Published : 03 Nov 2020 12:00 PM
Last Updated : 03 Nov 2020 12:00 PM

அமெரிக்காவின் ஆன்மாவைச் சிதைத்த ட்ரம்ப்!

ரோஜர் கோஹன்

இன்று (செவ்வாய்க் கிழமை) நடந்து கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல், ஜனநாயகத்தின் நிலைத்தன்மையை நிர்ணயிக்க இருக்கும் ஒரு வாக்கெடுப்பாகவே உலக அளவில் பார்க்கப்படுகிறது.

நீண்டகாலமாக ஒரு கலங்கரை விளக்கமாக இருந்துவரும் அமெரிக்க ஜனநாயகம் தன்னைத்தானே சரிசெய்துகொள்ளாவிட்டால், உலகின் எல்லா ஜனநாயகங்களும் ஆபத்தை எதிர்கொள்ள நேரும். அமெரிக்க ஜனநாயகத்தைப் பின்னடையச் செய்வதற்கான வேலைகளைச் செய்துவரும் ட்ரம்ப், போர்களால் பாதிக்கப்பட்ட ஐரோப்பா ஜனநாயக மயமாகவும் சுதந்திரத்தன்மை கொண்டதாகவும் உருவாக வழிவகுத்த ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ உள்ளிட்ட எல்லா அமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறார். இவற்றையெல்லாம் ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கையுடன் கவனித்து வருகின்றன.

மதிப்பிழந்த ஓவல் அலுவலகம்

ஒரு காலத்தில் உலகம் முழுவதையும் கட்டுப்படுத்தும் மதிப்புமிக்க குவி மையமாக இருந்து வந்தது ஓவல் அலுவலகம். இன்றைக்கு அந்த நிலை இல்லை. இன்றைக்கு ஜனநாயக நாடுகள் ட்ரம்ப்பின் அமெரிக்காவை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதைத் தங்கள் தேச நலனாகக் கருதுவது என்பது சாத்தியமற்றதாக ஆகிவிட்டது. இந்த அதிபரின் காரணமாக, பல்வேறு தரப்பிலிருந்து கோபமான எதிர்வினைகள் உருவாகிவிட்டன. அதிபர் பதவியும் நேர்மையின்மையும் இணைச் சொற்களாகிவிட்டன. நம்பிக்கையின் அடிப்படையில்தான் நட்புறவுகள் உருவாகின்றன. நம்பிக்கை போய்விட்டால், நட்புறவும் மறையத் தொடங்கிவிடும்.

அமெரிக்காவை ‘அடக்கிவைக்க’ வேண்டிய தேவை இருப்பதாக ஐரோப்பியத் தலைநகரங்களில் பேச்சுகள் எழுந்திருப்பது அதனால்தான். இதற்கு முன்பு இந்த வினைச்சொல் சோவியத் ஒன்றியத்துக்கென ஒதுக்கப்பட்டிருந்தது. ட்ரம்ப்பின் ஆட்சியில் நம்பகத் தன்மையையும், சட்டபூர்வத் தன்மையையும் இழந்துவிட்டது அமெரிக்கா. அதன் செல்வாக்கின் அடித்தளக் கற்களாக இருந்தவை அவை.

ட்ரம்ப் இரண்டாவது முறை அதிபரானால், உலக சுகாதார நிறுவனத்திலிருந்து வெளியேறியது போல நேட்டோ அமைப்பிலிருந்தும் அமெரிக்கா வெளியேறும் சூழல் உருவாகும் என்று அதன் நட்பு நாடுகள் கருதுகின்றன. உலக வர்த்தக அமைப்பிலிருந்து வெளியேறுவதற்கும் சாத்தியம் உண்டு.

காணாமல்போன விழுமியங்கள்

சுதந்திரம், ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி போன்றவற்றின் விழுமியங்களைப் பொறுத்தவரை வெளிப்படையான பல தோல்விகள் இருந்தாலும், போர்களுக்குப் பிறகான தசாப்தங்களில் அந்த விழுமியங்களுக்குத் துணை நின்றது அமெரிக்கா. இன்றைக்கு அது கைவிடப்பட்டுவிட்டது. வியட்நாம் (போர்), அபு கரேய்ப் (இராக் போர்க் கைதிகள் சித்ரவதை), பனிப்போர் காலத்தில் சர்வாதிகார அரசுகளுக்கு ஆதரவு அளித்தது என்பன போன்ற பயங்கர வரலாறு அமெரிக்காவுக்கு உண்டு. எல்லாவற்றையும் தாண்டி நட்பு நாடுகளை அமெரிக்கா வழிநடத்தியதற்கு அதனிடம் மிகப் பெரிய ராணுவம், அணு ஆயுதங்கள் இருப்பது மட்டுமே காரணம் அல்ல. நட்பு நாடுகளின் கருத்துகளை மதித்ததும் அந்நாடுகளுடன் சேர்ந்து பணிபுரிந்ததும்தான் அதற்குக் காரணம். இன்றைக்கு விழுமியங்கள் இல்லாத வாழ்க்கையை மேற்கொண்டிருக்கும் ஓர் அதிபரின் கீழ், விழுமியங்கள் இல்லாத சர்வதேச சக்தியாக மாறிவருகிறது அமெரிக்கா.

ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்காவின் இந்தப் பொறுப்பற்ற தன்மைதான், “தாராளமயம் வழக்கொழிந்துவிட்ட விஷயம்” என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவிக்க அனுமதியளித்தது. இதுதான் “நமது விதியை நாமே கையில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று ஐரோப்பியர்களிடம் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் சொல்வதற்கு வழிவகுத்தது. தனது நாட்டின் ஒரு கட்சி ஆட்சி முறையை வளரும் நாடுகளுக்கான ஒரு மாற்று மாதிரியாகப் பரிந்துரைக்க சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்குத் துணிச்சல் தந்ததும் இதுதான். அமெரிக்காவைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுவந்த ‘சுதந்திர உலகின் தலைவர்’ எனும் சொற்றொடரை நகைப்புக்குரிய ஒரு கருத்தாக மாற்றியதும் இதுதான்.

முந்தைய காலத்தில் நிறுவப்பட்ட சர்வதேச உறவுகளை இடைவிடாமல் தொடர்ந்து மலினப்படுத்தி வந்திருக்கிறது ட்ரம்ப் அரசு. அமெரிக்காவே முதலில் எனும் அடிப்படையிலான தேசியவாதமானது (தடுப்பூசி உருவாக்கத்தில்கூட அது எதிரொலித்தது) பல்தரப்பு கொண்ட நிறுவனங்களுடன் அமெரிக்கா கொண்டிருந்த உறவின் இடத்தைப் பிடித்துக்கொண்டது. பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம், ஈரானுடனான அணு ஒப்பந்தம் என மிகுந்த சிரத்தையுடன் பேச்சுவார்த்தை நடத்தி கையெழுத்திடப்பட்ட சர்வதேச ஒப்பந்தங்கள் அவற்றில் அடக்கம்.

கடந்த நான்கு ஆண்டுகளில் ஜனநாயக நாடுகள் அடங்கிய உலகளாவிய சமூகத்திலிருந்து வெளியேறும் நிலைக்கு வந்துவிட்டது அமெரிக்கா. மறுபுறம், ஏஞ்சலா மெர்க்கல் போன்ற ஜனநாயகத் தலைவர்களைவிடவும் புதின், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் போன்ற சர்வாதிகாரிகளுடன்தான் அதிக நெருக்கம் காட்டுகிறார் ட்ரம்ப்.

மங்கிப்போன ஒளிவட்டம்

மனித உரிமைகள் கிட்டத்தட்ட அமெரிக்கக் கொள்கையிலிருந்து காணாமலேயே போய்விட்டன. மெக்ஸிகோ எல்லையில் அரங்கேறும் கொடுமைகளே இதற்கு உதாரணம். குடியேற்றம் எனும் விஷயத்தில் அமெரிக்கா நீண்டகாலமாகவே சிக்கலான உறவைக் கொண்டிருக்கிறது. அதேசமயம், வெளிப்படைத்தன்மையில் உறுதியும், மக்கள்தொகை விஷயத்தில் தொடர்ந்து புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்வது அமெரிக்க வலிமையின் தனிச்சிறப்பு எனும் புரிதலும் இருக்கவே செய்தன.

பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளைப் பிரித்து வைப்பது (இதுவரை 545 குழந்தைகள் அவர்களின் பெற்றோரிடம் சேர்த்து வைக்கப்படவில்லை), முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சில நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வரத் தடை விதிப்பது, அகதிகள் வர அனுமதி மறுப்பது ஆகியவற்றின் மூலம் அமெரிக்கா என்பது குடியேறிகளின் நிலம் எனும் கருத்தாக்கத்தையே காலில் போட்டு மிதித்துவிட்டார் ட்ரம்ப்.

அமெரிக்காவைத் தனித்துக் காட்டிய ஒளிவட்டம் இப்போது மங்கிவிட்டது. ட்ரம்ப்பின் தலைமையிலான அமெரிக்கா தனது இரக்கத்தன்மையை இழந்துவிட்டது. உலகத்தின் பார்வையில் அது கொடுமையானதாகக் காட்சியளிக்கிறது. அமெரிக்கா எனும் கருத்தாக்கத்திலிருந்தே அமெரிக்காவைத் துண்டித்துவிட்டார் ட்ரம்ப். சுதந்திர தேவி சிலையின் கையிலிருக்கும் தீப்பந்தம், எல்லையில் சுவர் எழுப்பும் ஒரு தேசத்தின் அடையாளமாக இருக்க முடியாது.

