Last Updated : 18 Oct, 2015 12:58 PM

 

Published : 18 Oct 2015 12:58 PM
Last Updated : 18 Oct 2015 12:58 PM

கழிவுகள் சங்கமமாகும் கோவை குளங்கள்: காப்பாற்றுவது யார்? - ஓர் அலசல்

கோவை திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 160 கி.மீ தூரம் பயணிக்கும் நொய்யல் நதியை மையமாக வைத்து 24 அணைக்கட்டுகளும், 38 குளங்களும் உள்ளன. அவற்றில் 90 சதவீதம் சாக்கடை மயமாகிவிட்டன. நிலத்தடி நீரும் 1,000 அடிக்குக் கீழ் சென்றுள்ளதோடு, அவை குடிக்க பயனற்றதாக உள்ளது. இந்த நிலைக்கு பருவமழை பொய்ப்பதும், பல நாட்கள் பெய்ய வேண்டிய மழை சில நாட்களில் பெய்து கெடுப்பதுமே காரணமாகும் என்று தெரிவிக்கின்றனர் நீரியல் துறையினர்.

கோவை மாநகரில் பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் இருந்த 8 குளங்களை 5 ஆண்டுகளுக்கு முன்பு பராமரித்து அழகுபடுத்துவதற்காக 90 வருட குத்தகைக்கு எடுத்தது மாநகராட்சி. ஆனால், எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. இந்நிலை நீடித்தால் அழிந்த நதிக் கணக்கில் நொய்யலும், அணைக்கட்டுகளும், குளங்களும் வந்துவிடும் என்று கவலை தெரிவிக்கின்றனர் சூழலியலாளர்கள் மற்றும் விவசாயிகள்.

என்னதான் நடக்கிறது கோவை குளங்களில்? நொய்யலின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான நீலியாறின் குறுக்கே கட்டப்பட்டது நீலி அணை. கோவை ஈஷா யோக மையம் அருகே மடக்காடு என்ற மலைமக்கள் கிராமப் பகுதியில் இந்த அணை அமைந்துள்ளது. அதில் பிரியும் வாய்க்கால்கள் சுமார் 5 கி.மீ தொலைவுக்கு கிழக்கே பாய்ந்து முட்டத்துவயல் என்ற கிராமத்தில் உள்ள உக்குளத்தை நிறைக்கின்றன. வழியோர கிராமங்களுக்கும் பாசன வசதிகள் ஏற்படுத்தித் தருவதோடு, இந்தக் குளம் மூலம் 1,007 ஏக்கர் பாசன வசதியும் பெறுகிறது. ஆனால் அதற்குள் வரும் வாய்க்கால்கள், கிளைக் கால்வாய்களை ஆளுயர புதர்கள் முளைத்து நீரோட்டத்தையே மறைத்துள்ளன.

உக்குளம்

உக்குளத்திலும் தாமரைக் கொடிகளும், பல்வேறு தாவரங்களும், மரங்களும் நிறைந்து நிற்கின்றன. முன்பெல்லாம் இங்குள்ள விவசாயிகளே மூன்று மாதத்துக்கு ஒரு முறை வாய்க்கால்கள் முதல் உக்குளம் வரை தூர் வாருவார்கள். இப்போதெல்லாம் அதை செய்வதில்லை. விவசாயக் கூலிக்கு வந்தவர்கள் 100 நாள் வேலைத்திட்டத்துக்குப் போய்விடுகிறார்கள். கூலிக்கு ஆட்கள் கிடைப்பது அரிது. இதில் எங்கே தூர் வாருவது.

பொதுப்பணித்துறை வேலைகளை அத்துறையினரே செய்யட்டும் என்று கூறுகின்றனர் இங்குள்ள சில விவசாயிகள்.

நொய்யல்

உக்குளம் நிறைத்த நீலியாறு, இன்னொரு புறம் இருந்து வரும் பெரியாறுடன் (கோவை குற்றாலம்) ஒன்றிணைந்து ‘நொய்யல்’ என்ற பெயர் பெறும் இடம் கூடுதுறை. இது உக்குளத்தில் இருந்து சுமார் 7 கி.மீ கிழக்கே மத்வராயபுரம் பகுதியில் அமைந்துள்ளது. இங்கிருந்து புறப்படும் நொய்யல் மேலும் கிழக்கே 7 கி.மீ பயணித்து சித்திரைச்சாவடி அணையை அடைகிறது. நொய்யலின் முதல் அணை இது. இந்த சித்திரைச்சாவடி அணை நிரம்பினால், மதகுகள் வழியே வெளியேறும் நீர், வாய்க்கால்கள் மூலம் கோவை நகருக்குள் நுழைந்து, செல்வசிந்தாமணி, கோளராம்பதி, செல்வாம்பதி, கிருஷ்ணாம்பதி, முத்தண்ணன் குளம் ஆகியவற்றை நிரப்புகின்றன.

