Published : 28 Oct 2020 10:03 AM
Last Updated : 28 Oct 2020 10:03 AM

சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 9: வாழைப்பூ மடலில் தயிர் சாதம்

கல்யாணி நித்யானந்தன்

வைகறைப் பொழுது. பெரியப்பா வீட்டுத் தோட்டம். பாட்டி குளித்துவிட்டு, ஈரப் புடவையுடன் வருகிறார். காவி நிறப் புடவை. ஒரு தலைப்பு தோளைச் சுற்றி, காதுகளின் பின் வழியாக முன் வந்து, மழிக்கப்பட்ட தலையை மூடி இருக்கும். மீதியுள்ள சேலை உடலைச் சுற்றித் தலைப்பு கொசுவப்பட்டு மற்ற தோளில் மூடப்பட்டு இருக்கும்.

தலையைத் திருப்பி தோட்டத்தைப் பெருக்கிக்கொண்டு இருக்கும் வெள்ளையனிடம், ‘‘அந்த அவரைப் பந்தல் ஒரு மூலையில் தொங்கறதே! கவனிக்கலையா? இழுத்துக் கட்டு’’ என்று ஒரு அதட்டல். உடனேயே, ‘‘சரி... சரி... கட்டிவிட்டு உள்ளே போய் கஞ்சி குடி...’’ என்கிற பரிவு. பின் தாழ்வாரத்தில் கொடியில் உலர்த்தி இருக்கும் மடிப் புடவையை மூங்கில் குச்சியால் எடுத்துக்கொண்டு உள்ளே போவார். ஐந்து நிமிடத்தில் மடிசார் உடுத்தி, கொசுவப்பட்ட ஈரப் புடவையை அதே மூங்கிலில் கொண்டு வந்து கொடியில் போட்டுப் பிரித்துவிடும் நேர்த்தியோ நேர்த்தி!

சில நாள்களில் தோட்டத்தில் வந்துகொண்டு இருக்கும்போதே வாழை மரங்களின் இலைகளைக் கிழித்து விடுவார். ‘‘ஏன் பாட்டி..’’ என்று ஒருமுறை நான் கேட்டபோது, ‘‘இல்லேன்னா அந்தத் தர்ம பிரபு... உங்க பெரியம்மா அண்டை அசல்லே யார் கேட்டாலும் இலையைப் பறிச்சுக் கொடுத்திடுவா... அப்புறம் மரம் என்ன ஆவது?’’ என்றார். உள்ளே வந்து நெற்றிக்கு விபூதி இட்டுக்கொண்டு தூணில் சாய்ந்து ஜெபமாலையை உருட்டத் தொடங்குவார். ஆனால், கண்ணும் காதும் உள்ளே நடக்கிற ஒன்னும் கவனத்திலிருந்து தப்ப முடியாதபடி கூர்மையுடன் இருக்கும்.

அடுக்களையில் ஒரு அக்கா அரிவாள்மனையில் காய் நறுக்கிக்கொண்டு இருப்பார். நறுக்கிய துண்டுகள் ஒரு மரத்தட்டில் விழுந்து கொண்டிருக்கும். நாங்கள் பல் தேய்த்து முகம் கழுவிக்கொண்டு உள்ளே வருவோம். ‘‘ஏண்டி பொண்ணுகளா... நெற்றிக்கு இட்டுண்டாச்சோ?’’ என்ற கேள்வி தொடரும். வீட்டிலேயே தயார் செய்த கேப்பை மாவில் செய்த கஞ்சி நாட்டுச் சர்க்கரை போடப்பட்டு ஒரு பொட்டடுக்கில் சூடாக இருக்கும். காய்ச்சிய பால் ஒரு உருளியில் இருக்கும். டம்ளரில் பாதியளவு கஞ்சியை ஊற்றி, பாலின் மீதுள்ள ஆடையை வெங்கல ஆப்பையால் ஓரம் தள்ளி, பாலால் டம்ளரை நிரப்பி ஒவ்வொருவருக்காகக் கொடுப்பார் பெரியம்மா. பட்டணத்தில் காபி குடித்துப் பழகிய எனக்குக் கஞ்சி பழக கொஞ்ச நாள் பிடித்தது.

