Published : 08 Nov 2020 03:11 AM
Last Updated : 08 Nov 2020 03:11 AM

பெருந்தொற்றுகளின் காலம்: புதுச்சேரியின் அனுபவங்கள்!

கொள்ளைநோய்களின் தாக்கத்தால் 18-ம் நூற்றாண்டின் பின்பாதியிலும், 19-ம் நூற்றாண்டிலும் தமிழக மக்கள் கொத்துக் கொத்தாக வீழ்ந்தனர். “போரைக் காட்டிலும் நோயால் பலிகள் அதிகம்” என்கிறார் ஆனந்தரங்கப் பிள்ளை. அவரின் நாட்குறிப்புப் பதிவுகளில், அந்தக் காலத்து மக்கள் பெருந்தொற்றை எதிர்கொண்ட விதத்தை விரிவாகப் பதிவிட்டுள்ளார்.

நோய்க்கான காரணமும், அதற்கான தீர்வும் தெரியாததால், படித்தவர்கள்கூட அச்சத்திலும் பீதியிலும் உறைந்துபோனார்கள். பாமர மக்கள் இது தெய்வக் குற்றம் என்று நம்பினர். அம்மன் தனது கோபத்தால்தான் காலராவையும், அம்மை நோயையும் அனுப்பி மக்களைத் தண்டிக்கிறாள் என்று மனதார நம்பினார்கள். எனவே, அந்த நம்பிக்கை ஆழமாக ஊறி, ஊரெங்கும் பரவியது. அதுவே பல்வேறு வதந்திகளாகவும் உருவெடுத்து மக்களை மருட்டியது.

விதவிதமான வதந்திகள்

1756 டிசம்பர் வாக்கில் தமிழகப் பகுதிகளில் கடும் பஞ்சமும், வைசூரி என்னும் பெரியம்மை, பிளேக், கடும் காய்ச்சல் ஆகிய நோய்களும் கடுமையாகத் தாக்கின. போதுமான ஊட்டமின்றிப் பலவீனமாயிருந்த மக்கள், கொள்ளைநோய்களுக்கு எளிதில் இரையாகினர். ஆர்க்காடு, வேலூர், லால்பேட்டை வட்டாரங்களில் மட்டுமே 10-15 ஆயிரம் பேர் பலியாயினர். ஆர்க்காட்டில் முகாமிட்டிருந்த ஆங்கிலேயரில் பாதிப் பேரும், நவாப் குடும்பத்தினரில் சிலரும் மரணமடைந்தனர்.

ஆர்க்காட்டில் கடம்பை அம்மன் கனவில் தோன்றி ‘நான் அனைவரையும் கொன்றுபோடவே வந்திருக்கிறேன், நான் போக வேண்டுமானால், ஒரு யானை, 10 குதிரை, 100 ஆட்டுக்கிடா, 50 எருமைக்கிடா பலி கொடுக்க வேண்டும். அத்துடன் மது, மாமிசம் 100 பானை சோற்றுப் படையல் காணிக்கையும் வேண்டும்’ என்று கூறியதாகச் செய்திவந்தது. மற்றொரு அம்மன், குதிரை, யானைகளுடன், தீவட்டி ஏந்திய ஆட்கள் புடைசூழ, மேளதாளத்துடன் மைசூரிலிருந்து புறப்பட்டு, கடலில் குளியல் போடுவதற்காக வந்துகொண்டிருப்பதாகவும், அது வரும் வழியில் திருவண்ணாமலையில் தங்கியிருப்பதாகவும் இன்னொரு வதந்தி பரவியது. முதல் வதந்தியைவிட இது சற்றுக் கொடூரமாயிருந்தது. பகல் நேரத்தில் அம்மன், மரக்கிளைகளில் வெளவால்போல் தொங்கிக்கொண்டு, மனிதர்களைக் கொன்று போடுவதாகவும், இரவில் வெட்டவெளிகளில் திரிவதாகவும், அப்போது உள்ளூர் தேவதைகள், ‘நாங்கள் இங்கு காவலிருக்கும்போது நீ எப்படி இங்கு வரலாம்’ என்று சண்டை போடுவதாகவும், விடிந்து பார்த்தால், எங்கு பார்த்தாலும் ரத்தமாய் சிந்திக் கிடக்கிறது என்றும், புளிய மரத்தில் யானை, குதிரைகளின் தலைகள் தொங்குகின்றன என்றும் புரளிகள் கிளம்பி நோயைவிடவும் வேகமாகப் பரவின.

