Last Updated : 08 Nov, 2020 03:11 AM

 

Published : 08 Nov 2020 03:11 AM
Last Updated : 08 Nov 2020 03:11 AM

ஹென்றி ஹார்க்கினஸ்: தமிழக வரலாற்றின் ஆவணர்!

லண்டனில் அமைந்துள்ள ராயல் ஆசியவியல் கழகத்தின் இணைய நூலகத்தை அண்மையில் பார்த்துக்கொண்டிருந்தபோது, தென்னாசிய சுவடிப் பகுதியில் தொல்காப்பிய ஓலைச்சுவடியொன்று பாதுகாக்கப்படுவதைக் கவனித்தேன். இந்தச் சுவடியில், அன்றைய சென்னைக் கல்விச் சங்கத்தின் தலைவர் ஹென்றி ஹார்க்கினஸுக்குத் திருநின்றவூர் பக்தவத்சல ஐயரால் 1831 ஜனவரி 1-ல் அளிக்கப்பட்ட விவரம் இடம்பெற்றுள்ளது. ஹார்க்கினஸ் குறித்த விவரங்களை இணையத்தில் தேடிச் சேகரித்ததோடு விடுபட்டவற்றை ஆசியவியல் கழகத்தின் நூலகருக்குத் தொடர்ந்து பல மின்னஞ்சல் விடுத்தும் பெற்றேன்.

ஹென்றி ஹார்க்கினஸ் (1787-1838) இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு 1805-ல், ‘மெட்ராஸ் ராணுவத்தில்’ பணியாற்ற வந்தவர். கர்னாடகப் பகுதியில் தொடக்கக் காலத்தில் லெப்டினென்ட் நிலையில் பணியாற்றியவர். திருவிதாங்கூர், மைசூர், நிஜாம் நாடு (ஆந்திரம்), கந்தேஷ் (மத்திய இந்தியா) ஆகிய பகுதிகளில் ராணுவ அதிகாரியாகப் பணியாற்றியவர். 1824-ல் கேப்டன் நிலைக்கு உயர்ந்தவர். அப்போது இந்தியப் படைவீரர்கள் அடங்கிய 21-ம் காலாட்படை அணிக்குத் தளபதியாக இருந்தவர். சென்னை கல்விச் சங்கத்தின் செயலாளராக 1827 முதல் 1831 வரை பணியாற்றியவர். மொத்தத்தில், 26 ஆண்டுகள் இவரின் இந்தியப் பணி அமைந்தது. 1832-ல் உடல்நலக் குறைவு காரணமாக இங்கிலாந்து திரும்பியவர் 1833-ல் ராயல் ஆசியவியல் கழகத்தின் உறுப்பினராகவும் அது முதல் 1837 வரை அதன் செயலாளராகவும் விளங்கினார்.

சென்னை கல்விச் சங்கத்தின் செயலாளராகப் பணியாற்றியபோது, அவரின் கீழ் தமிழறிஞர்களும் வடமொழி, தெலுங்கு, கன்னட, மலையாள மொழி அறிஞர்களும் பணியாற்றியுள்ளனர். அவர்களுள் ஒருவரே தொல்காப்பியச் சுவடியை அளித்த திருநின்றவூர் பக்தவத்சல ஐயர். இந்த ஓலைச்சுவடியை ஹென்றி ஹார்க்கினஸ் 1832 மே 19-ல் ராயல் ஆசியவியல் கழகத்துக்குக் கொடையாக அளித்தது அந்தக் கழகத்தின் வெளியீடுகளிலிருந்து அறிய முடிகிறது. தாண்டவராய முதலியார், முத்துசாமிப் பிள்ளை ஆகியோரால் திருவள்ளுவமாலை, திருக்குறள், நாலடியார் அடங்கிய நூல் 1831-ல் பதிப்பிக்கப்பட்டது. இந்நூலில் ‘மேம்பட்ட துரையவர்கள்’ என்று ஹார்க்கினஸ் குறிப்பிடப்பட்டுள்ளார்.