எட்டு மணி வாக்கில் ‘பழையது’ சாப்பிடக் கூப்பிடுவார்கள். பெரிய கல் சட்டியில் பிழிந்து போடப்பட்ட பழைய சோற்றில் கட்டித் தயிர் சேர்த்து பதமாகப் பிசையப்பட்டிருக்கும். பெரியம்மாவோ, அத்தையோ சுற்றி உட்கார்ந்திருக்கும் எங்கள் கைகளில் அள்ளிப் போடுவார்கள். கட்டை விரலால் நடுவில் குழித்துக் கொண்டதும் அதில் சுண்டக்குழம்பு சிறிது ஊற்றப்படும். போதும் போதும் என்கிற அளவுக்குச் சாப்பிட வைப்பார்கள். சில நேரம் வாழை குலை தள்ளி இருந்தால், வாழைப் பூவின் மடலில் இந்தத் தயிர் சாதத்தைப் போட்டுச் சாப்பிடுவோம். மடலின் கருஞ்சிவப்பில் வெள்ளை வெளேரென்ற தயிர் சாதம்... எவ்வளவு பொருத்தமாக இருக்கும் தெரியுமா?

இயற்கையான, ஒருமுறை உபயோகித்துக் களையும் எத்தனை பொருட்கள் இருந்தன தெரியுமா? வாழைப்பூ

மடல், உலர்த்திய மட்டை சீவப்பட்ட வாழை இலைகள் (இதை ‘சருகு’ என்பார்கள்), தையல் இலைகள் - மந்தார இலையைப் பதமாக உலர்த்தி ஈர்க்கங்குச்சிகளால் தைக்கப்பட்டிருக்கும் என எத்தனையோ உண்டு. சருகு தொன்னைகள், பாக்கு மட்டைகள் போன்ற இக்காலத்தில் பயன்படுத்திக் களையும் பொருட்கள் எல்லாம் இவற்றின் காலில் கட்டி அடிக்கக் காணாது. ஏனென்றால், தூக்கி எறியப்பட்டபோது இவை எருக்குழியில் இடப்பட்டு மக்கும் அல்லது மாட்டுக்கு உணவாகும்.

‘பன்னாடை’ என்ற சொல்லைத் திட்டுவதற்காக ‘உபயோகமற்றவன்’ என்ற பொருளில்தான் கேட்டிருப்பார்கள். ‘தென்னம் பன்னாடை’ வலை போல இருக்கும். வடிகட்ட உபயோகிப்பார்கள். நல்லதை ஒழுக விட்டு ‘அழுக்கை’ மட்டும் நிறுத்திக் கொள்வதால்தான் இந்த ‘திட்டு’ வந்தது.

தோட்டத்தில் மாட்டுத் தொழுவத்தின் வைக்கோல், கழுநீர், பசுஞ்சாணம் எல்லாம் கலந்த மணம், கோடையில் வேப்பம் பூவின் மணம். சிலநேரம் பெரிய இரும்படுப்பில் அண்டாவில் நெல் புழுங்கும் மணம் (அபாரமாக, வர்ணிக்க முடியாத வாசம்) எல்லாம் ரசிக்கக் கூடிய இயற்கை மணங்கள்.

10 - 15 நாட்களுக்கு ஒருமுறை தெருவில் ‘மோர், தயிர் வெண்ணை வாங்கலையோ...’ என்று கூவிக்கொண்டு போகும் பெண்மணி திண்ணைக்கு அழைக்கப்படுவார். சின்ன அடுப்பில் வெண்ணெய் காய்ச்சப்பட்டு நெய்யாக ஊற்றி அளக்கப்படும். பாட்டிக்கும் அந்தப் பெண்மணிக்கும் பேரம் நடப்பதைப் பார்க்க, கேட்க வேண்டுமே! பேரம் படிந்து நெய்யை அளந்து உள்ளே கொண்டு போகும்போது பாட்டி ‘‘இந்தா ..... (பெயர் மறந்து விட்டது) வெய்யில் வேளை. இரு... கொஞ்சம் சாதம் கொண்டு வருகிறேன். சாப்பிட்டுக் கொஞ்சம் தலையைச் சாய்த்துவிட்டுப் போ’’ என்பார்.