இதற்கு அடுத்து வருவது கோவை அணைக்கட்டு. இதில் புறப்படும் வாய்க்கால் கோவை மையப் பகுதியில் உள்ள பெரிய குளம், வாலாங்குளத்துக்கு நீரைத் தருகின்றன.

தெலுங்குபாளையம், செல்வபுரம், செட்டிவீதி போன்ற பகுதிகளில் இருந்து வரும் லட்சக்கணக்கான குடியிருப்புகளின் கழிவுநீரும், சாயப்பட்டறைக் கழிவுகளும் பெரியகுளத்தில் கலந்து நகரையே நாற்றம் வீசச் செய்கின்றன. அதையடுத்துள்ள வாலாங்குளமும், சாக்கடை நிரம்பி ஆகாயத் தாமரைகளால் பாழ்பட்டுக் கிடக்கிறது.

குறிச்சி அணைக்கட்டு வாய்க்காலில் இருந்து வரும் நீர், குறிச்சி குளத்தை நிறைக்கிறது.

சிவானந்தா காலனி, சங்கனூர், கண்ணப்ப நகர், ரத்தினபுரி, காந்திபுரம், பாப்பநாயக்கன்பாளையம், பீளமேடு, உப்பிலிபாளையம் பகுதிகளில் இருந்து வரும் சாக்கடைக் கழிவுகள் சங்கனூர் பள்ளம் வழியே சிங்காநல்லூர் குளத்தில் சங்கமமாகின்றன.

இந்தக் குளத்தில் 1997-ல் படகுத்துறை ஒன்றை திறந்தது கோவை மாநகராட்சி. சாக்கடையே பிரச்சினையாகி படகுத்துறை மூடப்பட்டது. சங்கனூர் பள்ளம் என்பது நொய்யலின் முக்கியமான நீராதாரமாக ஒரு காலத்தில் விளங்கியது. அது தற்போது முழுக்க சாக்கடை நீரோடையாக மாறிவிட்டது.

இதையடுத்து அமைந்துள்ள வெள்ளலூர் குளத்துக்கு இதன் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பில் உள்ளதால் நீர் வருவதில்லை.

பொங்கும் நுரை

இதற்கடுத்தது ஒட்டர்பாளையம் அணைக்கட்டு மற்றும் ஒட்டர்பாளையம் குளம். தினம், தினம் காலை நேரத்தில் நுரை கக்கி பொங்கும் சாக்கடை நீர், அணைக்கட்டில் பொங்கி வருவதைக் காணமுடிகிறது. இதிலிருந்து ராஜவாய்க்கால் மூலம் செல்லும் நீர், அடுத்துள்ள இருகூர் குளத்துக்குச் சென்று துர்நாற்றத்தைப் பரப்புகிறது. ஒரு காலத்தில் இந்தக் குளங்களின் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றன. இப்போது இதற்கு ஒரு கி.மீ தூரத்தில் கூட குடியிருக்க முடியவில்லை. அந்த அளவு சகிக்க முடியாத நாற்றம், கண் எரிச்சல், தோல்நோய்கள் என்கின்றனர் மக்கள்.

இப்படியே கோவை மாநகரைத் தாண்டி கண்ணம்பாளையம் குளம், சூலூர் குளம், சூலூர் சிறியகுளம், செம்மாண்டம்பாளையம் குளம், சியாமளாபுரம் குளம், ஆண்டிபாளையம் குளம், மண்ணரை குளம் என திருப்பூர் வரை நொய்யலின் போக்கில் குளங்களை தேடிச் சென்றால் அதில் உள்ள அசுத்தங்கள் மூச்சு முட்ட வைக்கிறது. நிலத்தடி நீர் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு என்றெல்லாம் பேசுகின்றனர், எழுதுகின்றனர். தற்போது இருக்கும் குளங்களைப் பாதுகாக்காமல் போனால் வருங்கால சந்ததியினர் நிலைமை பரிதாபமாகிவிடும் என்று அச்சப்படுகின்றனர் சூழலியலாளர்கள்.



