Published : 09 Nov 2020 03:11 am

Updated : 09 Nov 2020 06:56 am

 

Published : 09 Nov 2020 03:11 AM
Last Updated : 09 Nov 2020 06:56 AM

பண்டிகையைப் பாதுகாப்புடன் கொண்டாடுவோம்!

celebrate-festival-with-safety

பண்டிகைக் காலம் இது. எங்கு திரும்பினாலும் தள்ளுபடி, இலவசம், விலைக் குறைப்பு என வணிக வளாகங்கள் களைகட்டியுள்ளன. கரோனா பெருந்தொற்றுக்குப் பயந்து, 7 மாதங்களாக வீட்டில் அடைந்துகிடந்த மக்கள் பண்டிகையைக் கொண்டாடும் முனைப்பில் வெளியில் வந்திருக்கின்றனர்.

‘பண்டிகைக் காலங்களில் கரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கும். கரோனா தொற்றைத் தடுக்கும் பாதுகாப்பு நெறிமுறைகளை மக்கள் மறந்துவிடக் கூடாது’ என்று பிரதமர் நரேந்திர மோடியும் ஒன்றியச் சுகாதாரத் துறை அமைச்சரும் எச்சரித்துள்ளனர். அண்மையில் கேரளத்தில் ஓணம் பண்டிகையின்போது பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்கத் தவறியதால், அங்கு கரோனா கட்டுக்கடங்காமல் பரவியுள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாடு முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகை நெருங்கும் நேரத்தில் இந்த எச்சரிக்கை நம் கவனத்தைப் பெறுகிறது.


முகக்கவசம் முக்கிய ஆயுதம்

முன்பு பண்டிகை என்றதும், பட்டாசுப் பாதுகாப்பு ஒன்றுதான் நினைவுக்கு வரும். இப்போது அதையும் கடந்து பல புதிய பாதுகாப்புகளும் அவசியம் என்கிறது, கரோனா தொற்றுப் பரவல். ஆனால், அவற்றில்தான் மக்கள் அலட்சியம் காட்டுகின்றனர்; விழாக்காலச் சலுகைகளைத் தேடி, விதிமுறைகளை மீறி, கடைகளில் அலைமோதுகின்றனர். முகக்கவசம் அணியாமலும் தனிமனித இடைவெளி இல்லாமலும் மக்கள் இயங்குவதை ஊடகங்களில் காணும்போது கரோனா கொடுத்த கொடுமைகளில் இவர்கள் இன்னும் பாடம் கற்கவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

கூட்டமுள்ள இடங்களில் அறிகுறிகள் எதுவும் இல்லாமல் கரோனா தொற்றாளர்கள் நடமாடும் வாய்ப்பு அதிகம். முகக்கவசம் அணியாமல் தொடர்ந்து 15 நிமிடங்களுக்கு இவர்கள் அருகில் இருந்தால் கரோனா தொற்றுவது உறுதி. இவர்களில் ‘மிகைக் கடத்துநர்கள்’ (Super spreaders) என்று சொல்லக்கூடியவர்களும் இருக்கின்றனர். அதாவது, ஒரே நேரத்தில் 20-க்கும் மேற்பட்டவர்களுக்குக் கரோனாவைக் கடத்திவிடும் பெருந்தொற்றாளர்கள் இவர்கள். மக்கள் கூட்டத்தில் இவர்களை அடையாளம் காண்பது கடினம். தற்காப்பு ஒன்றே நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் ஆகச் சிறந்த வழி. அதற்கு முகக்கவசம்தான் முக்கிய ஆயுதம்.

வெளியிடங்களுக்குச் செல்லும்போது தொற்று தவிர, காற்று மாசு காரணமாகவும் இருமலும் தும்மலும் ஏற்படுவது இயற்கை. முகக்கவசம் அணியாமல் இருமினாலோ தும்மினாலோ கரோனா வைரஸ் 7 மடங்கு அதிகமாகப் பரவுகிறது. அதே தொற்றாளர் முகக்கவசம் அணிந்துகொண்டு இருமினால், தும்மினால் வைரஸ் காற்றில் பரவுவது பெரிதும் தடுக்கப்படுகிறது. சாதாரணக் கைக்குட்டையை முகக்கவசமாக அணிந்துகொண்டாலும் கணிசமான பாதுகாப்பு கிடைக்கிறது. முகக்கவசம் அணியாதவர்கள் இருமும்போதும் தும்மும்போதும் அவசரத்துக்கு முழங்கையால் முகத்தை மறைத்துக்கொண்டால்கூட வைரஸ் பரவுவதை ஓரளவுக்குத் தடுக்க முடியும். வெளியிடங்களைவிட கடைகளில் அடைத்துவைக்கப்பட்டுள்ள அறைகளில் கரோனா பரவுவதுதான் அதிகம் என்கின்றன ஆராய்ச்சிகள். எனவே, கடைகளுக்கு நேரில் செல்பவர்கள் இவற்றை நினைவில் கொள்ள வேண்டும். எந்தக் கடைக்குச் சென்றாலும் 6 அடி தனிமனித இடைவெளி காக்கப்பட வேண்டும்.

