயார் நிலையிலும் இருக்கிறது. ஏற்கெனவே இருக்கும் கட்டிடத்துக்கு அருகே உருவாகும் இந்தக் கட்டிடம் முந்தையதைவிட உருவத்திலும் கொள்ளளவிலும் கிட்டத்தட்ட ஒன்றரை மடங்கு பெரியது.

ஒரு கோணத்தில், இந்தப் புதியக் கட்டிடத்தின் நோக்கமானது நாடாளுமன்றத்தின் இயக்கத்துக்கு மேம்படுத்தப்பட்டதும் விரிவானதுமான வசதிகளைத் தருவதற்கானது. இன்னொரு கோணத்தில், இதை 2022-ல் கட்டி முடிக்கும்போது இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டை நினைவுகூரும் சின்னமாக இருக்கும். இந்தக் கட்டிடத்தின் வடிவமைப்பு பற்றிய விவரங்கள் இங்கே.

பழைமையின் தொடர்ச்சி

புதிய நாடாளுமன்றத்தை வடிவமைக்கவும் மத்திய விஸ்டாவைச் சுற்றியுள்ள பகுதியை மேம்படுத்தவும் அகமதாபாதைச் சேர்ந்த ‘எச்.சி.பி. டிசைன், பிளானிங் அண்டு மேனேஜ்மென்ட்’ என்ற கட்டிட நிறுவனத்தை மத்திய அரசு 2019 அக்டோபரில் தேர்ந்தெடுத்தது. புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஏற்கெனவே உள்ள நாடாளுமன்றத்துக்கு அருகில் உள்ள முக்கோண வடிவ மனையைக் கட்டிட நிறுவனம் தேர்ந்தெடுத்தது. இதன் விளைவாக, ஏற்கெனவே உள்ள வட்ட வடிவமான கட்டிடத்துக்கு மாறாக புதிய கட்டிடம் முக்கோண வடிவில் இருக்கும். வடிவத்தில் அதிக வேறுபாடு தோன்றாத வகையில் வடிவமைப்பு இருக்கும். கட்டுமானப் பொருட்கள், முகப்பு வடிவமைப்பு போன்றவற்றின் மூலம் பகட்டற்று மிதமான தோற்றத்தில் இருக்கும் வகையிலும், பழைமையான தோற்றம் இருக்கும் வகையிலும், ஏற்கெனவே இருக்கும் கட்டிடத்தைப் போன்றும் உருவாக்கப்படும். ஏராளமான அம்சங்களைக் கொண்டிருக்கும்.

உத்தேசிக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் மையத்தில் மூன்று பகுதிகள் இருக்கும்; மக்களவைக்கான கூடம், மாநிலங்களவைக்கான கூடம், திறந்த முற்றத்தைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் மையமான வரவேற்பறை. இவை எல்லாவற்றையும் இணைப்பது அரசமைப்புக் கூடம். அரங்குகளின் மையமாக அமைந்திருக்கும் இந்த மாபெரும் இடத்தில் அரசமைப்பின் மூலப் பிரதி பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்; தேசியத் தலைவர்களின் உருவங்கள் வைக்கப்படும். உத்தேசிக்கப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடம் நான்கு தளங்களைக் கொண்டிருக்கும்; 64,500 சதுர மீட்டர் அளவில் பரந்து விரிந்திருக்கும், அதாவது ஏற்கெனவே உள்ளதை விட 17 ஆயிரம் சதுர மீட்டர் அதிகம்.

கூடுதல் கொள்ளளவு

உத்தேசிக்கப்பட்ட மக்களவைக் கூடம் தரைத் தளத்தில் இருக்கும்; வருகின்ற ஆண்டுகளில் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையில் உயர்வு இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 888 உறுப்பினர்கள் இருக்கும் விதத்தில் திட்டமிடப்பட்டிருக்கிறது, தற்போதைய கொள்ளளவை விட கூடுதலாக 336 பேர் இருக்கலாம். அதைப் போல மாநிலங்களவையில் 384 பேர் அமரலாம்; தற்போதைய கொள்ளளவு 245-தான் என்பது குறிப்பிடத் தக்கது.

இருக்கை அமைப்பில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை. ஏற்கெனவே உள்ளதுபோல் விசிறி போன்ற அமைப்பில்தான் அது இருக்கும். ஒவ்வொரு உறுப்பினருக்கும் முன்னால் மேசை இருக்கும் என்பதுதான் வித்தியாசம், ஏற்கெனவே இருக்கும் அமைப்பில் முதல் வரிசைகளில் இருப்பவர்கள் முன்பு மட்டும்தான் மேசைகள் இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இருக்கைக்குப் பின்னால் தாராளமாகச் சென்றுவரக்கூடிய விதத்தில் இட வசதி, ஒவ்வொரு உறுப்பினருகும் டிஜிட்டல் அமைப்பு, தொடுதிரை போன்றவை புதிய அம்சங்களில் சிலவாகும்.

அவைகளின் கூடங்களில் பல மொழிகளிலும் அமைந்திருக்கும் கணினிப் பயன்பாட்டு அமைப்பு, அதிநவீன உயிர்க்கூறு-அடையாளம்-காண் கருவிகள், ஆர்.எஃப்.ஐ.டி, தானாகவே பெயரைக் காட்டும் விதத்தில் டிஜிட்டல் மை அடிப்படையிலான பெயர்ப் பலகைகள் போன்றவை புதிய அம்சங்கள்.

