Published : 29 Oct 2020 07:04 AM
Last Updated : 29 Oct 2020 07:04 AM

ஆழ்கடல் மீன்பிடிப்பில் தொடரும் அவலம்!

ஆர்.என். ஜோ டி குருஸ்

அது 2014 நாடாளுமன்றத் தேர்தல் சமயம், பிரதமருக்கான வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்பட்ட நரேந்திர மோடி, தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், நாட்டின் மீன்வளம் காக்கவும், மீனவர் நலம் காக்கவும் பாடுபடுவோம் என்று கன்னியாகுமரி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உறுதியளித்தார். நாட்டின் மீன்வளம் மற்றும் மீன் துறை பற்றிய தேவையான தகவல்கள் அவரிடம் சென்று சேராததால், அலங்கார மீன் வளர்ப்பை முன்னெடுத்து ஊக்குவிப்போம் என்றே மேடையில் முழங்கினார். கடல்வளம் சார்ந்து எத்தனையோ துறைகள் ஒன்றிய அமைச்சரவையின் கீழ் இயங்கினாலும், அக்கறையான புள்ளிவிவரமோ, கள நிலவரமோ ஆட்சியாளர்களுக்குக் கொடுக்கப்பட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை என்பதே கடந்த காலங்கள் நமக்கு உணர்த்தியிருக்கும் பாடம்.

எடுத்துக்காட்டாக, ஒன்றிய அரசைத் தொடர்ந்து தொந்தரவு செய்யும் பிரச்சினையாக முன்வைக்கப்பட்டது பாக் நீரிணை அவலம். இதற்கான தீர்வாக மூக்கையூரில் சர்வதேசத் தரத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைய வேண்டும் என்ற கருத்து பிராந்திய மீனவ அமைப்புகளிடம் வலுப்பெற்று, திட்டமாகிச் செயல்பாட்டுக்கு வந்தது. அக்கறையற்ற கண்காணிப்பாலும் பிராந்திய பாரம்பரிய மீனவரிடம் கருத்துக் கேட்பு இல்லாத காரணத்தாலும் துறைமுக வடிவமைப்பில் உருவாக்கத்திலேயே கோளாறு ஏற்பட்டுப் பயன்பாடற்ற சூழலே நிலவியது. மீனவ அமைப்புகளின் பல்வேறு முன்னெடுப்புகளுக்குப் பிறகு, துறைமுக வடிவத்தை இயற்கை சூழலை எதிர்கொள்ளும் நிலைக்குக் கொண்டுவரத் தற்போது முயற்சிகள் நடக்கின்றன. பாராட்டலாம்.

திட்டச் செயல்பாட்டை ஒப்பந்தம் மூலம் பெறும் தனியார் நிறுவனங்களுக்கு லாபம் மட்டுமே குறி என்பது இயல்பானது. ஆனால், செயல்பாட்டைக் கண்காணிக்கத் தவறும் அதிகாரிகளால் தவறான, பலவீனமான வடிவமைப்புகள் உருவாகி, திட்டமும் அதன் செயல்பாடும் பயனற்றுப் போய்விடுகின்றன. பலவீனமான கட்டுமானங்களால் ஏற்படப்போகும் உயிரிழப்புகளும், பணவிரயமும் ஒருபுறமென்றால், காலவிரயத்தால் பாதிப்புக்குள்ளாகும் தொழிலும் பொருளாதார இழப்புகளும் மறுபுறம்.

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் ஒரு நதிக்கரைத் துறைமுகம். உலகம் முழுவதும் நதிக்கரைத் துறைமுக அமைப்புகள் கைவிடப்பட்டுவிட்டன. தொடரும் மணல் அரிப்பும், அதனால் ஏற்படும் தூர்வாருவதற்கான தேவையும், வலுவிழந்துவிட்ட நதி நீரோட்டமும்தான் இதற்கான காரணங்கள். கடல் என்ற மாபெரும் இயற்கை சக்தியை எதிர்கொள்ள அதற்கு இணையான மற்றொரு சக்தியான நதி நீரோட்டம் வேண்டும். அது இல்லாத சூழலில் கடலை எதிர்கொள்ளும் வலுவான தடுப்புச்சுவர் அமைப்புகள் வேண்டும். தேங்காய்ப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் இவை இரண்டும் குறைபாடுகளோடு இருக்கின்றன. துறைமுக உருவாக்கக் காலத்திலிருந்தே அப்பகுதி மீனவர்கள், இந்தக் குறைகளைத் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்கள். ஆட்சியதிகாரம் வழக்கம்போல் செவிசாய்க்க மறுக்கிறது. விளைவு, தொடர் உயிரிழப்புகள்.