நொய்யல் குளங்களை மீட்டெடுக்க ரூ.700 கோடியில் திட்டம்

- பொதுப்பணித் துறை

பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘கோவை நகரின் மையப் பகுதியில் உள்ள 8 குளங்கள், அதனை சுத்தப்படுத்தி அழகுபடுத்தவும், நடைபாதை, பூங்காக்கள் அமைத்துப் பராமரிக்கவும் 90 வருட குத்தகைக்கு 2011-ம் ஆண்டு முதல் மாநகராட்சிக்கு விடப்பட்டுள்ளது. கழிவு நீர் கலப்பதைத் தடுக்க தொடர்ந்து மாநகராட்சிக்கு கடிதம் மூலம் தெரிவித்து வருகிறோம். அதேபோல், சாயப்பட்டறை மற்றும் ரசாயனக் கழிவுநீர் ஆற்றில் கலப்பது, குளங்களில் விடுவது பற்றி எங்களுக்கு புகாராக வரும்போதெல்லாம் மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுக்குச் சொல்கிறோம். அவர்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை குளங்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் தருவதற்கு ‘பயோ மெட்ரிக் சர்வே’ மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் ஆக்கிரமிப்புகள் நீக்கப்பட்டு வெள்ளலூர் குளத்துக்கு தண்ணீர் விடப்படும். நொய்யல் ஆறு, குளங்களை சுத்தப்படுத்த ரூ.700 கோடியில் திட்டம் தீட்டப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது’ என்றனர்.

குளங்களுக்கு நாங்கள் பொறுப்பில்லை

- மாசுக்கட்டுப்பாடு வாரியம்

கோவை மாசுக்கட்டுப்பாடு அலுவலர் ஒருவர் கூறும்போது, ‘ஆறுகள், ஏரிகளில் 3 மாதங்களுக்கு ஒருமுறை சோதனை நடத்துகிறோம். ஆனால் குளங்கள் குறித்த மாசுக்கட்டுப்பாடு சோதனை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. குளங்கள் பராமரிப்பை பொதுப்பணித் துறை, மாநகராட்சி நிர்வாகமே கவனித்து வருகின்றன.

நாங்கள் அதில் தலையிடுவதோ, கண்காணிப்பதோ இல்லை. குளங்களைப் பொறுத்தவரை தற்போது சோதனை செய்தால் கழிவுகள்தான் இருக்கும். சுத்திகரிப்பு நிலையங்கள் முழு பயன்பாட்டுக்கு வந்தபின்தான் கழிவுகளைத் தடுக்க முடியும்’ என்றார்.

பாதாளச் சாக்கடைப் பணிகள் முடிந்தால் குளங்கள் சுத்தமாகிவிடும் - மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜய்கார்த்திகேயன் கூறும்போது, ‘பெரியகுளத்தின் கரைகளில் அமெரிக்க தொழில்நுட்பத்துடன் கூடிய சுற்றுச்சூழல் பாதிக்காத வண்ணம் தடுப்புகள் போட்டுள்ளோம். அதை அனைத்துக் குளக்கரைகளுக்கும் விரிவுபடுத்தும் திட்டம் உள்ளது. பெரியகுளம், பேரூர் குளத்தில் நடைபாதை போடப்பட்டுள்ளது. சிங்காநல்லூர் குளத்துக்கு ‘மினி சுத்திகரிப்பு நிலையம்’ அமைக்க திட்ட வடிவம் தயாரிக்கப்பட்டு அரசு அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தக் குளம் சுத்திகரிக்கப்பட்டு படகு விடக்கூடிய அளவில் புனரமைக்கப்படும்.

அது வெற்றிகரமாக நடந்துவிட்டால் மற்ற குளங்களுக்கும் இதேபோல் ‘மினி சுத்திகரிப்பு நிலையம்’ அமைக்க ஏற்பாடு செய்யப்படும். பாதாளச் சாக்கடை பணிகள் அனைத்து மண்டலங்களிலும் 97 சதவீதம் முடிந்துவிட்டது என அந்தப் பணியை செய்பவர்கள் புள்ளிவிவரம் தந்துள்ளனர். இனி அவை சுத்திகரிப்பு நிலையங்களில் இணைக்கப்படுவதுதான் பாக்கி. அது நடந்தவுடன் அனைத்துக் கழிவுகளும், சாக்கடைகளும் ஆற்றுக்கும், குளத்துக்கும், மற்ற நீர்நிலைகளுக்கும் செல்வது அதிகபட்சம் தடுக்கப்பட்டுவிடும்’ என்றார்.