நாளுக்கு நாள் பிணங்கள் விழுந்துகொண்டே இருந்தன. ஆர்க்காட்டுப் பகுதியில் சாவு எண்ணிக்கை 15,000-க்கும் மேல் எகிறிக்கொண்டிருந்தது. அச்சத்தில் உறைந்துபோன மக்கள், ஊரைவிட்டு வெளியேறத் தொடங்கினார்கள். முதலில் இந்துக்களின் ‘தெய்வக் குற்றம்’ என்ற கருதுகோளை நம்ப மறுத்த வெள்ளையர்களையும் முஸ்லிம்களையும்கூட அச்சம் கவ்விக்கொண்டது. அவர்களும் தங்களின் வீடுகளில் வேப்பிலை செருகினார்கள். வீதிகளில் வேப்பிலைத் தோரணங்கள் கட்டப்பட்டன. புதுச்சேரி ஆளுநர் லெரியும், அவரது ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் அனைவரும் பீதியில் உறைந்துபோனார்கள். வீடுகளிலும் வீதிகளிலும் வேப்பிலைத் தோரணம் கட்டட்டும் என்றும் ஆளுநரே சொன்னார். கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் தங்களது தலைப்பாகைகளில் வேப்பிலைக் கொத்தைச் செருகிக்கொண்டார்கள்.

பணம் சுருட்டும் குறுக்கு வழி

இதற்கிடையே மக்களின் பேதமையைப் பணமாக்கும் முயற்சிகளும் நடந்தன. வந்தவாசி அய்யண்ண சாஸ்திரி அரசுக்கு வரிப்பணம் கட்ட வேண்டியிருந்தது. ஆகவே, ஆட்களை அழைத்துப் பணத்தைக் கொடுத்துச் சிப்பம் கட்டச் சொன்னார். ஆட்களில் ஒருவன் திடீரென்று எழுந்து நின்று, “நான் மாரியம்மன் வந்திருக்கிறேன். இந்தப் பணத்தைக் கோட்டைக்கு அனுப்ப வேண்டாம். எனக்குக் காணிக்கையாகத் தந்தால் போதும்” என்று உரத்துக் கூறி ஆடினான். வெலவெலத்துப்போன சாஸ்திரி, அதையே தெய்வ வாக்காக எடுத்துக்கொண்டு, பண முடிப்பை அனுப்பாமல் வைத்துக்கொண்டார்.

அரசுக்குக் கப்பம் வரவில்லை என்பதால், அதை வாங்கி வருவதற்காக ஒரு சேவகன் சென்றான். அவன் பணமூட்டையில் கைவைத்தவுடன் மூக்கிலும் வாயிலும் ரத்தம் கக்கினான் என்று ஒரு செய்தி பரப்பப்பட்டது. அரசு அதிகாரி சவரிராயரின் தம்பி இந்தச் செய்தியை நம்பவில்லை. ஏதோ சூது நடக்கிறது என்று கண்டுகொண்டு, மூடநம்பிக்கையை நிந்தித்தான்; அம்மனையும் வைதான். ஆகவே, வேறொரு காவல்காரனை அனுப்பி எடுத்துக்கொள்ளலாம் என்று திட்டமிட்டான். அந்த எண்ணம் தோன்றிய அந்தக் கணமே அவனுக்குக் கழிசல் கண்டு உயிர் பிழைப்பதே கடினம் என்றானது. தம்பியின் மேல் பாசமிக்க சவரிராயன் பயந்துபோனார். கிறிஸ்தவர் என்றாலும், பாதிரியார்களுக்குத் தெரியாமல், ஆயிரம் ரூபாயை அம்மனுக்கு உண்டியல் போடுகிறேன், என் தம்பி பிழைத்தால் போதும் என்று வேண்டிக்கொண்டார்; அவரது தம்பியும் குணமானார் என்று விரிகிறது மற்றொரு வதந்திச் செய்தி.

ஆளுநரும் அதிகாரிகளும் வதந்திகளின் வலையில் வீழ்ந்துவிட்டதால், கிறிஸ்தவப் பாதிரியார்கள் அஞ்சினார்கள். அவர்கள் ஒன்றாகக் கூடி, பிரெஞ்சு அரசு அதிகாரிகளைச் சந்தித்துத் தங்களின் ஆட்சேபனைகளைத் தெரிவித்தார்கள். தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுத்து, அம்மன் பக்தர்கள் என்ற பெயரில் ஆட்டம் போட்டவர்களைப் பிடித்துச் சிறையில் அடைக்கச் செய்தார்கள். கொள்ளைநோயின் தாக்கம் குறைந்ததால் இந்தப் பிரச்சினையும் காலப்போக்கில் அமுங்கிப்போனது. ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பிலிருந்து (‘அகநி’ பதிப்பகம் இந்த நாட்குறிப்புகளைச் செம்பதிப்பாக வெளியிட்டிருக்கிறது) அப்போதைய மக்களின் மனநிலையைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆய்வுக் கட்டுரைகள் சிலவற்றிலிருந்து அப்போது அரசின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது.

