Published : 22 Oct 2020 06:32 AM
Last Updated : 22 Oct 2020 06:32 AM

பிப்ரவரியில் முடிவுக்கு வருமா பெருந்தொற்று?

பெருந்தொற்று செல்லும் பாதை எப்படி இருக்கும் என்பதை கணிக்கவும் அதற்கு கணித மாதிரியைப் பயன்படுத்தவும் ஒரு குழுவை ஒன்றிய அரசின் அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்குமான துறை நியமித்தது. இந்தக் குழுவில் பெயர்பெற்ற கணித வல்லுநர்களும் தொற்றுநோயியல் வல்லுநர்களும் அடங்கியிருக்கிறார்கள். இந்தக் குழு நல்ல செய்தியொன்றைக் கூறுகிறது. அவர்களின் கணிப்பின்படி, இந்தியாவில் கரோனா பெருந்தொற்றானது செப்டம்பரில் உச்சம் தொட்டுவிட்டது; அதற்குப் பிந்தைய ஒரு மாதமாக ஒட்டுமொத்தத் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டுமிருக்கிறது. இப்போது தொற்றுடன் இருப்பவர்களின் எண்ணிக்கை 7.5 லட்சத்துக்கும் மேலே இருக்கிறது; டிசம்பருக்குள் 50 ஆயிரத்துக்கும் கீழே குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பிப்ரவரி வாக்கில் மிக மிகக் குறைவான தொற்றுக்களே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் குழுவைச் சேர்ந்த ஏழு பேரும் திறன் மிக்கவர்கள் என்று நாம் ஏற்றுக்கொண்டாலும் இது கணித மாதிரியை அடிப்படையாகக் கொண்ட கணிப்பு மட்டுமே என்ற உண்மையையும் நாம் கவனிக்க வேண்டும். வேறு சில கணிப்புகளும் உள்ளன. குளிர்காலத்தின்போது கரோனா வைரஸின் மரபணுவில் எந்த மாற்றமும் ஏற்படாமல் இருந்தால் தொற்று எண்ணிக்கை குறைவது தொடரும்; நோயெதிர்ப்பு சக்தி மருந்துகளும் நீடித்த பலனைத் தரக்கூடியதாக இருக்க வேண்டும்; நோய்த் தடுப்பு வழிமுறைகளை மக்களும் அரசும் பின்பற்ற வேண்டும். மாவட்ட அளவைத் தாண்டியெல்லாம் கடுமையான பொதுமுடக்கம் அமல்படுத்துவதால் எந்த லாபமும் இல்லை; தற்போதைய தடுப்பு நடவடிக்கைகளே போதும்.

பெருந்தொற்றின் மாதிரி உருவாக்கம் என்பது எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அறிந்துகொள்வதற்கானது; கணிதரீதியிலான மாதிரி என்பது பிரபலமான ஒன்றாகவும் நிறைய சாத்தியங்கள் கொண்டதாகவும் இருக்கிறது. சமீபத்திய மாதிரிகள் பாதிப்புக்குள்ளாகக் கூடியோர், தொற்றுக்குள்ளானோர், மீண்டவர்கள் போன்ற அடிப்படைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன. எனினும் பெருந்தொற்று தொடர்பான வல்லுநர்கள் இதுபோன்ற கணித மாதிரிகளை முழுக்கவும் அப்படியே ஏற்றுக்கொண்டுவிடக் கூடாது என்று பல முறை அறிவுறுத்தியிருக்கிறார்கள். சமீபத்திய மதிப்பீட்டைக் கடந்த கால முடிவுகளை நியாயப்படுத்துவதற்கான ஒன்றாகப் பயன்படுத்திக்கொண்டுவிடக் கூடாது; எதிர்காலப் போக்கைத் தீர்மானிக்கவே அதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, வரும் பிப்ரவரிக்குள் பெருந்தொற்று முடிவுக்கு வந்துவிடும் என்றும் டிசம்பருக்குள் பெருமளவுக்குக் குறைந்துவிடும் என்றும் இந்தக் கணித மாதிரி சுட்டிக்காட்டுவதால் அதற்கேற்றவாறு தடுப்பு மருந்துகள் தொடர்பான வேலைகளையும் வெள்ளோட்ட முயற்சிகளையும் முடுக்கிவிட வேண்டும். கணித மாதிரிகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டுவருவது அரசின் கையிலும் மக்களின் நடத்தையிலும்தான் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x