Last Updated : 23 Sep, 2015 10:11 AM

 

Published : 23 Sep 2015 10:11 AM
Last Updated : 23 Sep 2015 10:11 AM

மூளைக் காய்ச்சலுக்கு முடிவுகட்டுவோம்!

மூளைக் காய்ச்சல் நோயாளியை வாழ்நாள் முழுவதும் முடமாக்கும் நோய்!

தமிழகத்தில் பருவ மழை சரியான நேரத்தில் தொடங்குகிறதோ இல்லையோ பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மூளைக் காய்ச்சல் என்று சரியான நேரத்தில் தொடங்கிவிடுகின்றன தொற்று நோய்கள். சென்ற ஆண்டில் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி நூற்றுக் கணக்கானோர் பலியானதை நாம் மறந்திருக்க முடியாது.

இப்போது மூளைக் காய்ச்சல் எச்சரிக்கை வெளியாகியிருக்கிறது. இந்த ஆண்டில் தமிழகத்தில் பருவ மழை தொடங்குவதற்கு முன்னரே மூளைக் காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை இப்போதே எடுக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் மனித உயிரைப் பறிக்கும் நோய் என்றால், மூளைக் காய்ச்சல் நோயாளியை வாழ்நாள் முழுவதும் முடமாக்கும் நோய்.

ஜப்பானிய மூளைக் காய்ச்சல்

மூளைக் காய்ச்சலில், ‘மூளை அழற்சிக் காய்ச்சல்', 'மூளை உறை அழற்சிக் காய்ச்சல்' என்று இரண்டு வகை உண்டு. இந்த இரண்டுமே அதிபயங்கரத் தொற்றுநோய்கள்தான். இவற்றில் ஆண்டுதோறும் மழைக் கால ஆரம்பத்தில், அதாவது அக்டோபர், நவம்பர் மாதங்களில் மட்டும் அதிகமாகப் பரவுவது ஜப்பானிய மூளைக் காய்ச்சல். இது 'ஜப்பானீஸ் - பி' (Japanese - B) எனும் வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. முதன்முதலில் 1871-ல் ஜப்பானில் இந்த நோய் தோன்றியதால், இந்தப் பெயரைப் பெற்றுள்ளது. இது இந்தியாவில் 1955-ல் வேலூரில்தான் முதன்முதலில் பரவத்தொடங்கியது.

இந்த நோய் எல்லா வயதினரையும் பாதிக்கக் கூடியதுதான் என்றாலும், ஒரு வயதிலிருந்து 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கிறது. முக்கியமாக, மக்கள் நெருக்கம் அதிகமுள்ள, சுகாதாரம் குறைந்த இடங்களில் வசிக்கும் குழந்தைகள், நோய் எதிர்ப்புச் சக்தியும் ஊட்டச்சத்தும் குறைவாக உள்ள குழந்தைகள் ஆகியோரை அதிக அளவில் பாதிக்கிறது.

நோய் வரும் வழி

இந்த வைரஸ் கிருமிகளுக்குப் பிறந்த வீடு பன்றிகள். புகுந்த வீடு கொசுக்கள். விருந்தினர் வீடு மனிதர்கள். இந்த வைரஸ் கிருமிகளால் ஒருமுறை பாதிக்கப்பட்ட பன்றிகளின் ரத்தத்தில் அவை குறைந்த அளவில் இருந்துகொண்டே இருக்கும். குறிப்பிட்ட காலங்களில் மட்டும் இவை எண்ணிக்கையில் பெருகி, மனித இனத்தைத் தாக்கப் புறப்படும்.

இந்தியாவில் நெல் வயல்களிலும், பன்றி வளர்க்கப்படும் இடங்களிலும் 'குலிசின்'(Culicine) எனும் கொசுக்கள் காணப்படுகின்றன. இவை பகலில் கடிப்பதில்லை. இரவில் மட்டுமே கடிக்கும். ‘ஜப்பானீஸ் - ’பி’வைரஸ் உள்ள பன்றிகளை இவை கடிக்கும்போது, கொசுக்களின் உடலுக்குள் கிருமிகள் புகுந்துகொள்ளும். அந்தக் கொசுக்கள் மனிதரைக் கடிக்கும்போது, மனித உடலுக்குள் கிருமிகள் புகுந்து, ரத்தத்தின் வழியாக மூளைக்குச் சென்று, மூளைத் திசுக்களை அழிக்கத் தொடங்குகின்றன. இதன் விளைவாக, காய்ச்சல் வருகிறது. இந்தக் கிருமிகள் பன்றிகளுக்கோ, கொசுக்களுக்கோ நோயை ஏற்படுத்துவதில்லை. பன்றிகள் இந்தக் கிருமிகளை வளர்த்துத் தருகின்றன. கொசுக்கள் இவற்றை மனிதர்களுக்குக் கடத்துகின்றன. இந்த நோய் உள்ளவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடியாகப் பரவாது.