காலராவுக்குக் காரணம்

1855-ல் மருத்துவர் கோலாஸ், காலரா பற்றி ஆராய்ந்து, தேங்கிக் கிடக்கும் குப்பைகளும், அசுத்தமான தண்ணீருமே காரணம் என்று புதுச்சேரி அரசுக்கு அறிவித்தார். குப்பைக்கூளங்கள் கிடந்த கடைத்தெருவையும் கறிக்கடைகளையும் தூய்மையாக வைக்க அரசு ஆணையிட்டது. பொதுச் சுகாதாரம் கருதி, 1825-ல் ஆளுநர் துப்புய் அனைத்து சவ அடக்கங்களும் நகருக்கு வெளியேதான் செய்யப்பட வேண்டுமென்று அரசாணை வெளியிட்டார்.

1905 – 1913 காலகட்டத்தில், மொத்த மக்கள்தொகையில் நான்கில் ஒருவர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டனர். ‘ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்; ஆனால், ஏழைகளும் தொழிலாளர்களுமே அதிகம் இறக்கிறார்கள்; அவர்களும், நோய் தொற்றிய ஓரிரண்டு நாட்களிலேயே இறந்துவிடுகிறார்கள்; தூய்மையற்ற சூழல், அசுத்தமான குடிநீர், ஊட்டமில்லாத உடல், நெரிசலான குடியிருப்புகளே அதீத மரணங்களுக்குக் காரணம் என்றார் மருத்துவர் வெலந்தினோ.

தடுப்பூசிக்குத் தயக்கம்

1701-ல் ஃபிரான்சுவா மர்த்தேன் காலத்திலேயே புதுச்சேரியில் ஆங்கில முறை மருத்துவமனை தொடங்கப்பட்டுவிட்டது. 18-ம் நூற்றாண்டுக்குள்ளாக மேலும் ஏழு மருத்துவமனைகளும் மருந்தகங்களும் தொடங்கப்பட்டன. முதன்முதலாக, 1849-ல் காலராவுக்குத் தடுப்பூசி அறிமுகமானது. ஆனால், ஆங்கில மருத்துவத்தில் நம்பிக்கையில்லாத மக்கள் அதற்கு முன்வரவில்லை. ஊசி போட்டுக்கொண்டால் ஒரு பணம் இலவசமாகத் தரப்படும் என்று அரசு ஆசை காட்ட வேண்டியிருந்தது.

1879-ல் முதன்முதலாக அம்மை நோய்க்குத் தடுப்பூசி போடும் முறையை பிரெஞ்சிந்திய அரசு அறிமுகப்படுத்தியபோதும், இந்துக்கள் அதை ஏற்கவில்லை. மதரீதியான இந்த எதிர்ப்பை அரசால் எளிதாக எதிர்கொள்ள முடியவில்லை. தடுப்பூசி போட்டுக்கொள்வது நம்பிக்கையைக் கொச்சைப்படுத்தும் செயல் என்று தடுப்பூசி போட்டுக்கொள்ளப் பிடிவாதமாக மறுத்தனர். சுகாதார ஊழியர்களை ஊருக்குள் விடாமல் தடுத்தனர். எல்லோருக்கும் ஒரே ஊசி போட்டு, ஒன்றாக்கப் பார்ப்பதாக உயர் சாதியினர் குற்றஞ்சாட்டினர். நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் மிகவும் பலவீனமாகி, நடக்கவே முடியாத நிலையில், வேறு வழியில்லாமல் மருத்துவமனைக்கு வந்தபோது அவர்களின் நிலைமை மோசமாகிவிட்டிருந்தது.

மக்களின் அறியாமை பற்றிக் கவலை கொண்ட அரசு, ஒவ்வொரு கொம்யூன்களிலும் தீவிர தடுப்பூசி இயக்கம் நடத்தப்பட வேண்டுமென்று 1884 ஏப்ரல் 3-ல் மேயர்களுக்கு அறிக்கை அனுப்பியது. ‘பிரெஞ்சு மூவண்ணக் கொடியின் கீழ் ஆளும் அரசு, மாரியம்மன் பெயரால் வரும் எதிர்ப்பைப் பொறுத்துக்கொள்ளாது’ என்ற ஆளுநர் கப்ரியேல் லூயி அன்ழுல்வான், 1906-ல் தடுப்பூசி போடுவதைக் கட்டாயமாக்கி அரசாணை பிறப்பித்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏற்பட்ட பேரிழப்புகளைத் தடுக்க முடியவில்லை.

மக்களின் தயக்கமும் முழுமையாக நீங்கியபாடில்லை. 1930-களில் ‘மக்கள் அனைவருக்கும் முழுமையான பாதுகாப்பு’ என்ற பெயரில் வெகுமக்கள் இயக்கம் ஒன்றை அரசு நடத்தத் தொடங்கியது. பிரெஞ்சிந்திய அரசு நோய்த்தடுப்பில் முழுமையான வெற்றிகாண முடியவில்லை. ஆனாலும், அதற்கான வழிமுறைகளை வகுத்துச் சென்றதால்தான், விடுதலை பெற்ற புதுச்சேரி அதை வெற்றிகரமாக்க முடிந்தது.

- எம்.பி.இராமன், பேராசிரியர், ‘சூழல் படும் பாடு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: mpraman@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x