சில்லறைக்குப் பேரமும் வாக்குவாதமும் செய்த அதே பாட்டிதான், கண்டிப்பும் கறாருமான அதே மனத்தின் உணவிடும் தாராளம். அந்தத் தலைமுறை வாழ்ந்து காட்டியே படிப்பித்தார்கள்.

பெரியப்பா ஒரு வழக்கறிஞர். மதுரையில் நீதிமன்றத்துக்குப் போகும் தினங்களில் பஞ்சகச்ச வேஷ்டியும் முழுக்கை வெள்ளைச் சட்டையும், கறுப்புக் கோட்டும், நெற்றியில் விபூதிக் கீற்றும், தலையில் ‘டர்பன்’ தலைப்பாகையுடன் இரட்டை மாட்டு வில் வண்டியில் போவார். இந்தத் தலைப்பாகை கட்டித்தரவென்று வாரத்துக்கு ஒருமுறை ஒரு ‘மாமா’ வருவார். நல்ல வெளுப்பில், விசிறி மடிப்பாக ‘இஸ்திரி’ செய்யப்பட்ட தலைப்பாகைத் துணி இருக்கும். நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் பெரியப்பாவின் தலையில் ‘டர்பனை’ அழகாகக் கட்டி குண்டூசி குத்திவிடுவார். பிறகு அது அலுங்காமல் எடுக்கப்பட்டு, ‘கோட் ஸ்டாண்டில்’ மாட்டப்படும். தேவைப்படும்போது பெரியப்பா அதை எடுத்துத் தரித்துக்கொள்வார்.

பெரியப்பா தினசரி பூஜை எல்லாம் செய்வதில்லை. ஆனால், ஸந்த்யாவந்தனம் தவறாமல் செய்வார். பண்டிகை தினங்களில் குடும்ப ‘வாத்தியார்’ புரோகிதர் வந்து மந்திரங்கள் சொல்லி பெரியப்பாவை பூஜை செய்விப்பார். தினசரி படங்களுக்குப் பூச்சூட்டி, கோலம் போட்டு, இரண்டு வேளையும் விளக்கு ஏற்றப்படும். சமையல் ஆனதும் சாதத்தில் துளி பருப்பும் நெய்யும் போடப்பட்டு நைவேத்யம் செய்வார்கள். ‘‘பாவம் நம்மாத்து சாமிக்குத் தினமும் வெறும் பருப்புஞ்சாதம்தான். ஒரு கறியோ, கூட்டோ கிடையாது...’’ என்று பெரியப்பா சில நேரம் கேலி செய்வார். நாள், கிழமைகளில்தான் வடை, பாயசம், பொங்கல், அப்பம் என்று செய்து நைவேத்யம் செய்யப்படும்.

பெரும்பாலும் வடை தட்டிக்கொண்டு இருக்கும்போதே சிறியவர்களான நாங்கள் வடைக்காகச் சுற்றிச் சுற்றி வருவோம். அதனால், பெரியம்மா ஐந்தாறு வடை சுட்ட உடனேயே நைவேத்யத்துக்கு அவற்றைக் கொண்டு வைத்து விடுவார்கள். பிறகென்ன... நாங்கள் வடையைப் பிய்த்து நாக்கு சுடச் சுட ஊதிக்கொண்டே தின்போம். தெய்வத்தையும் குழந்தைகளையும் சமாளிக்கும் சாமர்த்தியம். ‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும்’ இடத்தில் என்ற தாய்மை மனப்பான்மையா?

சந்திப்போம்... சிந்திப்போம்..!

கட்டுரையாளர்: கல்யாணி நித்யானந்தன்,
இதயநோய் நிபுணர் (பணி நிறைவு),

டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.

தொடர்புக்கு:joenitya@yahoo.com
ஓவியம்: வெங்கி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x