ஒருபுறம், இயற்கையாக பேச்சிப்பாறையிலிருந்து வரும் தாமிரபரணி நதிநீரைப் புதிதாக உருவாகும் பரக்காணி தடுப்பணை தடுத்துவிடுகிறது; மறுபுறம் திறந்த கடலுக்குள் தெற்காக அமைக்கப்பட்டிருக்கும் மேற்கு, கிழக்கு தடுப்புச் சுவர்கள் பொங்கிவரும் கடல் நீரோட்டத்தைக் கைநீட்டி வரவேற்கின்றன. கச்சான் காலத்தில் உயிரிழப்புகளோடு பெரும் பொருள் சேதம் ஏற்படுகிறது. பெரும்பாலும் உயிரிழப்புகள் கரை திரும்பும்போதே நடக்கின்றன என்பது சோகமான உண்மை.

விவசாயக் காரணங்களுக்காகத் துறைமுகம் அருகிலேயே உருவாகும் பரக்காணி தடுப்பணையைத் தவிர்க்க முடியாத சூழலில், கடலுக்குள் நேர் தெற்காக இருக்கும் மேற்கு, கிழக்கு தடுப்புச் சுவர்கள் இன்னும் கடலுக்குள் நீண்டு, கிழக்காக உடனடியாகத் திருப்பப்பட வேண்டும். அமையும் தடுப்புச் சுவர்களும் அலைகளால், நீரோட்டத்தால் பரந்து விரிவதைத் தவிர்க்க கடலின் அடியில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் வேண்டும். தேவையான இறங்கு தளங்களும், விற்பனை வசதியும் இல்லாத காரணங்களினால் கன்னியாகுமரி மாவட்டத்தின் 90% விசைப் படகுகள் அண்டை மாநிலமான கேரளத்தின் மீன்பிடித் துறைமுகங்களிலேயே கரைபிடிக்கின்றன. செலவினங்கள் கூடி மீனவர்கள் பொருளாதார இழப்பிற்குள்ளாவதை அரசும் அதிகாரவர்க்கமும் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன. நமது கரைகளில் பெரும் பொருளாதாரக் கட்டமைப்பை சிறு மீன்பிடித் துறைமுகங்களை அமைப்பதன் மூலம் உருவாக்கலாம் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

ஆதிக்க சக்திகளாய் மாறியிருக்கும் வியாபாரிகளின் தூண்டுதலால் குளச்சல் பகுதி மீன் துறையால் நாளொன்றுக்கு சுமார் 20 – 25 விசைப்படகு மீனவர்களுக்கே விற்பனை உரிமம் வழங்கப்படுகிறது என்ற செய்தியில் உண்மை இல்லாமலில்லை. மற்றவர்கள் அடுத்த மாநிலக் கரையை நோக்கி ஓடுவதைத் தவிர, வேறு வழியே இல்லையே. வியாபாரிகளின் ஆதிக்க உணர்வால் பாழ்படும் வாழ்வாதாரத்தை மாநில அரசு உடனடியாகக் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

ஒன்றிய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சியில் ஆழ்கடல் மீன்பிடித்தலை ஊக்குவிப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் மானியத்தில் படகுகள் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆய்வில் இதற்கும் மீனவர்களின் ஆதரவு இல்லை என்பது தெரியவந்திருக்கிறது. கள உண்மைகளை அறியாமல், திட்டங்களைப் பிரசாதமாகத் தூக்கி எறியும் மனநிலையே அதற்கான மூல காரணம்.

