Published : 14 Oct 2020 09:29 AM
Last Updated : 14 Oct 2020 09:29 AM

சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 7: கல்சட்டியும் அடைக்கல்லும் தெரியுமா?

கல்யாணி நித்யானந்தன்

பெரியப்பாவின் வீட்டில் அடுக்களையில் உள்ள மேடைக்கு அடியில் வெண்கலப் பானைகள், உருளிகள் கவிழ்க்கப்பட்டிருக்கும். இலுப்பச் சட்டி, தோசைக்கல், அடைக்கல். அதென்ன அடைக்கல்? இதில் சின்னதாக ஒரு விளிம்பு இருக்கும். ஏனெனில் அடையைச் சுற்றி நிறைய எண்ணெய் விட வேண்டுமல்லவா? சிறிதும் பெரிதுமான கல் சட்டிகள், கல் பானைகள். கல் பானை நீளவாக்கில் இருக்கும். கல் பானைகளில் தயிர் உரை குத்துவார்கள். நீர் ஊற்றிய ‘பழைய’ சோறும் வைக்கப்படும். இவை மரக்கல்லால் ஆனவை என்பதால் இவற்றில் வைக்கப்பட்ட உணவு சீக்கிரம் புளித்துப்போகாது.

கல் சட்டிகளில் செய்யப்படும் குழம்போ, கீரை மசியலோ படு ருசி. இந்தக் கல் சட்டிகள் மாக்கல்லால் ஆனவை. வாங்கிய உடனேயே உபயோகப்படுத்த முடியாது. ‘பழக்க’ வேண்டும். இரண்டு, மூன்று நாட்கள் எண்ணெய்யும் மஞ்சளும் தடவி மிதமான சூடுள்ள வெந்நீரை ஊற்றி வைப்பார்கள். எதற்கு மஞ்சள்? ஒருவேளை கிருமிநாசினி என்பதாலோ? தெரியாது. அதன் பிறகு சிறு தீயில் வைத்துப் பழக்குவார்கள்.

ஈயச்சொம்பு என்று கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? வெள்ளீயத்தால் செய்யப்படும். சூடு தாங்கவே தாங்காது. ரசமோ, தண்ணீரோ, நிரப்பி விட்டுத்தான் அடுப்பில் ஏற்ற முடியும். கூட நின்று கவனித்துக் கொள்ளாவிடில் ரசத்தோடு ஈயச் சொம்பும் அடுப்பின் உள் மாயமாகி விடும். இதைச் சூட்டோடு இறக்க இடுக்கியை உபயோகித்தால் ‘பொக்கு’ விழுந்து விடும். பதமாக ஈரத் துணியால் பிடித்து இறக்க வேண்டும்.

மேடையின் மேலே சுவரில் மரப்பலகையால் ஆன பரண். பலகையைத் தாங்க மர ஆப்புகள் அடிக்கப்பட்டிருக்கும். பரண் மீது அடுக்குகள், டப்பாக்கள். அடுக்களையின் கூரையில் இருந்து இரண்டு உரிகள் தொங்கும். அவற்றில் குண்டான்கள், பானைகள் வைக்கப்பட்டு இருக்கும். அவற்றில் என்ன இருக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால், குட்டிக் கண்ணன் தோழனின் முதுகில் ஏறி வெண்ணெய்யோ தயிரையோ திருடியது கண்டதில்லை.

அடுக்களையை அடுத்ததாக ஓட்டுக் கூரையுடன் கூடிய தாழ்வாரம். அதன் ஒரு புறம், சிறிய ஜன்னலுடன் கூடிய ஒரு அறை. எதற்கு தெரியுமா? பெண்கள் ‘அந்த’ மூன்று நாட்களில் ஒதுங்குவதற்காக. மற்ற புறத்தில் துணி உலர்த்துவதற்கான கொடிகள், மெல்லிய மூங்கில்கள் கம்பியில் தொங்கும்.

பின்னால் தோட்டம். பின் வாசலை ஒட்டி சுமார் 20 அடி வரை தரை சிமெண்ட் பூசப்பட்டு இருக்கும். வீட்டின் உள் மண் வராது. ஏதாவது வெயிலில் உலர வைக்கவும் செளகரியம். ஒருபுறம் ஒரு பவழமல்லி செடி. மலர்கள். சிமெண்ட் தரையில் விழுவதால் சேகரிப்பதற்குச் சுலபமாக இருக்கும்.