தரைத் தளத்தில் நாடாளுமன்றக் கூடங்கள் தவிர, பிரதமர், அவைத் தலைவர், அமைச்சர்கள் போன்றோருக்கு அலுவலகங்கள் இருக்கும். மேலுள்ள இரண்டு தளங்களில் அமைச்சர்களுக்கு மேலதிக அறைகள், உணவருந்தும் கூடம், ஊடகத்தினருக்கான விரிவுபடுத்தப்பட்ட மாடம் போன்றவை இருக்கும். கட்டமைப்பு வசதிகளும் அலுவலக அறைகளும் தரைத்தளத்துக்கு அடியில் உள்ள தளத்தில் இருக்கும்.

இரண்டுக்குமான ஒத்திசைவு

தற்போது உள்ள நாடாளுமன்றம் என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது. “பழையது, புதியது ஆகிய இரண்டு கட்டிடங்களுமே ஒன்றிணைந்து செயல்படும். சில அலுவல்கள் புதிய கட்டிடத்துக்குச் சென்றுவிடும், சில அலுவல்கள் புதுப்பிக்கப்படும் பழைய கட்டிடத்திலேயே செயல்படும்” என்று ‘எச்.சி.பி. டிஸைன்’ நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் பிமல் பட்டேல் தெரிவித்துள்ளார்.

உத்தேசிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றம் முழுமையான கண்காணிப்பில் இருக்கும்; நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவைத் தலைவர், பிரதமர், பொதுமக்கள் ஆகியோர் செல்வதற்குத் தனித் தனி வழிகள் இருக்கும். இந்தக் கட்டிடங்களுக்குள்ளே 110 கார்கள்தான் நிறுத்த முடியும் என்றாலும் தற்போதைய நாடாளுமன்றம், நூலகம், துணைக் கட்டிடம் போன்ற இடங்கள் உட்பட ஒட்டுமொத்த நாடாளுமன்ற வளாகத்துக்குள் 1,100 கார்கள் நிறுத்துவதற்கான இடம் விடும் வகையில் புதிய வடிவமைப்பு உத்தேசித்திருக்கிறது.

ஸ்தூபியைப் போன்று உச்சியில் தோன்றும் அசோகருடைய சிங்கத் தலையைத் தவிர ஆச்சரியமூட்டும் வகையில் புதிய நாடாளுமன்றத்தில் வெளிப்படையான சின்னங்கள் ஏதும் இருக்காது என்று தோன்றுகிறது. இந்த வடிவமைப்பின் ஆரம்ப கட்டத்தில் மையப் பகுதிக்கு மேலே உயரமான கோபுரம் போன்ற அமைப்பு உத்தேசிக்கப்பட்டது. அதிலிருந்து தற்போதைய வடிவமைப்பு வெகுதூரம் வந்துவிட்டது. இதற்கு நேர்மாறாக, உள்ளமைப்பானது பல்வேறு சின்னங்களையும் குறியீடுகளையும் பாரம்பரிய அம்சங்களையும் கொண்டிருக்கும். கதவுகளில் மயிலிறகு போன்ற வடிவங்களும் உள்கூரைப் பகுதியில் தாமரையை நினைவூட்டும் வடிவங்களும் இடம்பெறும்; தரைகளில் பூவேலைப்பாடுகளும் மற்ற பகுதிகளின் மர அறைக்கலன்களில் நுட்பமான வேலைப்பாடுகளும் இடம்பெறும்.

“புதிய நாடாளுமன்றத்தின் கட்டமைப்பு பழைய நாடாளுமன்றத்துக்கு இசைவாக இருக்கும் வகையில் உருவாக்க முயன்றிருக்கிறோம். அவை பல வகைகளிலும் தொடர்புடையவையாக இருப்பதுடன் ஒன்றாகவே இயங்கும்” என்கிறார் பிமல் பட்டேல்.

பசுமைக் கட்டிடம்

கட்டுமானத்தையும் அதற்கான பொருட்களையும் பொறுத்தவரை, உயர்தர எஃகும், தானே இறுகிக்கொள்ளும் கான்கிரீட் போன்றவையும் பயன்படுத்தப்படும். சூழலுக்கு இசைவான நடைமுறைகள், கழிவு மேலாண்மை அமைப்புகள் ஆகியவற்றுக்காக க்ரிஹா (GRIHA) தரநிர்ணயத்திடமிருந்து ஐந்து நட்சத்திர அங்கீகாரம் பெறுவதற்கான திட்டங்களும் இருக்கின்றன.

புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமானத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்கள் செய்யப்பட்டிருப்பதால் தற்போது தடங்கல் ஏற்படிருக்கிறது. கட்டுமானத்தை எப்போது வேண்டுமானாலும் தொடங்குவதற்கு ஆயத்தமாகவே அரசு இருப்பதுபோல் தெரிகிறது. அரசுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வரும்பட்சத்தில் கட்டுமானம் உடனடியாகத் தொடங்கப்பட்டு 2022 என்ற காலக்கெடுவுக்குள் முடிப்பதற்காக வேலைகள் முடுக்கிவிடப்படும்.

- ஏ.ஸ்ரீவத்ஸன், சி.ஈ.பி.டி. பல்கலைக்கழகப் பேராசிரியர்.

‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x