மேலும், ‘ஏன்சியன்ட் அண்ட் மாடர்ன் ஆல்பபெட்ஸ் ஆஃப் தி பாப்புலர் ஹிந்து லாங்வேஜஸ்’ என்னும் நூலையும் ஹார்க்கினஸ் எழுதி, ராயல் ஆசியவியல் கழகத்தின் வழியாக வெளியிட்டுள்ளார். இந்நூலில் தேவநாகரி, கிரந்தம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் எழுத்துகளின் வரி வடிவ ஒற்றுமைகளை ஆராய்ந்து விளக்கியுள்ளார். உயிர், மெய்யெழுத்து வடிவங்களின் வளர்ச்சி, ஒற்றுமைகள் இந்நூலில் காட்டப்பட்டுள்ளன. நீலகிரி தோடர்கள், எழுத்து வடிவங்கள் குறித்த ஹார்க்கினஸின் இரண்டு நூல்களும் இணையத்தில் முழுமையாகப் படிக்கக் கிடைக்கின்றன.

ஆவணப்படுத்தலில் ஆர்வம்

ஹென்றி ஹார்க்கினஸ் தென்னிந்தியாவில் வாழ்ந்த மக்கள், அவர்களிடம் பரவியிருந்த நம்பிக்கைகள், அறிவாற்றல் குறித்து உயர்ந்த மதிப்பீடுகளை வைத்திருந்தார். இந்தியர்களுக்கு உரிய வாய்ப்பும் மதிப்பும் வழங்கினால் மிகச் சிறப்பாகப் பணியாற்றுவார்கள் என்று தம் நாட்டு அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார். மெட்ராஸில் வழக்கத்தில் இருந்த கல்வி முறை குறித்தும், இந்தியர்களுக்கு அளிக்க வேண்டிய கல்வி குறித்தும் 1832 அளவில் மிகச் சிறந்த பரிந்துரைகளை ஆங்கிலேய அதிகாரிகளுக்கு வழங்கியவர்.

இந்தியாவிலிருந்து தான் கொண்டுசென்ற அரிய நூல்கள், ஓலைச்சுவடிகளை ராயல் ஆசியவியல் கழகத்துக்கு வழங்கி இன்றளவும் அனைவரின் பயன்பாட்டுக்கும் ஹார்க்கினஸ் வழிசெய்துள்ளார். அவ்வகையில் ஆரியபட்டரின் வானியல் விதிகளுக்கு சூரியதேவர், எல்லாயன் எழுதிய உரைகளைக் கொண்ட ஓலைச்சுவடிகள் முக்கியமானவை. இவை, தமிழ் கிரந்த எழுத்துகளில் அமைந்தவை. மேலும், ‘சூரிய சித்தாந்தாவின் 14 இயல்கள் கருத்தாய்வுரை மற்றும் ராசிச் சக்கரத்தின் தெய்வங்களின் பெயர்கள்’ என்னும் கைப்பிரதியையும் அந்தக் கழகத்துக்கு வழங்கியுள்ளார். நள சரிதம், கிருஷ்ணராயர் வரலாறு, திருவரங்கக் கோயிலின் நாட்குறிப்பு, திருவையாறு, கும்பகோணம், திருபுவனம் முதலான பல ஊர்களின் உள்ளூர் அரசு நிர்வாகங்களின் ஓலைச்சுவடிக் குறிப்புகள் என்று அவரது கையளிப்புகளின் பட்டியல் மிக நீளமானது.

பல்துறைப் பங்களிப்புகள்

நில அளவை மதிப்பீட்டாளரும், அரும்பொருள் தொகுப்பாளருமாகிய காலின் மெக்கன்சியின் பணிகளையும் திறமையையும் அறிந்தவர் ஹார்க்கினஸ். மெக்கன்சியின் மறைவுக்குப் பிறகு அவரின் தொகுப்புகள், ஆவணங்களைப் பாதுகாப்பது குறித்த கருத்துரைஞராகவும் கடமையாற்றினார். இந்தியக் கட்டடக் கலை குறித்த ஆய்வில் தனித்தடம் பதித்தவரும் பெங்களூருவில் நீதிபதியாகப் பதவி வகித்தவருமான தஞ்சையைச் சேர்ந்த ராமராஜுக்கும் பல வகையில் ஹார்க்கினஸ் உதவியுள்ளார். அவரை மைசூருக்கு முதல் ஆணையராகப் பரிந்துரைத்து அனுப்பியதோடு இந்துக் கட்டிடக் கலை குறித்த ராமராஜ் நூலுக்கு முன்னுரையொன்றையும் எழுதியுள்ளார். ராமராஜ், சென்னைக் கல்விச் சங்கத்தின் அலுவலகத்தில் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர்.