புதிய ஆடைகள் எடுக்கும்போது…

புதிய ஆடைகள் பண்டிகைக் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சங்கள். இன்றைய கரோனா சூழலில் அருகில் இருக்கும் கடைகளுக்கு ஆதரவு கொடுக்கலாம். அனைவரும் வீட்டில் முடங்கியபோது, ஆடை உள்ளிட்ட எவ்வளவு பொருட்கள் வீணாக இருக்கின்றன என்பதை கரோனா நமக்குக் காண்பித்திருக்கிறது. அதனால், தேவையானதை மட்டும் வாங்க வேண்டும் என்ற உணர்வுடன் செல்லுங்கள். முதியவர்களையும் குழந்தைகளையும் அழைத்துச் செல்லாதீர்கள். எவ்வளவு செலவுத் திட்டத்தில், யாருக்கு, எங்கே, என்ன ஆடை எடுக்கப்போகிறோம் என்பதை முன்கூட்டியே திட்டமிடுங்கள். பல கடைகளுக்குச் செல்லும் பயணத்தாலும் கடைகளில் அதிக நேரம் செலவிடுவதாலும் கரோனா தொற்றுவதை இந்த வழியில் தவிர்க்கலாம்.

அருகருகில் ஆட்கள் நிற்பதில் வைரஸ் தொற்றும் ஆபத்து அதிகம் என்பதால், வணிக வளாகங்களில் மின்தூக்கிப் பயன்பாட்டைத் தவிருங்கள். முடிந்தவரை படிகளில் ஏறுங்கள். அதேநேரம் படிக்கம்பிகள், கதவுக் கைப்பிடிகள், மேசைகள், நாற்காலிகள், இருக்கைகள் போன்றவற்றைத் தேவையில்லாமல் தொடாதீர்கள். கிருமிநாசினியைக் கைவசம் கொண்டுசெல்லுங்கள். கைகளை அடிக்கடி தூய்மைப்படுத்திக்கொள்ளுங்கள். கண்ணில் படும் எல்லா ஆடைகளையும் விரித்துப் பார்க்க வேண்டாமே! விற்பனைப் பிரதிநிதியிடம் நீங்கள் விரும்பும் வடிவமைப்பு, வண்ணங்களில் ஆடைகளைத் தேர்ந்தெடுத்துக் காட்டச்சொல்லலாம்; விரித்துப் போடச்சொல்லலாம். அதுபோல் நகைக் கடைகளில் ஒவ்வொரு நகையையும் தொட்டுப் பார்ப்பதைத் தவிருங்கள். தேவையானதையும் விரும்புவதையும் மட்டும் காட்டச் சொல்லி, பிடித்த நகையை மட்டும் அணிந்து பாருங்கள். பணப் பரிவர்த்தனையை இணையக் கணக்கு வழியாகவோ, பண அட்டைகள் மூலமோ மேற்கொள்ளுங்கள்.

சூழலுக்கு ஏற்ப மாறுங்கள்!

பண்டிகைக் காலங்களில் நாம் செல்பேசி, மடிக்கணினி, தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்ப்பதனப் பெட்டி, சலவைப்பொறி, காற்றுப்பதனி, அறைகலன்கள் போன்றவற்றை வாங்குவதே அதிகம். அந்தக் கடைகளுக்கு நேரில் சென்று பல மாதிரிகளைப் பார்த்து வாங்குவது இதுவரை இருந்த வழக்கம். கரோனா தொற்றுப் பரவல் நம் வாழ்க்கை முறையில் மட்டுமல்லாமல், பொருட்களை வாங்கும் முறையிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இப்போது நம் உபயோகப் பொருட்களில் எதையும் மின்வணிகத்தில் வாங்க முடியும். பிரபலத் தயாரிப்பு நிறுவனங்களின் இணையத்துக்குச் சென்றால் எல்லா மாதிரிகளையும் காணலாம். பிடித்ததைத் தேர்வுசெய்ததும் அந்த நிறுவனத்தைத் தொடர்புகொண்டோ, இணைய வழியிலோ வாங்கிவிடலாம். விலைச் சலுகை, தள்ளுபடி, பணம் திரும்பவும் பெறல் (கேஷ்பேக்), மாதாந்திரத் தவணை ஆகிய வசதிகளும் உண்டு. இந்தச் சேவையால் கடைகளுக்குச் செல்லும் அவசியமில்லை; கரோனா ஆபத்து துளியும் இல்லை.

பண்டிகை நெருங்க நெருங்க இனிப்பகங்கள், பட்டாசுக் கடைகள், கறிக்கடைகள் ஆகியவற்றில் மக்கள் கூட்டம் மொய்க்கும். கரோனா தொற்றைத் தடுக்க, இந்த மாதிரியான இடங்களுக்கு நேரில் செல்லாமல் இருப்பதுதான் சிறந்த பாதுகாப்பு. இந்தக் கடைகளும் நுகர்வோருக்கு வீட்டுக்கே வந்து சரக்கு விநியோகம் செய்யும் சேவையைத் தொடங்கியுள்ளன; பயன்படுத்திக்கொள்ளலாம்.

கரோனா தொற்று பலருக்கும் வழக்கமான பண்டிகைக் காலக் குதூகலத்தை வெகுவாகக் குறைத்திருக்கிறது என்பது உண்மைதான். அதற்காக உற்சாகம் இழக்கத் தேவையில்லை. தற்போதைய தொற்றுச் சூழலுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்வதன் மூலம் மகிழ்ச்சியை மீட்கலாம்; கரோனாவைக் கட்டிப்போடலாம்.

- கு.கணேசன், பொதுநல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.comபண்டிகைபண்டிகையைப் பாதுகாப்புடன் கொண்டாடுவோம்கரோனா பெருந்தொற்றுவணிக வளாகங்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x