தோட்டத்தில் ஒரு புறம் மாட்டுத் தொழுவம். கருங்கல் பாவிய தரை. மாடுகளைக் கட்ட கல் தூண்கள், தண்ணீர்த் தொட்டி, கழுநீர்த் தொட்டி. ஒரு ஓரத்தில் ‘பெரிய்ய்ய’ ஆட்டுக்கல். அதன் குழவியை ஒரு கையால் பிடிக்க இயலாததால் அதன் மீது ஒரு அடி உயர மரக்கட்டை பதிக்கப்பட்டு இருக்கும். ஊறவைத்த பருத்திக் கொட்டை, எள்ளுப் பிண்ணாக்கு இதில் அரைக்கப்பட்டு, தவிட்டுடன் கழுநீர்த் தொட்டியில் தண்ணீருடன் வைக்கப்படும். புரதமும் கொழுப்பும்

நிறைந்த இந்த தீவனத்தால் பால் மிக்க அடர்த்தியாக இருக்கும். தொழுவத்துக்கு வெளியே வைக்கோல் போர். அதிலிருந்து வைக்கோலை பிரித்துப் போடுவார்கள். தவிர, தினமும் காலை பத்து மணிக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிப்போவார்கள். மாலை வரை அவை பச்சைப் புல்லை மேயும்.

தோட்டத்தின் நடுவில் கிணறு. அதன் அருகில் துணி துவைக்கும் கல். பெரிய கருங்கல். தண்ணீர்த் தொட்டி. இதில் நீர் குளுமையாக இருக்கும். வெயில் வேளையில் இளசுகளான நாங்கள் மூவரும் அந்தத் தொட்டியில் இறங்கி உட்காருவோம். அதனுள் இருவருக்கே இடமிருக்கும். நாங்களோ மூவர். அதனால் எப்போதும் போட்டி. சில நேரம் சண்டை. தோட்டக்காரர் வந்து அதட்ட நேரிடும்.

அருகில் ‘வெந்நீர் உள்’. அது வித்தியாசமான சாமர்த்தியமான அமைப்பு. அறையின் மூலையில் ஒரு சதுரமான மேடை. அதிலே ஒரு பெரிய செம்புத் தவலை பாதியளவு புதைக்கப்பட்டிருக்கும். இந்த மேடைதான் அடுப்பு. ஆனால் விறகு, சுள்ளி முதலிய எரிபொருட்கள் அறைக்கு வெளியே உள்ள ஓட்டை வழியாக உள்ளே சொருகப்பட்டு எரியும். புகை போக்கியும் வெளியில்தான் இருக்கும்.

அடுப்பு எரிந்து தவலையில் வெந்நீர் தளைக்கும். சுவரில் தோள் உயரத்தில் இரண்டு அடி சதுர ஓட்டை. ஒரு நீள் சதுர வடிவமான கருங்கல் தொட்டி பாதி வெளியேயும் பாதி உள்புறமும் நீண்டு இருக்கும். உள்ளே உள்ள பகுதி கோயில், சந்நிதிகளில் அபிஷேக ஜலம் வெளியே விழும் ஜலதாரையைப் போன்று இருக்கும். கிணற்று ஜலம் வெளியில் இருந்து ஊற்றப்பட்டு உள்ளே விழும். அதன் அடியில் உள்ள ஒரு அண்டாவில் விழும். அதனுடன் வெந்நீரை பதமாகக் கலந்து விளாவி குளிக்க முடியும்.

இதைப் போன்ற ‘வெந்நீர் உள்’ அமைப்பை என் பழனி மாமா வீட்டில் கண்டிருக்கிறேன். அவர் 1937-ல் சொந்த வீடு கட்டும்போது இந்தப் பழைய அமைப்பின்படி குளியலறை கட்டினார். சென்ற வருடம், நான் பழனியில் தற்செயலாக மாமாவின் பழைய வீட்டைக் கடந்து சென்றேன். அடக்க முடியாத ஆவலினால், வெளியில் மாற்றமே இல்லாதிருந்த அவ்வீட்டின் கதவைத் தட்டினேன். கதவைத் திறந்த பெண்ணிடம் எனக்கும் அந்த வீட்டிற்குமான தொடர்பைச் சொல்லி அந்தக் குளியலறை இருக்கிறதா என்று வினவினேன். அவர் ஆமாம் என்று கூறியதுடன் மட்டுமின்றி, உள்ளே வந்து அதைப் பார்க்கவும் அழைத்தார். அதே கிணறு, அதே அடுப்பு. உபயோகத்தில் இருக்கும் பராமரிக்கப்பட்ட குளியலறையைக் கண்டு பரவசமானேன். மனம் நெகிழ்ந்தது.

