Published : 11 Oct 2020 08:06 AM
Last Updated : 11 Oct 2020 08:06 AM

பாஸ்வான் பேசுகிறார்

இடஒதுக்கீட்டை இல்லாமலாக்கும் சக்தி இங்கு எதுவும் இல்லை!’

இடஒதுக்கீடு என்பது நமது அரசமைப்புச் சட்டம் நமக்குத் தந்த உரிமை. பாபாசாஹேப் அம்பேத்கருக்கும் மகாத்மா காந்திக்கும் இடையிலான பூனா ஒப்பந்தத்தின் விளைவு இது. ஆகவே, இந்தப் புவியில் உள்ள எந்த சக்தியாலும் அதை முடிவுக்குக் கொண்டுவர முடியாது. இடஒதுக்கீடு என்பது நமது சிறப்புரிமை. சமூகத்தில் நலிந்த பிரிவுகள் சிறப்பு வாய்ப்புகள் பெற வேண்டும்; அதற்கான ஒரு வழிமுறை. உங்களுக்குக் கண்ணில் ஒரு குறை இருந்தால், உங்கள் கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக செல்வீர்களா அல்லது விவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பீர்களா? இடஒதுக்கீடு என்பது ஒரு சிகிச்சை, அதில் விவாதத்துக்கு இடமே இல்லை. இடஒதுக்கீடு என்பது ஆரம்பத்தில் பட்டியலினத்தோருக்கும் பழங்குடியினருக்கும் மட்டும்தான் இருந்தது. மண்டல் கமிஷன் அதை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வழங்கியது, தற்போது நரேந்திர மோடி அரசு அதை முற்பட்ட வகுப்பினரிடையே பொருளாதாரரீதியில் பின்தங்கியோருக்கும் நீட்டித்துள்ளது. இத்தகு சூழலில் இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர எந்த சக்தியாலும் முடியாது!

‘ஒற்றைத் தலைமைக்கு உட்பட்டதல்ல தலித் அரசியலின் எதிர்காலம்!’

இன்றைய தலித் 50 ஆண்டுகளுக்கு எப்படி இருந்தாரோ அப்படி இல்லை, சமூக மாற்றங்கள் குறித்து அவர் விழிப்புணர்வு பெற்றிருக்கிறார். தலைமுறைகளுக்கு இடையில் அடிப்படை வேறுபாடு இருக்கிறது. புதிய தலைமுறை சுயமரியாதை கொண்ட ஒரு வாழ்க்கையை வாழ விரும்புகிறது, அநீதியை எங்கெல்லாம் அது காண்கிறதோ அப்போதெல்லாம் அதற்கு சவால் விடுக்கிறது. ஒரு ராம்விலாஸ் பாஸ்வானோ ஒரு மாயாவதியோ எப்போதும் தலைமை ஏற்று வழிநடத்த வேண்டும் என்ற அவசியமில்லை. துக்ளகாபாதில் உள்ள ரவிதாஸ் கோயில் பிரச்சினையின்போது மக்கள் வீறுகொண்டு எழுந்ததைப் பார்த்திருக்கிறீர்கள். ஒரு சமூகம் முன்னேறும்போது அதற்கென்று ஒற்றைத் தலைவர் மட்டும் இருக்க மாட்டார். பிராமணர்களுக்கு ஒரு தலைவர் இருக்கிறாரா? ராஜபுத்திரர்கள், காயஸ்தர்கள், பூமிஹார்கள் யாருக்கேனும் ஒற்றைத் தலைவர் இருக்கிறாரா? அவர்களுக்கு ஒரே ஒரு நபர் தலைவராக இருக்கிறாரா? ஆக, நான் மறுபடியும் வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன், ஒரு சமூகம் முன்னேறும்போது அதற்கென்று ஒற்றைத் தலைவர் மட்டும் இருப்பதில்லை. ஆனால், சித்தாந்தம் ஒன்றாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x