குலைந்துவிட்ட நம்பகத்தன்மை

ட்ரம்ப்பின் தேசியவாதம் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. கோவிட்-19 பெருந்தொற்றானது, 1945-க்குப் பிறகு ஏற்படுத்தியிருக்கும் உலகளாவிய முதல் பெரிய நெருக்கடியாகும். இதைக் கையாள்வதில் தெளிவற்ற வழிமுறைகளை மேற்கொண்ட அமெரிக்கா, தொற்றுகளின் எண்ணிக்கையிலும், மரணங்களின் எண்ணிக்கையிலும் உலகிலேயே முன்னிலையில் இருக்கிறது. இப்படியான ஒரு சூழலில் அமெரிக்காவின் திறன் மீது நம்பிக்கை வைக்க யாரும் தயாராக இல்லை. கரோனா பரவல் தொடர்பாக வெளியான செய்திகளை ‘போலிச் செய்திகள்’ என்று ட்ரம்ப் குற்றம் சாட்டினார். அது தொடர்பான அவரது பொய்களும் இடைவிடாமல் வெளியாயின.

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்டமைப்பு என்பது குறிப்பிட்ட சில கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. அவை: அரசின் அளவுக்கு அதிகமான அதிகாரத்தைத் தடுப்பதற்கான ஏற்பாடுகள், பலம் வாய்ந்த சுதந்திர ஊடகம், சுதந்திரமான நீதித் துறை, இனம், மதம், பாலினம் அடிப்படையிலான பாரபட்சத்துக்கு எதிராகத் தனிமனிதர்களைப் பாதுகாப்பது என்பன போன்றவை ஆகும். உலகமெங்கும் பல ஜனநாயக நாடுகளுக்கு உத்வேகம் தந்த இந்தக் கொள்கைகள் அனைத்தும் ட்ரம்ப்பின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. அமெரிக்காவின் நீதித் துறையைத் தனது தனிப்பட்ட சொந்தச் சொத்து போல அவர் மாற்றிவிட்டார். தேர்தலில் தோற்றுப்போனாலும் அலுவலகத்தைவிட்டு வெளியேறப் போவதில்லை என்றுகூட அவர் கூறியிருக்கிறார்.

அமெரிக்காவின் முயற்சியால் ஜனநாயகம் கட்டமைக்கப்பட்ட ஓர் உலகில் இவற்றில் எதுவுமே இன்னமும் மறைந்துவிடவில்லை. ஆம், ஜெர்மனியிலும், ஜப்பானிலும், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் மத்திய ஐரோப்பாவிலும் அமெரிக்கா உருவாக்கித் தந்த ஜனநாயக அமைப்புகளில் இந்தக் கொள்கைகள் எதும் மறையவில்லை.

தாராளமய ஜனநாயகக் கொள்கைகளை உருவகப்படுத்துவதிலும், மனித உரிமைகளைக் காக்கும் விஷயத்திலும் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை மட்டுமல்லாமல் அமெரிக்காவையும் எதிர்த்து நிற்க வேண்டியிருக்கலாம் என்று ஐரோப்பிய ஒன்றியம் எடுத்திருக்கும் நிலைப்பாடு வலியையும் அதிர்ச்சியையும் தருகிறது.

இனி என்ன ஆகும்?

ஏறத்தாழ நான்கு ஆண்டுகால ட்ரம்ப் ஆட்சி சர்வதேச ஒழுங்கில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்திவிட்டது. அமெரிக்கா தலைமையிலான பழைய அமைப்பு முறை மாண்டுவிட்டது. புதிதாக எதுவும் உருவாகவும் இல்லை. இந்த ஆபத்தான சறுக்கலை ஜோ பிடன் தலைமையிலான ஆட்சி எப்படி சரிசெய்யப்போகிறது என்பது ஒரு பிரதானமான கேள்வி. அதேசமயம், ட்ரம்ப் ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு மிக ஆழமானது. முன்பு இருந்த நிலை திரும்பப்போவதில்லை.

இரண்டாவது முறையாக ட்ரம்ப்பின் ஆட்சி அமைந்து, அதனால் அமெரிக்காவில் உருவாகும் ஒழுங்கற்ற உக்கிர நிலையும், சீனாவின் பிடிவாதமும் சந்திக்க நேர்ந்தால் அது வன்முறைக்கான சாத்தியக் கூறுகளை உருவாக்கலாம். உலகின் பெரிய சக்திகள், 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கவனமாக உருவாக்கப்பட்ட பலதரப்பு பாதுகாப்பு வளையத்திலிருந்து விடுபட்டு நடைபோடத் தொடங்கும்.

கலங்கரை விளக்கமாக இருந்துவந்த அமெரிக்கா தோல்வியடையும். உலகம் இருளடையும்!

நன்றி: ‘தி நியூயார்க் டைம்ஸ்’ | தமிழில்: வெ.சந்திரமோகன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x