Published : 20 Oct 2020 07:35 am

Updated : 20 Oct 2020 07:35 am

 

Published : 20 Oct 2020 07:35 AM
Last Updated : 20 Oct 2020 07:35 AM

அனைவரையும் உள்ளடக்கிய மத்திய உயர்மட்ட அமைச்சரவை ஏன் அவசியமானதாகிறது?

central-ministry

கால் நூற்றாண்டுக் காலத்தில் முதன்முறையாக மத்திய உயர்மட்ட அமைச்சரவையில் ஒரே கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கிறார்கள். லோக் ஜனசக்தியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானின் மரணமும், சில வாரங்களுக்கு முன்பு ஷிரோமணி அகாலி தளத்தின் ஹர்சிம்ரத் கவுர் பாதல், வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்று தனது கட்சி கருதுவதன் காரணமாக மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறியதும் திடுதிப்பென்று இப்படியொரு சூழலை உருவாக்கியுள்ளன.

2014-ல் மக்களவையில் சரிபாதி இடங்களுக்கு மேலாக பாஜக வென்றது; 1984-க்குப் பிறகு, முதல் தடவையாகத் தனிப் பெரும்பான்மையை ஒரு கட்சி பெற்ற நிகழ்வு அது. 2019-ல் பாஜக தனது எண்ணிக்கையை மேலும் உயர்த்திக்கொண்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் இருந்தாலும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள எந்தவொரு கட்சியையும் அது சார்ந்திருக்க வேண்டியதில்லை. ஆயினும், கூட்டணி ஆட்சியாகவே தன்னுடைய ஆட்சியை அது தொடர்ந்தது. ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை முடிவுக்குக் கொண்டுவருவது, குடியுரிமைக்கான தகுதி போன்ற நீண்ட பின்விளைவுகளை உண்டாக்கக்கூடிய முடிவுகளையும்கூட கூட்டணிக் கட்சிகளையோ, பிராந்திய அரசியல் குழுக்களையோ கலந்தாலோசிக்காமல் சுயேச்சையாகத்தான் அது எடுத்தது என்றாலும், கூட்டணிக் கட்சிகள் கைகளிலும் முக்கியமான சில துறைகள் இருந்தன என்பது ஏதோ ஒரு விதத்தில் பன்மைத்துவத்துக்கு இடமளித்தது. முக்கியமாக, பல்வேறு சமூகங்கள் - வெவ்வேறு பிராந்தியங்களின் பிரதிநிதித்துவத்துக்கு இது வாய்ப்பளித்தது. இப்போது அந்த இடமும் வெற்றிடம் ஆகியிருக்கிறது.


இன்றைய பாஜகவைப் பொறுத்தவரையில், அதன் நாடாளுமன்றப் பெரும்பான்மை வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் குறிப்பிட்ட சில சமூகங்களிடமே குவிந்திருக்கிறது. ஆனால், இந்தியா போன்ற ஒரு பரந்துவிரிந்த தேசத்தின் ஆட்சியானது, ஒரு கட்சியின் அரசியல் வரைபடத்தில் இடம்பெற்றிராத பிராந்தியங்களையும் சமூகங்களையும்கூட உள்ளடக்க வேண்டியது. கட்சிக்குள் அப்படிச் சில முயற்சிகளையும் பாஜக ஏற்கெனவே முன்னெடுத்திருக்கிறது. தமிழகம் - கேரளத்தில் அந்தக் கட்சி ஒரு மக்களவைத் தொகுதியைக்கூட வெல்லவில்லை என்றாலும், தமிழரான நிர்மலா சீதாராமனுக்கும் மலையாளியான வி.முரளிதரனுக்கும் மத்திய அமைச்சரவையில் இடமளித்திருக்கிறது. ஆயினும், மத்திய உயர்மட்ட அமைச்சரவையானது குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், கர்நாடகம், மஹாராஷ்டிரம், பிஹார், உத்தராகண்ட், ஜார்க்கண்ட், டெல்லி ஆகிய சில பிராந்தியங்களால் நிரம்பியதாகவே காட்சிதருகிறது என்பதை நாம் மறந்துவிட முடியாது.

அரசியலில் அனைவரையும் உள்ளடக்கும்போதுதான் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் முக்கியமான இடங்களைப் பகிர்வது பல தரப்புக் குரல்கள் அரசை வந்தடைய வழிவகுக்கும். பாஸ்வானின் மரணத்தாலும் பாதலின் பதவி விலகலாலும் உருவாகியிருக்கும் சூழலானது, பிராந்தியங்கள் மற்றும் சமூகக் குழுக்கள் தொடர்பான பாஜகவின் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்துகொள்ளும் ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது.


மத்திய உயர்மட்ட அமைச்சரவைCentral ministry

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x