பி.ரமேஷ்குமார், நிலத்தடி நீர் பாதுகாப்பு சங்க நிறுவனர், திருப்பூர்.

‘திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் அருள்புரத்தை சுற்றியுள்ள குளங்கள், சாயக் கழிவுநீரால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. கவுண்டம்பாளையம் ஆவாராங்குட்டையில் 2 தலைமுறைகள், விவசாயம் செய்து வந்தது. தற்போது யாரும் பயன்படுத்த முடியாதபடி நீர்நிலை கெட்டுவிட்டது. பாச்சாங்காட்டுப்பாளைய குட்டையில் சாய நீர் நிரம்பி ரசாயனக் குட்டையாக மாறிவிட்டது.

பி.கந்தசாமி, விவசாயிகள் சங்கம், கோவை.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நொய்யலில் ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி சிவராமன் தலைமையிலான கமிட்டி கோவை வந்து, புட்டுவிக்கி பாலத்தில் நிலத்தடி நீரை பரிசோதித்தது. அதில் ரசாயனத்தன்மை 5000 பிபிஎம் (சிறுவாணி நீர் ஜீரோ பர்சன்ட்) இருந்தது. பக்கத்து தோட்டத்தில் உள்ள இளநீரை பரிசோதித்தபோது 3500 பிபிஎம், தேங்காயில் 4000 பிபிஎம் இருந்தது. நகருக்குள் நொய்யல் நுழையும் பகுதியிலேயே இப்படி என்றால் மற்ற பகுதிகள் எப்படியிருக்கும்?

வேல்முருகன், கோவை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்.

முத்தண்ணன் குளம் என்பது 190 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் 80 ஆண்டுகளாக 20 ஏக்கரில் 1337 பேர் வீடு கட்டி குடியிருக்கின்றனர். இதையொட்டியுள்ள செல்வாம்பதி, கிருஷ்ணாம்பதி, நரசாம்பதி குளங்களை தனியார் நிறுவனங்கள், அரசுத் துறை நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளன. ஏழைகளுக்கு மாற்று வீடு கொடுத்து காலி செய்யச் சொல்லும் அதிகாரிகள் அரசு, தனியார் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பை வெளியே சொல்வதில்லை.

முனைவர் பூங்குன்றன், தொல்லியல் துறை முன்னாள் அலுவலர்.

கொங்கு நாட்டை ஆட்சி புரிந்த மன்னர்கள் நொய்யலின் அடிமுடி வரை 32 அணைக் கட்டுகளை கட்டியதாகப் பட்டயக் குறிப்புகள் கிடைத்துள்ளன. வீர ராசேந்திரன் காலத்தில் (கி.பி.1207-1256) பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று, பேரூர் அருகே ‘தேவி சிறை’, ‘கோளூர்’ என இரண்டு கல்லணைகள் இருந்ததைக் குறிப்பிடுகிறது. முன்னோர் செய்த அருமையை இந்த தலைமுறை உணரவில்லை என்பதே வேதனை.

ஜெயராமன், நொய்யல் ஆய்வாளர், கோவைப்புதூர்.

உக்கடம் பெரியகுளம், வாலாங்குளத்துக்கு நீராதாரமாக விளங்கும் பேரூர் அணைக்கட்டுதான் முன்பு ‘தேவி சிறை’ என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அணை மீது கனரக வாகனப் போக்குவரத்துக்கு பாலம் கட்ட 2000-ம் ஆண்டில் முயற்சி நடந்தது. பாலம் அமைந்தால் குளங்களுக்கு தண்ணீர் போகாது. குளங்களை பிளாட் போட்டு விடலாம் என்று நகரப் பெரும்புள்ளிகள் இதன் பின்னணியில் கணக்குப்போட்டனர். அதை எதிர்த்து போராடியதால் அணைக்கட்டை விட்டு சில மீட்டர் தூரம் தள்ளிச் சென்றது பாலம். அணையும், நீர்வரத்தும் காப்பாற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x