Published : 23 Oct 2020 06:59 AM
Last Updated : 23 Oct 2020 06:59 AM

முத்தையா முரளிதரன்... விஜய் சேதுபதி... சில எதிர்வினைகள்...

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘800’-ல் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்ததற்கு எழுந்த எதிர்ப்புகளைப் பற்றி இரா.வினோத் கடந்த 21-ம் தேதி ‘இந்து தமிழ்’ நாளிதழில் எழுதிய ‘ஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா?’ கட்டுரைக்கு ஆதரவும் எதிர்ப்புமாகப் பலவிதமான எதிர்வினைகள் எழுந்துள்ளன. அவற்றின் சுருக்கமான தொகுப்பு…

வன்னி அரசு, அரசியலர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

2009 மே 15, 16, 17, 18, 19 என முள்ளிவாய்க்கால் ரத்த ஆற்றில் தமிழர்களின் ஒப்பாரியும் ஓலமும் கரைந்தன. உலகமே வேடிக்கை பார்த்தது. சிங்கள தேசத்தின் அதிபர் ராஜபக்ச யாழ் மண்ணை முத்தமிட்டு, இதுதான் எனது மகிழ்ச்சியான நாள் என உலகுக்கு அறிவித்தார். ராஜபக்ச போன்று இன்னொருவர் இந்த இனப்படுகொலை நாளை மகிழ்ச்சியான நாள் என அறிவித்தார். அவர்தான் மட்டைப்பந்து வீரர் முத்தையா முரளிதரன்.

2009 சனவரி 8-ம் நாள் சிங்களப் பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்க சிங்களப் பேரினவாதிகளால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். தமது ‘த சண்டே லீடர்' இதழில் சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராகவும் தமிழ் மக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து ஆதரித்தும் எழுதிவந்தவர் லசந்த விக்கிரமதுங்க. அதற்காகவே அவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

இது குறித்து முத்தையா முரளிதரனிடம் கேட்டபோது, ‘‘ஒன்றுபட்ட இலங்கைக்கு எதிராக யார் பேசினாலும் இது ஒரு பாடம்’’ என்றார். ஒரு ஜனநாயகவாதியாக சிங்கள இனவாதிகளின் தவறுகளைச் சுட்டிக்காட்டிய ஊடகவியலாளரின் படுகொலைகூட நியாயமானது என்றவர் முத்தையா முரளிதரன். இப்படி சிங்களப் பேரினவாதத்தின் குரலாகச் செயல்பட்டுவருபவர் முத்தையா முரளிதரன். இவருடைய வரலாறு ‘800' என்னும் பெயரில் திரைப்படமாக எடுப்பதற்கு நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். முத்தையா முரளிதரன் கதாபாத்திரம் தமிழினப் பற்றாளர் விஜய் சேதுபதிக்குப் பொருத்தமற்றது என்பதுதான் உலகத் தமிழரின் கோரிக்கை. ஆனால், கட்டுரையாளர் வினோத் இவற்றை மடைமாற்ற முயற்சித்துள்ளார். முத்தையா முரளிதரன் எதிர்ப்புக்குப் பின்னால் சாதி, வர்க்கம், மாகாண வேறுபாடுகள், மலையகத் தமிழர் எனப் பாகுபாடுகள் இருப்பதாகக் குற்றம் சுமத்துகிறார்.

2009 போருக்குப் பின் ராஜபக்சவின் சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் உள்ள தங்காலை என்னும் சிங்கள கிராமத்தை முத்தையா முரளிதரன் தத்தெடுத்து உதவிகள் செய்துவருகிறார். போரினால் பாதிக்கப்பட்ட ஒரு தமிழ்க் கிராமம் அல்லது மலையகத்தில் மிகவும் பின்தங்கியுள்ள ஏதாவது ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து உதவிகள் செய்யலாமே. இப்படிப் பல செயல்பாடுகள் ஊடாகத்தான் முத்தையா முரளிதரன் தமிழினத்துக்கு எதிரானவராகவும் சிங்கள இனவாதிகளுக்கு ஆதரவாளராகவும் அவரே கட்டமைத்துக் கொண்டார். இனவாத அரசியலை ஆதரித்தார் என்பதற்காகத்தான் இந்த எதிர்ப்பே தவிர, மலையகத் தமிழர் என்னும் காரணமல்ல.

பெ.மணியரசன், அரசியலர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

எந்த நாட்டிலே, அந்நாட்டின் அரசியல் முடிவுக்கு அப்பால் அயல்நாட்டு இசைக் குழுவை, கலைக் குழுவை, விளையாட்டுக் குழுவை அனுமதிக்கிறார்கள்? இந்திய அரசு பாகிஸ்தான் மட்டைப் பந்துக் குழுவை இங்கு விளையாட இப்போது அனுமதிக்குமா? சீனாவின் இசைக் குழு இப்போது இந்தியாவில் நிகழ்ச்சி நடத்த மோடி அரசு அனுமதிக்குமா? சீன நாட்டு இணைய டிக்டாக், கேம் ஸ்கேனர் போன்ற செயலிகளை இந்தியா தடைசெய்தது ஏன்? இப்போது நடக்கும் எல்லை மோதல்தான்! இது அரசியல் இல்லையா?

