Published : 20 Oct 2020 07:31 am

Updated : 20 Oct 2020 07:32 am

 

Published : 20 Oct 2020 07:31 AM
Last Updated : 20 Oct 2020 07:32 AM

ஜெகன்மோகன், ரமணா: விவாதத்துக்குள்ளாகும் இந்திய நீதித் துறை

jagan-mohan-ramana

ஆந்திராவை மையம் கொண்டு நடக்கும் ஒரு விவாதம் தேசிய அளவில் விவாதிக்கப்பட வேண்டியதாகிறது. முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் இன்னும் சில மாதங்களில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவிருக்கும் ரமணாவுக்கும் இடையிலான போர்தான் அது. அரசமைப்பு சார்ந்த முக்கியமான பதவிகளை வகிக்கும் இவ்விருவருக்கும் இடையிலான இந்தப் போர் முன்னுதாரணமற்ற ஒரு புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது.

ஆந்திரம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, ஆந்திரம் - தெலங்கானா என்று இரு மாநிலங்களாக உருவானதும், தலைநகர் ஹைதராபாத் தெலங்கானாவுக்கு உரியதாகிவிட்டது. ஆந்திரத்துக்கான புதிய தலைநகரமாக ‘அமராவதி’யை உருவாக்க முனைந்தார் முந்தைய முதல்வர் சந்திரபாபு நாயுடு. பெரிய அளவில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, நகரமைப்பை உருவாக்க ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், 2019 சட்டமன்றத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 50% வாக்குகளுடன் வென்றதோடு, 151 இடங்களையும் கைப்பற்றியது; சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சி வெறும் 23 இடங்களோடு சுருக்கப்பட்டது.


விளைவாக, சந்திரபாபுவின் கனவுத் திட்டமான ‘அமராவதி’யில் கை வைத்த ஜெகன்மோகன், மாநிலத்துக்கு மூன்று தலைநகரங்கள் என்ற முடிவை எடுத்து அமராவதி கட்டுமானத் திட்டத்தையும் குறுக்கினார். இதோடு, அமராவதிக்காக நிலங்களை அரசு கையகப்படுத்தியதில் பல ஊழல்கள் நடந்திருப்பதாகக் கூறி, விசாரணைக் குழுவும் அமைத்தார். கூடவே, இது தொடர்பில் விசாரிக்க ஒரு சிறப்புக் காவல் படையும் அமைக்கப்பட்டு, ஊழல் குற்றங்களுக்கான முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது. விடுவாரா சந்திரபாபு? நீதிமன்றப் படி ஏறினார்.

விசித்திர அணுகுமுறைகள்

இத்தகு சூழலில், முன்னாள் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஒருவர் தன்னுடைய பெயருடன், உச்ச நீதிமன்றத்தில் இப்போது பதவியில் இருக்கும் ஒரு நீதிபதியின் இரண்டு மகள்களின் பெயர்களும்கூட அந்த அறிக்கையில் உள்ளது என்று குறிப்பிட்டு, அதன் உள்ளடக்கம் வெளியானால் சமூகத்தில் தனது அந்தஸ்து குறைந்துவிடும் என்று நீதிமன்றத்தை அணுகுகிறார். இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 15-ம் தேதி தலைமை நீதிபதி மகேஸ்வரி அவசரமாக இரவில் உயர் நீதிமன்றத்தைக் கூட்டுகிறார். சிறப்புக் காவல் துறையால் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை எந்த ஊடகமும் சமூக வலைதளங்களும் வெளியிடக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

அடுத்து, அந்த முதல் தகவல் அறிக்கையையும், அமைச்சரவைத் துணைக் குழு முடிவையும் எதிர்த்து வர்லா ராமய்யா, ஆலப்பட்டி ராஜேந்திரப்பிரசாத் இருவரும் வழக்கு தொடர்கிறார்கள். முதல் தகவல் அறிக்கையையும், அமைச்சரவை முடிவுகளையும் இதுவரை எந்த நீதிமன்றமும் தடை செய்ததில்லை. மாறாக, நீதிபதி சோமயாஜுலு சிறப்புக் காவல் படை விசாரணைக்கும், அமைச்சரவைத் துணைக் குழு முடிவிற்கும் இடைக்காலத் தடை விதிக்கிறார். ஆந்திர அரசு உச்ச நீதிமன்றத்தில் இதை எதிர்த்து மேல் முறையீடு செய்கிறது. ஆனால், நான்கு வாரங்களைக் கடந்தும் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதற்கிடையில், அக்டோபர் 1 அன்று நீதிபதி ரமேஷ்குமார் தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு விசித்திரமான உத்தரவு ஒன்றைக் காணொளி விசாரணை மூலம் பிறப்பிக்கிறார்கள். கோவிந்தராவ் என்ற ஒருவர் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு தொடர்பிலான உத்தரவின் கடைசிப் பத்தியில், ‘அடுத்த விசாரணை தேதி அன்று மாநில அட்வகேட் ஜெனரல் இந்த நீதிமன்றத்திற்கு உதவிசெய்யும் வகையில் தயாரிப்புடன் வர வேண்டும். அன்றைய நாளில் இந்த மாநிலத்தில் அரசமைப்புச் சட்டம் சீர்குலைந்திருக்கிறதா என்பது தொடர்பில் உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

பின்னணியில் யார்?