முன்னோட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தில் ஏற்கெனவே மீன்பிடித்தலில் இருக்கும் விசைப்படகு மீனவர் தன்னுடைய உரிமத்தை ரத்துசெய்து படகையும் உடைத்துவிட வேண்டும். திட்டத்தில் இணைவதற்காக ரூ.8 லட்சம் தயாராக வைத்திருக்க வேண்டும். அரசு வங்கி ஒன்றை அணுகி ரூ.16 லட்சம் கடனாகப் பெற வேண்டும். இந்த ஏற்பாடுகளுக்குப் பிறகே மானியமான ரூ.56 லட்சத்துக்கு விண்ணப்பிக்க முடியும். ரூ.80 லட்சத்துக்குள் ஆழ்கடல் மீன்பிடிப் படகை உருவாக்க முடியாது என்கிறார்கள் படகு கட்டும் உரிமையாளர்கள். ஆழ்கடல் மீன்பிடித்தலைக் கருத்தில் கொண்டு அதற்குத் தேவையான தகவமைப்புகளோடு படகைக் கட்டமைப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை போதாது என்பது அவர்கள் தரப்பு வாதம். இந்த வகையில் கூடுதலாகத் தேவைப்படும் பணத்தைச் சம்பந்தப்பட்ட மீனவரே திரட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. ஆழ்கடல் மீன்பிடிப்புக்குப் படகு மட்டுமே தயாரான நிலையில், படகை மீன்பிடித்தலுக்குத் தயாராக்குவதற்கான செலவு அடுத்த கட்டம். ஆழ்கடலில் பயன்படும் கில்நெட் வலைகள் ஒரு டன்னுக்கு ரூ.5 லட்சம் வரை செலவாகிறது. 15-லிருந்து 30 நாட்கள் தங்கித் தொழில்செய்யும் படகுகளுக்குக் குறைந்தபட்சம் 8 டன்கள் வலைகளாவது வேண்டும். வலைகளைத் தயார் செய்வதற்கே ரூ. 40 லட்சம் ஆகும். இனி படகின் ஓட்டுநர், இதர கடலோடிகளுக்கான முன்பணம், எரிபொருள், குடிநீர், சாப்பாடு, பதப்படுத்தும் பனிக்கட்டிகள் என இதர செலவுகள். ஆக, படகைத் தவிர்த்துக் குறைந்தபட்சம் ரூ. 50 லட்சம் இல்லாமல் ஆழ்கடலுக்குப் படகைத் தொழிலுக்காக அனுப்ப முடியாது. இவ்வளவு பணத்தை முடக்கிய பிறகும் கரைகட்டமைப்பும் சந்தைப்படுத்தலும் தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருக்கிறது; பெரும் முதலீடுகளையும் சவால்களையும் தவிர்த்து, வழக்கம்போல சிறிய விசைப்படகுகளில் முதலீடு செய்துவிடலாமே என்பது விசைப்படகு மீனவரின் இப்போதைய மனநிலை.

எந்தத் திட்டமானாலும் அது விசைப்படகு மீனவர்களுக்கு மட்டும்தானா, நாங்களெல்லாம் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா என்ற குரலும் நாட்டுப்படகு மீனவர் தரப்பிலிருந்து கேட்கிறது. ஆழ்கடல் மீன்பிடித்தல் திட்டத்தை மறு ஆய்வு செய்து; மானிய வரம்புகளை உயர்த்தி, பாரம்பரிய நாட்டுப்படகு மீனவரையும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம், இந்தத் திட்டத்துக்குள் கொண்டுவரலாம். அரசுதான் ஆவன செய்ய வேண்டும். ஆழ்கடல் மீன்பிடித்தலின் வெற்றியே அதற்காக உருவாக்கப்படும் கரைக் கட்டமைப்பிலும், அரசு கண்காணிப்பில் இயங்கவிருக்கும் சந்தைப் படுத்தலிலுமே இருக்கிறது.

பலதரப்பு முன்னெடுப்புகளுக்குப் பிறகும் மத்தியில் மீன் துறை இன்னும் தனி அமைச்சகமாக இயங்கவில்லை, அதற்கான காலம் கனிந்தால் அதன் அக்கறையான செயல்பாடுகளால் கடலோரப் பொருளாதாரம் பேணப்பட்டு வளம்பெறும் என்பது என் நம்பிக்கை.

- ஆர்.என். ஜோ டி குருஸ், ‘ஆழி சூழ் உலகு’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: rnjoedcruz@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x