தென்னாப்பிரிக்காவில் அந்நாட்டின் மண்ணின் மக்களாகிய கருப்பினத்தவர்களை வெள்ளையர்கள் இனஒதுக்கல் (Aparthied) செய்தார்கள். எனவே, அந்த நாட்டுடன் இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகள் தூதரக உறவு வைக்காமல் ஒதுக்கிவைத்திருந்தன. இசை, கலை, விளையாட்டுக் குழுக்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்குப் போகத் தடை; தென்னாப்பிரிக்கக் குழுக்கள் இந்த நாடுகளுக்கு வரத் தடை இருந்தது. இனஒதுக்கலை அந்நாடு கைவிட்ட பின்தான் இந்நாடுகள் இத்தடையை நீக்கின. மேற்படி தடையை எல்லோரும் ஆதரித்தோம்!

இலங்கையில் சிங்கள இனவெறி ஆட்சி ஈழத் தமிழர்களை லட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்த பின், இலங்கைக்கு எதிராக இந்திய அரசு தூதரக உறவைத் துண்டித்துத் தடைகள் போட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டுத் தமிழர்களின் இன உணர்ச்சியைக் கணக்கில் கொண்டு, அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றத்தில், இலங்கை அரசுக்கு எதிராக இந்திய அரசு பொருளாதாரத் தடைவிதிக்க வேண்டும்; சிங்களப் படை வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது, இலங்கை விளையாட்டுக் குழுக்கள் இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் விளையாடக் கூடாது – என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினார்!

இதன் தொடர்ச்சியாகத்தான், சிங்களப் பேரினவாத அரசு நடத்திய தமிழினப் படுகொலையை ஆதரித்த, ஆதரிக்கின்ற முத்தையா முரளிதரன் வேடத்தில் தமிழ் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்கிறோம். சிங்கள நடிகர்களைக் கொண்டோ, வேறு நாட்டு நடிகர்களைக் கொண்டோ முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படம் வந்தால் எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால், அந்தப் படம் தமிழ்நாட்டில் ஓடக் கூடாது என்கிறோம்!

ச.சீ.ராஜகோபாலன்,,மூத்த கல்வியாளர்.

வினோத் எழுதிய கட்டுரை மிகச் சிறப்பு. ஒற்றை நோக்கிலிருந்து நம் மக்களை இது விடுவிக்கும் என்று விரும்புவோம்.

ஜி.ராமகிருஷ்ணன், அரசியலர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

உலகமே ஒத்துப்போகிற ஒரு கருத்தோடு கூட எந்தவொரு தனி மனிதனும் மாற்றுக் கருத்தை முன்வைப்பதற்கு உரிமையுண்டு. அந்தக் கருத்துக்கு எதிரான கருத்துகளைக் கடுமையாக விமர்சிப்பதற்கான உரிமையும் ஒருவருக்கு உண்டு. இந்தக் கருத்துத் தளத்தைத் தாண்டி எந்தவொரு தனி மனிதரையோ அவருடைய குடும்பத்தினரையோ வக்கிரத்தோடும் வன்மத்தோடும் விமர்சிப்பதற்கான உரிமை எவருக்கும் கிடையாது.

விஜய் சேதுபதியின் கருத்தை அல்லது முடிவை விமர்சிப்பதற்காக அவரது குழந்தையை முன்வைத்து வக்கிரமான முறையில் பதிவிடுவதை வன்மையாகக் கண்டிப்பதோடு, இப்படிப் பதிவிட்டவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனத் தமிழகக் காவல் துறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

சிவில் சிவகுமார், வாசகர்.

முத்தையா முரளிதரன் மாறுபட்ட கருத்தைச் சொல்லியிருந்தாலும்கூட அதற்கும் அவரைப் பற்றி வரலாற்றுப் படம் வருவதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பது உண்மைதான். இதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை. மாற்றுக் கருத்துகள் சொல்வதானால், ஒருவரை முழுவதும் எதிரியாகவே பார்க்கும் மனோபாவம் பெருகிவருவது சமூகத்திற்கு நல்லதல்ல. கட்டுரையின் முடிவில் சாட்டையடியாக, ஊராட்சித் தலைவரை நாற்காலியில்கூட உட்கார அனுமதிக்காத ஆதிக்க சாதியினரின் வீடுகளை யாராவது முற்றுகையிட்டிருக்கிறார்களா என்று எழுப்பிய கேள்வி நியாயமான ஒன்று.

ச.பாலசந்தர், வாசகர்.