ஜெகன்மோகன் இதற்கு எதிர்வினை ஆற்றுகிறார். ‘இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் பின்னணியில் இருப்பவர் உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா; ஆந்திரத்தைச் சேர்ந்த அவரது தலையீடு ஆந்திர உயர் நீதிமன்றத்தின் வழக்குப் பட்டியல் நிர்ணயம் வரை தொடர்கிறது; அவர் சந்திரபாபுவுடன் சேர்ந்துகொண்டு சதியில் ஈடுபட்டிருக்கிறார்’ என்று குற்றஞ்சாட்டியும் இதை உடனடியாக உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் கடிதம் எழுதுகிறார். இந்தக் கடிதம் அவரது தனிச் செயலரால் ஊடகங்களுக்கும் கொடுக்கப்படுகிறது. இதற்குப் பதிலடியாக, ‘முதல்வர் ஒரு அரசியலர். அவர் மீது பல கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அரசியலர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளை விரைந்து விசாரிப்பதற்கான பொது நல வழக்கு ஒன்றை நீதிபதி ரமணா விசாரித்துக்கொண்டிருப்பதனால், அவர் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. எனவே, ஜெகன் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடர வேண்டும்’ என்றொரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தாக்கலாகிறது.

இது தவிர, டெல்லியிலுள்ள உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் தொடங்கி தமிழ்நாட்டிலுள்ள லெட்டர் பேட் அமைப்புகள் வரை இதே தொனியில் தீர்மானங்களை நிறைவேற்றுகின்றன. இந்த விவகாரத்தை எப்படிப் பார்ப்பது?

முந்தைய அனுபவங்கள்

நீதிபதிகள் மீதான இத்தகு குற்றச்சாட்டுகள் புதிது அல்ல. 1960-களின் ஆரம்பத்தில் ஆந்திர உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருந்த சந்திரா ரெட்டி மீது அன்று அவர் தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சாதகமான தீர்ப்புகளை வழங்குவதன் மூலம் நேர்மையற்றுச் செயல்படுகிறார் என்றே ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உயர் நீதிமன்றங்களைக் கண்காணிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு இல்லை. ஆயினும் உச்ச நீதிமன்ற நீதிபதி கஜேந்திர கட்கர் இதுகுறித்து ரகசியமாக விசாரித்து வருமாறு ஹைதராபாதிற்கு அனுப்பிவைக்கப்பட்டார். அவரது விசாரணையில் குற்றச்சாட்டுகளுக்கான முகாந்திரம் இருப்பதாகக் கண்டறியப்பட்டதும், சந்திரா ரெட்டி மதராஸ் உயர் நீதிமன்றத்திற்குத் தலைமை நீதிபதியாக ஊர் மாற்றம் செய்யப்பட்டார். அவர் சென்னைக்கு வந்த நேரம், அன்றைய ஆளுநர் விடுப்பில் சென்றதால், தற்காலிக ஆளுநராகச் சிறிது காலம் இருந்து, பின்னர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகி 1966-ல் ஓய்வுபெற்றார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதியின் மீது ஒழுங்கீன நடவடிக்கை நிரூபிக்கப்பட்டாலோ, அவர் பதவியில் தொடர உடல்நிலை சரியில்லை என்றாலோ நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் அதில் பங்கேற்று, அதில் பெரும்பான்மையானவர்களின் வாக்கின் அடிப்படையில் மட்டுமே பதவிநீக்கம் செய்ய முடியும். இதற்கும்கூட மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு பரிசீலித்து குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கிறது என்று அறிக்கை அளித்த பின்னரே நாடாளுமன்றம் தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியும்.

இது தவிர, நீதிபதிகளைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு சட்டத்தில் இடம் இல்லை. ஆனாலும் 1995-ல் பம்பாய் வழக்கறிஞர்கள் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.எம்.பட்டாச்சார்ஜியைப் பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர் எழுதிய ஒரு சிறிய புத்தகத்திற்கு வெளிநாட்டு நிறுவனம் 80,000 டாலர் ராயல்டி கொடுத்தது ஊழல் நடவடிக்கை என்று அவர்கள் குற்றஞ்சாட்டினர். பின்னர் பட்டாச்சார்ஜி பதவி விலகினார். ஊழலில் ஈடுபடும் நீதிபதிகள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர்கள் நேரடி நடவடிக்கைகளில் ஈடுபடலாமா என்ற கேள்வியை எழுப்பி, உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கில் நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவது என்பது நடக்காத காரியம். எனவே, தகுந்த ஆதாரத்துடன் இந்தியத் தலைமை நீதிபதிக்கு அனுப்பப்படும் புகார் மனுவைப் பரிசீலித்து தலைமை நீதிபதி மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவின் ‘அக விசாரணை’க்கு உத்தரவிடலாம். முகாந்திரம் இருப்பதாக அக்குழு கருதினால், சம்பந்தப்பட்ட நீதிபதியைப் பணியிலிருந்து, பதவியிலிருந்து விலக அவருக்கு அறிவுரை வழங்கலாம். அப்படிச் செய்ய நீதிபதி மறுத்தால் நாடாளுமன்ற அவைத் தலைவருக்கு கண்டனத் தீர்மான நடைமுறையை மேற்கொள்ள ஆலோசனை வழங்கலாம் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