சென்னையிலும் திருவல்லிக்கேணியில் சில வீடுகளில் பாதி அடுக்களையிலும் பாதி பின் முற்றத்திலும் இருக்கும். சமையலுக்கு வேண்டிய தண்ணீரை ஆசாரமாக, புதிதாக எடுத்துக்கொள்ள வசதி உள்ளது.

பெரியப்பா வீட்டுத் தோட்டத்தில் ஒரு மாமரம், ஒரு பெரிய புளிய மரம், ஒரு கறிவேப்பிலை மரம், சில வாழை மரங்கள், ஐந்தாறு தென்னைகள், கீரைப்பாத்தி, வெண்டை, கத்திரி, பச்சை மிளகாய் செடிகள், ஓரத்தில் அவரைப் பந்தல். தோட்டத்தின் மூன்று பக்கங்களிலும் சுவர்கள். தொழுவத்தின் பக்கத்துச் சுவரில் சாணி தட்டி வறட்டி காய்ந்துகொண்டிருக்கும். இது ‘அந்த நாட்களில்’ இருக்கும் பெண்களின் வேலை. வீடு நிறைய பெண்கள். அதனால், வறட்டிக்கு வறட்சி இல்லை.

பின் சுவரில் ஒரு கதவு. அதைத் திறந்தால் ஒரு ஓடை. ‘சலசல’வென்றெல்லாம் தண்ணீர் ஓடாது. கரும் பச்சை நிறத்தில் மெல்ல நகரும் தண்ணீர். அது எங்கிருந்து வருகிறது, எங்கு போகிறது என்று எனக்குத் தெரியாது. அதன் அக்கரையில் சில பன்றிகள் மேய்ந்து கொண்டு இருக்கும். ஒரு மூலையில் எருக்குழி. தோட்டத்துக் குப்பைகளும். காய்கறி கழிவுகளும் வெளியே எறியப்படாமல் அந்தக் குழியில் மக்கி உரமாகும். பூச்சிக்கொல்லி மருந்துகள் அடிக்கப்பட்டதில்லை. கட்டைப் புகையிலையை ஊற வைத்த நீரில் சாம்பலைக் கரைத்து செடிகளில் தெளிப்பார்கள்.

வீடும் தோட்டமும் அர்த்தத்துடன் குறிப்பிட்ட உபயோகத்துக்காக, அந்தக் கால வாழ்க்கை முறைக்கேற்ப கட்டப்பட்ட வீடு. இப்படிப்பட்ட வீடுகளை இன்று திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும்தான் காண முடிகிறது.

நீர் மேலாண்மை, இயற்கை உரம், தோட்டத்துக் குப்பையிலிருந்து செயற்கை வேதிப் பொருள்கள் அற்ற பூச்சிக்கொல்லிகள். சாப்பிட்டு முடித்த வாழை இலை வரை ஒன்றையும் வீணாக்காமல் வாழ்ந்தார்கள்.

வீட்டில் வாழ்ந்த குடும்பத்தின் அதிர்வலைகளை உணர முடியும். இன்றும் இந்த வீட்டைப் பற்றி நினைக்கும்போது, வீட்டின் அமைப்பை மட்டுமல்ல, ஒவ்வோரிடத்திலும் குடும்பத்தின் வாழ்க்கை முறையும் பின்னிப் பிணைந்திருப்பதையும் நினைவுகூர்கிறேன்.

சந்திப்போம்... சிந்திப்போம்..!

கட்டுரையாளர்: கல்யாணி நித்யானந்தன்,
இதயநோய் நிபுணர் (பணி நிறைவு),

டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.

தொடர்புக்கு:joenitya@yahoo.com
ஓவியம்: வெங்கி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x