அறிகுறிகள்

திடீரென்று கடுமையான காய்ச்சல் வரும். தாங்க முடியாத அளவுக்குத் தலைவலி உண்டாகும். அடிக்கடி குமட்டலும், அளவில்லாமல் வாந்தியும் ஏற்படும். மனக்குழப்பம் ஏற்பட்டு, மனநோயாளிபோல் நடந்துகொள்வார்கள். இவர்கள் எதையாவது பார்த்து அரண்டு, மிரண்டு, உளறுவது வழக்கம். பேச்சுக்கொடுத்தால், தொடர்பின்றிப் பதில் கூறுவார்கள். வலிப்பு வரும். இந்த வலிப்பைத் தொடர்ந்து அந்த நபர் சுயநினைவை இழப்பார்கள். பிறகு, 'கோமா' எனும் ஆழ்நிலை மயக்க நிலைக்குச் சென்றுவிடுவார்கள்.

இது நோயாளியின் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும். இந்தக் காய்ச்சலின்போது, பாதிக்கப்பட்ட மூளைத் திசுக்கள் நிரந்தரமாக அழிந்துபோவதால், இதற்குச் சிகிச்சை பெறும் நோயாளி உயிர் பிழைத்தால்கூடப் பேச்சு நின்றுபோவது, பார்வையை இழப்பது, காது கேட்காமல் போவது, பக்கவாதம் ஏற்படுவது போன்ற ஊனங்கள் நிலைத்துவிடுகிற ஆபத்துகள் அதிகம்.

தடுப்பூசி உண்டா?

ஜப்பானிய மூளைக் காய்ச்சலைத் தடுக்க தற்போது மூன்றுவிதத் தடுப்பூசிகள் உள்ளன. அவை: 1. செல் கல்ச்சர் உயிர் நுண்ணுயிரித் தடுப்பூசி (Live attenuated cell culture-derived Vaccine). 2. வீரியம் நீக்கப்பட்ட செல் கல்ச்சர் நுண்ணுயிரித் தடுப்பூசி (Inactivated cell culture-derived Vaccine). 3. வீரியம் நீக்கப்பட்ட வீரோ செல் கல்ச்சர் நுண்ணுயிரித் தடுப்பூசி (Inactivated Vero cell culture-derived Vaccine). இவற்றில் ஒன்றை குழந்தைப் பருவத்திலேயே போட்டுக்கொண்டால், இந்த நோய் அந்தக் குழந்தைக்கு எப்போதும் வராது. இரண்டு வயதுக்குள் இதைப் போட்டுக்கொள்ளாதவர்கள், அதற்குப் பிறகு 15 வயதுக்குள், எப்போது வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். இந்தக் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மழைக்காலம் ஆரம்பிக்கும் ஒரு மாதம் முன்பே இதைப் போட்டுக்கொள்ள வேண்டியது முக்கியம்.

இது பரவுவதற்குப் பன்றிகளும், கொசுக்களும்தான் முக்கியக் காரணம் என்பதால், அவற்றின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த சரியான நடவடிக்கைகள் தேவை. பன்றி வளர்ப்பில் சுகாதார முறைகளைக் கடைப்பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊருக்கு வெளியில், மனித நடமாட்டம் அதிகமில்லாத இடங்களில் மட்டுமே பன்றிகள் வளர்ப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

அடுத்ததாக, கொசு ஒழிப்பு ஒன்றுதான் இந்த நோயைத் தடுப்பதில் உள்ள முக்கியப் பிரச்சினை. கொசுக்களின் வளர்ச்சிநிலைகளைக் கட்டுப்படுத்தப் பல புதிய மருந்துகள் இப்போது வந்துள்ளன. குறிப்பாகச் சொல்லவேண்டுமானால், கொசுக்களை மலடாக்கும் மருந்துகள் மேல்நாடுகளில் கிடைக்கின்றன. இவற்றை நம் நாட்டுக்கும் இறக்குமதி செய்து கொசு ஒழிப்புக்கு உதவ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல, வீட்டைச் சுற்றிக் கழிவுநீர் தேங்குவதைத் தவிர்ப்பது, திறந்தவெளிச் சாக்கடைகளை மூடுவது, சாக்கடைகள் அடைத்துக்கொள்வதைத் தவிர்ப்பது, தெருக்களைச் சுத்தமாகப் பராமரிப்பது, வீட்டிலும், தெருக்களிலும் கொசு ஒழிப்பு மருந்தை முறைப்படி தெளிப்பது, இரவில் குழந்தைகள் தெருக்களில் விளையாடுவதைத் தவிர்ப்பது, உடல் முழுவதும் மூடும் ஆடைகளை அணிவது, கொசுவலை, கொசுவத்தி மற்றும் மின் கொசு விரட்டிகளைப் பயன் படுத்துவது போன்ற தற்காப்பு நடவடிக்கைகள் மூலம் கொசுக்கடியைத் தவிர்க்க நாமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களை நோயிலிருந்து காப்பாற்றுவது எப்படி அரசின் கடமையோ, அதேபோன்று நோய் உண்டாக்கும் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க உதவுவதும் நம் கடமைதான் என்பதை மக்கள் உணர வேண்டும்.

- கு. கணேசன், பொதுநல மருத்துவர்,
தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x