உண்மையில் நவீன சிந்தனையாளர்கள் மற்றும் ஜனநாயகவாதிகள் ‘800’ படத்தையும், விஜய் சேதுபதியையும் விமர்சிக்க மாட்டார்கள். முத்தையா முரளிதரன் மீது முரண்பட்ட கருத்துக்கள் இருப்பினும் அவர் உலகளவில் ஒரு தலைசிறந்த கிரிக்கெட் வீரர். முரளிதரனின் கிரிக்கெட் பயணத்தை ஆவணமாக்கி அதை மிகச் சிறந்த கலைஞன் பிரதிபலிப்பதற்கு ஜனநாயக நாட்டில் இடமில்லையா? இனியேனும் ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டும்.

நா.இராசாரகுநாதன், செயல்பாட்டாளர், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை.

வினோத் தனது கட்டுரையின் இறுதிப் பத்தியில் ‘‘வேடிக்கை என்னவென்றால் இப்போது போராளி வேஷம் கட்டுபவர்கள் பலர் தமிழ்ச் சமூகத்தின் அசலான பிரச்சினைகளை மௌனம் காப்பதுதான்’’ என்று குறிப்பிடுகிறார். தமிழ்நாட்டு இறையாண்மையின் அசலான பிரச்சினையான மீத்தேன் எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு, அணு உலை எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு உரிமைப் போராட்டம், காவிரி உரிமைப் போராட்டம் என எல்லாவற்றிலும் முன் நிற்க கூடிய ‘‘போராளிகளே’’ இவ்விஷயத்தில் கருத்து தெரிவித்திருக்கின்றனர். எந்தக் கலையும் கலைஞர்களும் மொழி, இனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல!.

எஸ்.வி.வேணுகோபாலன், எழுத்தாளர்.

இணையவழி குறுங்கூட்டம் ஒன்றில் விஜய்சேதுபதி ஏன் நடிக்கக் கூடாது என்ற கேள்வி வந்தபோது மலையகத் தமிழர் பிரச்சினை, ஈழப் பிரச்சினையில் எப்படிப் பின்னுக்குப் போனது என்பதையெல்லாம் சுருக்கமாக விளக்கும் வாய்ப்பு கிடைத்தது. இரா.வினோத்தின் கட்டுரை பார்த்ததும் சிலிர்த்தது. மகிழ்ச்சியோடு அந்தத் தோழர்களுக்கு அனுப்பி வாசிக்கக் கேட்டுக்கொண்டேன்.

பா.செயப்பிரகாசம், எழுத்தாளர்.

‘‘முத்தையா முரளிதரன் மலையகத்தைச் சாராத ஈழத் தமிழராகவோ அந்தப் படத்தை லைகா தயாரித்திருந்தால் இந்த எதிர்ப்பு எழுந்திருக்காது என்றும் சொல்லப்படுகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளீர்கள். முத்தையா முரளிதரன் என்னவாக இருந்தார் என்பதில் இருந்துதான் மதிப்பீடு உருவாக வேண்டுமே தவிர, என்னவாக இருந்திருக்க வேண்டும் என்ற புனைவிலிருந்து மதிப்பீடு செய்யக் கூடாது. ‘‘அவர் ஒரு விளையாட்டு வீரர்: அரசியலர் அல்ல’’ என்று ஒட்டுச்சுவர் வைக்கிறீர்கள். ஒருவர் என்னவாக சமூகப் பாத்திரம் வகித்தாலும், அந்தப் பாத்திரத்துக்குச் சில எண்ணங்கள் கருத்துக்கள் உள்ளன: முத்தையா முரளிதரன் என்ற சமூகப் பாத்திரம் சிங்களப் பேரினவாத ஆதரவு மனோநிலை கொண்டதாகத்தான் வெளிப்பட்டுள்ளது; தமிழனாக அல்ல என்ற எதார்த்தத்திலிருந்துதான் நாம் காண வேண்டும். ‘‘தமிழ் தேசியம் பேசுபவர்கள் தமிழகத்தின் அசலான சாதியப் பிரச்சினைகளில் மௌனம் சாதிப்பது ஏன்?’’ என்று தாங்கள் எழுப்பிய கேள்வி நியாயமானது. அதையும் முத்தையா முரளிதரனுக்குச் சார்பாக வளைத்துக்கொண்டு போவதுதான் பொருந்தாமல் நிற்கிறது. ‘‘இலங்கை ராணுவத்துடன் நேருக்கு நேர் போர் நடத்திய முன்னாள் போராளிகள் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பிவிட்டனர்’’ என்று முத்தாய்ப்பாக வைக்கிறீர்கள். ஆனால், ஜனநாயகப் படுகொலை நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்காலில் ரத்தக்கறை படிந்த சுவடுகள் இன்னும் ஈரம் உலராமல் உள்ளன என்பதை அவர்களும் ஏற்பார்கள், தாங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் எனக் கருதுகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x