ஜெகன் – ரமணா போர்

நீதிபதி ரமணா மீது நடவடிக்கை எடுக்க விண்ணப்பித்து இந்தியத் தலைமை நீதிபதிக்குக் குற்றச்சாட்டுகள் அடங்கிய கடிதத்தை ஜெகன்மோகன் அனுப்பியதில் தவறு ஏதும் இல்லை. தனது அந்தரங்கச் செயலாளர் மூலம் அதை ஊடகங்களுக்கு அவர் அனுப்பியது முறையற்ற செயல் என்றாலும், மனுவிலுள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. ஜெகன்மோகன் குற்றப் பின்னணியுள்ள அரசியலரா, அவருடைய தகுதி என்ன என்றெல்லாம் பேசுவதற்கு அப்பாற்பட்டு, இந்தியத் தலைமை நீதிபதி அம்மனுவைப் பரிசீலித்து, மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவின் அக விசாரணைக்கு உத்தரவிடுவதே சரியான தீர்வாகும்.

நீதிபதி ரமணா குற்றப் பின்னணியுள்ள அரசியலர்கள் மீது விரைவான நடவடிக்கை எடுப்பதற்கான வழக்கை விசாரிப்பதற்கும், தற்போது அவர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை. ரமணா 2000-ல் ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின் 2013-ல் அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகும் சூழலில், அவரைப் பதவியிலிருந்து நீக்கக் கோரி மனோகர் ரெட்டி எனும் வழக்கறிஞர் ஒரு பொது நல வழக்கைத் தாக்கல்செய்தார். கல்லூரியில் படிக்கும்போதே தெலுங்கு தேசக் கட்சியின் மாணவர் அமைப்பில் செயலாற்றிய ரமணா மீது, அப்போது பொதுச் சொத்துகளுக்கு பங்கம் விளைவித்ததாக ஒரு கிரிமினல் வழக்கு இருந்தது. அதன் அறிவிக்கையைப் பெறாமல் காலம் தாழ்த்தியதால் அவரைக் கைதுசெய்ய அப்போது வாரன்ட்டும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த அறிவிக்கை சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டதா என்பது தொடர்பில் உறுதிசெய்ய ஆதாரம் ஏதும் இல்லை. ஆயினும், முன்னதாக ரமணா மீது வழக்கு இருந்ததைச் சுட்டிக்காட்டியே இந்த வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இந்த வழக்கு தள்ளுபடிசெய்யப்பட்டதோடு, மனோகர் ரெட்டிக்கு ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டது. ஆயினும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

இதற்குப் பின்னர் டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த ரமணா அடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதியாக 2014-ல் பதவி ஏற்று, 2021 ஏப்ரலில் அடுத்த இந்தியத் தலைமை நீதிபதியாகவும் பதவி ஏற்க உள்ளார். ஆக, இவ்வளவு முக்கியத்துவம் கொண்ட ஒருவர் மீதான – அரசமைப்புரீதியிலான முக்கியப் பதவியில் இருக்கும் ஒருவர் மீது, அரசமைப்புரீதியிலான முக்கியப் பதவியில் இருக்கும் இன்னொருவரான ஜெகன்மோகன் முன்வைக்கும் - குற்றச்சாட்டுகள் சாதாரணமானவை அல்ல. இது விசாரிக்கப்பட வேண்டியது அவசியம்.

ஆந்திர முதல்வரின் கட்சி, நாடாளுமன்றத்தில் நான்காவது பெரிய கட்சி. மக்களவையில் 22 உறுப்பினர்களும் மாநிலங்களவையில் 6 உறுப்பினர்களும் இருக்கிறார்கள். எனவே, அரசமைப்புச் சட்டத்தின்படி, கண்டனத் தீர்மானம் ஒன்றை நீதிபதி மேல் அவர்கள் கொண்டுவருவது பெரிய விஷயம் அல்ல. அதைத் தவிர்க்கவும் நீதித் துறையின் மாண்பை நிலைநாட்டவும், தலைமை நீதிபதி பாப்டே நீதிபதிகள் குழுவை அமைத்து அக விசாரணைக்கு உத்தரவிடுவது நீதித்துறை நல்ல முறையில் இயங்க உதவும்!

- கே.சந்துரு,

மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்இந்திய நீதித் துறைமுதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிரமணா

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x