ஜேம்ஸ் ஏ. ஸ்டீவர்டு மெக்கன்சி 1832 ஜூலை 27-ல் லண்டனில் நடத்திய ஆய்வுக்குழுக் கூட்டத்தில் ஹார்க்கினஸிடம் பல்வேறு வினாக்களை எழுப்பினார். அந்தக் கூட்டத்தில் ஹார்க்கினஸின் எழுத்துப் பணி, ராணுவப் பணி, சமயப் பணி, இந்திய மக்களின் திறமை, கல்வியறிவு, மனவுணர்வு குறித்த கேள்விகளை எழுப்பினார். அப்போது ஹார்க்கினஸ் அளித்த பதில்களிலிருந்து அவர் இந்திய மக்கள் மீது உயரிய கருத்துகளைக் கொண்டிருந்தமையை அறிய முடிகிறது. இந்தியர்கள் தங்களின் மாண்பை உயர்த்திக்கொள்ள அன்றைய இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் வாய்ப்புகளை வழங்கவில்லை எனவும், வழிவகைகளைச் செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரிட்டிஷ் இந்திய அரசில் அவர்கள் பங்குகொள்ளும் வகையில் பொறுப்பு, மரியாதை, மதிப்பு, நம்பிக்கை உள்ள பணிகளில் அமர்த்த வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் தெரிவித்துள்ளார்.

அன்றைய கல்வி நிலை

சென்னை கல்விச் சங்கத்தில் தான் செயலாளராகப் பணியாற்றியபோது இந்திய மக்கள் அனைவரும் கல்வி கற்க ஆர்வமாக இருந்தமையையும், ஐரோப்பிய இலக்கியங்களை அறிந்துகொள்ள ஆர்வமாக உள்ளதையும் நினைவூட்டியுள்ளார். மேலும், கம்பெனி வருவாயின் ஒரு பகுதியைக் கல்விக்கு ஒதுக்க வேண்டும் எனவும், அன்றைய இந்திய மக்கள் அரசுப் பள்ளிக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்பத் தயங்கிய நிலையில் கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்திய பள்ளிகளுக்கு அனுப்ப விரும்பியதையும் குறிப்பிட்டுள்ளார். இந்திய மேற்பார்வையாளர்களின் தலைமையில் கீழமைப் பணிகளில் இந்தியர்களைப் பணியமர்த்தலாம் எனவும், அந்தப் பணி மாவட்ட நீதிபதி, முதன்மை வருவாய் அதிகாரி நிலையில் இருக்கலாம் எனவும் தம் கருத்தைப் பதிவுசெய்துள்ளார்.

ராயல் ஆசியவியல் கழகத்தின் முதலாவது இதழில் ஹார்க்கினஸ் எழுதிய கட்டுரை, அன்றைய சென்னை மாகாணத்தில் தமிழ் பேசும் பகுதிகளில் இருந்த பள்ளிக் கல்வி முறையை விரிவான விவரங்களைத் தருக்கிறது. தொடக்கப் பள்ளிகளில் கற்றுத்தரப்பட்ட பாடங்கள், ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட கல்விக் கட்டணங்கள் பற்றிய விவரங்கள் நமது கல்வி வரலாற்றின் முக்கியமான ஆவணப் பதிவுகள். தொடக்கப் பள்ளிகளில் அறநெறிக் கல்வி முக்கிய இடம் வகித்ததையும் ஔவையாரின் ஆத்திசூடி கற்றுக்கொடுக்கப்பட்டதையும் அவரது கட்டுரையிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. ஒரு ராணுவ வீரராக இந்தியாவுக்கு வந்து சென்றாலும் கல்வித் துறை, வரலாற்றுத் துறை தொடர்பான தமது ஆவணப் பதிவுகளால் தென்னிந்திய வரலாற்றில் நினைவில் கொள்ளப்பட வேண்டியவராகிவிட்டார் கேப்டன் ஹென்றி ஹார்க்கினஸ்.

- மு.இளங்கோவன், தமிழ்த் துறை இணைப் பேராசிரியர்.

தொடர்புக்கு: muelangovan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x